தானியேல் விளக்கவுரை அதிகாரம் 5

0


தானியேல் விளக்கவுரை அதிகாரம் 5

 


 

எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தையின்படி இஸ்ரவேல் ஜனங்கள்  எழுபது வருஷம் பாபிலோனிய ஆட்சியின் கீழ் அடிமைகளாக காணப்படவேண்டும்(ஏரே.27:7). அவர்கள்  நேபுகாத்நேச்சாரையும், அவன் குமாரன் ஏவில் மெரோதாக்கையும்(2இராஜா.25:27), அவனுடைய குமாரன் பெல்ஷாத்சாரையும் சேவிக்கவேண்டும்.

இந்த அதிகாரத்தில் பெல்ஷாத்சார் நேபுகாத்நேச்சாரின் மகன் என அழைக்கப்பபட்டாலும், அவன் ஏவில்மெரோதாக்கின் மகனாக காணப்படுகிறார். யூத ராஜாக்கள் ஓவ்வொருவரையும் வேதம் தாவீதின் குமாரன் என்று அழைப்பதைப்போல, பெல்ஷாத்சார் நேபுகாத்நேச்சாரின் மகன் என அழைக்கப்படுகிறார். நேபுகாத்நேச்சார் நாற்பத்தைந்து வருஷமும், அவனுடைய குமாரர்கள் இருபத்தைந்து வருஷமும், ஆக எழுபது வருஷம் ஆட்சி செய்தார்கள்.



பெல்ஷாத்சாரின் விருந்து(தானி.5:1-4)


பாபிலோனிய இராஜாவாகிய பெல்ஷாத்சார் தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான். அது அவனுக்கு பெருமையாக காணப்பட்டது. விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும், திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும், பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் (பிரச.10:19). பெரிய விருந்து பெல்ஷாத்சரின் ஐசுவரியத்தின் மகிமையை வெளிப்படுத்துவதுமாக காணப்பட்டது.

திராட்சரசம் பெல்ஷாத்சாரை மீண்டும் பாவத்திற்குள்ளாய் தள்ளிற்று. அவன் திராட்சரசம் குடித்து மயங்கி கொண்டிருந்த வேளையில், நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் திராட்சரசம் குடிப்பதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அப்பொழுது தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள். அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். நேபுகாத்நேச்சார் ஒருவேளை எருசலேமிலிருந்து அப்பொற்பாத்திரங்களை எடுத்து கொண்டு வந்தாலும் அவனுடைய ஆட்சியின் நாட்களில் பரிசுத்தமான பாத்திரங்களை தீட்டுபடுத்தவில்லை. ஆனால் பெல்ஷாத்சார் மதுபானத்தால் மயங்கி தேவனுடைய  ஆலயத்தின் பாத்திரங்களை தீட்டுப்படுத்தினான்.


ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?  மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே(நீதி.23:29,30). ஆகையால் தான் லேமுவேலின் தாய் திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல, லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல@ மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல(நீதி.31:4) என்று கூறுகிறாள்.



அவர்கள் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களை தீட்டுப்டுத்தினது மாத்திரமல்ல, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.


பெல்ஷாத்சார் மேல் வந்த தேவகோபாக்கினை(தானி.5:5-9)


தேவன் அன்புள்ளவர், நீடிய பொறுமையுள்ளவர். ஆனால் அவருடைய பொறுமைக்கும் எல்லை காணப்படுகிறது. தேவன் பாவிகளை நேசிக்கிறவர். ஆனால் பாவத்தை வெறுப்பவர். அவர் பரிசுத்தமுள்ள தேவன். தீமையை பார்க்கமாட்டாத சுத்த கண்ணன். பெல்ஷாத்சார் திராட்சரசம் குடிக்கும் போது பொறுமையாக காணப்பட்டார், தேவனுடைய ஆலயத்தின் பரிசுத்தமான பாத்திரங்களை தீட்டுப்படுத்தும் போதும் பொறுமையாக காணப்பட்டார். ஆனால் சிருஷ்டிகரை மறந்து சிருஷ்டிகளை தேவனாக்கி அவைகளை புகழ்ந்த போது  தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படுகிறது. அந்நேரத்தில் தானே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரில் அவனுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு எழுதப்பட்டது.  எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.


அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது. அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது. அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது. அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. இதுவரைக்கும் பெல்தெஷாத்சார் முன்பு அனேகர் பயந்து நடுங்கி கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் இப்போது அவன் பயந்து நடுங்குகிறான். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் நாளிலும் பூமியில்  காணப்படுகிற அனேக இராஜாக்கள், பிரபுக்கள், அதிகாரிகள், ஆளுநர்கள்,  பலவான்கள்,   அவருக்கு முன்பாக நடுங்குவார்கள். 



தானியேல் அழைத்துவரப்படுதல்(தானி.5:10-17)


ராஜா பாபிலோன் ஞானிகளை அழைத்து வரச்சொன்னான். அவர்கள் வந்த போது  இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான். ஆனால், பாபிலோன் ஞானிகளால் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் முடியவில்லை. உலக ஞானத்தால் வரப்போகிற தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை அறிந்து கொள்ள முடியாது. தேவனுடைய ஞானத்தை உலக மனுஷனால் புரிந்துகொள்ளவும் முடியாது. ஞானிகளால் சுவரில் எழுதின எழுத்தை வாசிக்க முடியாததை கண்ட போது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான். அவனுடைய முகம் வேறுபட்டது. அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள்.


ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கலங்கி கொண்டிருப்பதை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். ராஜாவை வாழ்த்தி, உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ண வேண்டியதில்லை.  உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது. உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது. ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் அதிபதியாக வைத்தார். ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்று பெயரிடப்பட்ட அந்தத் தானியேலுக்குள் சொப்பனங்களை வியாக்கியானம் பண்ணுகிறதும் மறைவானவைகளை வெளிப்படுத்துகிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டு. இப்போதும் தானியேலை அழையுங்கள், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள்.


தானியேல் ராஜாவிற்கு முன்பு  அழைத்துவரப்பட்டான். ராஜா தானியேலைப் பார்த்து, நீ என் பிதாவால்  யூதாவிலிருந்து சிறைபிடித்து வந்த யூதரில் ஒருவன் அல்லவா? உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.  இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக் கொண்டு வரப்பட்டார்கள். ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று. இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான். அப்பொழுது தானியேல் ராஜாவிடம் உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும். உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும். இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தை தெரிவிப்பேன். தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு ராஜ்யபாரத்தை இழந்துபோகிற மனுஷனுடைய வெகுமதிகள் எதற்கு? ஆகையால் தானியேல் அவனுடைய வெகுமதிகளை புறக்கணிக்கிறான்.


பெல்தெஷாத்சாரின் பாவத்தை தானியேல் உணர்த்துதல் (தானி.5:18-24)



தானியேல், ராஜாவிடம்  உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்திருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தினாலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள். அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார். ஆனால் ஒருநாள் அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார். அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று. அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார். அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம் போலாயிற்று. காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார். உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லைமேய்ந்தார். அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

அவருடைய குமாரனாகிய நீர், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,  பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர். அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவரும்படி கட்டளையிட்டீர். மாத்திரமல்ல நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள். இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்கள். ஆகையால், அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து உமக்கு விரோதமாக எழுதப்பட்டது.


எழுத்தும் அதின் அர்த்தமும் விவரிக்கப்படுதல் (தானி.5:25-29)


சுவரில் கையுறுப்பு தோன்றி எழுதின எழுத்து  என்னவென்றால் "மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்" என்பதாகும். இந்த எழுத்தின் அர்த்தத்தை தானியேல் கூறுகிறார்.

"மெனே" என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார். பாபிலோன் ராஜ்யத்தின் நாட்களை எண்ணி அதற்கு முடிவு உண்டாக்கினார். எந்த தேசத்தையும் கட்டுவதும்  இடித்து தள்ளுவதும் அவரே. வல்லரசாய் காணப்பட்ட ரு.ளு.ளு.சு-ஐ சில நாட்களில்  காணாமல் போகும்படி செய்தவர் நம் தேவன்.

"தெக்கேல்" என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறைவாக காணப்பட்டாய். ஒவ்வொருவருடைய நிறைவையும் குறைவையும் தராசிலே தூக்கி பார்க்கிறவர் கர்த்தர். நன்மையையும் தீமையையும் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துகிற கர்த்தர் அவர். பெல்ஷாத்சார் கர்த்தருடைய தராசிலே நிறுக்கப்பட்ட வேளையில் குறைவுபட்டு போனான்.

"பெரேஸ் அல்லது உப்பர்சின்" என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது. அன்று சாலமோனின் பாவம் இஸ்ரவேல் தேசத்தை இரண்டாக பிரித்தது. அதுபோல பெல்ஷாத்சாரின் பாவம் பாபிலோனின் தேசத்தை இரண்டாக பிரிக்கிறது. அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில்பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.   ஆண்டவர் நேபுகாத்நேச்சாருக்கு 12 மாதம் தவணை கொடுத்தார். ஆனால் பெல்ஷாத்சாருக்கு சில மணிநேரங்கள் தான் தவணை காணப்படுகிறது. ஒருவேளை அவன் தன்னை தாழ்த்தியிருந்தால் தேவன் இரக்கத்தை கட்டளையிட்டிருக்ககூடும். அவன் தன்னை தாழ்த்தவில்லை.


பெல்தெஷாத்சாரின் முடிவு(தானி.5:30,31)


தானியேல் எழுத்தை வாசித்து அதின் அர்த்தத்தை கூறின அன்று இராத்திரியிலே பாபிலோன் சாம்ராஜ்யத்தின் முடிவும், பெல்ஷாத்சாரின் முடிவும்  கடந்து வந்தது. பெல்ஷாத்சார் அன்று ராத்திரியே மேதியனாகிய தரியுவால் கொலைசெய்யப்பட்டான். பெல்ஷாத்சார் அஜாக்கிரதையாக காணப்பட்ட ராஜா.  எதிரி வாசற்படியில் காணப்பட்ட போதிலும் அவன் அதை அறிய கூடாதவனாய் குடித்து வெறித்து களியாட்டம் செய்கிறவனாய்  காணப்பட்டான். அவனுடைய நிர்விசாரம் அவனை அழிவிற்கு உட்படுத்தினது.  மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான். எரேமியா தீர்க்கதரிசியுடைய வார்த்தையின்படி எழுபது வருட பாபிலோனிய ஆட்சி முடிவிற்கு வருகிறது. இரண்டாம் அதிகாரத்தில், சிலையின் மார்பும், புயங்களும் வெள்ளியாக நேபுகாத்நேச்சாரால்  கண்ட தரிசனத்தின் படி, மேதிய பெர்சிய ராஜ்யத்தின் ஆளுகை துவங்குகிறது.

    God bless you 

        Umn ministry 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*