எம்மாவுக்குப் போகையில்

0





எம்மாவுக்குப் போகையில்

 லூக் 24 : 13-35

இந்த வர்த்தமானங்கள்

அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.  போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள் (லூக் 24:13,14).

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த அன்றையதினம், அவருடைய சீஷர்களில் இரண்டுபேர் எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போகிறார்கள். மாற்கு எழுதின சுவிசேஷத்தில்  இந்த சம்பவம் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது (மாற் 16:12). இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த அந்த நாளில், இந்த உலகத்தில் இந்த புதிய நாளும் உதயமாயிற்று. இவ்விரண்டு சீஷர்களும் எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போகிறார்கள்.  இந்தக் கிராமம் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரத்திலுள்ளது. இவ்விரண்டு சீஷர்களில் ஒருவனுடைய பெயர் கிலெயோப்பா என்பதாகும். மற்றவனுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. 

எருசலேமிலிருந்து எம்மாவு என்னும் கிராமத்திற்கு சுமார் இரண்டு மணி நேரம் நடந்துபோகவேண்டும். நடந்துபோகையில் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த வர்த்தமானங்களை இவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு போகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களெல்லோருமே அவர் உயிர்த்தெழுந்த சம்பவத்தைப்பற்றி அதிகமாக சிந்திக்கிறார்கள். அதிகமாக பேசுகிறார்கள். அவர் உயிர்த்தெழுந்ததை இவர்களால் நிச்சயமாக நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.  

எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போன இரண்டு பேர்களில், ஒருவன் கிலெயோப்பா, சின்ன யாக்கோபின் தந்தை. மரியாளின் சகோதரியாகிய மரியாளின் கணவன். இவன் கூடப்போனது யாரென்று தெரியவில்லை. திருச்சபை வரலாற்று ஆசிரியர்கள் லூக்கா அவன் கூடப் போனதாகக் கூறுகிறார்கள். லூக்கா எழுபதுபேரில் ஒருவர். (லூக்கா 10) இந்தச் சுவிசேஷத்தின் ஆசிரியர் லூக்கா. ஆகையினால் லூக்கா தன் பெயரை இந்த வசனத்தில் குறிப்பிடவில்லை.

யோசபஸ் என்னும் திருச்சபை வரலாற்று ஆசிரியர் எம்மாவுவைப் பற்றி எழுதும்போது அது எருசலேமிலிருந்து       7 அல்லது 8 மைல் தூரத்தில் உள்ளதாக உறுதிபண்ணுகிறார். எம்மாவு எந்த இடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. எருசலேமிற்குத் தென்மேற்கில் இந்தக் கிராமம் இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.

அவர்களுடனே இயேசு

இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்.  ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது (லூக் 24:15,16).

இவ்விரண்டு சீஷர்களும் எருசலேமிலிருந்து எம்மாவுக்கு நடந்து போகும்போது, இயேசுகிறிஸ்துவும் அவர்களுடனே சேர்ந்து நடந்துபோகிறார். இவர்கள் இருவரும் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய வர்த்தமானங்கள் யாவையும் பேசி, சம்பாஷித்துக்கொண்டு போகிறார்கள். அவர்களுடனேகூட இயேசுகிறிஸ்து ஒரு அந்நியரைப்போல நடந்துபோகிறார். அவர்கள் போகும் ஊருக்கே இயேசுகிறிஸ்துவும் அவர்களோடு கூடப்போகிறார். தங்களோடு பிரயாணத்தில் மற்றுமொருவர் துணையாக வருவதை நினைத்து இவர்கள் சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால் தங்களுடனே வருவது இயேசுகிறிஸ்து என்பதை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்.

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்றுபேர் கூடியிருக்கும்போது அவரும் அவர்கள் நடுவிலே இருப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். இவர்கள் இருவரும்  இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து நடந்து செல்லும்போது, இயேசு அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய விசுவாசத்தை வலுப்படுத்துகிறார். முப்புரிநூல் எளிதில் அறுந்துபோகாது. இயேசுகிறிஸ்துவும், அவருடைய சீஷர்களில் இருவரும் முப்புரிநூலைப்போல அன்பினால் ஒருவருக்கொருவர் ஆளுகை செய்யப்பட்டு சந்தோஷமாக நடந்துபோகிறார்கள்.

இரண்டு சீஷர்களும் இயேசுகிறிஸ்துவைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ""இயேசுகிறிஸ்து  உயிர்த்தெழுந்தார் என்று சொல்கிறார்களே, அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லையே'' என்று இவ்விருவரும் சம்பாஷணை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் யாரைப்பற்றி பேசுகிறார்களோ, அந்த இயேசுகிறிஸ்துவே இப்போது அவர்களைத் தேடி வந்திருக்கிறார். அவர்களோடு கூடயிருக்கிறார். தேடுகிறவர்கள் கண்டடைவார்கள். நாம் இயேசுகிறிஸ்துவை மெய்யான இருதயத்தோடு தேடும்போது அவரை நிச்சயமாகவே கண்டுகொள்ளலாம்.

இயேசுகிறிஸ்து தங்களோடு கூட நடந்து வந்தாலும், தங்களுடன் வருகிறவர் இயேசுகிறிஸ்துதான் என்பதை இவர்கள் இருவரும் அறியாமலிருக்கிறார்கள். அவர்களுடைய கண்கள் இயேசுவை அறியாதபடிக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி மறைக்கப்பட்டிருக்கிறது என்று இங்கு தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் அவர்களால்  தங்களோடு கூடவருகிறவர் இயேசு என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. தங்களோடு வருகிறவர் இயேசுகிறிஸ்து என்று தெரியாமலேயே, அவரோடு அவரைப்பற்றியே பேசுகிறார்கள்.

""மறைக்கப்பட்டிருந்தது'' என்னும் வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்கச் சொல் ""க்ராதேயோ''  என்பதாகும். இயேசு கிறிஸ்துவை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. தம்முடைய தோற்றத்தில் அவர் ஒருவேளை மாற்றம் அடைந்திருக்கலாம். அல்லது அங்கு வேறுஏதாவது அற்புதம் நடைபெற்றிருக்கலாம். இந்த வசனத்திலிருந்து நாம் ஒரு காரியத்தைத் தெளிவாக காண்கிறோம். இயேசு கிறிஸ்துவால் தோன்றவும் முடியும், மறையவும் முடியும். தம்மை அறிவிக்கவும் முடியும், மறைக்கவும் முடியும். பல்வேறு வழிகளில் தோன்றுமாறு தம்மை மாற்றவும் அவரால் முடியும்.   அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்ததாக லூக்கா 24:16,31; யோவான் 20:14-15 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். மற்ற வசனங்களில் வாசிக்கும்போது அவர் தமது தோற்றத்தை மாற்றினார் எனவும் அவர் சாதாரணமாக தோன்றும் பிரகாரமாகத் தோன்றவில்லை என்றும் தெரியவருகிறது. ஆகையினால் அவர்கள் அவரை அறிய முடியவில்லை.

சமீப நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அவர்கள் பேசிக்கொண்டு போனார்கள். இயேசு கிறிஸ்து அவர்கள் பேசுவதை அறிந்து கொள்ள விரும்பினார். தமக்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் அவரைப் பற்றி நடந்த காரியங்களை எல்லாம் கூறினார்கள்.  ஒருவர் உண்மையிலே அந்நியராக இருப்பார் என்றால் அவர்கள் கூறிய காரியம் அந்நியருக்குப் புரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.

துக்கமுகமுள்ளவர்கள்

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர்          சொல்-க்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார் (லூக் 24:17).

சீஷர்களுக்கு இயேசுவைத் தெரியவில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கோ மறைவான காரியம் எதுவுமில்லை. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை அறிந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து  ஏதோ மாறுவேடத்தில் இருப்பதுபோல, தமது சீஷர்களுக்கு அறியாதவராக இருக்கிறார். அவர்கள் தம்மை அறியாதபோதிலும் அவர்களிடத்தில் ஒரு சில கேள்விகளைக் கேட்கிறார். 

இயேசுகிறிஸ்து அவர்களிடம் கேட்கிற முதலாவது கேள்வி ""நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் இருக்கிறது என்ன'' என்பதாகும். தங்களுடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்.  அவர் சிலுவையில் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார். அவரை கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். தங்களோடு கூடவேயிருந்த ஆண்டவரை இப்போது காணமுடியவில்லை. ஆகையினால் இந்த சீஷர்கள் துக்கமுகத்தோடிருக்கிறார்கள். இயேசுவைக் காணாததினால் இனிமேல் என்ன செய்வதென்று இவர்களுக்குத்   தெரியவில்லை. தங்கள் வாழ்க்கையில் இனிமேல் என்ன செய்யவேண்டுமென்று தீர்மானமும் பண்ண முடியவில்லை. இயேசுவை சந்திப்பதற்கு முன்பாக என்ன செய்தார்களோ, அந்த பழைய வாழ்க்கைக்கு திரும்பிப்போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இயேசுகிறிஸ்து தமது மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார். ஆனால் அவர் உயிர்த்தெழுந்தது இவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. அவர் உயிர்த்தெழுந்ததை நம்ப வேண்டுமா என்றும் புரியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்படிப்பட்ட குழப்பத்தில் சீஷர்கள் துக்கமுகமாயிருக்கிறார்கள். 

 இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்திருக்கிறார். ஆகையினால் சீஷர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில்  இவர்கள் துக்கமுகத்தோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப்பற்றி இவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், அவருடைய வார்த்தையின்மீது பூரண விசுவாசம் வைக்காததினால் இவர்களுடைய முகம் துக்கமுகமாயிற்று. 

விசுவாசிகளாகிய நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி பேசுகிறோம். தேவனைப்பற்றியும் அவருடைய பராமரிப்பைப்பற்றியும் பேசுகிறோம். இயேசுகிறிஸ்துவைப்பற்றி நாம் தியானிக்கும்போது அவருடைய கிருபையையும் அன்பையும் குறித்து நாம் தியானிக்க வேண்டும்.  விசுவாசிகளாக நாம் ஒன்றுகூடி ஆவிக்குரிய காரியங்களைப்பற்றி பேசும்போது, எதை பேசினாலும் பேசாவிட்டாலும், தேவனுடைய கிருபையையும் அவருடைய அன்பையும் பற்றி நிச்சயமாக பேசவேண்டும்.

நமக்கு வருத்தம் உண்டாகும்போது நல்ல சிநேகிதருடைய ஐக்கியம் தேவை. அதேவேளையில் நாம் பேசுகிற பேச்சும் நம்முடைய துக்கத்தை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்து நம்முடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்ற விரும்புகிறார். நமக்கு பலவிதமான வருத்தங்களும் துக்கங்களும் இருக்கும்போது, அவற்றை நல்ல சிநேகிதரோடு  பகிர்ந்து கூறி, துக்கங்களை குறைத்துக்கொள்ளவேண்டும். நம்முடைய காரியங்களில் நம்மோடுகூட துக்கப்படுகிறவர்கள் இருக்கும்போது நமக்கு ஆறுதல் உண்டாகும். நம்முடைய துக்கங்கள் பல வழிகளில் குறைவதற்கு வாய்ப்புள்ளது. நல்ல சிநேகிதர் மூலமாக நமக்கு கிடைக்கும் ஆறுதலே மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் துக்கத்தைப்பற்றி கேட்டபின்பு, அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிற காரியங்கள் என்ன என்று கேட்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய மகிமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார். ஆயினும் தம்முடைய மகிமையிலும், சீஷர்களை மறந்துவிடாமல் அவர்களுடைய நன்மைகளை விசாரித்து அறிகிறார். தம்முடைய சீஷர்களின் துக்கமும் வருத்தமும்  இயேசுகிறிஸ்துவின் பார்வையில் தெரிகிறது. தம்முடைய சீஷர்கள் பாடுகளை அனுபவிக்கும்போது இயேசுகிறிஸ்துவின் இருதயம் அவர்களுக்காக உருகுகிறது. அவர் மனதுருக்கமுள்ள கர்த்தர்.

இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாமும் மற்றவர்களோடு ஆவிக்குரிய காரியங்களை பகிர்ந்து பேசுகிறவர்களாக இருக்கவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய நிலமைகளை மற்ற விசுவாசிகளிடம் பேசும்போது, நம்முடைய வெற்றிகளையும் தோல்விகளையும், நம்முடைய சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். நம்முடைய துக்கங்களை  நம்முடைய இருதயத்திற்குள் சேமித்து வைப்பதினால் நமக்கு ஒரு பயனுமில்லை. பிறரிடம் பகிர்ந்து பேசுவதற்கு வெட்கப்பட்டால் நமக்கு நன்மை உண்டாகாது. ஆறுதல் கிடைக்காது. ஆகையினால் ஆவிக்குரிய பிள்ளைகளோடு நம்முடைய ஐக்கியம் எப்போதும் வலுவாக இருக்கவேண்டும். 

நம்மிடத்தில் மற்ற விசுவாசிகள் வந்து தங்களுடைய பிரச்சனைகளை பகிர்ந்து பேசும்போது, நாமும் மனதுருக்கத்தோடு அவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டும். தம்முடைய சீஷர்கள் துக்கமுகத்தோடு இருந்தபோது, இயேசுகிறிஸ்து அவர்களிடம் சென்று அதைக் குறித்து விசாரித்ததுபோல, நாமும் மற்ற விசுவாசிகளுடைய துக்கங்களை  விசாரித்து ஆறுதல் சொல்லவேண்டும். அழுகிறவர்களோடு அழுவதும், சந்தோஷமாக இருக்கிறவர்களோடு சந்தோஷமாக இருப்பதும் விசுவாசிகளுக்கு நல்ல பழக்கம்.  

நீர் அந்நியராயிருக்கிறீரோ

அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான் (லூக் 24:18).  

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களின் துக்கமுகத்தை தேடி வந்து விசாரிக்கிறார். ஆனால் அவர்களோ இயேசுகிறிஸ்துவை அந்நியரா என்று கேட்கிறார்கள். தாங்கள் பேசிக்கொண்டிருக்கும் சம்பவம் எருசலேமிலிருக்கிற அனைவருக்கும் தெரிந்த சம்பவம். அதைப்பற்றி தெரியாதோர் யாரும் இருக்கமுடியாது. எருசலேம் நகரத்தோடு தொடர்பில்லாத அந்நியருக்கு வேண்டுமானால், இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதும், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுந்திருக்கிறார் என்று சொல்லப்படுவதும் புதியதாக இருக்கலாம் என்று சீஷர்கள் நினைக்கிறார்கள்.

""நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிற காரியங்கள் என்ன'' என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கேட்கிறபோது,  சீஷர்களில் ஒருவன் ""இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு அந்நியராயிருக்கிறீரோ'' என்று இயேசுகிறிஸ்துவிடம் கேள்வி கேட்கிறான். இந்தக் கேள்வியை கேட்பவனுடைய பெயர் கிலெயோப்பா. இயேசுகிறிஸ்துவிடம் இவன் உலகத்தில் நடைபெறும் சம்பவத்தைக் கூறுகிறான். நம்மிடத்திலும் யாராவது உலகக்காரியங்களைப் பற்றி விசாரித்தால் அவர்களிடத்தில் உலகக்காரியங்களைப்பற்றிப் பேச நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  

இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் மிகுந்த ஆபத்திலிருக்கிறார்கள். யூதருடைய ஆலோசனைச்சங்கத்தார் இயேசுகிறிஸ்துவை  சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டார்கள். இனிமேல் அவருடைய சீஷர்களையும் கொன்றுபோடுவதற்கு வகைதேடலாம். இதனால்  சீஷர்களும் மிகுந்த கலக்கத்திலிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை தனக்குத் தெரியும் என்பதைக்கூட பேதுரு காட்டிக்கொள்ளவில்லை.  அவரைத் தெரியாது என்று மூன்றுமுறை மறுதலித்துவிடுகிறான். 

ஆனால் சீஷர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவனோ இயேசுகிறிஸ்துவைப்பற்றி பேசுவதற்கு பயப்படவில்லை. தங்களோடு கூடயிருக்கிறவர்  இயேசுகிறிஸ்து என்பதுகூட அவனுக்குத் தெரியாது. அவரை ஒரு அந்நியன் என்று நினைக்கிறான். அவர் அந்நியராகயிருந்தாலும், இயேசுகிறிஸ்துவின்மீது தான் பக்தி வைராக்கியமாக இருப்பதை வெளிப்படுத்துகிறான். அவனுடைய இருதயத்தில்  இயேசுகிறிஸ்துவும், அவருடைய சிலுவைப்பாடுகளும், அவருடைய சிலுவை மரணமும் நிறைந்திருக்கிறது. தன்னைப்போலவே எல்லோரும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். 

இயேசுகிறிஸ்துவை அந்நியர் என்று நினைத்து அவருக்கு தன்னுடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை அறிவிக்க கிலெயோப்பா முன்வருகிறான். இயேசுகிறிஸ்துவைப்பற்றி யாரும் அறியாமலிருப்பதற்கு கிலெயோப்பாவுக்கு மனமில்லை. பிறருக்கு தமது சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவிடம் கற்றுக்கொண்ட இந்த சீஷன், அவரை அந்நியர் என்று நினைத்து, அவருக்கே இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை எடுத்துக் கூறுகிறான். தனக்குத் தெரிந்ததை சொல்கிறான். 

இயேசுகிறிஸ்துவின் மரணம் எருசலேம் நகரத்தில் மிகப்பெரிய குழப்பதை உண்டுபண்ணிற்று. அவருடைய மரணம் மற்ற ஜனங்களின் மரணத்தைப்போல  சாதாரண மரணமல்ல. இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்தபோது வானத்திலிருந்து அற்புதம் உண்டாயிற்று. பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. இதை எருசலேமிலுள்ள எல்லோருமே அறிந்திருக்கிறார்கள். இதைப்பற்றி ஒருவர் அறியாமல் இருப்பாரென்றால் அவர் எருசலேம் ஊரைச் சேர்ந்தவராக இருக்கமுடியாது என்று கிலெயோப்பா நினைக்கிறான். ஆகையினால் அவன் இயேசுவை ""நீர் அந்நியராயிருக்கிறீரோ'' என்று கேட்கிறான்.   

எவைகள் 

அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார் (லூக் 24:19).

தம்முடைய சீஷர்கள் தம்மைப்பற்றி எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை இயேசுகிறிஸ்து தெரிந்துகொள்ள விரும்புகிறார். எருசலேமில் நடந்தவைகளைப்பற்றி கிலெயோப்பா கூறியபோது இயேசுகிறிஸ்து அவனிடம் ""எவைகள்'' என்று கேட்கிறார். தம்முடைய கேள்வியின் மூலமாக இயேசுகிறிஸ்து தம்மை மெய்யாகவே ஒரு அந்நியராக காண்பிக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக மிகப்பெரிய சந்தோஷம் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் தாம் இதுவரையிலும் அனுபவித்த பாடுகளை குறித்து அவர் அதிக கரிசனையோடு இல்லை. தம்முடைய பாடுகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார். பாரமான சிலுவையை தாம் சுமந்தபோதிலும், அதை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டு, தம்முடைய சீஷரிடம் அதைக்குறித்து மிகவும் சாதாரணமாக பேசுகிறார். தாம் அனுபவித்த பாடுகளை அவர் மறுபடியும் நினைத்துப் பார்த்தபோது, அவருக்கு வருத்தமோ, வேதனையோ, துக்கமோ, வியாகுலமோ உண்டாகவில்லை.  

சிலுவையின் பாடுகளை அனுபவித்தபோது  அது அவருக்கு பாரமாகவும், கசப்பாகவும் இருந்தது. ஆனால் இப்போதோ அந்தப் பாரத்தின் சுவடுகள்கூட இயேசுகிறிஸ்துவிடம் காணப்படவில்லை. வருத்தத்தின் சாயல் அவரிடத்தில் சிறிதுமில்லை. கிலெயோப்பா எருசலேமில் நடந்தவைகளைப்பற்றி பேசியபோது, இயேசுகிறிஸ்து அவனிடம் ""எவைகளை'' என்று கேட்கிறார். 

எருசலேமில் என்னென்ன காரியங்கள் நடைபெற்றது என்பதை சீஷர்கள் இயேசுகிறிஸ்துவிடம் தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லவேண்டும். அப்போதுதான் அவர் அந்த சம்பவம் நடைபெற்றதற்கான காரணங்களையும், அவற்றுக்குரிய மெய்யான வியாக்கியானத்தையும் தெளிவுபடுத்துவார். இதுவரையிலும் அவர்களுக்கு ரகசியமாக இருந்த சம்பவங்களின் அர்த்தம் அவர்களுக்கு  தெளிவுபடுத்தப்படும். 

இவ்விரண்டு சீஷர்களும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் அவரிடமே கூறுகிறார்கள்.   நம்மிடம் யாராவது இயேசுகிறிஸ்துவைப்பற்றி சில விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், நாமும் இந்த சீஷர்களைப்போல நமக்குத் தெரிந்ததை எளிமையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். 

எருசலேமில் என்ன சம்பவம் நடைபெற்றது என்று இயேசுகிறிஸ்து அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் அவரிடம், ""நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்த சம்பவங்களே'' என்று தெளிவாக பதில்சொல்கிறார்கள். அவர் ஒரு தீர்க்கதரிசியென்றும், அவர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்றும் விவரிக்கிறார்கள். தம்முடைய செய்கையினாலும் வாக்கினாலும், அற்புத அடையாளங்களினாலும், இரக்கமுள்ள கிரியைகளினாலும் அவர் வல்லமையுள்ள தீர்க்கதரிசி என்பதை நிரூபித்ததாக கூறுகிறார்கள். 

இயேசுகிறிஸ்து  தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கும் முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார் என்று  இயேசுகிறிஸ்துவிடமே அவரைப்பற்றிய சத்தியங்களை விவரிக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தேவனுக்கு முன்பாகவும் அங்கீகரிக்கப்படுகிறார்.  தேசத்தில் மனுஷருக்கு முன்பாகவும் நற்பெயர் எடுத்திருக்கிறார். ஒரு சிலர் மனுஷர் மத்தியில் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் தேவனுடைய சமுகத்தில் அங்கீகரிப்படாத துன்மார்க்கராக இருப்பார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் நல்லவராகவும், வல்லவராகவும், செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். எருசலேமிலிருக்கிற எல்லோருக்குமே இப்படிப்பட்ட இயேசுகிறிஸ்துவைப்பற்றி தெரியும். எருசலேமுக்கு அந்நியராக இருக்கிற ஒருவருக்கு  இயேசுகிறிஸ்துவைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆகையினால் தான் கிலெயோப்பா இயேசுவைப்பார்த்து ""நீர் அந்நியராயிருக்கிறீரோ'' என்று கேட்கிறான். 

இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பார் 

நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.  அவரே இஸ்ரவேலை மீட்டு ரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது  (லூக் 24:20,21). 

இயேசுகிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் இவ்விரண்டு சீஷர்களும் அவரிடம் பொதுவாக விளக்குகிறார்கள். பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் இயேசுகிறிஸ்துவை மரண ஆக்கினைக்குட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள் என்று இயேசுகிறிஸ்துவுடனே கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை இவ்விருவரும் அந்நியர் என்று நினைத்ததினால், அவரிடம் இயேசுகிறிஸ்துவின் பாடுகளைப்பற்றியும், பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் இயேசுகிறிஸ்துவை மரண ஆக்கினைக்குட்படுத்தி சிலுவையில் அறைந்ததைப்பற்றியும் அதிகமாக விவரிக்காமல் சுருக்கமாக கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்துவை  சிலுவையில் அறைந்தவர்களுடைய குற்றத்தை தாங்கள் அந்நியராக நினைக்கும் இயேசுகிறிஸ்துவிடம் இவர்கள் அதிகமாக கூறவில்லை. 

இயேசுகிறிஸ்துவிடம் அவருடைய பாடுகளையும் மரணத்தையும் குறிப்பிடும்போது, அவரிடத்தில் தாங்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், அதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும் கூறுகிறார்கள்.  தங்களுடைய துக்கமுகத்திற்கு இந்த ஏமாற்றமே காரணம் என்பதுபோல பேசுகிறார்கள். ""அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று எதிர்பார்த்திருந்தோம்'' என்று தங்கள் எதிர்பார்ப்பை கூறுகிறார்கள். இயேசுகிறிஸ்துவிடமிருந்து இந்த சீஷர்கள் பெரிய காரியத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.  தங்களுடைய மீட்பு இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் என்று நம்பினார்கள். இதன் மூலமாக இஸ்ரவேலுக்கு ஆறுதல் வரும் என்றும் எதிர்பார்த்தார்கள். 

இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இவர்களுடைய உள்ளத்தில் இருக்கும்போது தான், இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்றுபோடுகிறார்கள்.  இதனால் தங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போய்விட்டதாக ஏமாற்றமடைந்து இவ்விருவரும் துக்கத்தோடிருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையில்கூட மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படும்போது நமது இருதயத்தில் வேதனை உண்டாகும். சிலருடைய இருதயம் உடைந்துபோகும். இயேசுகிறிஸ்து இஸ்ரவேலை  மீட்டு இரட்சிப்பவர் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். இவர்களுடைய எதிர்பார்ப்பு இப்பிரபஞ்சத்திற்குரிய இஸ்ரவேல் தேசத்தின் மீட்பாகும். மரித்துப்போனவரால் இனிமேல் இஸ்ரவேலை மீட்டு இரட்சிக்க முடியாது என்று இவர்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

இயேசுகிறிஸ்துவோ தம்முடைய மரணத்தின் மூலமாக மீட்பின் கிரயத்தைச் செலுத்தியிருக்கிறார். இந்த சத்தியத்தை இவ்விரண்டு சீஷர்களும் புரிந்துகொள்ளவில்லை. இஸ்ரவேலின் இரட்சிப்பு  இதற்கு முன்பு இருந்ததைவிட, இப்போது அவர்களிடத்திலே வந்திருக்கிறது. இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பதில் நியமிக்கப்பட்டிருந்த மிகவும் கடினமான பகுதி இயேசுகிறிஸ்துவின் மூலமாக சிலுவையில் நிறைவேறிற்று. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு  மீட்பு உண்டாயிற்று. அவர் இஸ்ரவேலுக்கு மாத்திரமல்ல உலகம் முழுவதற்கும் இரட்சகராக இருக்கிறார். இயேசுகிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிற எல்லோருக்குமே ஆத்தும இரட்சிப்பு வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவினுடைய மரணத்தின் மூலமாக இஸ்ரவேலர் எல்லோருமே இரட்சிக்கப்படுவதற்கு வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. இதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சத்தியத்தை புரியாமல் இவ்விரண்டு சீஷர்களும்  துக்கமுகத்தோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் மரணத்திற்காக இவர்கள் சந்தோஷப்பட வேண்டும். சத்தியத்தை புரிந்துகொள்ளாததினால் துக்கத்தோடிருக்கிறார்கள். 

அவரையோ காணவில்லை

 ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று      சொல்-, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள் (லூக் 24:22-24).

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அவர் மரித்து, இன்று மூன்று நாளாகிறது என்று இவ்விரண்டு சீஷர்களும் கூறுகிறார்கள். மூன்றாம் நாளில் இயேசுகிறிஸ்து மறுபடியும் உயிர்த்தெழ வேண்டிய நாள் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எல்லோருக்கும் முன்பாக, ஒரு குற்றவாளியைப்போல இயேசுகிறிஸ்துவை  சிலுவையில் அறைந்தார்கள். அவரை எந்த அளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவரை அவமானப்படுத்தினார்கள். அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுதும்போது எல்லோருக்கும் முன்பாக மிகுந்த மகிமையோடே அவர் உயிர்த்தெழுவார் என்று இந்த சீஷர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ எல்லோருக்கும் முன்பாக, மிகுந்த ஆடம்பரத்தோடும், ஆரவாரத்தோடும்  உயிர்த்தெழுவதற்குப் பதிலாக, மிகவும் அமைதியாக உயிர்த்தெழுகிறார். 

இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்த சம்பவம் மிகுந்த கூக்குரலுக்கு நடுவிலே நிறைவேறிற்று. ஆனால் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவமோ மிகவும் அமைதியாக நடைபெறுகிறது. இயேசுகிறிஸ்து  உயிர்த்தெழுந்தார் என்னும் செய்தி சீஷர்கள் மத்தியிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை இவ்விரண்டு சீஷர்களும் அங்கீகரிக்கிறார்கள். ஆனாலும் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றி மிகவும் சுருக்கமாகவே பேசுகிறார்கள். 

இந்த சீஷர்களின் கூட்டத்தைச் சேர்ந்த  சில ஸ்திரீகள் அதிகாலமே இயேசுகிறிஸ்துவை அடக்கம்பண்ணியிருந்த கல்லறைக்குப் போயிருக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அங்கு அவர்கள் காணவில்லை. இயேசுவுக்குப் பதிலாக அவர்கள்  இரண்டு தேவதூதரை தரிசித்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்று இவ்விரண்டு தூதரும் அந்த ஸ்திரீகளிடத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஸ்திரீகள் எங்களுக்குச் சொன்ன இந்த செய்தி எங்களுக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த ஸ்திரீகளின் வார்த்தைகள் வீண் பேச்சாகவும், அவர்களுடைய சொந்தக் கற்பனையாகவும் இருக்கலாம் என்று சீஷர்கள் நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய பேச்சை நம்பாமல் அப்போஸ்தலர்களில் சிலர் கல்லறையினிடத்திற்குப் போய் அங்கு இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை பார்க்கப்போனதாகவும், ஸ்திரீகள் சொன்னபடிக்கு அங்கு இயேசுகிறிஸ்துவின் சரீரத்தைக் காணவில்லையென்றும் இவ்விரண்டு சீஷர்களும் அங்கீகரிக்கிறார்கள்.     

அப்போஸ்தலர்களும் கல்லறையில் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை காணவில்லை. ஆகையினால் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழவில்லையோ என்று அவர்களுக்குள் பிரமிப்பும் பயமும் உண்டாயிற்று. அவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்திருப்பாரென்றால், அவர் தம்மைத்தாமே தங்களுக்குக் காண்பித்திருப்பார் என்று அப்போஸ்தலர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகையினால் அவர் உயிர்த்தெழுந்திருப்பாரோ என்னும் சந்தேகம்  தங்களுக்குள் இருப்பதாகவும் இந்த சீஷர்கள் நினைக்கிறார்கள். 

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது இவர்களுடைய நம்பிக்கையும் அவரோடுகூட சிலுவையில் அறையப்பட்டுவிட்டது. இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டபோது இவர்களுடைய நம்பிக்கையும் அவரோடுகூட கல்லறையில் அடக்கம்பண்ணபட்டுவிட்டது. சீஷர்களின் விசுவாசம் மரித்து அடக்கம்பண்ணப்பட்டிருக்கிறது. இது உயிர்த்தெழவேண்டும். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை இவர்கள் நம்பினால் மாத்திரமே இவர்களுடைய மரித்துப்போன விசுவாசம் மறுபடியும் உயிரடையும். 

இந்த நிகழ்ச்சிகள் அவர்களுக்குப் பிரமிப்பாக இருந்தது. நடைபெற்றவைகளை அவர்களால் நம்ப முடியவில்லை. வீண்பேச்சுகள்போல அவர்களுக்குத் தோன்றிற்று.   தேவதூதர்கள் உண்மையிலேயே தோன்றினார்கள். இயேசுவைத் தேடி கல்லறைக்குப் போனவர்கள் கல்லறை வெறுமையாய் இருந்ததைக் கண்டார்கள். இயேசுவை அவர்களால் காணமுடியவில்லை.

புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்கள்

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,  (லூக் 24:25)

உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து இவ்விரண்டு சீஷர்களுக்கும் அருகாமையில் நடந்து பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் இயேசுகிறிஸ்துவின் முகத்தை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறது.  இயேசுகிறிஸ்து தம்முடைய முகத்தோற்றத்தின் மூலமாக தம்முடைய சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் தம்முடைய வார்த்தையின் மூலமாக தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இவ்விரண்டு சீஷர்களும்  பழைய ஏற்பாட்டின் வேதவசனங்களை சரியாக விசுவாசிக்கவில்லை. விசுவாசத்தில் பலவீனராக இருக்கிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து இவர்களைப்பார்த்து ""விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத இருதயமுள்ளவர்களே'' என்று கூறி அவர்களைக் கடிந்துகொள்கிறார். 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை புத்தியில்லாதவர்கள் என்று சொல்லும்போது, அவர்கள் துன்மார்க்கர்கள் என்னும் அர்த்தத்தில்  சொல்லவில்லை. அவர்கள் பலவீனமானவர்கள் என்பதே இயேசு கூறிய வார்த்தையின் பொருளாகும். இவர்கள் புத்தியில்லாதவர்களாக இருக்கிறதினால், விசுவாசிப்பதில் மந்த குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இருதயத்தில் தெளிந்த சிந்தனையில்லாதவர்களும், புத்தியில்லாதவர்களும் சத்தியத்தை பட்சபாதமில்லாமல் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். சத்தியத்தை விசுவாசிப்பதில் மிகவும் மந்தமாயிருப்பார்கள். சத்தியத்தை விசுவாசிப்பதில் மாத்திரமல்ல, தீர்க்கதரிசிகள் எழுதியுள்ளவைகளையும் விசுவாசிப்பதில் மந்தகுணமுள்ளவர்களாக இருப்பார்கள். 

நாமும் வேதவாக்கியங்களை பலமுறை படிக்கலாம். எத்தனைமுறை படித்தாலும் வேதவாக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு  தெய்வீக ஆலோசனை தேவை. பரிசுத்த ஆவியானவரே வேதவாக்கியங்களிலுள்ள சத்தியங்களை நமக்கு தெளிவுபடுத்துவார். பரிசுத்த ஆவியானவரின் உதவியில்லாமல் வேதவாக்கியங்களின் சத்தியத்தை தெளிவாக புரிந்துகொள்வது இயலாத காரியம். சுயபுத்தியினாலோ, அல்லது சுயபக்தியினாலோ ஆவிக்குரிய ரகசியங்களை புரிந்துகொள்ளலாமென்று இறுமாப்பாக இருக்கக்கூடாது. இறுமாப்பாக இருக்கிறவர்கள்  தீர்க்கதரிசிகள் சொன்ன யாவற்றையும் விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களாகவே இருப்பார்கள்.

எல்லா தீர்க்கதரிசனங்களையும் நாம் விசுவாசிக்க வேண்டும். தேவனுடைய மகிமையையும், தேவ ராஜ்ஜியத்தின் மகத்துவத்தையும் யூதர்கள் விசுவாசித்தார்கள். புறஜாதியார் மத்தியில் இந்தக் காரியங்கள் அவர்களை மேன்மைப்படுத்திற்று. ஆனால் யூதர்கள் மேசியாவின் தாழ்மையையும், பாடுகளையும் விசுவாசிக்கவில்லை. யூதர்களின் எதிர்பார்ப்புகளை இயேசு கிறிஸ்து நிறைவேற்றவில்லை. ஆகையினால் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். 

பாடுபடவும் மகிமையில் பிரவேசிக்கவும்

கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்-,    (லூக் 24:26) 

இயேசுகிறிஸ்துவின் பாடுகள் அவர் மகிமையடைவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. தம்முடைய மகிமையை இயேசுகிறிஸ்து பாடுகளின் வழியாக அல்லாமல் வேறு எந்த விதத்திலும் பெற்றுக்கொள்ள முடியாது. இந்த சத்தியத்தை இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு தெளிவுபடுத்துகிறார். ""கிறிஸ்து இவ்விதமாய் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா'' என்று அவர்களிடம் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களால்  அவருடைய சிலுவைப்பாடுகளையும், சிலுவை மரணத்தையும் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. சர்வவல்லமையுள்ள தங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு சிலுவையில் ஏன் இத்தனை பாடுகள் உண்டாயிற்று என்று சீஷர்கள் கலக்கத்தோடிருக்கிறார்கள். குழப்பத்திலிருக்கும் தம்முடைய சீஷர்களுக்கு, தம்முடைய சிலுவைப்பாடுகளைப்பற்றி இரண்டு காரியங்களை தெளிவுபடுத்துகிறார்.

கிறிஸ்து இவ்விதமாய் பாடுபடவேண்டும் என்பது பிதாவினால் நியமிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தேவனாக இருப்பதினால் அவருக்கு சிலுவைப்பாடு இருக்காது என்று சீஷர்கள் தவறாக நினைக்கக்கூடாது.  பிதாவாகிய தேவனால், தமது தெய்வீக ஆதீனத்தில், தீர்மானிக்கப்பட்ட பிரகாரமே, இயேசுகிறிஸ்துவுக்கு சிலுவைப்பாடு உண்டாயிற்று. இயேசு சிலுவையில் மரித்ததினால் அவர் கிறிஸ்துவாக இருக்க முடியாது என்று சந்தேகப்படக்கூடாது. அதற்குப் பதிலாக இயேசு சிலுவையில் மரித்ததினால், அவர் கிறிஸ்து என்பது உறுதிபண்ணப்படுகிறது என்று தீர்மானிக்க வேண்டும். இயேசுகிறிஸ்து சிலுவையில் பாடுபடவில்லையென்றால் அவர் இரட்சகராக இருக்கமுடியாது.

இயேசுகிறிஸ்து இவ்விதமாக பாடுபட்ட பின்பு அவர் தமது மகிமையிலே பிரவேசிக்க வேண்டும். தம்முடைய உயிர்த்தெழுதலின்போது  இயேசுகிறிஸ்து தமது மகிமையிலே பிரவேசிக்கிறார். இதுவே அவருடைய மகிமை என்று அழைக்கப்படுகிறது. இந்த உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாக, இயேசுகிறிஸ்து  எந்த மகிமையில் இருந்தாரோ, அந்த மகிமையில், அவர் உயிர்த்தெழுந்தபோது பிரவேசிக்கிறார். இந்த மகிமையில் அவர் பிரவேசிப்பதற்கு முன்பாக, அவர் முதலாவதாக பாடுபடவேண்டும். அதன்பின்புதான் அவர் தமது மகிமையில் பிரவேசிக்க வேண்டும். 

நம்முடைய வாழ்வில் கூட நாம் பலவிதமான ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறோம். மகிமையின் கிரீடம் வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். இயேசுகிறிஸ்துவுக்கு முள்கிரீடம் சூட்டப்பட்ட பின்பே,   மகிமையின் கிரீடம் சூட்டப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் முன்மாதிரியையும், அவருடைய அடிச்சுவடுகளையும் பின்பற்றுகிற நாம், நம்முடைய ஜீவியத்திலும் முதலாவது முள்கிரீடத்தையும் அதன்பின்பு மகிமையின் கிரீடத்தையும் எதிர்பார்க்க வேண்டும்.  

இயேசு கிறிஸ்து பாடுபடவும் வேண்டும். இயேசுகிறிஸ்துவைப் பற்றி பல தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ளன. அவருடைய மகிமை, அவருடைய வல்லமை ஆகியவற்றைப் பற்றி பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அதேசமயத்தில் மேசியா பாடுபடவும் வேண்டும் என்றும் தீர்க்கதரிசனம் கூறுகிறது.  வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் முதலாவது தீர்க்கதரிசனம் மேசியாவின் பாடுகளையும், சாத்தானோடு அவர் செய்ய வேண்டிய போராட்டங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது. (ஆதி 3:15) இதுதவிர, சங் 22; ஏசா 53; யாத் 12 ஆகிய அதிகாரங்கள் மேசியாவின் பாடுகளை விளக்குகின்றன. மேசியாவின் பாடுகளை விளக்கும் வசனப்பகுதிகளும் பல உள்ளன.   ஆபேலின் காலத்திலிருந்து பலிகளும், காணிக்கைகளும் பாடுகளுக்கு அடையாளமாகும். மோசே முதல் எல்லா தீர்க்கதரிசிகள் வரையிலும் மேசியாவின் பாடுகளைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பாடுபட்ட பின்பு, அவர் தமது மகிமையில் பிரவேசிப்பார். 

சகல தீர்க்கதரிசிகளும்

மோசே முத-ய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்-யவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் (லூக் 24:27).

இயேசுகிறிஸ்து  தம்முடைய சீஷர்கள் இருவருக்கும் பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களை விவரித்துக் கூறுகிறார். இந்த வாக்கியங்களெல்லாம் நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவில் எவ்வாறு நிறைவேறிற்று என்பதையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும், தம்மைக் குறித்து சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பிக்கிறார். கல்வாரி சிலுவையில் தாம் அனுபவித்த பாடுகள் எல்லாம் பழைய ஏற்பாட்டு  வேதவாக்கியங்களின் பிரகாரம் நிறைவேறிற்று என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். இயேசுகிறிஸ்துவைக் குறித்து வேதவாக்கியங்களில் கூறப்பட்டுள்ளது அனைத்தும் நிறைவேறிற்று.

பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்கள் முழுவதிலும் இயேசுகிறிஸ்துவைப்பற்றியே முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவைப்பற்றிய குறிப்புக்களும், அவரைப்பற்றிய தீர்க்கதரிசனங்களும், அவரைப்பற்றிய வாக்குத்தத்தங்களும் ஏதாவது ஒரு வழியில் பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிறது. சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சத்தியம் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக கூறப்பட்டிருக்கிறது. இதை சுருக்கமாக சொன்னால், பழைய ஏற்பாட்டில் மறைவாக கூறப்பட்டிருக்கிற சத்தியங்கள், இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தில் வெளிப்படையாக நிறைவேறிற்று. 

பழைய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்துவைக் குறித்து சொல்லியவைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பல இடங்களில், பழைய ஏற்பாட்டு  வரலாற்றுக் காலங்களுக்கு ஏற்ப, இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்கள் பழைய ஏற்பாட்டு வசனங்களில் மறைவாக கூறப்பட்டிருக்கும். அந்த சத்தியங்கள் ஒரு திரைக்குள் மறைந்திருப்பதுபோன்று இருக்கும். இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. இயேசுகிறிஸ்து நமக்கு வெளிச்சமாக இருப்பதினால், பழைய ஏற்பாட்டில் மறைமுகமாக கூறப்பட்டிருக்கும் சத்தியங்களை அவருடைய வெளிச்சத்தினால் நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். மறைக்கப்பட்டிருந்த திரை இப்போது அகற்றப்பட்டிருப்பதினால், இதுவரையிலும் மறைவாகயிருந்த சத்தியத்தின் ரகசியங்களை இயேசுகிறிஸ்துவின் வெளிச்சத்தினால் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் சத்தியங்களை வெளிப்படுத்துகிறது.  

இயேசுகிறிஸ்து தாமே பழைய ஏற்பாட்டின் சத்தியங்களை நமக்கு தெளிவாக விவரித்துக் கூறுகிறார். அதிலும் சிறப்பாக மோசே முதலிய  சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும், தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை இயேசுகிறிஸ்து நமக்கு விவரித்துக் காண்பிக்கிறார். வேதவாக்கியங்களை நாம் தியானிக்கும்போது அவற்றை முறைப்படி தியானிக்க வேண்டும்.  பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவைப்பற்றிய சத்தியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பரிபூரணமான அந்த நாள் வரும்வரையிலும், அவரைப்பற்றிய சத்தியம் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.  

பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும், வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாக பிதாக்களுக்கு திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரனாகிய இயேசுகிறிஸ்து  மூலமாய் நமக்கு திருவுளம் பற்றுகிறார். பிதாவாகிய தேவன் தமது குமாரனைப்பற்றி நம்முடைய பிதாக்களிடம் பேசினார். இக்காலத்தில் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி நம்மிடம் பேசுகிறார். ஆகையினால் வேதாகமத்தை தியானிக்கும்போது எங்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும்.  ஆதியாகமத்தில் ஆரம்பித்து வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிப்பதுதான் சரியான முறை. இதுவே பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும், இயேசுகிறிஸ்துவைப்பற்றி நமக்கு திருவுளம் பற்றும்விதம். இதற்கு மாறாக வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆரம்பித்து ஆதியாகமத்தில் முடித்துக்கொள்ளலாமென்று தீர்மானம் பண்ணக்கூடாது. இது நமது சுயபக்தியினாலும் சுயசக்தியினாலும், சுயபுத்தியினாலும் நமக்கு நாமே தெரிந்துகொள்ளும் முறை. 

எங்களோடே தங்கியிரும்

 அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.  அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்              (லூக் 24:28,29).

வேதவாக்கியங்களில் தம்மைப்பற்றி எழுதியிருப்பதைக் குறித்து இயேசுகிறிஸ்து இவ்விரண்டு சீஷர்களுக்கும் விவரித்துக் காண்பிக்கிறார். இவர்கள் மூவருமே நடந்துபோகிறவர்களாக இருந்தாலும், ஆவிக்குரிய ரீதியாக பிரயோஜனமுள்ள காரியங்களை பேசிக்கொண்டு போகிறார்கள்.  இதனால் சீஷர்களுடைய உள்ளத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. தாங்கள் போகிற கிராமம் இவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டதே என்று நினைக்கும் அளவுக்கு, அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இவர்கள் மூவரும் தாங்கள் போகிற கிராமத்திற்கு சமீபமாகிறார்கள். அப்பொழுது இயேசுகிறிஸ்து அப்புறம் போகிறவர்போல தம்மைக் காண்பிக்கிறார். 

வேதவாக்கியங்களில் தம்மைப்பற்றி எழுதியிருப்பதைக் குறித்து இயேசுகிறிஸ்து இவ்விரண்டு சீஷர்களுக்கும் விவரித்துக் காண்பிக்கிறார். இவர்கள் மூவருமே நடந்துபோகிறவர்களாக இருந்தாலும், ஆவிக்குரிய ரீதியாக பிரயோஜனமுள்ள காரியங்களை பேசிக்கொண்டு போகிறார்கள்.  இதனால் சீஷர்களுடைய உள்ளத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. தாங்கள் போகிற கிராமம் இவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டதே என்று நினைக்கும் அளவுக்கு, அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இவர்கள் மூவரும் தாங்கள் போகிற கிராமத்திற்கு சமீபமாகிறார்கள். அப்பொழுது இயேசுகிறிஸ்து அப்புறம் போகிறவர்போல தம்மைக் காண்பிக்கிறார். 

சாயங்காலமாயிற்று. தங்களோடுகூட நடந்து வருகிறவர் இயேசுகிறிஸ்து என்பது இவ்விரண்டு சீஷர்களுக்கும் இன்னும் தெரியவில்லை. பொழுதும் போயிற்று. ஆகையினால் ""நீர் எங்களுடனே தங்கியிரும்'' என்று இயேசுகிறிஸ்துவை அவர்கள் வருந்திக் கேட்டுக்கொள்கிறார்கள். தாம் அப்புறம் போகவேண்டுமென்று இயேசுகிறிஸ்து அவர்களிடம் சொல்லவில்லை. ஆயினும் தம்மை அப்புறம் போகிறவர்போல காண்பிக்கிறார். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை தங்களுடனே தங்கியிரும் என்று வருந்திக் கேட்டுக்கொள்ளவில்லையென்றால், இயேசுகிறிஸ்து மெய்யாகவே அவர்களைவிட்டு  அப்புறம் போயிருப்பார். 

நம்மோடு இயேசுகிறிஸ்து தங்கியிருக்க வேண்டுமென்று விரும்பினால் அவரை நாம் அன்போடு அழைக்கவேண்டும். அவரை வருந்தி அழைக்கும்போது அவர் நம்முடனேகூட தங்கியிருப்பார். அவர் நம்மைவிட்டு அப்புறம் போகிறவர்போல காண்பிக்கும்போது,  நாம்தான் அவரை நம்மிடத்தில் தங்கியிருக்குமாறு வருந்தி அழைக்கவேண்டும். வருந்தி அழைத்தல் என்னும் வார்த்தைக்கு சிநேகத்தோடு கட்டாயப்படுத்துதல் என்று பொருள். 

சீஷர்கள் இருவரும் இயேசுகிறிஸ்துவை தங்களோடு தங்கியிருக்குமாறு வருந்தி அழைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதினால் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டவர்கள் அவரோடு இன்னும் ஐக்கியமாக இருக்கவேண்டுமென்று விரும்புவார்கள். தங்களுடைய உள்ளத்திலே தங்கியிருக்குமாறு அவரை வருந்திக் கேட்டுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்துவோடு இந்த சீஷர்கள் ஒரு நாள் முழுவதும் நடந்துபோனாலும், இரவு வேளையில்  அவர் தங்களோடு தங்கியிருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். 

அவர்கள் வருந்திக் கேட்டுக்கொண்டதற்கு இயேசுகிறிஸ்து செவிகொடுக்கிறார். அவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொள்கிறார். இயேசுகிறிஸ்து அவர்களுடனே தங்கும்படி அவர்களுடைய வீட்டிற்குள்ளே போகிறார். ""இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்'' (வெளி 3:20) என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.    கதவை நாம்தான் திறக்க வேண்டும். அப்போதுதான் அவர் நமக்குள்ளே பிரவேசிப்பார்.

இயேசுகிறிஸ்து அவர்களை ஏமாற்றவில்லை. இரண்டு சீஷர்களும் தாங்கள் போகவேண்டிய ஊருக்குச் சமீபமாய் போனார்கள். தம்மை அவர்கள் வீடுகளில் ஏற்றுக் கொள்ளுமாறு இயேசு கிறிஸ்து அவர்களைப் பலவந்தம் பண்ணவில்லை. ஆனால் அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். இயேசுகிறிஸ்து அவர்களுடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு, அவர்களோடு தங்குவதற்காக அந்த ஊருக்குள்ளே போனார்.

கண்கள் திறக்கப்பட்டது

அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்              (லூக் 24:30,31).

எம்மாவுக்கு போகும்வழியில் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் வேதவாக்கியங்களில் தம்மைப்பற்றி கூறப்பட்டிருக்கும் காரியங்களை அவர்களுக்கு விவரித்துக் கூறுகிறார். அவர்கள் வீட்டிற்குள்ளே போனபின்பும் இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய காரியங்களை தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். இரவு உணவு அவர்களுக்கு     ஆயத்தம்பண்ணப்படுகிறது. அதுவரையிலும் இயேசுகிறிஸ்து அவர்களுடனே பேசிக்கொண்டிருக்கிறார். தங்களோடு பேசுகிறவர் இயேசுகிறிஸ்து தான் என்பதை இன்னும் சீஷர்கள் அறிந்துகொள்ளவில்லை. தாம் யார் என்பதை இதுவரையிலும் தம்முடைய சீஷர்களுக்கு மறைப்பது இயேசுகிறிஸ்துவின் சித்தமாயிற்று. அவர்கள் பந்தியிருக்கிறார்கள். அப்போது தங்களோடு கூட பந்தியிருக்கிறவர் தங்களுடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோ என்னும் சந்தேகம் சீஷர்களுக்கு வந்திருக்கலாம்.

இயேசுகிறிஸ்து பந்தியிருக்கையில் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதை பிட்டு  அவர்களுக்குக் கொடுக்கிறார். இது கர்த்தருடைய பந்தியல்ல. ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு புசிக்கக் கொடுத்ததுபோல இது ஒரு அற்புதமான போஜனமுமல்ல. இது சாதாரணமாக ஆயத்தம்பண்ணப்பட்ட எளிமையான போஜனம். ஆயினும் கர்த்தருடைய பந்தியை நாம் எப்படி ஆசரிக்கவேண்டுமென்று கற்றுக்கொடுத்தாரோ, அதே காரியங்களை இயேசுகிறிஸ்து  இங்கும் செய்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நமக்கு தேவனோடு ஐக்கியம் உண்டாயிருக்கிறது. நாம் அவரோடு ஐக்கியமாக இருக்கும்போது அவர் நமக்கு கற்றுக்கொடுத்த ஒவ்வொரு காரியத்தையும் கைக்கொள்வதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். 

நாம் எப்பொழுதெல்லாம் போஜனம் பண்ண அமருகிறோமோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய போஜன மேஜையில், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் நம்மோடுகூட  போஜனம்பண்ண அமர்ந்திருக்கிறார் என்னும் சிந்தனை நமக்குள் உண்டாகவேண்டும். நம்முடைய போஜனபந்தியில் இயேசுகிறிஸ்து முக்கியமான தலைமை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். நாம் புசிக்கும் போஜனத்தையும், பருகும் பானத்தையும் அவர் ஆசீர்வதித்து தரவேண்டுமாய் அவரிடத்தில் விண்ணப்பம்பண்ண வேண்டும். நாம் புசிப்பதும் பானம்பண்ணுவதும் அவருடைய நாம மகிமைக்காக இருக்க வேண்டும். அவர் நமக்காக கொடுத்திருக்கும் போஜனபானத்திற்காக நாம் அவருக்கு நன்றி கூறி, அவற்றை நன்றியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுகிறிஸ்துவும் சீஷர்களும் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதை பிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்படுகிறது. தங்கள் கண்கள் திறக்கப்பட்டவுடனே சீஷர்கள் அவரை இயேசுகிறிஸ்து என்று அறிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு இதுவரையிலும் மறைவாகயிருந்த திரை அகற்றப்படுகிறது. எந்தவிதமான சந்தேகமுமில்லாமல், மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காமல், தங்களோடிருக்கிறவர் இயேசுகிறிஸ்து என்பதை சீஷர்கள் புரிந்துகொள்கிறார்கள். 

இதுவரையிலும் இயேசுகிறிஸ்துவின் உருவம் மாறியிருக்கலாம்.  மற்றவர்களுடைய உருவத்தை இயேசுகிறிஸ்து தம்மீது ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இயேசுகிறிஸ்துவின் உருவத்தை வேறு யாராலும்   தங்கள்மீது ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது சீஷர்களுடைய கண்களுக்கு அவர் இயேசுகிறிஸ்துவாகவே தெரிகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய கிருபையினாலும் ஆவியினாலும் தம்மை வெளிப்படுத்துகிறார். அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டபோது, அவர்கள் இயேசுவை அறிந்துகொள்கிறார்கள். தம்மைப்பற்றி வெளிப்படுத்துகிறவரும் இயேசுகிறிஸ்துதான். தம்மை அறிந்துகொள்ளும் கிருபையை நமக்குக் கொடுக்கிறவரும் அவரே. அவருடைய கிருபை இல்லாமல், அவரை நம்மால் ஒருபோதும்  அறிந்துகொள்ள முடியாது. சீஷர்கள் தம்மை அறிந்தவுடனே இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டு மறைந்துபோகிறார்.

இயேசுகிறிஸ்து அவர்களோடே பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். கர்த்தருடைய பந்தியில் இயேசு கிறிஸ்து செய்த காரியங்களைப் போல உள்ளது. (மத் 26:26) அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காகவும், தாம் அவர்களுக்கு அந்நியரல்ல என்பதை நிரூபிப்பதற்காகவும் இயேசு கிறிஸ்து இவ்வாறு செய்திருக்கலாம்.

 இயேசு கிறிஸ்துவை அவர்களால் காணமுடியவில்லை. ஒரு தரிசனம் கண்டதாகத்தான் அவர்களால் கூறமுடியும். தேவதூதனைக் கண்டதுபோலக் கண்டார்கள்.  ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களோடு இருந்தது தரிசனமல்ல. உண்மை. இயேசு கிறிஸ்து அவர்களோடு பல மைல்கள் நடந்துபோனார். அவர்களிடம் கேள்விகளைக் கேட்டார். வேதவசனங்களை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். தங்களோடு தங்க வேண்டும் என்று கேட்டதற்கு அவர்களுக்குச் சம்மதம் தெரிவித்தார். அத்துடன் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். ஆகையினால் இது தரிசனம் அல்ல. உண்மையிலேயே நடைபெற்ற காரியம்.



Umn ministry 





Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*