1. பிதாவே இவர்களுக்கு மன்னியும்

0

இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்




1. பிதாவே இவர்களுக்கு மன்னியும்



1. பிதாவே இவர்களுக்கு மன்னியும்

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்              (லூக் 23:34). 

இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறார்கள். சிலுவையில் அறையப்பட்ட பின்பு, இயேசுகிறிஸ்து மரிப்பதற்கு முன்பு மிகவும் முக்கியமான ஏழு வார்த்தைகளை  பேசுகிறார். 

இவ்வேழு வார்த்தைகளில் ""பிதாவே இவர்களுக்கு மன்னியும்'' என்று கூறியது முதலாவது வார்த்தையாகும். 

இந்த வாக்கியம் லூக்கா சுவிசேஷத்தில் மாத்திரமே எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உடனோ அல்லது சிலுவையில் அறையப்படும்போதோ, அவர் இந்த வார்த்தைகளை சொல்லி ஜெபித்திருக்கலாம்.

இயேசுகிறிஸ்துவின் ஜெபம் மிகவும் எளிமையானது. ""பிதாவே இவர்களுக்கு மன்னியும்'' என்று தம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபம்பண்ணுகிறார். 

இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறவர்கள் மிகப்பெரிய பாவத்தை  செய்கிறார்கள். இவர்கள் செய்த இந்தப் பாவத்திற்கு மன்னிப்பேயில்லை.

 தேவகுமாரனை சிலுவையில் அறைந்த குற்றத்திற்காக இவர்கள்மீது நியாயத்தீர்ப்பு வரும். ஆனால் இயேசுகிறிஸ்து இவர்கள்மீதும் மனதுருக்கமாக இருக்கிறார்.

 இவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று தம்முடைய பிதாவிடம் விண்ணப்பம்பண்ணுகிறார். இவர்களுக்காக பரிந்துபேசுகிறார். 

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார். தம்முடைய வேதனையின் மத்தியிலும், தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பின் வேதனையைக்குறித்து இயேசுகிறிஸ்து கரிசனையோடிருக்கிறார். 

மனுஷருடைய பாவங்களை நீக்குவதற்காகவே  மனுஷகுமாரன் இந்த பூமிக்கு வந்திருக்கிறார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். 

கிறிஸ்துவின் மரணமே மனுஷருக்கு பாவமன்னிப்பை உண்டுபண்ணுகிறது. 







தம்மை சிலுவையில் அறைகிறவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். 

ஆகையினால் அவர்களுடைய பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டும் என்று  இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார்.

 தம்மை சிலுவையில் அறைந்தவர்களுடைய பாவங்களை மாத்திரமல்ல, தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் எல்லோருடைய பாவங்களையும் மன்னிக்க வேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். 

 ""பிதாவே இவர்களுக்கு மன்னியும்'' என்று அவரை சிலுவையில் அறைவதற்கு காரணமாக இருக்கும் நமக்காகவும் ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறவர்கள் கொலைபாதகர்கள். 

தேவனுக்கு விரோதமாகவும் மனுஷருக்கு விரோதமாகவும் பாவம் செய்கிறவர்கள். என்றாலும் இவர்களுடைய பாவங்களையும் மன்னிக்குமாறு இயேசுகிறிஸ்து பிதாவிடம் விண்ணப்பம் பண்ணுகிறார். 






""தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார்.

 தாங்கள் யாரை சிலுவையில் அறைகிறோம் என்பதையும், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தால், இயேசுகிறிஸ்துவை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள். 

மெய்யாகவே, இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறவர்கள், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். 

இவர்கள் செய்யும் பாவம் அறியாமையினால் செய்யும் பாவமாகும். கர்த்தருடைய வார்த்தையையும், கர்த்தரைப்பற்றியும் அறியாதிருப்பதினால், இயேசுகிறிஸ்துவை இவர்கள் சிலுவையில் அறைகிறார்கள்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 


Umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*