இயேசுவின் நற்செயல்கள்: எங்கே கூறப்பட்டுள்ளது?Jesus' Acts of Goodness: Where Is It Stated?
நன்மைசெய்
அன்பு வாசகர்களுக்கு ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசுகிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார்.
வேதம் கூறுகிறது நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார் தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார் (அப்போஸ்தலர்: 10:38] வேதம் கூறுகிறது நன்மை செய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை.
சகலவற்றையும் அனுபவித்து எல்லாம் மாயை என்று ஆராய்ந்து பார்த்த சாலொமோன் ராஜா கூறுகிறார் மகிழ்ச்சியாயிருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மை செய்வது- மேயல்லாமல் வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படியாய் நன்மை செய்ய வேண்டும் என வேத வசனங்களின் வாயிலாக தியானிப்போம்.
1. தீமையை விட்டு விலகி நன்மை செய்
தீமையை விட்டு விலகி நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய் (சங்கீதம்:37:27).அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார் நீ தீமையானதை பின்பற்றாமல் நன்மையானதை பின்பற்று. நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான். தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை யோவான்:3:11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரப்போகிற நன்மைகளின் பிரதான
ஆசாரியராய் வெளிப்பட்டு தம்முடைய சொந்த இரத்தத்தினாலே பாவிகளான நமக்கு நித்திய மீட்பை உண்டு பண்ணினார்.
அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்து மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் தேவனை வெளிப்படுத்தும்படி தீமையை விட்டு விலகி நன்மை மை செய்ய வேண்டும்.
நாம் தீமையை தீமையினால் வெல்லாமல் நன்மையினால் வெல்ல முயற்சிக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக நாம் தாவீது ராஜாவை சொல்லலாம். அவர் தன்னை பகைத்து கொலை செய்ய பின்தொடர்ந்த சவுல் ராஜாவை, கொலை செய்ய தருணங்கள் கிடைத்த போதும் தேவன் என்னை பாதுகாப்பார் என்ற விசுவாசித்து நன்மையே செய்தார்.
அதை கண்ட சவுல் ராஜா நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய் நானோ உனக்கு தீமைசெய்தேன். நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக் கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை என்று சொல்லி தாவீதை குறித்து சாட்சிகொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கை பயணம் எப்படியாய் இருக்கிறது? அன்பானவர்களே நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நன்மையானதாக முடிகிறதா அல்லது பிறருக்கு தீமையை விளைவிக்கிறதா என்று நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
பவுலடியார் கூறியதை போல நாம் நன்மையை செய்ய விரும்பினாலும் நம்முடைய மாம்ச சரீரத்தினால் தேவனுடைய ஆவிக்கு கீழ்படியாமல் விரும்பாத தீமையை செய்கிற தருணங்கள் உண்டு.
நமக்கு தீங்கு செய்தவர்களுக்கு நாம் தீமை செய்யும் போது தேவனால் உண்டாயிருக்கிறவன் என்ற நற்சாட்சியை இழந்து தேவனை அறியாத மற்ற மனுஷர்களின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறோம். ஒவ்வொரு நாளும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிரயாசபட
வேண்டும். நாம் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்கு பேதைகளுமாயிருக்க கற்றுக்கொள்ள வேண்டும் ரோமர்:16:19. தேவனுடைய கரத்தில் நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம்.
பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மோடு கூட இருந்து நம்மிலுள்ள தீமையை அகற்றி நன்மையான பாத்திரமாய் நம்மையும் மாற்றுவார்.
2. ஜீவனை அடையும்படி நன்மைசெய்
வேதம் கூறுகிறது பிரேதக்ககுழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தை கேட்குங் காலம் வரும் நன்மை செய்கிறவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்கிறவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள் யோவான்:5:58,59. அதாவது இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு தேவனுடைய நீதியை நிறைவேற்றி நன்மை செய்த நீதிமான்கள் நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள். ஒரு ஆஸ்தியுள்ள வாலிபன் இயேசுவிடம் வந்து நித்திய ஜீவனை சுதந்தரித்து கொள்ள எந்த நன்மையை செய்ய வேண்டும் என்ற கேட்ட போது இயேசு கூறினார் நீ உனக்குள்ளதை விற்று தரித்திரருக்கு கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும் என்றார்.
இயேசு கிறிஸ்து அவனிடம் ஐசுவரியத்தின் மேல் உள்ள பற்றை விட்டுவிட்டு அதை தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படும்படிக்கு தரித்திரருக்கு கொடு என்றார். இந்த வாலிபன் ஐசுவரியத்தின் மேல் மிகுந்த பற்றுதலாய் இருந்தபடியால் அவனால் அவரை பின்பற்றுவது BL:19:16-30. நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்படி நாம் எதை இழக்கிறோமோ அதுவே நாம் செய்யும் நன்மையாயிருக்கிறது. அன்பானவர்களே நாமும் நித்திய ஜீவனை சுதந்தரிக்கும் படி நன்மை செய்ய அழைக்கப்பட்டிருகிறோம். நம்முடைய பற்றுதல் விருப்பம் எதின்மேல் இருக்கிறது என்பதை சோதித்து அறிந்து அதனை விட்டுவிட்டு தேவனை முழுமையாய் பின்பற்றி பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்ப்போம்.
நம்முடைய பற்றுதல் தேவன் மேல் மாத்திரம் இருக்கட்டும். தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்ப்படும்படிக்கும் தரித்திரர் தேவனை அறிந்து கொள்ளவும் நம்முடைய பணம் பொருள் ஆகியவற்றை பிரயோஜனப்படுத்துவோம். நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளுவோம்.
வேதம் கூறுகிறது என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது. சகோதரரையாவது. சகோதரிகளையாவது. தகப்பனையாவது. தாயையாவது. மனைவியையாவது. பிள்ளைகளையாவது. நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்,
3. கர்த்தரை நம்பி நன்மை செய்
கர்த்தரை நம்பி நன்மை செய் சங்கீதம்:37:3. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசித்த மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போலானான் என்று தேவன் கூறினார். நாம் செய்வது நன்மையா தீமையா என நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
வேதம் கூறுகிறது ஒருவன் நன்மை
செய்ய அறிந்திருந்தும் அதை செய்யாமற்போனால் அதுஅவனுக்கு பாவமாயிருக்கும் யாக்கோபு:4:17. தன்னை நேசிக்கிறவர்களுக்கு மட்டுமே நன்மை செய்வது இன்றைய உலக இயல்பு. நம்முடைய பகைவர்கள் சத்துருக்களுக்கு நன்மை செய்ய நமது மனது ஒத்துழைப்பதில்லை. ஆனால் இயேசுகிறிஸ்து கூறுகிறார் உங்களை பகைக்கிறவர்களுக்கும் உங்கள் சத்துருக்களுக்கும் நன்மை செய்யுங்கள். உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற பிதாவின் புத்திரராய் இருப்பீர்கள்.அதுமட்டுமல்ல உன்னதமானவரின் பிள்ளைகள் எனபடுவீர்கள் என வேதம் கூறுகிறது. அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி நீதியுள்ளோர்மேலும் அநீதியுள்ளோர்மேலும் மழையை வருஷிக்கப் பன்னுகிறார்.நம்முடைய தேவன் துரோகிகளுக்கும் நன்றிமறந்தவர்களுக்கும் நன்மை செய்கிற தேவன். மத்தேயு:6:44,45, லூக்கா:6:33-35. இயேசு கிறிஸ்து தன்னை பிடித்து மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க வந்த போர்சேவகனின் வேலைகாரனான மல்குஸின் வெட்டப்பட்ட காதை சொஸ்தமாக்கினார். இந்த அன்பை தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? என்று காயீனிடம் பேசின கர்த்தர் இன்று நம்மோடு பேசுகிறார். நம்மை பகைக்கிறவர்கள் சத்துருக்களை சிநேகித்து அவர்களுக்கும் நன்மை செய்து கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த முயற்சிப்போம்.
அப்பொழுது பரலோகத்தில் நமக்கு மிகுந்த பலன் உண்டாயிருக்கும். வேதம் கூறுகிறது உன்னிடத்தில் நீ அன்புகூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்ற ராஜரீக பிரமாணத்தை நாம் நிறைவேற்றினால் நன்மை செய்கிறோம் யாக்கோபு:2:8 ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து கிறிஸ்துவின் அன்பு நம் உள்ளத்தில் ஊற்றபடும் போது மட்டுமே நாம் எல்லோரையும் நேசித்து நன்மை செய்ய முடியும்.
4. சோர்ந்து போகாமல் நன்மை செய்
அப்போஸ்தலராகிய பவுல் கூறுகிறார் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம் கலாத்தியர்:6:9,10. நமக்கு கிடைக்கும் சமயத்திற்குதக்கதாய் யாவருக்கும் விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்.
விதவைகளை கணம் பண்ணி அவர்களுக்கு நன்மைகள் செய்வது தேவனுக்கு முன்பாக பிரியமாய் இருக்கிறது! தீமோத்தேயு:5:4. கிறிஸ்தவர்களாகிய நாம் குடும்பத்திலும் சமுதாயத்திலும் வறுமையில் வாடுவோருக்கும் ஏழை எளியர்வர்கள் திக்கற்ற பிள்ளைகளுக்கும் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஏனென்றால் வேதம் கூறுகிறது நன்மை செய்யவும் தானதர்மம் செய்யவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் எபிரெயர்:13:16. இயேசு கிறிஸ்துவின் சிங்காசன நியாயதீர்ப்பில் நீதிமான்கள் நித்திய ஜீவனையும் சபிக்கப்பட்டவர்கள் நித்திய ஆக்கினையும் அடைவார்கள். இந்த நீதிமான்களைப் பார்த்து இயேசு பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள் தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்.. மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்பார் என வேதம் கூறுகிறது. உலகத்தில் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஏழை எளியோர்க்கு நன்மை செய்ய
வேண்டும். அதோடு நின்றுவிடாமல் புறஜாதியாரை
தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு ஆயத்தப்படுத்தி அவர்கள்
ஆத்துமாக்களுக்கு நன்மை செய்கிறவர்களாயும் நாம் மாற
வேண்டும். ஆவிக்குரிய பிரகாரமாக நாம் பார்க்கும் போது
இயேசுவின் தாகத்தை தீர்ப்பதும் அவருடைய பசியை ஆற்றுவதும்
அவருடைய ராஜ்ஜியத்திற்கு ஆத்துமாக்களை ஆதாயம்
செய்வதை குறிக்கும். ஏனென்றால் பாவிகளை இரட்சிக்கவே
இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்தார். அவர் உலகத்தில் வாழ்ந்த
போது தம்மிடம் உதவிநாடி வந்த ஜனங்களுக்கு உதவி
செய்ததோடு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது இனி பாவம்
செய்யாதே என கூறியதை நாம் வேதத்தில் காண்கிறோம். இயேசு
கிறிஸ்து சரீரபிரகாரமான சுகத்தையும் ஆவிக்குரிய சுகத்தையும்
ஜனங்களுக்கு அளித்தார். எனவே நாமும் சோர்ந்து போகாமல்
நன்மைகள் செய்வதோடு நின்றுவிடாமல் அவருடைய
ராஜ்யத்திற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்துவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வேதம் கூறுகிறது நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே நீதிமொழிகள்:3:27. கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மிலுள்ள தீமைகளை அகற்றி விட்டு நன்மை செய்ய வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் எவ்விடத்திலும் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வண்ணம் எல்லாருக்கும் நன்மைகளை செய்வோம். நாம் பிறருக்கு நன்மைகள் செய்தாலும் பல நேரங்களில் அவர்கள் நமக்கு தீமை செய்ய கூடும்.
இப்படிப்பட்ட பாடுகள் அடையும் போது பொறுமையோடு சகிக்க வேண்டும். அது தேவனுடைய சமூகத்தில் பிரீதியாயிருக்கிறது. நாம் ஏதோ ஒரு உதவியை செய்வது மட்டும் நன்மையல்ல. ஒரு சகோதரன் இடகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது தவறுகிறதற்காவது ஒன்றும் ஏதுவாய் செய்யாமலிருப்பதும் நன்மையே. சாலொமோன் ராஜா நன்மை தீமை இன்னதென்று வகையறுக்க ஞானமுள்ள இருதயத்தை தேவனிடம் கேட்டார்.
அது தேவனின் பார்வைக்கு உகந்த விண்ணப்பமாய் இருந்தது. தேவனுடைய பாதத்தில் அமர்ந்து நன்மை தீமை வகையறுக்கதக்க ஞானமுள்ள இருதயத்தை தாரும் என மன்றாடுவோம். நாம் உயிரோடிருக்கும் காலம் வரை நம்மால் இயன்ற நன்மைகளை பிறருக்கு செய்வோம். தேவன் நம் ஒவ்வொருவரையும் இரட்டிப்பான நன்மையினால் நிறைத்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்.