Journey to Rome 27 We sail to Italy Adventure ரோம் பயணம் 27 நாங்கள் இத்தாலி சாகச பயணம்

0

 Journey to Rome 27 We sail to Italy Adventure ரோம் பயணம் 27 நாங்கள் இத்தாலி சாகச பயணம்



அப்போஸ்தலர் 27 - Tamil Bible: Easy-to-Read Version

ரோமாபுரிப் பயணம்

27 நாங்கள் இத்தாலிக்குக் கடற்பயணம் செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

 ஜூலியஸ் என்னும் பெயருள்ள படை அதிகாரி பவுலையும் வேறு சில கைதிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டான். இராயரின் படையில் ஜூலியஸ் சேவை புரிந்துகொண்டிருந்தான். 2 நாங்கள் ஒரு கப்பலில் ஏறிச் சென்றோம். கப்பல் அதிரமித்தியம் என்னும் நகரிலிருந்து வந்து ஆசியாவின் பல இடங்களுக்குப் பயணம் செல்லத் தயாராக இருந்தது. அரிஸ்தர்க்கும் எங்களோடு வந்தான். அம்மனிதன் மக்கதோனியாவில் தெசலோனிக்கா நகரத்தைச் சேர்ந்தவன்.


3 மறுநாள் நாங்கள் சீதோன் நகரத்திற்கு வந்தோம். ஜூலியஸ் பவுலோடு நல்ல முறையில் நடந்துகொண்டான். அவன், பவுல் அவனது நண்பர்களைச் சென்று சந்திக்கும் சுதந்திரத்தை அவனுக்குக் கொடுத்தான். இந்த நண்பர்கள் பவுலுக்குரிய தேவைகளைக் கவனித்து வந்தனர். 4 நாங்கள் சீதோன் நகரத்திலிருந்து கடலில் பயணமானோம். காற்று எங்களுக்கு எதிர்த் திசையில் வீசியபடியால் சீப்புரு தீவின் கரையோரம் எங்கள் கடற்பயணம் தொடர்ந்தது. 5 சிலிசியா, பம்பிலியா வழியாகக் கடலைக் கடந்து சென்றோம். பின் லீசியாவிலுள்ள மீரா நகரத்திற்கு நாங்கள் வந்தோம். 6 மீராவில் படை அதிகாரி அலெக்ஸாண்டிரியா நகரத்திலிருந்து வந்த ஒரு கப்பலைக் கண்டான். இந்தக் கப்பல் இத்தாலிக்குப் போய்க் கொண்டிருந்தது. எனவே அவன் எங்களை அதில் ஏற்றினான்.



7 நாங்கள் நிதானமாகப் பல நாட்கள் கடலில் பயணம் செய்தோம். காற்று எங்களுக்கு எதிராக வீசிக்கொண்டிருந்தபடியால் கினீது நகரை அடைவதே கடினமாக இருந்தது. அவ்வழியாக மேலும் போக முடியவில்லை. சால்மோனின் அருகேயுள்ள கிரேத்தா தீவின் தென் பகுதியின் வழியாகக் கடல் பயணமானோம். 8 கடற்கரை ஓரமாகப் போனோம். ஆனாலும் கடற் பயணம் கடினமாக இருந்தது. பாதுகாப்பான துறைமுகம் என்னும் இடத்திற்கு வந்தோம். லசேயா நகரம் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது.


9 நிறைய நேரத்தை நாங்கள் இழந்திருந்தோம். கடற்பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில் யூதர்களின் உபவாச தினம் ஆரம்பித்திருந்தது. எனவே பவுல், 10 “மனிதரே இப்பயணத்தில் இன்னும் தொல்லைகள் மிகுதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களை எச்சரித்தான். “கப்பலும், கப்பலின் பொருள்களும் இழக்கப்படலாம். நம் உயிரையும் நாம் இழக்கக்கூடும்!” என்றான். 11 ஆனால் கப்பல் தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் பவுல் கூறியதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் படை அதிகாரி பவுலை நம்பவில்லை. பதிலாக, தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் கூறியதை அதிகாரி நம்பினான். 12 குளிர்காலத்தில் கப்பல் தங்குவதற்கு அத்துறைமுகமும் ஏற்றதல்ல. எனவே பெரும்பான்மையான மனிதர்களும் கப்பல் புறப்படவேண்டுமென முடிவெடுத்தனர். பேனிக்ஸ் நகரத்தை அடையக் கூடுமென அவர்கள் நம்பினர். குளிர்காலத்தில் கப்பல் அங்கு தங்கமுடியும். (கிரேத்தா தீவில் பேனிக்ஸ் ஒரு நகரம். தென் மேற்கு, வட மேற்கு திசைகளை நோக்கிய துறைமுகம் அங்கிருந்தது.)



புயல்

13 தெற்கிலிருந்து ஒரு நல்ல காற்று வீசியது. கப்பலிலிருந்த மனிதர்கள், “நமக்குத் தேவையான காற்று இது. இப்போது அது வீசுகிறது!” என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை மேலே இழுத்தார்கள். கிரேத்தா தீவுக்கு வெகு அருகில் பயணம் செய்தோம். 14 “வட கிழக்கன்” என்னும் பெயருள்ள மிகப் பலமான காற்று தீவின் குறுக்காக வந்தது. 15 இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம்.


16 கிலவுதா என்னும் ஒரு சிறிய தீவின் கீழே சென்றோம். எங்களால் உயிர் மீட்கும் படகை வெளியே எடுக்கமுடிந்தது. ஆனால் அதை எடுப்பது மிகக் கடினமான செயலாக இருந்தது. 17 உயிர் மீட்கும் படகை மனிதர்கள் எடுத்த பின், அவர்கள் கப்பலைச் சுற்றிலும் கயிறுகளால் கப்பல் சரியாக இருப்பதற்கென்று கட்டினார்கள். சிர்டிஸின் மணற் பாங்கான கரையில் கப்பல் மோதக்கூடுமென்று அவர்கள் நினைத்தார்கள். எனவே துடுப்புகளை எடுத்துவிட்டு, காற்று கப்பலைச் செலுத்தும்படியாக விட்டார்கள்.


18 மறுநாள் புயல் கடுமையாகத் தாக்கியதால் மனிதர்கள் கப்பலிலிருந்து சில பொருட்களை வெளியே வீசினார்கள். 19 ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர். 20 பல நாட்கள் எங்களால் சூரியனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. புயல் கொடுமையாக இருந்தது. நாங்கள் உயிர் பிழைக்கும் நம்பிக்கையைக் கைவிட்டோம். நாங்கள் இறந்து விடுவோமென எண்ணினோம்.


21 நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. 22 ஆனால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிக்கு உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் ஒருவரும் இறக்கமாட்டீர்கள்! ஆனால் கப்பல் அழிந்து போகும். 23 நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன். 24 தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான். 25 எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும். 26 ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான்.


27 பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர். 28 அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. 29 நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர். 30 சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர். 31 ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான். 32 எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர்.


33 அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை. 34 நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான். 35 இதைக் கூறிய பிறகு பவுல் ரொட்டியை எடுத்து எல்லோர் முன்பாகவும் அதற்காக தேவனுக்கு நன்றி சொன்னான். அதில் ஒரு பகுதியை எடுத்து, அவன் உண்ண ஆரம்பித்தான். 36 எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். 37 (கப்பலில் 276 பேர் இருந்தனர்.) 38 நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம்.


கப்பல் அழிந்தது

39 பகல் ஒளி வர ஆரம்பித்ததும் மாலுமிகள் நிலத்தைக் கண்டனர். அந்நிலம் எதுவென்று அவர்களால் அறியமுடியவில்லை. அவர்கள் கடற்கரையோடு கூடிய ஒரு வளைகுடாவைக் கண்டனர். மாலுமிகள் அவர்களால் முடிந்தவரைக்கும் கடற்கரைக்கு நேராக கப்பலைச் செலுத்த முயன்றனர். 40 ஆனால் கப்பல் மணல் மேட்டில் மோதியது. 41 கப்பலின் முன்பகுதி அதற்குள் நுழைந்து நின்றது. கப்பலால் அசைய முடியவில்லை. பெரும் அலைகள் வந்து கப்பலின் பின்பகுதியில் மோதி, கப்பலை உடைத்துவிட்டன.


42 எந்தக் கைதியும் நீந்தித் தப்பித்துப் போகாதவாறு வீரர்கள் அவர்களைக் கொல்வதற்கு முடிவு செய்தார்கள். 43 ஆனால் படைத் தலைவன் பவுலை உயிரோடு காக்க எண்ணினான். எனவே வீரர்கள் கைதிகளைக் கொல்வதற்கு அவன் அனுமதிக்கவில்லை. நீந்தத் தெரிந்தவர்கள் கடலில் குதித்து நீந்திக் கரை சேரலாமென்று ஜூலியஸ் மக்களுக்குக் கூறினான். 44 பிற மக்கள் மரப் பலகைகளையோ கப்பலின் உடைந்த பகுதிகளையோ பிடித்து நீந்தினர். இவ்வாறு எல்லா மக்களும் நிலத்தை அடைந்தனர். மக்களில் ஒருவரும் இறக்கவில்லை.


மெலித்தா தீவில் பவுல்

28 நாங்கள் நலமாகக் கரையை அடைந்தபோது அத்தீவு மெலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். 2 மழை பெய்துகொண்டிருந்தது. குளிர் மிகுதியாக இருந்தது. ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் எங்களை அசாதாரணமான அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் எங்களுக்காகத் தீ மூட்டி எங்களையெல்லாம் வரவேற்றனர். 3 நெருப்பின் பொருட்டு பவுல் விறகுக் குச்சிகளை சேகரித்தான். பவுல் அக்குச்சிகளை நெருப்பில் இட்டுக்கொண்டிருந்தான். விஷப் பாம்பு ஒன்று வெப்பத்தினால் வெளியேறி வந்து பவுலின் கையில் கடித்தது. 4 தீவில் வாழ்ந்த மக்கள் பவுலின் கையில் அப்பாம்பு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “இம்மனிதன் ஒரு கொலைக்காரனாக இருக்க வேண்டும். அவன் கடலில் இறக்கவில்லை. ஆனால் தெய்வீக நீதியானது அவன் வாழ்வதை விரும்பவில்லை” என்றனர்.


5 ஆனால் பவுல் பாம்பைத் தீயினுள் உதறினான். அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. 6 பவுல் சரீரம் வீங்கக் கூடும், அல்லது அவன் இறந்துவிடக்கூடும் என்று மக்கள் எண்ணினர். மக்கள் காத்திருந்து நீண்ட நேரம் பவுலைக் கண்காணித்தனர். ஆனால் அவனுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. எனவே பவுலைக் குறித்த தங்கள் கருத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர். அவர்கள் “அவன் ஒரு தேவன்” என்றனர்.


7 அப்பகுதியைச் சுற்றிலும் சில வயல்கள் இருந்தன. தீவின் ஒரு முக்கியமான மனிதனுக்கு அந்த வயல்கள் சொந்தமானவை. அவன் பெயர் புபிலியு. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் வரவேற்றான். அவன் எங்களுக்கு நல்லவனாக இருந்தான். நாங்கள் அவனது வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். 8 புபிலியுவின் தந்தை மிகவும் நோயுற்றுப் படுக்கையிலிருந்தார். அவருக்கு காய்ச்சலும் வயிற்றிளைச்சலும் இருந்தது. ஆனால் பவுல் அவனிடம் சென்று அவனுக்காகப் பிரார்த்தனை செய்தான். பவுல் தனது கைகளை அம்மனிதன் மீது வைத்து அவனைக் குணமாக்கினான். 9 இது நடந்த பின் தீவிலுள்ள எல்லா நோயாளிகளும் பவுலிடம் வந்தனர். அவர்களையும் கூடப் பவுல் குணமாக்கினான்.


10-11 தீவின் மக்கள் எங்களுக்குப் பல கௌரவங்களை அளித்தார்கள். (நாங்கள் தீவில் மூன்று மாதம் தங்கினோம்) நாங்கள் புறப்படுவதற்குத் தயாரானபோது எங்களுக்குத் தேவையான பொருட்களை மக்கள் கொடுத்தார்கள்.


பவுல் ரோமுக்குப் போகிறான்

அலெக்ஸாண்டிரியாவிலிருந்து வந்த ஒரு கப்பலில் நாங்கள் ஏறினோம். குளிர் காலத்தில் அக்கப்பல் மெலித்தா தீவில் தங்கியிருந்தது. மிதுனம் [a] என்னும் சின்னம் கப்பலில் முன்புறத்தில் இருந்தது. 12 சிராகூஸ் நகரில் நாங்கள் கப்பலை நிறுத்தினோம். மூன்று நாட்கள் சிராகூஸில் தங்கியிருந்து பின் புறப்பட்டோம். 13 ரேகியு நகருக்கு நாங்கள் வந்தோம். தென்மேற்கிலிருந்து மறுநாள் ஒரு காற்று வீசியது. எனவே நாங்கள் கடலில் பயணமாக முடிந்தது. ஒரு நாள் கழித்து நாங்கள் புத்தேயோலி நகருக்கு வந்தோம். 14 அங்குச் சில சகோதரர்களை நாங்கள் கண்டோம். ஒரு வாரம் தம்மோடு எங்களைத் தங்கியிருக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். இறுதியில் நாங்கள் ரோமை அடைந்தோம். 15 ரோமிலுள்ள விசுவாசிகள் நாங்கள் அங்கிருப்பதை கேள்விப்பட்டனர். அப்பியு சந்தையிலும், மூன்று விடுதிகளிலும் எங்களைச் சந்திக்கும்படியாக அவர்கள் வந்தனர். விசுவாசிகளைக் கண்டபோது பவுல் ஊக்கம் பெற்றான். பவுல் தேவனுக்கு நன்றி கூறினான்.


ரோமில் பவுல்

16 பின்பு நாங்கள் ரோமுக்குச் சென்றோம். ரோமில் பவுல் தனித்துத் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டான். ஒரு வீரன் மட்டும் பவுலைக் காவல் காப்பதற்காக அவனோடு தங்கினான்.


17 மூன்று நாளைக்குப் பின் பவுல், சில மிக முக்கியமான யூதர்களைத் தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் எல்லோரும் வந்தபோது பவுல், “எனது யூத சகோதரர்களே, நான் நமது மக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை, நம் முன்னோர்களின் மரபிற்கு எதிராகவும் எதையும் நான் செய்யவில்லை. ஆனால் என்னை எருசலேமில் சிறைப்பிடித்து ரோமரிடம் ஒப்படைத்தனர். 18 ரோமர்கள் என்னை விசாரித்தார்கள். ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஏதுவான எந்தக் காரணத்தையும் என்னிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் என்னை விடுதலை செய்ய விரும்பினர். 19 ஆனால் அங்கிருந்த யூதர்கள் அதை விரும்பவில்லை. எனவே நான் என்னை இராயரிடம் வழக்காடும்படியாக ரோமுக்குக் கொண்டு வருமாறு கேட்க வேண்டியதாயிற்று. ஆனால் எனது மக்கள் தவறிழைத்தார்கள் என்று நான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை. 20 எனவே தான் உங்களைச் சந்தித்து உங்களோடு பேச விரும்பினேன். இஸ்ரவேலரின் நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் இவ்விலங்குகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.


21 யூதர்கள் பவுலுக்குப் பதிலாக, “நாங்கள் உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதையும் பெறவில்லை. அங்கிருந்து பயணம் செய்த எந்த யூத சகோதரரும் உன்னைக் குறித்து செய்தி கொண்டுவரவோ, உன்னைப் பற்றித் தவறாக எதையும் கூறவோ இல்லை. 22 நாங்கள் உனது கருத்துக்களை அறிய விரும்புகிறோம். இந்தக் கூட்டத்தினருக்கு (கிறிஸ்தவர்களுக்கு) எதிராக எல்லா இடங்களின் மக்களும் பேசிக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்” என்றனர்.


23 பவுலும் யூதரும் கூட்டத்திற்கு ஒரு நாளைத் தேர்ந்துகொண்டனர். அந்த நாளில் இன்னும் பல யூதர்கள் பவுலை அவனது வீட்டில் சந்தித்தனர். நாள் முழுவதும் பவுல் அவர்களிடம் பேசினான். தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து பவுல் அவர்களுக்கு விளக்கினான். இயேசுவைக் குறித்த காரியங்களில் அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்ய முயன்றான். மோசேயின் சட்டங்களையும் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் இதற்குப் பயன்படுத்தினான். 24 சில யூதர்கள் பவுல் கூறியவற்றை நம்பினார்கள். ஆனால் மற்றவர்கள் அதை நம்பவில்லை. 25 அவர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யூதர்கள் புறப்படுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பவுல் அவர்களுக்கு வேறொரு செய்தியையும் சொல்லியனுப்பினான்: “பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உங்கள் முன்னோருக்கு உண்மையைக் கூறினார். அவர்,


26 


“‘இம்மக்களிடம் போய் அவர்களுக்குக் கூறு,

நீங்கள் கவனிப்பீர்கள், நீங்கள் கேட்பீர்கள்,

    ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.

நீங்கள் காண்பீர்கள், நீங்கள் பார்ப்பீர்கள்,

    ஆனால் நீங்கள் பார்ப்பவற்றைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.


27 


ஆம், இம்மக்களின் இருதயங்கள் கடினப்பட்டுள்ளன.

    இம்மக்களுக்குக் காதுகள் உள்ளன.

    ஆனால் அவர்கள் கேட்பதில்லை.

இம்மக்கள் உண்மையைக் காணவும் மறுக்கிறார்கள்.

    இம்மக்கள் தம் கண்களால் பார்க்காமலும்,

    தம் காதுகளால் கேளாமலும்,

    தம் மனங்களால் புரிந்துகொள்ளாமலும் இருக்கப் போவதாலேயே இது நடந்தது.

அவர்கள் குணமடைவதற்காக என்னை நோக்கித் திரும்பாமல் இருப்பதற்காகவே இது நிகழ்ந்தது’ என்றார்.


28 “தேவன் தமது இரட்சிப்பை யூதரல்லாத மக்களுக்கு அனுப்பினார் என்பதை யூதராகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் கவனிப்பார்கள்!” என்றான். 29 [b]


30 அவனது வாடகை வீட்டில் பவுல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் தங்கியிருந்தான். அவனைச் சந்திக்கும்படியாக வந்த மக்களை வரவேற்றான். 31 பவுல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் போதித்தான். கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்பித்தான். அவன் தைரியசாலியாக இருந்தான். அவன் பேசுவதை நிறுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை.


Footnotes

அப்போஸ்தலர் 28:10 மிதுனம் இரட்டைக் கடவுள். இவர்கள் கேஸ்டர் மற்றும் போலுக்ஸ் எனப்படும் கிரேக்க தெய்வங்களின் சிலைகள்.

அப்போஸ்தலர் 28:29 பிற்காலத்தில் வந்த சில அப்போஸ்தலர் நடபடிகள் பிரதிகளில் 29வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது ‘பவுல் இதனைச் சொன்ன பிறகு, யூதர்கள் சென்றனர். ஒருவரோடு ஒருவர் மிகவும் விவாதித்துக்கொண்டனர்.”



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*