பரலோகராஜ்யத்தின் உவமை
அன்றியும், பரலோகராஜ்யம் கடலில் போடப்பட்டு, சகலவிதமான
மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும்.
தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவி-ருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார் (மத் 13:47-50).
இந்த உலகம் மிகப்பெரிய கடலைப்போல இருக்கிறது. சுவிசேஷத்தை பிரசங்கிப்பது கடலில் ஒரு வலையை போட்டு மீன்பிடிப்பதற்கு சமம். வலையை போடும்போது கடலிலிருந்து ஒரு சில மீன்கள் இந்த வலையில் வந்து சிக்கும். இந்த வலையில் எல்லாவிதமான மீன்களும் விழும்.
சில சமயங்களில் பெரிய மீன்களும், விலையுயர்ந்த மீன்களும் விழும். சில சமயங்களில் பிரயோஜனமில்லாத மீன்களே இருக்கும்.
நமது சபைகளிலும் விசுவாசிகள் விதவிதமாக இருக்கிறார்கள். ஒரு சிலர் ஊழியத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள். வேறு சிலரோ ஒன்றுக்கும் உதவமாட்டார்கள். வலையில் சிக்கும் பிரயோஜனமற்ற கடல் பாசிகளைப்போல இருப்பார்கள். கடலில் வலையை போடும்போது சிறிது நேரத்திற்கு பின்பு வலை மீன்களால் நிரம்பும். அதில் சகலவிதமான மீன்களும் இருக்கும்.
வலையில் மீன்கள் நிறைந்தபோது அதை கரைக்கு இழுத்துவருவார்கள்.
சில சமயங்களில் வலையில் மீன்கள் விரைவாகவே நிரம்பிவிடும். சில சமயங்களில் காலதாமதமாகும்.
எப்படியாயினும் வலை நிரம்புவது உறுதி. நிரம்பிய வலையை கரைக்கு இழுத்து வந்து அதிலுள்ள நல்ல மீன்களையும் , ஆகாதமீன்களையும் வேறு பிரிப்பார்கள்.
நல்ல மீன்களை கூடைகளில் சேர்ப்பார்கள். நல்ல மீன்கள் விலை மதிப்புள்ளவை. இவற்றை பத்திரமாக பாதுகாப்பார்கள். ஆகாத மீன்களினால் பிரயோஜனமில்லை. ஆகையினால் அவற்றை தூர எறிந்துபோடுவார்கள். வலை கடலில் இருக்கும்போது அதற்குள் இருக்கும் மீன்களில் எது நல்லது என்றும் எது ஆகாதது என்றும் வேறு பிரிப்பது கடினம்.
கரைக்கு இழுத்து வந்து மீன்களை சோதித்துப்பார்த்தால்தான் அதன் உண்மை நிலவரம் தெரியவரும். மீன்பிடிப்பதில் அதிக பயிற்சி பெற்றவர்களால்கூட வலை கடலில் இருக்கும்போது அதற்குள் இருக்கும் மீன்களின் தரத்தை உறுதியாக கூறமுடியாது.
அந்த வலையை கவனமாக கரைக்கு இழுத்து வந்து, அதிலுள்ள நல்ல மீன்களை பத்திரமாக எடுத்து பாதுகாப்பதற்காக, ஆகாதவற்றை தூர எறிந்துவிடுகிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த உவமையை கூறி பரலோக ராஜ்யம் கடலிலே போடப்பட்டு சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது என்று கூறுகிறார்.
இந்த உவமையில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதலாவது பகுதி மிகவும் தெளிவாக உள்ளது. தற்போது நடைபெறும் சம்பவமே உவமையின் முன் பகுதியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உவமையின் பின் பகுதி இனிமேல் நடைபெறப்போகும் சம்பவத்தை விவரிக்கிறது. இப்படியே உலகத்தின் முடிவில் நடக்கும் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.
வலையில் அகப்பட்டிருக்கிற மீன்கள் எல்லாமே நல்ல மீன்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது. வலையில் நல்ல மீன்களும் ஆகாதமீன்களும் கலந்திருக்கும். ஆனால் கூடையிலுள்ள மீன்கள் நல்ல மீன்களாகவே இருக்கும். ஆகாத மீன்களுக்கு கூடைகளில் இடமில்லை.
இயேசுகிறிஸ்து இந்த உவமையை கூறி நீதிமான்களையும் பொல்லாதவர்களையும் பற்றி விவரித்துக் கூறுகிறார். நீதிமான்கள் நல்ல மீன்களைப்போல இருக்கிறார்கள். பொல்லாதவர்கள் ஆகாத மீன்களைப்போல இருக்கிறார்கள். ஆகாதவற்றை வலையிலிருந்து எடுத்து தூரத்திலே எறிந்துவிடுவதுபோல, பொல்லாதவர்களையும் அக்கினி சூளையிலே போடுவார்கள்.
உலகம் முழுவதும் சுவிசேஷ ஊழியம் நடைபெற்று வருகிறது. பரலோக இராஜ்யத்தில் ஆத்துமாக்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். வலைகளில் மீன்கள் இருப்பதுபோல ஆத்துமாக்கள் வருகிறார்கள். ஆனாலும், அந்த வலைக்குள் நல்ல மீன்களும், ஆகாத மீன்களும் இருக்கும். நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
களைகளும், கோதுமையும் சேர்க்கப்பட்டு இறுதியில் களைகள் சுட்டெரிக்கப்படுவது போன்று இக்காரியம் நடைபெறும். இதுபோலவே நீதிமான்கள் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்க்கப்படுவார்கள். துன்மார்க்கர் நரகத்திற்குத் தள்ளப்படுவார்கள்
from வேதாகம களஞ்சியம் Umn ministry