ஆதியாகமம் 5:1-5
Bible study
ஆதாமின் வம்சவரலாற்றைப்பற்றியும், அவருடைய சந்ததியாரின் வம்சவரலாற்றைப்பற்றியும் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதாம் (ஆதி 5:1-5). சேத் (ஆதி 5:6-8). ஏனோஸ் (ஆதி 5:9-11). கேனான் (ஆதி 5:12-14). மகலாலெயேல் (ஆதி 5:15-17). யாரேத் (ஆதி 5:18-20). ஏனோக்கு (ஆதி 5:21-24). மெத்தூசலா (ஆதி 5:25-27). லாமேக்கும் அவனுடைய குமாரன் நோவாவும் (ஆதி 5:28-32).
ஆதாமின் வம்சவரலாறு ஆதி 5:1-5
ஆதி 5:1. ஆதாமின் வம்சவரலாறு:
தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
ஆதி 5:2. அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
ஆதி 5:3. ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
ஆதி 5:4. ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 5:5. ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
இந்த அதிகாரத்தின் முதலாம் வசனத்தில், ""ஆதாமின் வம்சவரலாறு'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே இந்த அதிகாரத்திற்கு தலைப்பு ஆகும். வம்சவரலாறு ஆதாமிலிருந்து ஆரம்பமாகிறது.
முதல் மனுஷனாகிய ஆதாமின் வம்ச வரலாறு இந்த அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இவருடைய வம்சத்தின் மூலமாக இரண்டாம் ஆதாமாகிய ஸ்திரீயின் வித்தானவர் வரவேண்டும். ஆதி 2:4 ஆவது வசனம் வானமும், பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாற்றைக் கூறுகிறது. மத் 1:1-17, லூக்கா 3:23-38 ஆகிய வசனங்கள் இரண்டாம் ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றைக் கூறுகிறது. ஆதாமின் வரலாற்றில் அவர் இளவயதிலேயே பிள்ளைகளுக்குத் தகப்பனாகிறார். (ஆதி 4:1-6:1) ஆதாமிற்கு அடுத்தபடியாக மகலாலெயேல் 65 ஆவது வயதில் தகப்பனாவதை இந்த அதிகாரம் குறிப்பிடுகிறது. (ஆதி 5:15,21, ஆதி 46:21)
ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட சம்பவத்தைப்பற்றி ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. தேவனாகிய கர்த்தர் தம்முடைய சாயலாகவும், தம்முடைய ரூபத்தின்படியேயும் மனுஷனை உருவாக்கினார். அந்த சம்பவம் இங்கு மறுபடியும் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.
தேவன் மனுஷனை சிருஷ்டித்தார். மனுஷன் தானாக உண்டாகவில்லை.அவன் தன்னைத்தானே சிருஷ்டித்துக்கொள்ளவுமில்லை. தேவன் மனுஷனை சிருஷ்டித்ததினால், மனுஷன் தனக்கு அதிகாரியோ அல்லது ஆண்டவனோ அல்ல. தேவனே மனுஷனை சிருஷ்டித்தார். ஆகையினால் தேவனே மனுஷனுக்கு ஆண்டவராயிருக்கிறார்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை சிருஷ்டித்து அவனை ஆளுகை செய்கிறார். அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் இயக்குகிறார். தேவன் மனுஷனை ஒரு குறிப்பிட்ட நாளிலே சிருஷ்டித்தார். மனுஷன் நித்தியகாலமாக இந்தப் பூமியிலே இருக்கவில்லை. தேவன் மனுஷனை சிருஷ்டித்த நாளிலிருந்துதான், மனுஷன் இந்தப் பூமியிலிருக்கிறான். அதற்கு முன்பு மனுஷன் இந்தப் பூமியில் இல்லை.
தேவன் மனுஷனை தம்முடைய சாயலாக உண்டாக்கினார். தேவன் நீதியும் பரிசுத்தமுள்ளவர். மனுஷனும் தேவனைப்போல நீதியும் பரிசுத்தமும் உள்ளவனாயிருக்கவேண்டும். தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்டிருப்பது மனுஷனுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய மேன்மை.
தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதாரவாயும், துணையாயும் இருக்கவேண்டும் என்பதற்காகவும், தங்களுடைய சந்ததியை பலுகிப் பெருகப்பண்ணவேண்டும் என்பதற்காகவும் தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்.
தேவன் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டார் (ஆதி 5:3). சேத் தேவசாயலாகவும், தேவனுடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்படவில்லை. ஆதாம் சேத்தை தன் சாயலாகவும், தன் ரூபத்தின்படியேயும் பெற்றார்.
ஆதாம் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்து, தன்னிடத்தில் இருந்த மகிமையை இழந்துவிட்டார். ஆதாமிடத்தில் காணப்பட்ட தேவசாயல் மங்கிப்போயிற்று. பாவம் செய்வதற்கு முன்பு பரிசுத்தமாயிருந்த ஆதாம் இப்போது பாவம் செய்து அசுத்தமாயிருக்கிறார். ஆதாம் சேத்தைப் பெற்றார். ஆனால் சேத் தேவசாயலாகயில்லை. சேத் ஆதாமின் சாயலாகவும், ஆதாமின் ரூபத்தின்படியேயும் இருக்கிறான்.
ஆதாம் தேவனுடைய சாயலாகவும், தேவனுடைய ரூபத்தின் பிரகாரமாகவும் சிருஷ்டிக்கப்பட்டார். தேவனுடைய சாயலும், ரூபமும் பூரணமானது. ஆதாமின் சாயல் குறைவுடையது. அது மங்கியிருக்கிறது. பாவமும், மரணமும் ஆதாமிற்குள் கிரியை செய்து அவருடைய சாயலை அழித்துப்போடுகிறது. (யோபு 14:4; யோபு 25:4; சங் 14:3; சங் 51:5; ரோமர் 5:12-21; 1கொரி 15:39; எபே 2:2-3).
ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவர் மரித்தார்.
சேத்திற்குப் பிறகு ஆதாமிற்கு குமாரர்களும், குமாரத்திகளும் பிறந்தார்கள். அதுபோல காயீன், ஆபேல் ஆகியோருக்கு முன்பாகவே குமாரர்களும், குமாரத்திகளும் பிறந்திருக்க வேண்டும். யூதருடைய பரம்பரை வரலாற்றின் பிரகாரம் ஆதாமிற்கு 30 குமாரர்களும், 30 குமாரத்திகளும் இருந்தார்கள். இதே பரம்பரை வரலாற்றில் வேறுசிலர் ஆதாமிற்கு 300 குமாரர்களும், 300 குமாரத்திகளும் இருந்ததாகக் கூறுகிறார்கள்.
ஆதி 4:16-24 ஆகிய வசனங்களில் காயீனுடைய சந்ததியாரைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆதாமும் ஜீவனோடிருக்கிறார். சேத்தின் காலத்திலும், ஏனோக்கின் 308 வருஷம் வரையிலும் மெத்தூசலாவின் 243 ஆவது வருஷம் வரையிலும் ஆதாம் உயிரோடு இருந்திருக்கிறார். ஆதாமும், மெத்தூசலாவும் ஜலப்பிரளயத்திற்கு முந்திய காலத்தில் ஒன்றாக உயிரோடிருந்தவர்கள் (ஆதி 5:5,27).
from வேதாகம களஞ்சியம் https://ift.tt/3qQEgsm
via IFTTT Umn ministry