தானியேல் விளக்கவுரை அதிகாரம் 6

0







தானியேல் விளக்கவுரை அதிகாரம் 6


தரியு இராஜா தன் தேசத்தை ஆளும்படிக்கும் தனக்கு நஷ்டம் வராதபடி கணக்கை ஒப்புவிக்கிறதற்கும் ராஜ்யத்தின் மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும் அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் நியமிக்கும்படிக்கு தீர்மானித்தான்.  தானியேலுக்குள் விசேஷித்த கர்த்தருடைய ஆவியானவர் இருந்தபடியால் அவன் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான். ஒரு மனுஷனை விசேஷசித்தவானாய் மாற்றுகிறவர் ஆவியான தேவன். அவர் விசேஷித்தவராய் காணப்படுவதால் யாருக்குள்ளாய் அவர் வாசம் பண்ணுகிறாரோ அவர்களை விசேஷித்தவராய் மாற்றுகிறார்.

தானியேல் விசேஷித்தவனாய் காணப்பட்டதினால் தரியு இராஜா ராஜ்யம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக பிரதம மந்திரியாக ஏற்படுத்த நினைத்தான். இது மற்ற பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் பொறாமையை கொண்டுவந்தது. பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதிமொழிகள் 27  4). ஆகையால் தானியேலை குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள். ஆனால் தானியேல் உண்மையுள்ளவனாய் காணப்பட்டதினால் ஒரு குற்றமும் கண்டுபிடிக்க கூடாதிருந்தது.  தன் வேலையில்ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான் (நீதிமொழிகள்  22  29).  உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதிமொழிகள் 28  20).
ஆகையால் அந்த மனுஷர்கள் தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேத விஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறோன்றிலும் குற்றப்படுத்தமுடியாது என்று தீர்மானிக்கிறார்கள்.

தானியேலலின் ஜெப ஜீவியத்தை அவர்கள் அறிந்திருந்த படியால், எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் கூட்டங்கூடி எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய தரியுவை தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட வேண்டும் என்ற  கட்டளை பத்திரத்துக்கு கையெழுத்து போட ராஜாவை கேட்டு கொண்டார்கள். தானியேலின் மேல் குற்றம் கண்டுபிடிக்க தரியுவை தேவனாய் மாற்றுகிறார்கள். ஜெபத்தை கேட்கிறவர் தேவன் ஒருவரே. அவரை மாத்திரம் தான் நோக்கி பார்க்க வேண்டும்.  தரியு ராஜா இஸ்ரவேலின் தேவனை குறித்து அறிந்திருந்தவன், தானியேலுக்குள் விசேஷித்த ஆவியானவர் காணப்பட்டார் என்பதையும் ராஜா அறிந்திருந்தான், தானியேல் இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் தப்புவிக்கிறவர்,  சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை அக்கினிசூளைக்கு தப்புவித்த தேவன் என்பதை அறிந்திருந்தும், இவைகளையெல்லாம் நினையாதபடிக்கு, தன்னை தேவனாய் மாற்றினதை அறிந்து, மேட்டிமைகொண்டு, ராஜாவை தவிர வேறு யாரிடமும் விண்ணப்பம் செய்யக்கூடாது என்ற கட்டளை பத்திரத்துக்கு கையெழுத்து போடுகிறான். 

தானியேல் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். யூதர்கள் எங்கே காணப்பட்டாலும் அவர்கள் எருசலேமை நோக்கி பாhத்து ஜெபிப்பது வழக்கம். அது போல தானியேலும் ஜெபிக்கிறார். 

இராஜாவின் சட்டம் தானியேலின் ஜெபத்தை நிறுத்த முடியவில்லை. அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்(சங்கிதம் 55 .17). தாவீது அந்தி சந்தி மத்தியான வேளையில் ஜெபித்தது போல, தானியேலும் வழக்கத்தின்படியே மூன்று வேளையும் ஜெபிக்கிறார். கட்டளை பத்திரம் கையெழுத்து வைக்கப்பட்டது என்பதை அறிந்து தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறார். இதுவரை பலகணிகள் திறந்து இருக்க ஜெபித்தவர் இப்போதும் அப்படியே ஜன்னல்களை திறந்து வைத்து பயப்படாதபடி ஜெபிக்கிறார்.  என் தேவன் சிங்கங்களின் வாய்க்கு தப்புவிக்கிறவர், தப்புவியாவிட்டாலும் ஜெபத்தை நிறுத்த முடியாது என்று ஸ்தோத்திரம் செலுத்தி விசுவாசத்தோடு ஜெபிக்கிறான்.  தேவ பிள்ளைகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய சட்டம் தேவனுடைய சட்டத்திற்கு மாறாக காணப்படும் போது தேவ சட்டத்திற்கு தான் கீழ்படியவேண்டும். அதை தான் தானியேல் செய்கிறார்.

பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ராஜாவினிடத்தில் வந்து, எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீரே.  சிறைப்பிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினமும் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான் என்று தானியேலின் மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள். தானியேல் எழுபது வருஷத்திற்கு மேலாக பாபிலோனில் காணப்பட்டிருந்தும், பிரதானிகளுக்கு தலைவனாக காணப்பட்டும் சிறைபிடிக்கப்பட்ட புருஷன் என அவமானமாக பேசுகிறார்கள்.

ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்படுகிறான். தானியேலை காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்பவிக்கிறதற்காக சூரியன் அஸ்தமிக்கு மட்டும் பிரயாசப்பட்டுக்கொண்கொண்டிருந்தான்.  ஆனால் அந்த மனுஷர்கள் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று ராஜாவுக்கு தெரியும். ஆகையால் தானியேல் தண்டனைக்கு பாத்திரன் என்பதை நினைவூட்டுகிறார்கள். ஆகையால் ராஜாவுக்கு தானியேலை தப்புவிக்க முடியவில்லை.

ராஜாவின்  கட்டளையின்படி அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலிடம் நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். தானியேலின் சோதனையில் இந்த வார்த்தை தானியேலை உற்சாகப்படுத்தியிருக்கும்.   ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது. தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான். தானியேல் சிங்கங்களின் மத்தியில் நித்திரை செய்கிறார். ஆனால் ராஜா தன் அரமனையிலே இராமுழுவதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான். அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.

காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான்.  ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரச்சத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு, தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். தானியேலின் தேவன் தப்புவிக்கிறவர் என்பதை ராஜா அறிந்திருந்தான் என்பதை அவன் வார்த்தையில் இருந்து அறியலாம். அப்போது, தானியேல்  ராஜாவை  வாழ்த்தி, சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார். அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன். ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.  ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான். அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான். அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை. தானியேலின்மேல் குற்றஞ்சாட்டின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான். அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது. மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்(கலாத்தியர்  6  7).

ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் சமாதான வாழ்த்துதல் கூறி எழுதினது என்னவென்றால்: என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது. அவரே ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர். அவருடைய ராஜ்யம் அழியாதது. அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும். தானியேலை சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்பவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான். மேதியனாகிய தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது. 

                God bless you 




                    Umn ministry 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*