வேதப்புத்தகத்தின் தனிச்சிறப்புகள் Characteristics of the Bible
கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் பைபில் என்ற வேதப்புத்தகமானது, பலத் தனிச்சிறப்புகளை கொண்டிருக்கிறது! இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உங்களுக்காகவும், எனக்காகவும் கொடுத்திருக்கிறார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் கொண்டிருக்கிறது! மேலும், இது உலகத்திலே காணப்படுகிற மற்ற புத்தகங்களை விட முற்றிலும் வித்தியாசமானது! நீங்கள் இந்த வேதபுத்தகத்தை கருத்தாய் படிக்கும்போது, இயேசு கிறிஸ்துவே உங்களிடம் பேசுவதை நீங்கள் உணர முடியும்! இத்தகைய வேதப்புத்தகத்தை பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்...
1. வேதபுத்தகத்தை நீங்கள் ஒரே புத்தகமாக பார்த்தாலும்,
அது 66 தனித் தனிப் புத்தகங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகமாகும். இந்த 66 புத்தங்களையும் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதியிருக்கிறார்கள்! இதில், சில ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதியிருக்கிறார்கள். அறுபத்தி ஆறு புத்தகங்களில், முதல் புத்தகமான ஆதியாகமம் என்கிற புத்தகத்திற்கும், கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விஷேசம் புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதி ஏறக்குறைய 1500 ஆண்டுகள்! இன்றைக்கு இரண்டு வெவ்வேறு ஆசிரியர்கள், ஒரே தலைப்பில் தனித் தனிப் புத்தங்களை எழுதினால், அந்த இரண்டு புத்தகங்களுக்கும் இடையில் பல வேறுபாடுகளை காணமுடிகிறது. சில சமயங்களில் இரண்டு புத்தங்களும் எதிரிடையான கருத்துகளைக் கூட கூறுகின்றன! நீங்கள் படிக்கிற உங்கள் பாட புத்தகங்களே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு! அதுமட்டுமல்ல சுமார் 20 அல்லது 30 வருடத்திற்கு முன்னால் எழுதபட்ட பாடப்புத்தங்களை,
உங்கள் ஆசிரியரும் படிக்க சொல்கிறதில்லை, நீங்களும் படிக்கிறதில்லை. காரணம், புதிய புத்தகங்கள் வரும்பொழுது பழைய புத்தகத்தில் உள்ள செய்திகள் காலாவதியாகி விடுகிறது! ஆனால், வேதபுத்தகத்தை எழுதிய 40 ஆசிரியர்களும் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள்! வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தவர்கள்! தாங்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலகட்டதில் பலர் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதில்லை! ஆனாலும் இந்த 66 புத்தகங்களிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடான செய்திகளை எங்கும் நீங்கள் காண முடியாது! மாறாக, ஒரு செய்தித் தொடர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும்! மேலும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இன்றைக்கும் நம் வாழ்க்கைக்கு பயனுள்ளதாயிருக்கிறது!
2. இந்த வேதபுத்தகத்தை எழுதிய ஆசிரியர்களில்,
சிலர் நாடுகளை அரசாண்ட ராஜாகளாயிருந்தார்கள், சிலர் மருத்துவராய் இருந்தார்கள், சிலர் கல்வி மான்களாயிருந்தார்கள், சிலர் எந்த பின்னனியமும் இல்லாத சாதாரண மனிதர்களாயிருந்தார்கள், சிலர் மீன் பிடி தொழில் செய்கிறவர்ளாயிருந்தார்கள். மிக சிறந்த தகவல் தொழில் நுட்ப வசதிகள் உள்ள இந்த காலகட்டத்தில், ஒரே துறையை சேர்ந்த இருவர் எழுதும் புத்தகங்கள் பல முரண்பாடுகளை கொண்டதாயிருக்க, எந்த தகவல் தொழில்நுட்ப வசதியும் இல்லாத அந்த காலகட்டத்தில் பலதரப்பட்ட பின்னனியத்தை சேர்ந்தவர்கள் எழுதியிருக்கிற புத்தகத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்பது ஏதோ ஏதேட்சையாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது!
3. வேதபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள்,
ஒரு கட்டுக்கதையோ அல்லது கற்பனை காவியமோ அல்ல! வேத புத்தகத்தையும் உலக வரலாற்றையும் நீங்கள் தனியாகப் பிரிக்க முடியாது! வரலாறு என்று சொல்லும் பொழுது, அது கடந்த காலத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களையே குறிக்கும். ஒருவேளை நீங்கள் சொல்லலாம், வேதபுத்தகத்தை கிறிஸ்தவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதனால், அதை அவர்களுக்கு தேவையானபடி மாற்றி எழுதியிருக்கலாம் என்று! ஆம், வேதபுத்தகத்தை கிறிஸ்தவர்கள் தான் எழுதியிருக்கிறார்கள், ஆனால் உலக வரலாற்றை கிறிஸ்தவரல்லாத மக்களே எழுதியிருக்கிறார்கள். உலக வரலாற்றில் அவர்கள் பதிவு செய்து வைத்திருக்கிற சம்பவங்களும், வேத புத்தகத்தில் உள்ள சம்பவங்களும் முழுமையாக பொருந்துவதாகவே இருக்கிறது! உதாரணமாக, வேதபுத்தகத்தில் கூறப்பட்டுள்ள சாலமோன், தாவீது மற்றும் நேபுகாத்நேசார் போன்ற அரசர்களைப் பற்றி நீங்கள் உங்கள் பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள்!
4. வேதபுத்தகத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள்
நடைபெற்ற மையப்பகுதியான இன்றைய இஸ்ரவேல், எகிப்து, ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கப் பெற்றிருக்கிற சான்றுகள், வேதபுத்தகத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை உறுதிப்படுத்துபவைகளாகவே உள்ளன. இயேசு கிறிஸ்துவின் கால கட்டத்தில் அவர் வாழ்ந்த இஸ்ரவேல் நாட்டில், எந்தெந்த பெயர்களில் அங்குள்ள கிராமங்கள், பட்டணங்கள் அழைக்கப்பட்டனவோ, அதே பெயரே இன்றும் அந்த பகுதிகளில் வழங்கப்படுகிறது.
5. வேதபுத்தகத்தில், கடந்தகால வரலாறு மட்டுமல்ல,
எதிர்காலத்தில் என்ன நடைபெறப் போகிறது என்பதைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது! சிறந்த அறிவியல் சாதனங்களை வைத்து ஆய்வு செய்து, அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தால், பல நேரங்களில் அது அப்படியே நடைபெறுவதில்லை. மழைபெய்யும் என்று அறிவித்தால், வெயில் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வெயில் அடிக்கும் என்று அறிவித்தால் திடீரென்று மழை பெய்வதை நாம் பார்த்திருக்கிறோம்! அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நிகழும் என்று நாம்மால் சரியாக நிதானிக்க முடியவில்லை. அப்படியானால், எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதைப் பற்றி சொல்லும் ஒரு புத்தகத்தின் நம்பகத் தன்மையானது,
கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள், எவ்வளவு சரியாக அந்த புத்தகத்தால் முன்னறிவிக்கப்பட்டது என்பதை பொறுத்து அமைகிறது. உதாரணமாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றி, அவர் பிறப்பதற்கு சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முன்னறிவிக்கப்பட்டிருந்தது! அவர்கள் குறிப்பிட்ட அதே கால கட்டத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார்! மேலும், எந்தெந்த போரில் எந்தெந்த நாடுகள் வெற்றி பெறும் என்று முன்னறிவிக்கப்பட்டதோ, அது துல்லியமாக அப்படியே நடந்தேறியது! நாம் வாழுகிற இந்த காலக்கட்டதில் என்ன நடைபெறும் என்று வேதபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது! இனி என்னென்ன நடைபெறப் போகிறது என்று சொல்லப்பட்டிருகிறதோ, அதுவும் அப்படியே நடைபெறப் போகிறது!
வேதபுத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதன் அடிப்படை அமைப்பிலேயே உண்மையானதாக இருக்கிறது. மாறாக, இந்த கட்டுரையை படிக்கிற நீங்கள், இயேசு கிறிஸ்துவே, மனிதர்கள் மூலமாக எழுதி கொடுத்திருக்கிற, இத்தனை சிறப்பு வாய்ந்த வேதபுத்தகத்தை படித்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, உங்களுடைய பாவத்திற்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தி மா¢த்து, மீண்டும் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார் என்பதை அறிந்து, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் பெற்றுக்கொண்டு, நீங்களும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிறது.