நல்ல தோட்டகாரனாயிரு

0



பொல்லாத தோட்டக்காரர்




திராட்சத்தோட்டம் மாற்கு 12:1,2

பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வே-யடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான் (மாற்கு 12:1,2) . 

இயேசுகிறிஸ்து உவமைகளின் மூலமாக தமது சத்தியங்களை தெளிவுபடுத்துகிறார். இதற்கு முன்பு சுவிசேஷ சபையை தாம்  ஸ்தாபிக்கும் திட்டத்தைக் குறித்து  இயேசுகிறிஸ்து உவமைகளினால் விளக்கியிருக்கிறார். இப்போதோ யூதருடைய சபையைக் குறித்து இயேசுகிறிஸ்து ஓர் உவமையின் மூலமாக விவரிக்கிறார். 

தரிசனமான சபையில் பல ஆசீர்வாதங்கள் உண்டு. சபையில் அங்கத்தினர்களாக இருக்கும் விசுவாசிகள் சபையின் ஆசீர்வாதங்களை  அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு ஆசீர்வாதமான                ஆவிக்குரிய சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆசீர்வாதங்களை அனுபவிப்பவர்களிடமிருந்து இயேசுகிறிஸ்து ஒரு சில நியாயமான காரியங்களை எதிர்பார்க்கிறார்.  சபையின் விசுவாசிகள் தேவனுடைய தோட்டக்காரரைப்போல இருக்கிறார்கள். தோட்டத்தின் எஜமான் மிகவும் நல்லவர். குறைந்தளவு குத்தகைக்கு, இவர்களுக்கு தோட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. திராட்சத்தோட்டத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்து விசுவாசிகள் பரிபூரணமாக ஜீவிக்கலாம். இவர்களுக்கு ஏதாவது குறைவு இருக்குமென்றால் அது அவர்களுடைய தவறாக இருக்குமேயல்லாமல், அவர்களுடைய குறைவுக்கு வேறு எதுவும் காரணமல்ல. 

தேவன் தமது திராட்சத்தோட்டத்தை தமது பிள்ளைகளுக்கு குத்தகையாக விட்டிருக்கிறார்.   தமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குத்தகையை பெற்றுக்கொள்ளுமாறு தமது ஊழியக்காரரை அனுப்புகிறார். தேவன் தமது பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது நியாயமானது. நீதியானது. 

தோட்டக்காரரிடம் அனுப்பப்பட்டவர்கள்

    1. ஒரு ஊழியக்காரன் - அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பி விட்டார்கள் (மாற்கு 12:2-3) 

    2. வேறொரு ஊழியக்காரன் - அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பி விட்டார்கள் (மாற்கு 12:4) 

    3. மறுபடியும் வேறொருவன் - அவனை அவர்கள் கொலைசெய்தார்கள்.        (மாற்கு 12:5)  

    4. வேறு அநேகர் - அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்  (மாற்கு 12:5)

    5. அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் (மாற்கு 12:6-7) - அவனைப் பிடித்துக் கொலைசெய்து திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய முன்னறிவிப்பு. (மாற்கு 12:10)

இந்த உவமையில் மனுஷன், தோட்டக்காரர், ஊழியக்காரன், பிரியமான ஒரே குமாரன் ஆகியோர் யார் என்று தெளிவாக கூறப்படவில்லை. இந்த உவமையின் பிரகாரம் பிரியமான ஒரேகுமாரன் என்பது இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது.  

ஊழியக்காரன் மாற்கு 12:3-5

 அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள் (மாற்கு 12:3-5).

தேவனுடைய ஊழியக்காரர் எப்போதுமே  பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்யும்போது அவர்களுக்கு பாடுகளும் உபத்திரவங்களும் வருகிறது. பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் பாடுகளை அனுபவித்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டு காலத்து தீர்க்கதரிசிகளை அக்காலத்து ஜனங்கள் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். இது மிகவும் அநியாயம். கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்க வந்தவர்களுக்கு இவர்கள் தண்டனையை கொடுக்கிறார்கள் சில தீர்க்கதரிசிகள்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். இது மிகவும் அநியாயம். இதைவிட கொடுமை என்னவென்றால் அவர்கள் தீர்க்கதரிசிகளை கொலைசெய்து விட்டார்கள். 

அவனுக்குப்  பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்-, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலை செய்வோம் வாருங்கள்; அப்பொழுது     சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர்        சொல்-க்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்  (மாற்கு 12:6-8).

கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை துன்பப்படுத்துகிறவர்கள் கர்த்தரையே துன்பப்படுத்துகிறார்கள். காலம் நிறைவேறிய போது தேவன் தமக்கு பிரியமான ஒரே குமாரனை தோட்டக்காரரிடத்தில் அனுப்புகிறார்.  தம்முடைய குமாரனுக்கு அவர்கள் அஞ்சுவார்கள் என்று சொல்லி, அவரை கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்புகிறார். ஆனால் அவர்களோ தேவனுடைய குமாரனுக்கு அஞ்சவில்லை. இவர் தேவனுடைய சுதந்தரவாளி என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். திராட்சத்தோட்டத்து எஜமானுக்கு அவருடைய குமாரன் சுதந்தரவாளியாக இருப்பதினால், அந்த குமாரனை தோட்டக்காரர்கள் விரோதிக்கிறார்கள். குமாரனை கொலை செய்து விட்டால் அவருடைய சுதந்தரம் தங்களுடையதாகுமென்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள். 

தோட்டக்காரர் மெய்யாகவே குமாரனுக்கு அஞ்சினால் அவர்களுக்கு சுதந்தரம் கிடைக்கும்.  இவர்களும் எஜமானுடைய சுதந்தரவாளிகளாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இது பூமிக்குரிய சுதந்தரமல்ல. பரலோகத்தின் சுதந்தரம். ஆனால்  அவர்களோ குமாரனை பிடித்து, கொலை செய்து திராட்சத்தோட்டத்திற்கு புறம்பே போட்டுவிடுகிறார்கள். 

எஜமான் மாற்கு 12:9-11 

அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத்தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார் (மாற்கு 12:9-11).

துன்மார்க்கருக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும். பாவத்தின் சம்பளம் மரணம். தோட்டக்காரர் எஜமானுடைய குமாரனுக்கு பயப்படுவதற்குப் பதிலாக, தங்களுடைய உள்ளத்தில் துன்மார்க்க எண்ணம் கொண்டவர்களாக, குமாரனையே கொலை செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட பாவம் செய்தவர்களுக்கு திராட்சத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து   அந்த தோட்டக்காரரை சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பானல்லவா. தோட்டக்காரர் தம்முடைய ஊழியக்காரரையும், குமாரனையும் கொலை செய்தபோது, எஜமான் அவர்களை அழித்துப்போடவேண்டுமென்று தீர்மானம் பண்ணிவிடுகிறார். 

தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை யூதமார்க்கத்தைச் சேர்ந்த தோட்டக்காரர்கள் கொலை செய்துவிடுகிறார்கள். எஜமானாகிய தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு யூதஜனங்கள்மீது வந்தது. எருசலேம் நகரம் பாழாக்கப்பட்டபோது தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு யூதஜனங்கள்மீது நிறைவேறிற்று. 

எஜமான் தவறு செய்த தோட்டக்காரரை சங்கரித்து, தமது திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பார். இதுவரையிலும் யூதர்கள் மத்தியில் மாத்திரம்  ஸ்தாபிக்கப்பட்டு வந்த கர்த்தருடைய சபையானது, இப்போது புறஜாதியார் மத்தியிலும் ஸ்தாபிக்கப்படுகிறது. தேவனுடைய காணியாட்சிக்கு புறம்பாக இருந்தவர்கள், இப்போது அவருடைய காணியாட்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பி பலன்தருகிறது (கொலோ 1:6). நாம் ஒருவரிடம் நன்மையான காரியங்களை எதிர்பார்க்கும்போது, அவர் நன்மை செய்யவில்லையென்றால், பொறுப்பை  வேறொருவரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிடுவோம்.  மற்றவர்கள் நமக்கு நன்மை செய்யட்டும் என்று எதிர்பார்ப்போம். 

தோட்டக்காரர் எஜமானுடைய குமாரனை கொலை செய்துவிடுகிறார்கள். இதனால் எஜமானுடைய திட்டம் அழிந்துபோகவில்லை. எஜமான் தமக்கு சித்தமான காரியத்தை, தமக்கு சித்தமான வழியில் நிறைவேற்றுகிறார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் ஊழியம் செய்தபோது அவருக்கு பல எதிர்ப்புக்கள் உண்டாயிற்று. யூதமார்க்கத்தார் கிறிஸ்துவின் உபதேசத்தை அங்கீகரிக்கவில்லை. எதிர்ப்பு உண்டானதினால் கிறிஸ்துவின் ஊழியம் அழிந்துபோய்விடவில்லை. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று. தேவன் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தம்முடைய ராஜாவாக அபிஷேகம் செய்திருக்கிறார். சீயோன் பர்வதத்தின்மீது தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து அமர்ந்து ராஜரீகம் பண்ணுகிறார். உலகம் முழுவதும் உள்ளவர்கள்  கிறிஸ்துவினுடைய ராஜரீகத்தை காண்பார்கள்.  அவரை தங்கள் தேவனாகவும், கர்த்தராகவும், இரட்சகராகவும், ராஜாதிராஜாவாகவும் அங்கீகரிப்பார்கள்.


Umn ministry Chennai 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*