தானியேல் விளக்கவுரை அதிகாரம் 8

0



 
 தரிசனம்(தானி.8:1,2)

தானியேல் முதலில் கண்ட தரிசனத்துக்குப் பின்பு (அதிகாரம் 7), ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம்பண்ணின மூன்றாம் வருஷத்திலே வேறொரு தரிசனத்தை கண்டான். இந்த வருஷம் பாபிலோனிய சாம்ராஜ்ய ஆட்சியின் கடைசி வருஷமாக காணப்படுகிறது. இத்தோடு பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் 70 வருஷ ஆட்சி  முடிந்து போகிறது. ஆகையால் 8-ஆம் அதிகாரத்தில் பாபிலோனை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


தானியேல் தரிசனத்தில் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருக்கிறார். அங்கே ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் காணப்படுகிறார். அவர் சரீரத்தில் பாபிலோன் தேசத்திலே காணப்பட்டாலும், ஆவியிலே பெர்சிய நாட்டின் தலைநகரான சூசானில் காணப்படுகிறார். யோவான் பத்மூ தீவில் இருந்துகொண்டு எப்படி எதிர்கால சம்பவங்களை தரிசனங்களை கண்டாரோ, அதுபோல தானியேலும் வரப்போகிற சாம்ராஜ்யங்களைப்பற்றிய தரிசனங்களை காண்கிறார். பெர்சிய சாம்ராஜ்யம் இன்னும் தோன்றவில்லை. ஆனால் அதைப்பற்றிய தரிசனத்தை காண்கிறார்.


இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடா(தானி.8:3,4)
தானியேல் கண்களை ஏறெடுத்து பார்த்த போது இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஊலாய் ஆற்றிற்கு முன்பாக நின்றது. அதற்கு இரண்டு கொம்புகள் காணப்பட்டது. இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது. ஆனாலும்  அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது. உயர்ந்தகொம்பானது பிந்தி முளைத்தெழும்பியது.
காபிரியேல் தூதன் இதனுடைய விளக்கத்தை கூறும் போது இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதிய,பெர்சிய தேசங்களின்    ராஜாக்கள்(தானி.8:20). பாபிலோனின் கடைசி ராஜாவாகிய பெல்சாத்ஷார் மேதியனாகிய தரியுவினால் கொலைசெய்யப்பட்ட பின்பு இராஜ்யபாரத்தை கடடிக்கொள்கிறான். பின்பு கோரேஸ் என்னும் பெர்சிய ராஜா ஆளுகிறார். பெர்சிய சாம்ராஜ்யம் மேதிய தேசத்தைகாடிடடிலும் பலமுள்ளது. 'அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன். ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக்கூடாதிருந்தது. அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை. அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது. அகாஸ்வேரு என்ற பெர்சிய ராஜாவின் நாட்களில் இந்து தேசம்(இந்தியா) முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் பெர்சிய ஆட்சி நடந்தது(எஸ்தர் 1:1).

வெள்ளாட்டுக்கடாவை பற்றிய தரிசனம்(தானி.8:5-8)

'நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது. அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது". கிரேக்க சாம்ராஜ்யத்தை குறிக்கிறது(தானி.8:21). கிரேக்க சாம்ராஜ்யத்தின் முதல் ராஜா மகா அலெக்சாண்டர். முதல் மேற்கத்திய சாம்ராஜ்யம் கிரேக்க சாம்ராஜ்யமாகும்.
'வெள்ளாட்டுகடா, ஊலாய் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும்  வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது.  அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது. அதின் முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்லாமையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது. அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்பவிப்பார் இல்லை." இது பெர்சிய சாம்ராஜ்யத்தின் அழிவை குறிக்கிறது. அதன்பின்பு கிரேக்க சாம்ராஜ்யமாகிய வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது. 'அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று". அது அலெக்சாண்டருடைய மரணத்தை குறிக்கிறது. அலெக்சாண்டர் இருபது வயதில் ராஜாவாகி முப்பத்திமூன்று வயதில் மரித்து போகிறார். பலமுள்ள வாலிப வயதில் ராஜ்யபாரத்தை இழக்கிறார். 'அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைந்தெழும்பினது" என்பது அலெக்சாண்டருக்கு பின்பு எழும்பின அவனுடைய நான்கு தளபதிகளை குறிக்கிறது. அலெக்சாண்டருக்கு பின்பு அவர்கள் எழும்பி தேசத்தை பிரித்து ஆண்டார்கள்.

சின்னதான ஒரு கொம்பு(தானி.8:9-12)


'நான்கு கொம்புகளில்  ஒன்றிலிருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று" நான்கு கொம்புகளில் ஒன்று ரோம சாம்ராஜ்யத்தை குறிக்கிறது. அதிலிருந்து தோன்றுகிற சின்ன கொம்பு என்பது கடைசியாக தோன்றப்போகிற சக்கிரவர்த்தியாகய அந்திகிறிஸ்துவை குறிக்கிறது. சிங்காரமான தேசம் இஸ்ரவேலை குறிக்கிறது. அந்த சின்னகொம்பு 'வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்தது, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றைப் பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது. அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று. அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது. பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று. அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது". அந்திக்கிறிஸ்து தன்னை தேவனுக்கு சமானமாய் உயர்த்துவான்.  அவனுடைய தகப்பன் சாத்தான் எப்படி தேவனுடைய பர்வதம் மட்டும் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் (ஏசாயா 14:13,14) என்று உயர்த்தினானோ அப்படியே இவனும் காணப்படுவான். அனேகரை விழத்தள்ளுவான். உபத்திரவகாலமாகிய ஏழு வருஷத்தின் மத்தியில் எருசலேம் தேவாலயத்திலிருந்து அன்றாட பலியை நீக்குவான். கர்த்தருடைய சேனையாகிய இஸ்ரவேல் ஜனங்களை(யாத். 12:41) உபத்திரவப்படுத்துவான்.  தேவனுடைய வசனமே சத்தியம். அதை தள்ளிவிடுவான். அவனுடைய கிரியைகளினாலே ஜனங்களிடத்தில் அனுகூலம் பெறுவான்.

இரண்டு பரிசுத்தவான்களுடைய உரையாடல்(தானி.8:13,14)

பரிசுத்தவானாகிய ஒருவன் பேசுவதை தானியேல் கேட்கிறார். ஆனால் அவர் என்ன பேசினார் என்று எழதப்படவில்லை. உடனே வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும் பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான். அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும். பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான். 'பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்(மத்24:15)".

காபிரியேல் தூதனைப் பற்றிய தரிசனம்(தானி.8:15-18)


தானியேல் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில்,  மனுஷசாயலான ஒருவர் எதிரே நிற்கிறான். அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்கிறான். ஆண்டவர் காபிரியேல் தூதனிடம் இந்த தரிசனத்தின் பொருளை விளக்கிகூறும்படி கூறுகிறார்.

தூதன் தானியேல் நின்ற இடத்துக்கு வருகிறான். அவன் வருகையில் தானியேல் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தான். தூதன் அவனை நோக்கி: மனுபுத்திரனே கவனி. இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான். தூதுன் பேசுகையில், தானியேல் தரையில் முகங்குப்புறக் கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டான். அவன் இவனைத் தொட்டு  காலூன்றி நிற்கும்படி செய்து, தரிசனத்தைப்பற்றி விளக்குகிறார்.:

தரிசனத்தின் விளக்கம்(தானி.8:19-26)

'நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதிய, பெர்சிய தேசங்களின் ராஜாக்கள். ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா. அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா.  அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும். ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது"  மகா அலெக்சாண்டர் மற்றும் அவனுடைய நான்கு தளபதிகளின் ஆட்சியை குறிக்கிறது.
அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான். மூர்க்கமுகமுள்ள ராஜா என்று சொல்லுவது அந்திகிறிஸ்துவை குறிக்கிறது. ஆதியிலே ஏவாளிடத்தில் எப்படி வஞ்சகமான பேச்சுகளை பேசி வஞ்சித்தானோ அது போல சூதான பேச்சை பேசி ஜனங்களை கடைசிநாட்களில் வஞ்சிப்பான். எப்போது அவன் வெளிப்படுவான், பாதகருடைய பாதகம் நிறைவேறும் நாட்களில் வெளிப்படுவான். பாதகருடைய பாதகம் நிறைவேறும் நாட்கள் என்று சொல்லும் போது நியாயத்தீர்ப்பின் நாட்களை குறிக்கிறது. மணவாட்டி சபை ஆண்டவருடைய இரகசிய வருகையில் எடுத்துகொள்ளப்பட்டபின்பு, தடைசெய்கிற ஆவியானவர் மணவாட்டியோடு போனபின்பு, அந்திகிறிஸ்து வெளிப்படுவான்.
அவனுடைய வல்லமை பெருகும். அவனுடைய சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக் கிரியைசெய்வான். ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அவனைப் பலப்படுத்தும். பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான். பரிசுத்த ஆலயத்திலும் வந்து சீர் கேடானவைகளை செய்வான். இஸ்ரவேல் ஜனங்களையும், தேவலயத்தையும் அழிப்பான். அவன் தன் உபாயத்தினால், வஞ்சகத்தை கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழிப்பான். நிர்விசாரம் சோதோமின் அழிவிற்கு காரணம். இரட்சண்ய நாட்களாகிய இந்நாட்களில் நிர்விசாரமாயிருக்கிறவர்களை அந்நாட்களில் அழிப்பான். அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிற ஆண்டவருக்கு  விரோதமாய் எழும்புவான்.  ஆனாலும் அவன் கையினால் அல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான். அவனுடைய விழுகையைப்பற்றி வெளி.19:11-21 வரையில் எழுதப்பட்டுள்ளது.
சொல்லப்பட்ட இராப்பகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது. ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்து வை. அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்று கூறுகிறான். மறைப்பொருள் தானியேலுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அவனுடைய நாட்களுக்கு பின்பு இப்போது அநேக நாள் சென்றாகி விட்டது. இந்நாட்கள் தரிசனம் நிறைவேறும் காலம்.  ஆகையால்  கடைசி நாட்களில் வாழ்கின்ற தேவ பிள்ளைகளுக்கு மறைவானவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கிருபையின் நாட்களில் இரட்சிப்பை சுதந்தரிப்போம்.
'தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன். பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின்வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன். ஒருவரும் அதை அறியவில்லை". கடைசி கால சம்பவங்கள் தானியேலை திகைகசெய்தது.


 

God bless you Umn ministry 





Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*