இன்றைய திருச்சபைகளுக்கும் மாபெரும் சீர்த்திருத்தம் தேவைப்படுகிறது Today's churches also need great reformation
கி.பி. 1517 ஆண்டு அக்டோபர் 31 தேதி ஜெர்மன் விட்டன்பர்க் திருச்சபையில் ஆரம்பிக்கப்பட்ட சீர்த்திருத்தம் பல்வேறு நாடுகளில் பல்வேறு இயக்கங்களாக உருவாகி வேதாகம ரீதியாக பல உபதேசங்களை அடிப்படையாக கொண்ட திருச்சபைகளை உருவாக்கியது. பல சீர்திருத்தங்களை திருச்சபைகளில் ஏற்படுத்தியது. முகநூலில் பல ஊழியர்கள் இந்த வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். நான் திரும்ப வரலாற்றை எழுத விரும்பவில்லை. ஆனால் மார்டின் லூத்தர் வலியுறுத்திய ஐந்து முக்கிய உபதேச கொள்கைகள் இன்றைய திருச்சபையின் சீர்திருத்தத்திற்கும் மிக மிக அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
கிருபை மட்டுமே
உலகத்தில் உள்ள எல்லா மதங்களை ஒரு பக்கமும் கிறிஸ்தவத்தை மறுபக்கமும் வைத்தால் அதை கிருபையின் அடிப்படையிலேயே வித்தியாசப் படுத்த முடியும் மற்ற மதங்கள் எல்லாமே கிரியையை வலியுறுத்துகிற மதங்கள். கிறிஸ்தவம் மாத்திரமே கிருபை மார்க்கம். பாவத்தில் மனிதன் மரிதிருக்கிறான் (எபேசியர் 2்:1) உன்னுடைய முக்திக்காக நீ எதையுமே செய்ய முடியாது என்பதுதான் கிருபை மார்க்கம். ஏனென்றால் உன்னுடைய முக்திக்கு தேவையான எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்துவிட்டார் (யோவான் 17்:4)
இயேசுவை ஏற்றுக்கொள்ள கையைத்தூக்குவதினாலோ, குறிப்பிட்ட ஒருவர் கையை தலைமேல் வைத்து ஜெபிப்பதினாலோ, ஒருவர் சொல்லிய ஜெபத்தை அப்படியே சொல்லுவதினாலோ, இரட்சிக்கப்படுவதாக சொல்வதும் இருதயத்தை திறப்பது இவையெல்லாம் தவறான உபதேசம். வெளி 3்: 20 ஆண்டவருடைய வருகைக்கு ஆயத்தமாக இருக்க விசுவாசிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது, அவிசுவாசிக்கு அல்ல. இருதயத்தை ஒருவரும் திறக்க முடியாது, இருதயத்தை திறப்பது ஆண்டவருடைய வேலை (அப் 16்:14) நற்செய்தி அறிவிப்பது மட்டுமே நம்முடைய பணி, இருதயத்தை திறப்பது கடவுளின் பணி. இன்றைய பெரும்பாலும் விசுவாசிகள் தங்கள் இரட்சிப்பை தங்கள் கிரியையினாலே தாங்களே ஏற்படுத்தி கொண்டவர்கள் இவர்களுக்கும் ஆண்டவராகிய இயேசுவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சென்னையின் மெகா சபையின் போதகர் கிருபைக்கு அழகாக விளக்கம் தந்துவிட்டு அந்த கிருபையை பெற்றுக் கொள்வது எப்படியென்று அதற்கு நேர்எதிராக போதிக்கிறதை நானே கேட்டிருக்கிறேன். ஆகவே இந்த சபைக்கு போகிறவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக தாங்களே நினைத்து கொண்டவர்கள்.
விசுவாசம் மட்டுமே
விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறோம் (ரோமர் 1்:17) என்பதுதான் சீர்த்திருத்த காலத்தின் முக்கிய உபதேசம். ஏனென்றால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை போப், திருச்சபை, குருக்கள், பாவமன்னிப்பு சீட்டு, புனிதர்கள் போன்றவர்கள் அதிகாரபூர்வமானவர்கள் இவர்கள் வழியாக மட்டுமே ஒருவன் இரட்சிக்கப்பட முடியும் என்ற கொள்கையை வலியுறுத்தியது. ஆனால் மார்டின் லுத்தர் அவர்கள் வேதத்தை வாசிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறோம் என்ற உண்மையை கண்டறிந்தார். அதுவே அவருடைய அனுபவமாகவும் மாறியது.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது (எபி 11்: 1) இன்றைய பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் அற்புதங்கள் நடந்தால்தான், நோய் குணமானால் தான் விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இது விசுவாசமல்ல. கண்டு விசுவாசிப்பது விசுவாசமல்ல? காணபடாதவைகளை குறித்த உறுதி தான் விசுவாசம். பாடுகள் கண்ணீர் கஷ்டங்கள் உபத்திரவங்கள் மத்தியிலும் ஆண்டவரிடம் விசுவாசமாக இருப்பது உண்மையான விசுவாம்தான். நன்றாக நடந்து வந்த யாக்கோபு கர்த்தர், அவனை ஆசீர்வதித்ததபடியினால் அவன் போகும்போது நொண்டி நொண்டி சென்றான். ஊனமும் ஆசீவாதம்தான். நோயிலிருந்து சுகம் கிடைத்ததினால் ஒருவர் இரட்சிக்கப்பட்டதாக அர்த்தம் கிடையாது.
விசுவாசத்துடன் உபவாசத்தையும், தசமபாகத்தையும், ஊழியத்ததையும் மற்ற எதையும் சேர்க்கக்கூடாது. விசுவாம் மட்டுமே போதுமானது.
கிறிஸ்து மட்டுமே
நம்முடைய இரட்சிப்புக்கு கிறிஸ்து மாத்திரமே போதுமானவர்.
(கொலோ 1்: 15-20) ஏனென்றhல் அவர் மாத்திரமே நம்முடைய பாவத்திற்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து பாவமன்னிப்பை கொடுத்தவர். அவருடன் வேறு எதையும் கூட்டுவது அவருடைய இரட்சிப்பின் பணியை மட்டுப்படுத்துவதாகும்.
இன்று பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் தங்கள் திருச்சபை நிறுவனங்களை கிறிஸ்துவுக்கு சமமாக கருதுகிறார்கள். நான் தென்னிந்திய திருச்சபையை சேர்நதவன், அவ்விதமே லுத்துரன், மெதடிஸ்டு, பாப்திஸ்து, பிரதரன், சபைபிரிவுகளை சேர்ந்தவர்கள் தங்கள் திருச்சபை நிறுவனங்களை கிறிஸ்துவுக்கு சமமாக கருதுகிறார்கள். இதுவும் கிறிஸ்துவை இழிவுப்படுத் துவதாகும்.
போப்பின் அதிகாரம், திருச்சபையின் அதிகாரம்,குரு அதிகாரம்,பாவமன்னிப்பு சீட்டின் அதிகாரம்,புனிதர்களின் அதிகாரம் என அனைத்து அதிகாரத்தையும் இன்றைய சுயாதீன சபையின் போதகர்கள்; எடுத்துக்கொண்டாரகள். பெரும்பான்மையாக சுயாதீன திருச்சபையார் அந்த சபையின் போதகருக்கு அடிமைகளாகவே இருக்கிறாகள். ஆண்டவராகிய இயேசுவே அவர்களை விடுதலை செய்ய வந்தாலும் இந்த அடிமைத்தனமே எங்களுக்கு சந்தோஷம் கொடுக்கிறது என்று சொல்லும் அளவில் இருக்கிறார்கள். ஆகவே கிறிஸ்து மட்டுமே போதுமானவர் அவருக்கு சமமாக எதுவும் இருக்க முடியாது.
வேதம் மட்டுமே
ரோமன் கத்தோலிக்க திருச்சபை வேதத்தின் அதிகாரத்தை மறுதலித்தது. காரணம் வேதத்தைவிட போப்பின் அதிகாரம் மேலானது. வேதத்திற்கு போப் என்ன விளக்கம் கொடுக்கிறாரோ அதுதான் அதிகாரமானது. போப்பின வாயிலிருந்து வருகிற வார்த்ததை (Bull) அதிகாரமுடையது அது மாற்றத்தக்கது அல்ல. ஏறக்குறைய கடவுளின் அதிகாரம் கொண்டவராக போப் விளங்கினார். ஆனால் மார்டின் லூத்தர் அவர்கள் கடவுளுடைய வார்த்தை மாத்திரமே மாறாதது, அதிகாரமுடையது என்பதை அறிந்து கொண்டார் (மத்தேயு 5்:18, 2தீமோத்தேயு 3்:16). ஆகவே மார்டின் லூத்தர் அவர்கள் வேதமே அதிகாரமுடையது, மாறாதது என்பதை வலியுறுத்தினார்.
இன்றும் நம்முடைய விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் தேவையான அனைத்திற்கும் வேதமே போதுமானதாக இருக்கிறது. இந்த எளிய உண்மையை பெரும்பான்மையான பிரபல ஊழியர்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லியிருந்தால் மக்கள் எந்த ஊழியர்களுக்கும் பின்னால் போகமாட்டார்கள். வேதத்தின் அதிகாரத்தை மறுத்தவர்கள் மறந்தவர்கள்தான் இன்று ஊழியர்களுக்கு பின்னால் ஓடுகிற ஒரு கூட்டம். தினகரனுக்கும்? பால் தினகரனுக்கும்? மோகனுக்கும்? மோகன் சி லாசரசுக்கும் பெர்க்மானுக்கும் பொரிய ரசிகர் கூட்டம் உண்டு. இந்த ரசிகர்களுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த ரசிகர்கள்; எங்கெல்லாம் இவர்கள் பேசுகிறார்களோ அங்கெல்லாம் ஓடுவார்கள். உண்மையான ஊழியர்கள் மக்களை ஆண்டவராகிய இயேசுவினடத்தில் வழிநடத்துவார்களே ஒழிய தங்களிடத்தில் மக்களை சேர்க்க மாட்டார்கள். ஒரு விசுவாசிக்கு வேதமும் அதன் ஆசிரியராகிய பாரிசுத்த ஆவியானவரும் போதுமானவர்கள். இதைவிட எந்த ஊழியர்களும் மேலானவர்கள் அல்ல. வேதத்தின் அதிகாரம் வலியுறுத்தப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட தவறான நபர்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். ஆகவே வேதத்தின் அதிகாரத்திற்கு திரும்புவோம்.
மகிமை கடவுளுக்கு மட்டுமே
ரோமன் கத்தோலிக்க திருச்சபை மகிமையை போப்புக்கும், திருச்சபைக்கும், பாரம்பரியத்திற்கும் மட்டுமே கொடுத்தது. மார்டின் லுத்தர் கடவுள் மாத்திரமே எல்லா மகிமைக்கும் உரியவர் (ஏசாயா 6்: 1-4, வெளி 5்:7-14)என்பதை கண்டு கொண்டார். போப்பு அல்லது திருச்சபை, அல்லது திருச்சபையின் பாரம்பரியம் போன்றவை மகிமைக்குரியவைகள் அல்ல. இவையெல்லாமே பாவத்தினாலே கெட்டுபோயிருக்கிறது. பாரிசுத்த கடவுள் மாத்திரமே எல்லா நிலைகளிலும் மகிமைக்குரியவராக இருக்கிறார்.
பிரபலமான அனைத்து ஊழியர்களுமே கடவுளுக்குரிய மகிமையை தங்களுக்கு எடுத்துக் கொள்ளுகிறார்கள. போப் தனக்கு பேர் பிரஸ்தாபத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பொரிய தேவாலயத்தின் கூண்டு (பெசிலிக்கா)கட்ட பொரியளவில் நிதி திரட்ட வேண்டும் என்று நினைத்த போதுதான் பாவமன்னிப்பு சீட்டு விற்பனை செய்யும் திட்டம் உருவானது. இந்த போப்புக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல தற்கால பாரம்பாரிய திருச்சபை போதகர்கள். 5 வருடம் மாத்திரமே பணியாற்றுகிற ஒரு திருச்சபையில் தன் பெயரை அந்த திருச்சபையின் கல்வெட்டில் பதிக்க வேண்டும் என்பதற்காகவே அவசியமே இல்லாத ஒரு கட்டிட பணியை துவக்குவார்கள். அது சபை மக்களுக்கு பாராமாயிருப்பதை பற்றியோ, அல்லது பணம் வீணாவதை பற்றியோ அவருக்கு துளியும் கவலையில்லை.
ஊழியர்கள் என்றாலே மேடையில் உட்கார வேண்டும் என்று நினைப்பதும், திருமண விருந்துக்கு போனால் ஊழியக்காரர்களுக்கு என்று தனி மேசைப் போட்டிருப்பதும் சபை ஆராதனையில் ஊழியக்கார் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தனி நாற்காலி போடப்பட்டிருப்பதும் மகிமையை நமக்கு எடுத்துக் கொள்வதாகும்.
ஒவ்வொரு கிறிஸ்தவனின் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், திருச்சபை வாழ்விலும், சபை ஊழியங்களிலும் நாம் செய்கிற எந்த பணியென்றாலும் அது ஆண்டவருக்கு மகிமையை கொடுக்குமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண்டவருக்கு மகிமையை கொடுக்காத எந்த பணியையும் நாம் செய்வது அர்த்தமற்றதாக இருக்கும்.
ஒரு கிறிஸ்தவனாக நான் எதை செய்தாலும் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும் 1. இதை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது. 2. இது ஆண்டவருக்கு மகிமையை கொடுக்குமா? சீர்திருத்தத்தின் 501 ஆம் ஆண்டில் சீர்த்திருத்தத்தை முதலில் நம்மில் ஆரம்பிப்போம் நம்முடைய குடும்பம், திருச்சபை, ஊழியம், சமுதாயம், என தொடருவோம் ஆண்டவர் மகிமையடைவாராக.