தேவைக்கு உதவும் சினேகிதன்
வருந்திக் கேட்பது
பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில்
ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள்,
நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 11:5-8).
நாம் தேவனிடத்தில் இடைவிடாமல் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். ஜெபத்தில் சோர்ந்துபோகக்கூடாது. நாம் கேட்பதை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வரையிலும் விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். தேவனிடத்தில் நமது தேவைகளை வருந்திக் கேட்கவேண்டும்.
மனுஷரிடத்தில் நாம் திரும்ப திரும்ப ஒரு காரியத்தை வருந்திக் கேட்டால், அவர்களுக்கு நம்மீது கோபமே உண்டாகும். ஆனால் நாம் தேவனிடத்தில் ஒரு காரியத்தை வருந்திக் கேட்கும்போது, அவர் கிருபையாய் நமக்கு உதவிபுரிவார். நமது தேவையை சந்திப்பார்.
இந்த சத்தியத்தை விளக்குவதற்கு இயேசுகிறிஸ்து ஒரு உவமையைக் கூறுகிறார். இரண்டு சிநேகிதர்கள் இருக்கிறார்கள். ஒரு சிநேகிதன் தன்னுடைய வீட்டில் இரவு வேளையில் பிள்ளைகளோடுகூட படுத்திருக்கிறான். அந்த வேளையில் இன்னோரு சிநேகிதனுடைய வீட்டிற்கு விருந்தாளி ஒருவன் எதிர்பாராத விதமாக வழிப்பிரயாணமாக வந்திருக்கிறான். இரவுவேளையில் திடீரென்று விருந்தாளி வந்திருப்பதினால் அவனுக்கு விருந்து உபசரிக்க இவனிடத்தில் போஜனமில்லை.
தன்னுடைய வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் தன் சிநேகிதனிடத்தில் இவன் உதவி கேட்பதற்காக போகிறான். இவன் தனக்காக உதவி கேட்கவில்லை. தன்னுடைய வீட்டிற்கு திடீரென்று விருந்தாளியாக வந்திருக்கும் சிநேகிதனுக்காகவே உதவி
கேட்கப்போகிறான். வீட்டிலுள்ளவனிடத்தில் மூன்று அப்பங்களை தனக்கு கடனாக தரவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறான்.
ஆனால் அடுத்த வீட்டிலுள்ள அவனுடைய சிநேகிதனோ இவனுக்கு உதவிபுரிய முன்வரவில்லை. சிநேகிதன் பக்கத்து வீட்டுக்காரனுடைய வீட்டுக் கதவை தட்டுகிறான். ஆனால் வீட்டுக்குள் இருக்கிறவனோ கதவைத் திறக்காமலேயே,
தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிடுகிறான். இவனுடைய வீட்டுக்கதவு பூட்டியாயிற்று. பூட்டிய கதவைத் திறந்து அவனுக்கு உத்தரவு
கூறுவதற்குக்கூட இந்த வீட்டுக்காரனுக்கு மனமில்லை. கதவைத் திறக்காமலேயே பதில் பேசுகிறான். தன்னால் உதவி செய்யமுடியாது என்பதற்கு நல்ல சாக்குப்போக்கையும் கூறுகிறான்.
கதவு பூட்டியாயிற்று என்றும், தன்னுடைய பிள்ளைகள் தன்னோடேகூட படுத்திருக்கிறார்கள் என்றும், தான் எழுந்து அவனுக்கு தரக்கூடாது என்றும் கூறுகிறான்.
ஆனால் உதவி கேட்கும் சிநேகிதனோ, அடுத்த வீட்டுக்காரனுடைய பதிலைக் கேட்டு சோர்ந்துபோகாமல் அவனிடம் வருந்திக் கேட்கிறான். தனக்கு உதவி கிடைக்கும் வரையிலும் அவனுடைய வீட்டின் கதவைத் தட்டுகிறான். தன்னுடைய தேவையை அவனிடம் தொடர்ந்து வருந்திக் கூறுகிறான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டிற்குள் இருக்கிறவன் தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து வந்து, அவன் கேட்ட மூன்று அப்பங்களை கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது
எழுந்திருந்து அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று இயேசுகிறிஸ்து இந்த உவமையில் கூறுகிறார்.
நாம் ஒரு மனுஷனிடம் ஒரு காரியத்தை திரும்ப திரும்ப வருந்திக் கேட்டால் அவர்களுக்கு நம்மீது கோபமே உண்டாகும். அவர்கள் நம்மிடத்தில் பிரியமாக இருக்கமாட்டார்கள். அவர்களுடைய வார்த்தையில் அன்பு இருக்காது. எறிந்து விழுவார்கள். ஆனால் தேவனோ கிருபையும் இரக்கமும் மிகுந்தவர். நாம் அவரிடத்தில் வருந்திக் கேட்கும்போது அவர் அதில் பிரியப்படுகிறார். நாம் தேவனிடத்தில்
வருந்திக் கேட்பதினிமித்தம் சந்தோஷப்பட்டு, நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார். இயேசுகிறிஸ்து இந்த உவமையைக் கூறி, நாமும் தேவனிடத்தில், நாம் கேட்கிறதை பெற்றுக்கொள்ளும் வரையிலும், அவரிடத்தில் வருந்திக் கேட்க வேண்டும் என்று உபதேசம் பண்ணுகிறார்.
நாம் தேவனிடத்தில் ஜெபம்பண்ணுவதற்காக வரும்போது, நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார் என்னும் விசுவாசத்தோடும், நிச்சயத்தோடும், தைரியத்தோடும் வரவேண்டும். இந்த உவமையில் வீட்டுக்குள் இருக்கிறவன், தன்னிடத்தில் வருந்திக் கேட்டதினிமித்தமாக அவனுக்கு உதவிபுரிந்தான். உதவி கேட்கும்
முன்பாகவே இருவரும் சிநேகிதர்கள்.
சிநேகிதன்
என்னும் உரிமையோடுதான் அவன் வீட்டிற்குள் இருக்கிறவனிடத்தில் உதவி கேட்டான். வீட்டிலிருக்கிறவனும் அவன் வருந்திக் கேட்டதையும், தங்களுடைய சிநேகத்தையும், தன்னுடைய சிநேகிதனின் நிலமையையும் நினைவுகூர்ந்து அவனுக்கு உதவிபுரிகிறான்.
நாம் தேவனிடத்தில் வரும்போது, அவர் நம்முடைய நிலமையை நினைவுகூருவார். அவர் நம்மீது பிரியமாக இருக்கிறார். தேவனிடத்திலிருந்து மாத்திரமே நமக்கு உதவிவரும் என்பதையும், நமக்கு உதவிபுரிவதற்கு வேறு யாருமில்லை என்பதையும் நமது தேவன் அறிந்து வைத்திருக்கிறார்.
கிருபை மிகுந்த நமது தேவனிடம்,
நம்முடைய தேவைகளை வருந்திக் கேட்கும்போது, அவரிடமிருந்து அவற்றை நாம் பெற்றுக்கொள்வோம்.
நாம் தேவனிடத்தில் அப்பங்களைக் கேட்கவேண்டும். அப்பங்களைக் கேட்பதற்காக தேவனுடைய சமுகத்திற்கு வரவேண்டும். அப்பம் என்பது நம்முடைய தேவையை குறிக்கும் வார்த்தையாகும். அப்பத்தைப் பெறுவது நமது ஆசையல்ல. அது நமது தேவை. நமது தேவைகள் சந்திக்கப்படவேண்டுமென்றால், நாம் தேவனுடைய சமுகத்தில் பணிவுடனும், விசுவாசத்துடனும் வரவேண்டும்.
நம்முடைய தேவைகளை சந்திக்குமாறு நாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணுவதுபோல,
பிறருடைய தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தேவனுடைய சமுகத்தில் வந்து அவரிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்.
இந்த மனுஷன் இராத்திரி வேளையிலே தனக்கு பசியுண்டாயிற்று என்றோ, தனக்கு அப்பம் தேவைப்படுகிறது என்றோ, அடுத்த வீட்டிலுள்ள சிநேகிதனிடம் வரவில்லை. தன்னுடைய வீட்டிற்கு விருந்தினராக வந்திருக்கும் சிநேகிதனுக்காக, அவனுக்குத் தேவைப்படும் அப்பத்திற்காகவே, இவன் பக்கத்து வீட்டு சிநேகிதனிடம் உதவி கேட்க வந்திருக்கிறான்.
நாம் தேவனுடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணும்போது, பிறருக்கு உதவிபுரியும் சிலாக்கியமும், தேவக்கிருபையும் நமக்கு தேவையென்று ஜெபிக்க வேண்டும்.
நம்மைப்போலவே நாம் பிறரை நேசிப்பதில் தேவன் பிரியப்படுகிறார். நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட வேண்டுமென்று நாம் வாஞ்சையோடு தேவனிடத்தில் ஜெபிப்பதுபோல, பிறருடைய தேவைகளும் சந்திக்கப்பட வேண்டுமென்று அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். பிறருக்கு உதவிபுரிய வேண்டுமென்னும் கிருபை நிறைந்த உள்ளம் நமக்கும் தேவை.
நாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ண வரும்போது விசுவாசத்தோடும், பணிவோடும், அதேவேளையில் தைரியமாகவும் அவருடைய கிருபாசனத்தண்டையில் வந்து சேரவேண்டும். நாம் உண்மையான மனதோடு தேவனுடைய சமுகத்தில் ஜெபித்தால், தேவன் நமது தேவைகளைச் சந்திப்பார். தேவனுடைய பராமரிப்பு நமக்கு அதிகரிக்கும்போது, நாம் மற்றவர்களுக்கு உதவிபுரியும் வாய்ப்பும், சிலாக்கியமும் அதிகரிக்கும்.
எதிர்பாராதவிதத்தில் இந்த சிநேகிதனுக்கு விருந்தினர் வரவில்லையென்றால், அந்த இரவு நேரத்தில் அவனுக்கு அப்பம் தேவைப்பட்டிராது. மற்றவர்களுக்கு உதவிபுரியவேண்டும் என்னும் பிரமாணம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு நமக்கு தேவனுடைய உதவியும் ஒத்தாசையும் தேவை. தெய்வீக பராமரிப்பு இருந்தால்தான் நம்மால் பிறருக்கு உதவிபுரிய முடியும்.
ஆகையினால் தேவனுடைய சமுகத்தில் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய தேவைகளுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். அதே வேளையில் பிறருக்கு உதவிபுரிய தேவனுடைய பராமரிப்பு நமக்கு வேண்டுமென்றும் ஜெபிக்க வேண்டும்.
வீட்டிற்குள் இருக்கிறவனிடத்தில் இரவு வேளையில் இந்த சிநேகிதன் உதவி கேட்டபோது, ஆரம்பத்தில் அவன் கதவைத் திறந்துகூட பதில் கூறவில்லை. அவனுக்கு தரக்கூடாது என்று வீட்டிற்குள் இருந்தவாறே உதவிபுரிய மறுத்துவிடுகிறான். ஆரம்பத்தில் அவன் கோபப்பட்டாலும், உதவிபுரியாவிட்டாலும்,
சிநேகிதன் வருந்திக் கேட்டதினிமித்தமாக அவனுடைய கோபம் குறைந்து போயிற்று. அவனுக்கு உதவிபுரியவேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று.
வருந்திக் கேட்பதன் மூலமாக வீட்டுக்காரனுடைய கோபமே குறைந்துபோகும்போது, நாம் தேவனிடத்தில் வருந்திக் கேட்கும்போது அவர் நமக்கு கிருபையாய் பதில் கொடுப்பதில் அதிக நிச்சயம். நாம் தேவனிடத்தில் வருந்திக் கேட்கும்போது அவர் நம்மீது கோபப்படாமல்,
பரிதாபப்பட்டு, நம்மீது மனதுருகி, நமக்கு உதவிபுரிவார். ஒரு வேளை நம்முடைய ஜெபத்திற்கு உடனடியாக பதில் கிடையாமல் போகலாம். அதற்காக நாம் சோர்ந்து போகக்கூடாது. நாம் தேவனிடத்தில் கேட்டுக்கொண்டதை அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வரையிலும்,
நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
தமக்குச் சித்தமான ஏற்றவேளையில்,
தேவன் நமது வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் கிருபையாய் பதில் கொடுப்பார்.
பாலஸ்தீனதேசம் பாலைவனமாக இருப்பதினால் பகலில் வெயிலும், உஷ்ணமும் அதிகமாக இருக்கும்.
ஆகையினால் பகலில் ஜனங்கள்
பிரயாணம் பண்ணாமல் இரவின் குளிர்ச்சிவேளையில் பிரயாணம் பண்ணுவார்கள். ஆகையினால் இந்த வசனத்தில் பாதிராத்திரியிலே ஒருவன் வீட்டிற்குள் வருவது அவர்களுக்குப் புதுமையான காரியமல்ல.
யூதர்களுடைய அப்பம் மெல்லியதாகவும், தட்டையாகவும் இருக்கும். இதுவே அவர்களுடைய பிரதான உணவு. கிழக்கு தேசங்களில் பெற்றோரும், பிள்ளைகளும் ஒரே அறையில் படுத்துத் தூங்கும் வழக்கம் இருக்கிறது.
ஒருவன் சிநேகிதனிடத்தில் வருந்திக் கேட்கும் போது அவன் கேட்டதைத் தந்து விடுகிறான். நமது பரமபிதாவிடம் நாம் எதையாவது வருந்திக் கேட்கும்போது அவரும் நிச்சயமாக நமக்குத் தருவார்.
from வேதாகம களஞ்சியம்
via IFTTT Umn ministry