“எஜமான் வரும்போது
எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள்” (லூக்கா 12:37).
எஜமான் வரும்போது நாம் விழித்திருக்கிறவர்களாய்க் காணப்படுவது எப்படி? எஜமான் வருகிற காலத்தையும் நேரத்தையும் நாம் அறியோம். ஆகவே நாம் எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாய் காணப்பட வேண்டும். அவனே உண்மையுள்ள ஊழியக்காரன். அநேகர் தங்களுடைய வாழ்க்கையில், சோம்பலான ஊழியக்காரனே என்று சொல்லுகிற விதமாக அல்லது சோம்பலான விசுவாசிகள் என்று சொல்லுகிற விதமாக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாய் இருப்பதில்லை. அநேகருடைய வாழ்க்கையில் ஆலயத்திற்குப் போகும்பொழுது மாத்திரமே அவர்களுடைய பக்தி காணப்படும். மற்ற நாட்களில் அவர்களின் பக்தியைப் பார்க்க முடியாது. அது மெய்யான விழித்திருப்பது அல்ல. மெய்யாக விழித்திருப்பது என்பது எந்தச் சூழ்நிலையிலும் எந்த நாளிலும் நம்முடைய இருதயம் தேவனோடு இணைக்கப்பட்டதாய் காணப்படுவது அவசியம். அவருக்காக நாம் உழைக்கிறவர்களாக நம்முடைய வாழ்க்கையை வாழுவது மிக அவசியம். அநேகர் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் அவ்விதமாக இருப்பதில்லை. புத்தியுள்ளக் கன்னிகைகள் விழித்திருக்கிறவர்களாய் காணப்பட்டார்கள். ஆனால் புத்தியில்லாதக் கன்னிகைகள் அவ்வாறு காணப்படவில்லை. விழிப்பற்றவர்களாக, ஆயத்தமற்றவர்களாக அவர்கள் மணவாளனை அழைக்கும்படியாகச் சென்றார்கள். ஆனால் அவர்கள் கைவிடப்பட்டார்கள். விழிப்பில்லாதவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரியச் சிலாக்கியத்தை இழந்தவர்களாகக் காணப்படுவார்கள். அருமையானவர்களே புத்தியுள்ளக் கன்னிகைகளைப் போல நீங்கள் வாழ்கின்றீர்களா? அல்லது சோம்பலான ஊழியக்காரனைப் போல ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வெளிச்சத்தையும் தாலந்தையும் புதைத்துப் போட்டு, உங்களுடைய சொந்த வழிகளில் செயல்படுகின்றீர்களா? விழித்திருங்கள். இதுவே சரியான நேரம்.