umn ministry

புளித்தமாவுக்கு ஒப்பான பரலோக ராஜ்யம் மத் 13:33

0

 


புளித்தமாவுக்கு ஒப்பான பரலோக ராஜ்யம் மத் 13:33


வேறொரு உவமையை அவர்களுக்குச் செபள்ளார் பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தான் என்றார் (மத் 13:33).


ஒரு ஸ்திரீ புளித்த மாவை எடுக்கிறாள். இது அவளுடைய வேலை. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் புளிக்க வைக்கும் இடங்களில் ஊழியம் செய்கிறார்கள். ஜனங்களுடைய ஆத்துமாக்கள் சுவிசேஷத்தினால் புளிக்க வைக்கப்படுகிறது.


புளித்த மாவை மூன்றுபடி மாவிலே அடக்கி வைக்கிறாள். மனுஷருடைய இருதயம் இந்த மாவைப்போல மென்மையாக இருக்கிறது. இருதயத்தின் மென்மையான பகுதியே கர்த்தருடைய வார்த்தையினால் தொடப்படுகிறது. சிறிதளவு புளித்த மாவானது மூன்றுபடி அளவிற்கு புளித்த மாவாக பெருகுகிறது. சிறிய அளவு புளித்த மாவை மூன்றுபடி அளவில் அடக்கி வைக்கவேண்டும். அதுபோல நமது இருதயத்தில் தேவனுடைய வார்த்தை என்னும் புளித்தமாவை அடக்கி வைத்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் தாயார் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள் (லூக் 2.51). மரியாளைப்போல நாமும் கர்த்தருடைய வார்த்தைகளை நமது இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.


மூன்றுபடி அளவுள்ள பாத்திரத்தில் சிறிய அளவு புளித்தமாவு அடக்கி வைக்கப்படுகிறது. அந்த பாத்திரத்தில் புளித்த மாவு கிரியை செய்கிறது. புளித்தமாவின் கிரியை வேகமாக நடைபெறும். அதுபோலவே நமது இருதயத்தில் கர்த்தருடைய வார்த்தையை அடக்கி வைக்கும்போது, அது வேகமாகவும் தொடர்ச்சியாகவும் கிரியை நடப்பிக்கும். கர்த்தருடைய வார்த்தை அமைதியாகவும் மற்றவர்களுக்கு விளம்பரமாக தெரியாத விதமாகவும், வலிமையாகவும், எதிர்க்க முடியாததாகவும் கிரியை நடப்பிக்கிறது (மாற் 4:26).


சிறிதளவு புளித்தமா பெரிய பாத்திரத்தில் அடக்கி வைக்கப்படும்போது, அது அதிகமாக பெருகுவதை யாராலும் தடைபண்ண முடியாது. ஆயினும் இது எவ்வாறு மூன்றுபடி மாவாக ஆயிற்று என்பதும் யாருக்கும் தெரியாது. நமது கண்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், சிறிதளவு புளித்தமாவானது மூன்றுபடி புளித்தமாவாகிறது.


இந்த மாவு புளிப்பதுபோலவே இந்த உலகத்தில் சுவிசேஷ ஊழியமும் நடைபெறுகிறது. அப்போஸ்தலர்கள் திரளான ஜனங்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறார்கள். தங்கள் பிரசங்கத்தின் மூலமாக சிறிதளவு புளித்த மாவை திரளான மனுஷர் மத்தியில் அடக்கி வைக்கிறார்கள். கர்த்தருடைய வசனமாகிய புளித்தமாவானது, தன்னுடைய கிரியையை நடப்பிக்கிறது. புளித்த மாவு புதிய சுவையை கொடுப்பதுபோல, இந்த உலகத்திற்கும் கர்த்தருடைய வார்த்தையானது ஆசீர்வாதமாக இருக்கிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் கர்த்தருடைய முழு வார்த்தை உலகத்தை கலக்குகிறது (அப் 17:4),


உலகத்தை கலக்கும் ஆற்றல் வெளியிலிருந்து வந்த பெலத்தினால் உண்டானதல்ல. சுவிசேஷத்திற்குள்ளேயே உலகத்தை கலக்கும் வல்லமை உள்ளது. இந்த வல்லமையை எந்த சக்தியாலும் எதிர்த்து நின்று ஜெயிக்க முடியாது. கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிக்கும்போது அதை யாராலும் தடுக்க முடியாது.


இந்த புளித்த மாவைப்போலவே நமது இருதயத்திலும் கர்த்தருடைய வார்த்தை கிரியை செய்கிறது. சிறிது புளித்தமாவை மூன்றுபடி அளவுள்ள பாத்திரத்தில் அடக்கி வைக்கும்போது, அந்த பாத்திரத்திற்கு ஒன்றும் நேரிடாது. பாத்திரம் பாத்திரமாகவே இருக்கும். ஆனால் அந்த பாத்திரத்தில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் புளித்த மாவின் தரமும் குணமும், தன்மையும் மாறுகிறது. அதுபோலவே கர்த்தருடைய வசனம் நமது இருதயத்திற்குள் வரும்போது, நமது இருதயம் மாற்றமடைகிறது. மூன்றுபடி அளவுள்ள பாத்திரமானது புளித்தமாவு வளரும் இடமாக இருக்கிறது. இந்த பாத்திரத்தில்தான் பல மாற்றங்கள் ஏற்பட்டு கொஞ்சம் அளவுள்ள புளித்தமாவு அதிகளவுள்ள புளித்தமாவாக மாறுகிறது.


இருதயத்தில் மாற்றம் உண்டாவதற்கு விசுவாசம், மனந்திரும்புதல், பரிசுத்தம், அன்பு ஆகியவை தேவை. மாவு புளித்தபின்பு அதை அடுப்பில் அப்பமாக சுடுவார்கள். அக்கினியில் சுடும்போது புளித்தமாவில் மேலும் பல மாற்றங்கள் உண்டாகி, அது அப்பமாக மாறும்அதுபோலவே பரிசுத்தவான்களும் பலவிதமான பாடுகள் மத்தியில் அப்பமாக மாறுகிறார்கள். கர்த்தருடைய ஊழியத்தில் இவர்கள் அப்பமாக இருந்து ஜனங்களுக்கு ஆவிக்குரிய போஜனம் கொடுக்கிறார்கள்.


புளித்த மா


மேலும் அவர் தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தான் என்றார் (லூக் 13:20,2).


சுவிசேஷத்தின் ஆரம்பம் மிகவும் சிறியதாக இருக்கிறது. ஆகையினால் ஏராளமானோர் சுவிக்ஷேத்திற்கு விரோதமாக ஏளனம் பேசுகிறார்கள். இயேசுகிறிஸ்து ஜனங்களுடைய தவறான எண்ணங்களை அகற்றிப்போடுகிறார். ஆரம்பம் சிறியதாக இருந்தாலும் முடிவு பெரியதாக இருக்கும். சுவிசேஷத்தின் அளவு ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக இருந்தாலும் அது அதிகமாக பெருகக்கூடிய வாய்ப்புள்ளது. கடுகுவிதை சிறியதாக இருந்தாலும் அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. ஆகாயத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் அடையும் அளவிற்கு அது பெரிய மரமாயிற்று. இதுபோலவே தேவனுடைய ராஜ்யத்தின் கிளைகளில் ஏராளமான ஜனங்கள் வந்து அடைக்கலம் புகுவார்கள்.


தேவனுடைய ராஜ்யத்தின் வளர்ச்சி வெளிப்புற சக்திகளினால் வளர்ச்சி பெறும் என்று ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தேவனுடைய ராஜ்யமோ புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது. புளித்த மா மிகவும் அமைதியாக, வெளியே எந்தவித ஆரவாரமுமில்லாமல் புளித்து அதிகரிக்கும். மா புளிக்கும்போது அங்கு வல்லமையோ அல்லது பலவந்தமோ ஏற்படாது. மாவு மிகவும் அமைதியாக புளித்துக்கொண்டிருக்கும். தேவனுடைய ராஜ்யமும் இதுபோலவே எந்தவித ஆரவாரமுமில்லாமல் வளர்ந்து பெரிதாகும்.


மா புளிக்கும்போது அதை பெரிய பாத்திரத்தில் வைத்தாலும் அந்தப் பாத்திரம் முழுவதும் புளித்த மாவு நிரம்பி வழியும். கொஞ்சம் புளித்த மா எல்லா மாவையும் புளிக்க வைக்கும். இதுபோலவே இயேசுகிறிஸ்துவின் உபதேசம் இந்த உலகத்திலுள்ள மனுஷர் மத்தியில் மிகவும் அமைதியாக பரவிக்கொண்டிருக்கும். மாவு உடனே புளித்து விடுவதில்லை. புளிப்பதற்கு சற்று கால அவகாசம் தேவை. அதுபோலவே சுவிசேஷம் ஒரு மனுஷருடைய உள்ளத்தில் கிரியை செய்வதற்கும் கால் அவகாசம் தேவைப்படுகிறது. மாவு எப்படி நிச்சயமாக புளிக்குமோ அதுபோலவே சுவிசேஷமும் நிச்சயமாகவே கிரியை செய்யும். மாவு புளிக்கும்போது முடிவில் அதனுடைய அற்புதமான வளர்ச்சியைக் காண்போம். அதுபோலவே சுவிசேஷம் கிரியை செய்யும்போது முடிவில் மனுஷருடைய உள்ளங்கள் மாற்றமடையும். அற்புதங்களைக் காண்போம். நாம் எவ்வளவு மாவை புளிக்க வைத்தாலும் அந்த மாவு முழுவதுமாக புளிக்கும். அதுபோலவே நாம் சுவிசேஷச் செய்தியை எவ்வளவு பிரசங்கம்பண்ணினாலும் அந்தச்செய்தி முழுவதுமாக பலன் தரும்.



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*