அத்திமரத்தின் உவமை

0

 

கனிகொடாத அத்திமரம்




உவமையின் வியாக்கியானம் 

    இயேசுகிறிஸ்து இந்த உவமையைக் கூறுவதற்கு முன்பாக ""நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்'' என்று எச்சரித்துக் கூறினார். இந்த எச்சரிப்பின் வார்த்தையை உறுதிபண்ணும் விதமாக இயேசுகிறிஸ்து இந்த உவமையை இங்கு விவரிக்கிறார். வேதபண்டிதர்கள் இந்த உவமைக்கு இரண்டு விதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள். இது முதலாவது வியாக்கியானம். இந்த உவமையானது இஸ்ரவேல் தேசத்தையும் யூதஜனத்தையும் குறிப்பதாக வேதபண்டிதர்களில்  ஒரு சிலர் கருதுகிறார்கள். தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்ட விசுவாசிகள் தங்களுடைய ஜீவியத்தில் ஆவிக்குரிய கனிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை  வலியுறுத்தும் விதத்தில் இந்த உவமை கூறப்பட்டிருப்பதாக வேதபண்டிதர்களில் வேறு சிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள். இது இரண்டாவது வியாக்கியானம்.  

தேவன் யூதஜனங்களை தமக்கு சொந்தமான ஜனங்களாக தெரிந்துகொண்டார். தமக்கு அருகாமையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். தாம் அவர்களுக்குச் செய்த நன்மைகளுக்கு பிரதிபலனாக தேவன் அவர்களிடமிருந்து கீழ்ப்படிதலையும்,  தங்களுக்கு  நியமிக்கப்பட்டிருக்கும்  கடமைகளை பொறுப்பாக  நிறைவேற்றுவதையும் எதிர்பார்க்கிறார். 

தேவன் தம்முடைய பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் காரியம் ""கனி'' என்று இங்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. தேவன் தம்முடைய பிள்ளைகளிடமிருந்து கனியை எதிர்பார்க்கும்போது, அவருடைய பிள்ளைகளோ  அவர் எதிர்பார்க்கும் கனியை அவருக்குக் கொடுக்கவில்லை. தேவனுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பதற்குப் பதிலாக அவர்கள் தங்களுக்குத் தாங்களே சாபங்களை வருவித்துக்கொண்டார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமைகளை  பயபக்தியுடன் நிறைவேற்றாமல் தேவனை வஞ்சித்து விட்டார்கள். தம்முடைய பிள்ளைகளின் கீழ்ப்படியாமைக்காக தேவன் அவர்களை நியாயமாக தண்டித்து தம்மைவிட்டு  அகற்றிவிட தீர்மானம் கொள்கிறார்.

    ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோ பிதாவாகிய தேவனிடம் நமக்காக பரிந்து பேசுகிறார். தேவனுடைய கிருபையின் காலத்தை அதிகரிக்கச் செய்யுமாறு  நமக்காக பிதாவிடம் மன்றாடுகிறார். பிதாவாகிய  தேவனுடைய தண்டனை நியாயமாக இருக்கிறபோதிலும், தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் பரிந்து பேசும் ஜெபத்தினால், பிதா தமது கிருபையினால் நம்மை உடனே தண்டித்துவிடாமல் தமது இரக்கத்தை விரிவுபடுத்துகிறார். தண்டிக்கும் காலத்தை தமதப்படுத்துகிறார். நமக்கு மறுபடியும்  கனிதருவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார். இந்த வருஷத்தில் தேவன் நம்மை தண்டிக்காமல்,  நாம் கனி கொடுப்பதற்கு மேலும் ஒரு வருஷம் கால அவகாசத்தை கூட்டிக்கொடுக்கிறார். 

கர்த்தருக்கு கீழ்ப்படியாத பிள்ளைகளை  தேவன் உடனே தண்டித்துவிடாமல், தமது கிருபையினால் இரங்கி, அவர்களிடத்தில் தமது அப்போஸ்தலர்களை அனுப்புகிறார். கீழ்ப்படியாத பிள்ளைகள் மனந்திரும்பவேண்டுமென்று அப்போஸ்தலர்கள் எச்சரித்துக் கூறுகிறார்கள்.  

இயேசுகிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக விசுவாசிக்கிற ஜனங்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் பாவமன்னிப்பு உண்டாகிறது. ஒரு சிலர் தங்களுடைய பாவங்களுக்காக மனம்வருந்தி, மனந்திருந்தி, இயேசுகிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் ஆசீர்வதிக்கப்படுகிறது. இரட்சிக்கப்படுகிறவர்கள் கனிகொடுக்கும் ஜீவியம் பண்ணுகிறார்கள். கனிகொடுக்கும் தமது பிள்ளைகள்மீது தேவன் பிரியமாக இருக்கிறார். 

இஸ்ரவேல் ஜனத்தாரில் ஒரு சிலர் தேவனுக்கு பயந்து, பயபக்தியோடு ஜீவித்து, கனிகொடுக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனத்தாரில் பெரும்பாலோர் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல், தங்கள் மனம்போல் ஜீவிக்கிறார்கள். அவர்களிடத்தில் தேவனைக்குறித்த பயமுமில்லை. தேவன்மீது பக்தியுமில்லை. அவர்களால் கனிகொடுக்க முடியவில்லை. கனிகொடுக்காத மரமாக இருக்கிறார்கள். எந்தவிதத்திலும் அவர்கள் கனிகொடாமல் போனதினால் அவர்களுக்கு அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. தேவனால் நியமிக்கப்பட்ட காலத்தில் அவர்கள் தங்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொள்வார்கள். 

இயேசுகிறிஸ்து கூறிய இந்த உவமை கீழ்ப்படியாத யூதஜனங்களை விசேஷமாக விவரித்துக் கூறுகிறது. அதேவேளையில் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கும்  இந்த உவமையின் கருத்து பொருந்தும். விசுவாசிகள் தேவனுடைய கிருபையை அதிகமாக பெற்று அனுபவித்து வருகிறார்கள்.  தமக்காக ஊழியம் செய்யுமாறும், ஆவிக்குரிய கனிகொடுக்குமாறும் தேவன் தம்முடைய பிள்ளைகளை எதிர்பார்க்கிறார். தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜீவியகாலத்தில், ஒவ்வொரு விசுவாசியும் கனிகொடுக்க வேண்டும். தங்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்களுக்காக ஒவ்வொரு விசுவாசியும் தேவனிடத்தில் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். தேவன் தங்களிடம் எதிர்பார்க்கும் கனியை தம்முடைய ஜீவியத்தில் வெளிப்படுத்த வேண்டும்.  கனிகொடாமல் ஜீவிக்கும் விசுவாசிகளுக்கு தண்டனை நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கனியும் காணவில்லை (லூக் 13:6,7).

அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.  அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்  (லூக் 13:6,7).

இந்த உவமையில் இயேசுகிறிஸ்து கூறும் அத்திமரம் மிகவும் விசேஷமானது. இது திராட்சத்தோட்டத்தில் நட்டப்பட்டிருக்கும் அத்திமரமாகும். திராட்சத்தோட்டத்தின் மண் மிகவும் வளமானது.  மற்ற அத்திமரங்களுக்கு  கொடுக்கப்படும் கவனத்தைவிட, இந்த திராட்சத்தோட்டத்தில் நட்டப்பட்டிருக்கும் அத்திமரத்திற்கு அதிக கவனம் கொடுக்கப்படும்.  பொதுவாக அத்திமரம் வழியருகே நட்டப்பட்டிருக்கும் (மத் 21:19). திராட்சத்தோட்டத்தில் இந்த அத்திமரம் நட்டப்பட்டிருப்பதினால் இந்த மரத்திற்கு விசேஷித்த பராமரிப்பு கிடைக்கும்.  திராட்சத்தோட்டத்தைக் கவனிப்பதுபோலவே இந்த அத்திமரத்தையும் கவனிப்பார்கள்.

இந்த அத்திமரம் ஏனோதானோவென்று  ஏதோ ஒரு இடத்தில் எதேச்சையாக, மானாவாரியாக வளரும் மரமல்ல. இது ஒரு மனுஷனுக்குரியது. தோட்டத்தின் சொந்தக்காரர் திராட்சச்செடிகளை நட்டியிருப்பதுபோல இந்த அத்திமரத்தையும் நட்டியிருக்கிறார். தேவனுடைய சபை அவருடைய திராட்சத்தோட்டமாக இருக்கிறது. விசுவாசிகளாகிய நாம் அவருடைய திராட்சத்தோட்டத்தில் நட்டப்பட்டிருக்கும் அத்திமரங்களைப்போல இருக்கிறோம். ஆகையினால் நமக்கு விசேஷித்த சிலாக்கியமும், பராமரிப்பும் கிடைக்கிறது. தேவனுடைய பார்வையில் நாம் விசேஷித்தவர்கள். 

திராட்சத்தோட்டத்தில் நம்மை நட்டியிருக்கும் எஜமான் நம்மிடமிருந்து சில காரியங்களை எதிர்பார்க்கிறார். தான் நட்டிய அத்திமரத்திலே திராட்சத்தோட்டத்தின் எஜமான் கனியை தேடிப்பார்க்கிறார். கனியிருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு எஜமான் வேறு யாரையும் அனுப்பவில்லை. தாமாகவே வருகிறார். இயேசுகிறிஸ்துவும் இந்த எஜமானைப் போலவே  இந்த உலகத்திற்கு வந்தார்.  தமக்கு சொந்தமானவர்களிடத்தில் வந்தார்.  அவர்களிடத்தில் கனியைத் தேடிவந்தார். பரலோகத்தின் தேவன் தம்முடைய திராட்சத்தோட்டத்தில் இடம் பெற்றிருக்கும் தம்முடைய பிள்ளைகளிடமிருந்து கனியை எதிர்பார்க்கிறார். தம்முடைய பிள்ளைகள் கனி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தே தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார். பராமரிக்கிறார்.  

அத்திமரத்தில் ஏராளமாக இலைகள் இருப்பது  கனிதருவதற்கு இணையாகாது. நாம் இயேசுகிறிஸ்துவிடம் ""கர்த்தாவே, கர்த்தாவே'', என்று கூறுவதினால் நமக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. தேவன் நம்மிடம் கனியை எதிர்பார்க்கும்போது, நாம் கனிதராமல், அவரை  ""கர்த்தாவே கர்த்தாவே'' என்று அழைத்தால், கர்த்தர் நம்மீது பிரியமாக இருக்கமாட்டார். 

அத்திமரத்தில் பூக்கள் மாத்திரம் பூத்திருந்தாலும் அதனாலும் ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. பூக்கள் பூப்பது கனிதருவதற்கு ஆரம்பம். இந்த மரம் கனிகொடுக்க ஆரம்பித்துவிட்டது என்பதை பூக்கள் முன்னறிவிக்கின்றன.  ஆரம்பம் ஒருபோதும்  முடிவு ஆவதில்லை. ஒரு மரத்தில் பூக்கள் மாத்திரம்  பூத்திருந்தால் அது போதாது. அந்த பூக்கள் கனிகளாக மாறவேண்டும். அப்போதுதான் அது பிரயோஜனமுள்ளதாக இருக்கும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியமும் பூக்களைப்போல அழகாக இருந்தால் மாத்திரம் போதாது. நாம் கனிகொடுக்கும் பக்குவத்திற்கும் வளரவேண்டும். நம்முடைய  சிந்தனைகள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவை சுவிசேஷத்திற்கு ஏற்றபிரகாரமாக அமைந்திருக்க வேண்டும். நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக ஜீவிக்கவேண்டும். நம்மிடத்தில் அன்பின் கனி வெளிப்படவேண்டும்.

திராட்சத்தோட்டத்து எஜமான் தான் நட்டிய அத்திமரத்திற்கு அருகில் எதிர்பார்ப்போடு வருகிறார்.  ஆனால் அவருடைய எதிர்பார்ப்பு வீணாயிற்று. தன்னுடைய திராட்சத்தோட்டத்தில், தான் நட்டிய அத்திமரத்தில், கனியைத் தேடுகிறார். ஆனால் அந்த மரத்தில் அவர் ஒரு கனியும் காணவில்லை. திராட்சத்தோட்டத்திற்கு நீர் பாய்ச்சப்படும்போதெல்லாம் இந்த அத்திமரமும்  அந்த ஆசீர்வாதத்தை பெற்று அனுபவித்திருக்கிறது. ஆனால் கனிகொடுக்க வேண்டிய பருவத்திலோ கனிகொடாமல் வெறுமையாக நிற்கிறது. 

கனிகொடாத இந்த அத்திமரத்தைப்போலவே விசுவாசிகளில் அநேகர் பரிதாபமாக ஜீவிக்கிறார்கள். சுவிசேஷத்தின் சிலாக்கியங்களை இவர்கள் தாராளமாக அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜீவியத்திலோ தேவனை மகிமைப்படுத்துவதற்கு ஒரு காரியமும் செய்வதில்லை. தங்கள் மனம் விருப்பம்போல ஜீவிக்கிறார்கள். தேவனுடைய சித்தத்தையும் விருப்பதையும் உணர்ந்து ஜீவிப்பதில்லை. 

திராட்சத்தோட்டத்து எஜமான் ஏமாற்றமடைந்து, தோட்டக்காரனிடம் முறையிடுகிறார். தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். கனியைத் தேடினபோது  ஒன்றும் காணவில்லை என்று முறையிடுகிறார்.    எஜமானுக்கு கோபம் வருகிறது. இந்த அத்திமரம்  கனிகொடுக்குமென்று மூன்று வருஷமாக காத்திருந்தார். ஆனால் அந்த மரமோ ஒவ்வொரு வருஷமும் கனிகொடாமல் தன் எஜமானை வஞ்சித்துவிட்டது. எஜமானும் பேராசைப்பட்டு அந்த அத்திமரத்தில் திரளான கனிகள் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு கனி மாத்திரமாவது கிடைக்குமா என்று  எதிர்பார்த்து வருகிறார். அவருடைய சிறிய எதிர்பார்ப்பைக்கூட இந்த அத்திமரத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

திராட்சத்தோட்டத்து எஜமான் செடியை நட்டியவுடன், அவசரப்பட்டு உடனே வந்து  கனியைத் தேடிப்பார்க்கவில்லை. மூன்று வருஷங்களாக வந்து பார்க்கிறார். ஒவ்வொரு வருஷமும் வருகிறார். எஜமான் மிகவும் பொறுமையுள்ளவர். முதல் வருஷத்தில் அத்திமரம் கனிகொடுக்கவில்லையென்றாலும், இரண்டாவது வருஷத்திலாவது அது கனிகொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். இதுபோலவே அவர் மூன்று வருஷமாக இந்த அத்திமரத்தில் ஏதாவது கனி இருக்குமா என்று பார்க்க வருகிறார். 

நம்முடைய தேவனாகிய கர்த்தர் திராட்சத்தோட்டத்தில் எஜமானைப்போலவே  நீடிய பொறுமையுள்ளவராக இருக்கிறார். தேவனுடைய சுவிசேஷ சத்தியத்தைக் கேட்டு,  ஆவிக்குரிய நன்மைகளை அனுபவித்து வரும்  தம்முடைய பிள்ளைகளிடத்தில் தேவன் ஆவிக்குரிய கனியை எதிர்பார்க்கிறார். நாம் கனி தரவில்லையென்றாலும் தேவன் நம்மிடத்தில் பொறுமையோடிருந்து நம்மை ஆசீர்வதித்து, பராமரித்து வருகிறார். எப்படியாவது நாம் கனிதருவோம் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் நாமோ தேவனுடைய  நன்மைகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு, அவர் எதிர்பார்க்கும் கனிதராமல் ஜீவிக்கிறோம்.   விசுவாசிகளாகிய நம்முடைய ஜீவியத்தில், கடந்து மூன்று வருஷங்களில், தேவன் நம்மிடத்தில் எத்தனை தடவை கனியைத் தேடிவந்தார் என்றும், நம்மிடத்தில் எத்தனை தடவை ஒரு கனியையும் காணாமல் ஏமாற்றமடைந்து போனார் என்றும் நாம் தியானம்பண்ணி பார்க்கவேண்டும். 

திராட்சத்தோட்டத்தில் நட்டப்பட்ட அத்திமரம் கனிகொடுக்காமல் போனதோடு ஒரு சில தீமையும் செய்கிறது. நம்மில் ஒருசிலர் இந்த அத்திமரத்தைப் போலவே நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்து விடுகிறோம்.  நாம் உபகாரம் பண்ணாவிட்டாலும்    உபத்திரவம் பண்ணாமலாவது இருக்கவேண்டும். இந்த அத்திமரம் மூன்று வருஷமாக    கனியையும் கொடுக்காமல் நிலத்தையும் கெடுத்துப்போடுகிறது. ஒரு கனி கொடுக்கக்கூடிய நல்ல அத்திமரம் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்குமோ அவ்வளவு இடத்தை  கனிகொடுக்காத இந்த அத்திமரமும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. நன்மை செய்யாத இந்த அத்திமரம் தீமை செய்கிறது.  தனக்கு அருகில் இருக்கும் திராட்சச்செடிக்கு இது கேடு விளைவிக்கிறது. 

நன்மை செய்யாத ஜனங்கள் தங்களுடைய தீமையான முன்மாதிரியினால் மற்றவர்களுக்கு தீமை செய்துவிடுவார்கள். இந்த அத்திமரம் கிளை படர்ந்து அகலமாக விரிந்து வளர்ந்திருந்தாலும், உயரமாக வளர்ந்திருந்தாலும் இதனால் ஒரு பிரயோஜனமுமில்லை. அதிக அகலமும்,       அதிக உயரமும் அதிக கேட்டையே விளைவித்திருக்கிறது. இந்த மரம் மூன்று வருஷமாக இருப்பதினால், இதனால் உண்டாகும் கேடும் மூன்று வருஷமாக தொடர்ந்து வந்திருக்கிறது. விசுவாசிகளாகிய நாம் கனிகொடுக்காமல், நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் அகலமாக வளர்வதினாலும் உயரமாக வளர்வதினாலும் ஒரு பிரயோஜனமுமில்லை. நாம் கனிகொடுக்கவில்லையென்றால் நமது ஆவிக்குரிய ஜீவியத்தின் அதிக அகலமும், அதிக உயரமும், மற்ற விசுவாசிகளுக்கு அதிக  கேட்டையே உண்டாக்கும்.

திராட்சத்தோட்டத்து எஜமான் மூன்று வருஷமாக கனிகொடாத இந்த அத்திமரத்திற்கு தண்டனையை அறிவிக்கிறார். ""இதை வெட்டிப்போடு'' என்று தோட்டக்காரனிடம் கூறுகிறார். கனிகொடாத அத்திமரத்தினால்  ஒரு பிரயோஜனமுமில்லை. கனியும் கொடாமல்  நிலத்தையும் கெடுக்கும்போது அதை வெட்டிப்போடுவதைத் தவிர வேறு வழியில்லை.  இதை வெட்டிப்போடாமல் அப்படியே வைத்திருந்தால் இந்த மரம் அதிகமான நிலத்தை கெடுத்துப்போடும். திராட்சத்தோட்டத்தில்      இந்த அத்திமரம் இருப்பதினால் எஜமானுக்கு எந்த பிரயோஜனமுமில்லை. தோட்டத்திலுள்ள திராட்சச்செடிகளுக்கும் எந்த உபயோகமுமில்லை. கனிகொடாத அத்திமரம்  உபகாரம் பண்ணுவதற்குப் பதிலாக உபத்திரம் பண்ணுகிறது. கனிகொடாத இந்த அத்திமரம்  திராட்சத்தோட்டத்தில் இருப்பதற்கு தகுதியில்லாமற்போயிற்று. 

இயேசு கிறிஸ்து மூன்று வருஷங்கள் ஜனங்கள் மத்தியிலே ஊழியம் செய்தார். ""இந்த வருஷம்'' என்பது நான்காம் வருஷத்தைக் குறிக்கும். 2,000 வருஷங்களாக இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குச் செவிகொடுக்கவில்லை. அவர்களோடு ஏன் போராடவேண்டும். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகமாகக் கலகம் பண்ணுகிறார்கள்.        இஸ்ரவேல் ஜனங்களுடைய நியாயத்தீர்ப்பிற்கு முன்பாக அவர்களுக்கு 40 வருஷங்கள் கூட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வருஷமும் இருக்கட்டும் லூக் 13:8)

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,   (லூக் 13:8)

திராட்சத்தோட்டத்து எஜமான் கனிகொடுக்காத அத்திமரத்தை வெட்டிப்போடுமாறு தோட்டக்காரனிடம் கூறுகிறார். ஆனால் தோட்டக்காரனோ தன் எஜமானிடம் அந்த அத்திமரத்திற்காக பரிந்து பேசுகிறான். நம்முடைய வாழ்க்கையில் இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறான். ஊழியக்காரர்கள் தங்களுடைய சபையிலுள்ள விசுவாசிகளுக்காக கர்த்தரிடம் பரிந்து பேசுகிறார்கள். கர்த்தருடைய வார்த்தையை நாம் பிரசங்கம் பண்ணும்போது,  அந்த வசனத்தைக் கேட்கும் ஜனங்களுக்காக  கர்த்தரிடம் பரிந்து பேசி ஜெபிக்கவேண்டும். 

தோட்டக்காரன் தன் எஜமானிடம் கனிகொடுக்காத அத்திமரத்திற்கு விதிக்கப்பட்ட  தண்டனையை ஒத்திவைக்குமாறு பரிந்து பேசுகிறான். ""ஐயா இது இந்த வருஷமும் இருக்கட்டும்'' என்று கூறுகிறான். தோட்டக்காரனுடைய ஜெபம் நியாயமானது. ""ஐயா இந்த அத்திமரத்தை வெட்டவே வேண்டாம்'' என்றோ, அல்லது ""ஐயா  இந்த அத்திமரத்தை இப்போது வெட்டவேண்டாம்'' என்றோ தோட்டக்காரன் பரிந்து பேசவில்லை. ஏனெனில் கனிகொடுக்காத அத்திமரத்தை வெட்டிப்போடுவது நியாயமான காரியம் தான். 

ஒரு சிலர் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொண்டு மனந்திரும்பாமற்போகிறார்கள். இவர்கள் தேவகிருபையை போக்கடிக்கிறார்கள். ஆயினும்  தேவனுடைய இரக்கம் இவர்கள்மீது இன்னும் வந்து தங்குகிறது. தேவன் இரக்கமுள்ளவராக இருப்பதினால், இவர்கள் தேவகிருபையை போக்கடித்த போதிலும், தேவனுடைய இரக்கத்தினால் இவர்கள் மனந்திரும்புவதற்கு  இன்னும் வாய்ப்பு இருக்கிறது. இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுவதினால் தேவனுடைய இரக்கம் உண்டாயிற்று. 

நமக்காக பிதாவிடம் பரிந்து பேசும் இயேசுகிறிஸ்துவுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் கனிகொடுக்காமல் இருந்தாலும், நாம் உடனடியாக       தேவனுடைய சமுகத்திலிருந்து அகற்றிப்போடப்படாமலிருக்கிறோம். இதற்கு இயேசுகிறிஸ்து நமக்காக பரிந்து பேசுவதுதான் காரணம். இயேசுகிறிஸ்துவின் பரிந்து பேசும் ஜெபத்தின் மூலமாக வெளிப்படும். தேவ இரக்கத்தினால் நாம் நிர்மூலமாகாமல் இருக்கிறோம்.

இயேசுகிறிஸ்துவைப்போலவே நாமும் பரிந்து பேசி ஜெபிக்கவேண்டும். கனிகொடுக்காமல், எந்தவித பிரயோஜனமுமில்லாமல் ஜீவிக்கும் விசுவாசிகளுக்காக நாம் பரிந்து பேசி ஜெபிக்கவேண்டும். இவர்கள் கனிகொடுக்காத அத்திமரத்தைப் போன்றவர்கள். ""ஆண்டவரே  இவர்கள் இந்த வருஷமும் இருக்கட்டும்'' என்று  இந்த விசுவாசிகளுக்காக நாம் பரிந்து பேசவேண்டும். இவர்கள்மீது இன்னும் சற்று காலம் பொறுமையாகயிரும் என்று இவர்களுக்காக மன்றாடவேண்டும். ஆண்டவரே, உமது கிருபையினால் இவர்களுக்கு உமது இரக்கத்தைக் காண்பித்து  இவர்களை நிர்மூலம் பண்ணாமல்,  உடனடியாக   சற்று தாமதம் பண்ணும் என்று,  கனிகொடுக்காத விசுவாசிகளுக்காக நாம் பரிந்து பேசவேண்டும். இதுவே திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் ஜெபமாகும். இந்த ஜெபம் தேவனுடைய கோபத்தை மட்டுப்படுத்தும்.  

தேவன் தமது தெய்வீக தீர்மானத்தினால்  தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டுமென்று  சித்தங்கொள்கிறார். தேவனுடைய ஒவ்வொரு கிரியையும் நியாயமாகவே இருக்கும். நியாயாதிபதியாகிய தேவனிடம் தண்டனையை  உடனடியாக நிறைவேற்றாமல், சற்று காலதாமதம் பண்ணுமாறு, தேவனுடைய இரக்கத்தை முன்னிட்டு நாம் பரிந்து பேசி ஜெபிக்கலாம். தேவனுடைய தண்டனை நிறைவேறும் காலத்தை ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு மாத்திரமே நமது பரிந்து பேசும் ஜெபத்தினால் தாமதம் பண்ணமுடியும். நமது ஜெபத்தின் மூலமாக தேவனுடைய தண்டனையை முழுவதுமாக நிறுத்திப்போட முடியாது. ஆகையினால்தான் தோட்டக்காரன்  ""ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்'' என்று பரிந்து பேசி ஜெபிக்கிறான். 

தேவன் நம்மீது மெய்யாகவே நீடிய பொறுமையோடு இருக்கிறார். நமது துர்க்கிரியைக்கு உடனடியாக தண்டனை வழங்காமல் சற்று காலதாமதம் பண்ணுகிறார்.  நாம் மனந்திரும்புவதற்கு அவகாசம் கொடுக்கிறார். ஆனால் தேவனுடைய அவகாசம்  ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்குமே நீடிக்கும்.  தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து, நம்முடைய துர்க்கிரியைகளுக்கு, அவர் தண்டனையே கொடுக்கக்கூடாது என்றும், நாம் தொடர்ந்து துன்மார்க்கராக இருந்தாலும் அவர் நம்மை ஒருபோதும் தண்டிக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக்கூடாது. 

நமக்காக மற்றவர்கள் பரிந்து பேசி ஜெபிக்கும்பொழுது தேவன் நிறைவேற்றப்போகும் தண்டனை காலதாமதம் பண்ணப்படும். அதேவேளையில் மற்றவர்களுடைய பரிந்து பேசும் ஜெபத்தினால் நமக்கு பாவமன்னிப்பு உண்டாகாது. நம்முடைய பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால், நாம் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் தான் மனந்திரும்ப வேண்டும். நமது இரட்சிப்பை தேவனிடத்திலிருந்து விசுவாசத்தோடு நாமே பெற்றுக்கொள்ள வேண்டும். நம்மை மன்னிக்குமாறு இரக்கமுள்ள தேவனிடம் நாமே நமக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும். மற்றவர்கள் நமக்காக ஏறெடுக்கும்  ஜெபத்தினால் நமக்கு பாவமன்னிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. 

தோட்டக்காரன் கனிகொடாத அத்திமரத்திற்காக தன் எஜமானிடம் பரிந்து பேசி ஜெபிக்கும்போது, தண்டனை நிறைவேற்றப்படும் காலம் தாமதம்பண்ணப்படுகிறது. அதேவேளையில் தண்டனை நீக்கப்பட வேண்டுமென்றால் அந்த அத்திமரம்தான் கனிகொடுக்க வேண்டும். அத்திமரத்திற்குப் பதிலாக தோட்டக்காரன் கனிகொடுக்க முடியாது.

கொத்தி எருப்போடுவேன்

தோட்டக்காரன் கனிகொடுக்காத அத்திமரத்திற்காக பரிந்துபேசும்போது தன் எஜமானிடம் மேலும் சில காரியங்களைக் கூறுகிறான். ""நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்'' என்று தான் அதற்காக செய்யப்போகும் காரியத்தையும் சேர்த்துக் கூறுகிறான். தேவனிடம் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பமும் இதுபோலத்தான் இருக்கவேண்டும். நம்முடைய ஜெபம் வெறும் வார்த்தைகளாக மாத்திரம் இராமல், அதற்காக  நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதையும்  நமது ஜெபத்தில் சேர்த்துக் கூறவேண்டும். தேவனுடைய கிருபைக்காக நமது ஜெபத்தில்  பணிந்து விண்ணப்பம் பண்ணும்போது, நம்முடைய கடமைகளையும் நினைவுகூர்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்துவிட்டு, ""கர்த்தாவே, கர்த்தாவே'' என்று வீண்வார்த்தைகளினால் அலப்புவது தேவனை பரியாசம்பண்ணும் காரியமாகும்.  தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கடமைகளை புரிந்துகொள்ளாமல், அசட்டை பண்ணுகிறவர்கள்  தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் முழுமையாக புரிந்து கொள்ளமாட்டார்கள். தேவனுடைய இரக்கத்தை நாம் அசட்டை பண்ணக்கூடாது. 

திராட்சத்தோட்டக்காரன் தன்னுடைய வேலையை செய்வதாக எஜமானிடம் வாக்குபண்ணுகிறான். கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு இந்த தோட்டக்காரன் ஒரு முன்மாதிரியாக இருக்கிறான். ஊழியக்காரர்கள் ஒவ்வொருவரும் தேவன் தங்களுக்கு நியமித்திருக்கும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். தோட்டக்காரன் மரத்தைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவதாக வாக்குப்பண்ணுகிறான்.  

கனிகொடுக்காமல், எவ்வித பிரயோஜனமுமில்லாமல் ஜீவிக்கும் விசுவாசிகளிடம் தேவனுடைய பிரமாணங்களை  எடுத்துக்கூறி அவர்களை எச்சரிக்க வேண்டும்.  கடினமாக இருக்கும் நிலத்தை கொத்தும்போது  அந்த மண் பக்குவமாவதுபோல, கடின இருதயமுள்ள விசுவாசிகளிடம் நியாயப்பிரமாணங்களை எடுத்துக்கூறி அவர்களுடைய இருதயங்களை பக்குவப்படுத்த வேண்டும். கொத்தினால்தான் நிலம் பக்குவப்படும். அதுபோல விசுவாசிகளை வசனத்தினால் கண்டித்து உணர்த்தினால்தான்  அவர்கள் உணர்த்தப்படுவார்கள். 

மரத்தைச் சுற்றிலும் எப்போதும் கொத்திக்கொண்டிருக்கக் கூடாது. தொடர்ந்து கொத்தினால் மரத்தின் வேர்கூட பாதிப்படும்.  கொத்துவதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு உட்பட்டுதான் கொத்த வேண்டும்.  அதுபோலவே விசுவாசிகளை கண்டித்து உணர்த்துவதற்கும் ஒரு எல்லை உண்டு. அளவுக்குமீறி கண்டித்து உணர்த்தினால் விசுவாசிகள் சோர்ந்து போவார்கள்.  மரத்தைச் சுற்றிலும் கொத்திவிட்டு  தோட்டக்காரன் அதற்கு எருப்போடுகிறான். அதுபோல ஊழியக்காரர்களும் விசுவாசிகளை வசனத்தினால் கண்டித்து உணர்த்திவிட்டு,  சுவிசேஷத்தின் வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அப்போதுதான் விசுவாசிகள் சோர்வில்லாமல் உற்சாகமாக இருப்பார்கள். 

மரத்திற்கு எருப்போடும்போது  அந்த மரம் நன்றாக கிளைகள் விட்டு வளருவதுபோல விசுவாசிகளும் ஆவிக்குரிய ஜீவியத்தில் போஷிக்கப்பட்டு வளர்ச்சி பெறுவார்கள். விசுவாசிகளை பக்குவப்படுத்துவதற்கு  இவ்விரண்டு முறைகளையும் ஊழியக்காரர்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். கொத்துவதும் எருப்போடுவதும் இணைந்து நடைபெறவேண்டும். கொத்திவிட்டு எருப்போட்டால் உரம் நன்றாக பிடிக்கும். கொத்துவதையும் எருப்போடுவதையும் சிறிதளவு செய்தாலே போதுமானது. அதன் முழுப்பலனை  நாம் விரைவில் பார்க்க முடியும். மரத்தைச் சுற்றிலும் கொத்தி எருப்போட்டால் அந்த மரம் கனிகொடுக்குமென்று தோட்டக்காரன் நம்புகிறான். அதுபோல விசுவாசிகளுக்கு கண்டித்து உணர்த்தி, சுவிசேஷத்தின் வாக்குத்தத்தங்களை அறிவிக்கும்போது அவர்களுடைய ஜீவியமும் கனிதரும் ஜீவியமாக மாறும் என்று நாமும் விசுவாசிக்க வேண்டும்.

தோட்டக்காரன் தன் எஜமானிடம் கனிகொடுக்காத அத்திமரத்திற்காக பரிந்து பேசும்போது, மேலும் ஒரு வருஷம் இந்த அத்திமரத்தை பராமரிக்கலாமென்றும், அதுவரையிலும் இந்த மரத்தை வெட்டிப்போடுவதை காலதாமதம் பண்ணவேண்டுமென்றும் பரிந்து பேசுகிறான்.  

கனிகொடுத்தால் சரி

கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார் (லூக் 13:9). 

கனிகொடுக்காத அத்திமரத்தை சுற்றிலும் மேலும் ஒரு வருஷத்திற்கு கொத்தி எருப்போடுவதாக தோட்டக்காரன் வாக்குப்பண்ணுகிறான். தான் இப்படி செய்தால்  இதுவரையிலும் கனிகொடுக்காத அந்த மரம்  இனிமேல் கனிகொடுக்கும் என்று நம்புகிறான்.  இதை தன் எஜமானிடம் சொல்லும்போது ""கனிகொடுத்தால் சரி'' என்று அறிவிக்கிறான்.  இதுவரையிலும் கனிகொடுக்காத அத்திமரம், கொத்தி எருப்போட்டப்பின்பு கனிகொடுத்தால்,  தோட்டக்காரனும் சந்தோஷப்படுவான், எஜமானும் சந்தோஷப்படுவான். தேவையில்லாமல் அத்திமரத்தை வெட்ட வேண்டும் என்னும் எண்ணம் எஜமானுக்கு இல்லை. அது கனிகொடுக்கும்போது எஜமானுக்கும் மிகுந்த சந்தோஷமாக இருக்கும்.  

கர்த்தருடைய ஊழியக்காரர்கள் கர்த்தருக்கு பிரயோஜனமுள்ள ஊழியத்தைச் செய்ய வேண்டும். தங்கள் ஊழியத்தில் கனி கொடுக்க வேண்டும். பல வருஷம் ஊழியம் செய்தும் ஒரு கனியும் கொடுக்கவில்லையென்றால், அந்த ஊழியக்காரர்களுக்கு கர்த்தருடைய தண்டனை  நிறைவேற்றப்படும் காலம் நிர்ணயிக்கப்படும்.  ஆனால் இவர்களோ, இதுவரையிலும் கனிகொடுக்காமல் போனாலும், இனிமேல் கனிகொடுக்க வேண்டுமென்று விரும்பி, தங்களுடைய பழைய சுபாவங்களுக்காக வருந்தி, மனந்திருந்தி, கனிகொடுக்க ஆரம்பிக்கும்போது அது எல்லோருக்குமே நலமாக இருக்கும். அது ஊழியக்காரருக்கும் நல்லது. கர்த்தருக்கும் சந்தோஷமானது.

ஊழியக்காரர்கள் கனிகொடுத்து பிரயோஜனமுள்ள ஊழியத்தை செய்யும்போது கர்த்தர் அவர்களைக் குறித்து சந்தோஷப்படுவார். கனிகொடுக்கும் ஊழியக்காரர்களின் கரங்கள் வரங்களினால் பலப்படுத்தப்படும். ஊழியக்காரர்கள் கனிகொடுக்கும்போது இதன் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்.  

கனிகொடுக்கும் ஊழியக்காரர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழிய ஸ்தலத்தை கெடுத்துப்போடமாட்டார்கள்.  இவர்களுடைய ஜீவியம் கொத்தி எருப்போடப்பட்டிருக்கும். இவர்களுடைய திராட்சத்தோட்டமும் அழகு மிகுந்திருக்கும். இவர்களுடைய நிலம் பண்படுத்தப்பட்டு பக்குவமடைந்திருக்கும். இதுபோன்ற நல்ல நிலத்தில் நல்ல மரங்கள் வளரும். அவை நற்கனி கொடுக்கும். 

ஒரு மரம் கனிகொடுக்கும்போது அதனால்  அந்த மரத்திற்கும் ஆசீர்வாதம் உண்டாகும். ""தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து,  தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கு ஏற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்'' (எபி 6:7). கனிகொடுக்கும் மரம் மேலும் அதிகமாக பராமரிக்கப்படும். அதிக பராமரிப்பு கிடைக்கும்போது அந்த மரம் அதிக கனிகொடுக்கும். 


Umn ministry Chennai 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*