இயேசுவும் சீஷரும்

0




இயேசுவும் சீஷரும் யோவா 21 : 1-14

இயேசு தம்மை வெளிப்படுத்தினார் 

இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:  (யோவா 21:1)

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு  திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். இதற்கு முன்பு  இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு நடுவே நின்றபோது, அங்கு அவருடைய சீஷர்களெல்லோரும் கூடியிருந்தார்கள். அது  வாரத்தின் முதலாம் நாளாகிய கர்த்தருடைய நாள். இப்போதோ வாரத்தில் ஒரு நாளில் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். எல்லா சீஷர்களும்  இங்கு இல்லை. சீஷர்களில் ஏழுபேர் மாத்திரமே இப்போது இங்கே கூடியிருக்கிறார்கள். இவர்களெல்லோரும் மீன்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளுக்குத் தம்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். அவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பொதுவான தொழில்களைச் செய்துகொண்டிருக்கும்போது, இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியிலே அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார்.

இயேசுகிறிஸ்து இதன் பின்பு தம்முடைய சீஷர்களைக் கலிலேயாவிலுள்ள மலைக்கு வருமாறு கூறினார். அப்போது சீஷர்களெல்லோரும் அங்கு கூடிவந்திருந்தார்கள். அங்கு இயேசுகிறிஸ்து  அவர்களுக்கு நடுவே தம்மை வெளிப்படுத்தினார் (மத் 28:16). சீஷர்கள் இயேசுகிறிஸ்துவுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். இயேசுகிறிஸ்துவுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கும்போது நமக்குச் சோர்வோ, களைப்போ உண்டாகக்கூடாது.  கர்த்தருக்காகக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலனைப் பெற்றுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவர் சொன்ன பிரகாரமாக, கலிலேயாவிலுள்ள மலைக்குப் போகப்போகிறார்கள். அந்த நாள் வரும் வரையிலும் அவர்கள் திபேரியா கடற்கரையிலே, கர்த்தரைக் காணவேண்டும் என்னும் வாஞ்சையோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

சீஷர்கள் கூடியிருக்கும் போது

சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், க-லேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபதேயுவின் குமாரரும்,அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,  (யோவா 21:2) 

இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் திபேரியா கடற்கரையிலே கூடியிருக்கிறார்கள். அவருடைய பன்னிரண்டு சீஷர்களும் இங்கு கூடியிருக்கவில்லை. அவர்களில் ஏழுபேர் மாத்திரமே இங்கு கூடிவந்திருக்கிறார்கள். அவர்களில் நாத்தான்வேலும் ஒருவன். யோவான் சுவிசேஷம் முதல் அதிகாரத்தில் நாத்தான்வேலைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அதன்பின்பு இவனுடைய பெயர் இந்த அதிகாரத்தில்தான் இந்த வசனத்தில்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

நாத்தான்வேலும் பர்த்தொலோமேயுவும்  ஒரே நபர்தான் என்று ஒரு சிலர் நினைக்கிறார்கள். கிறிஸ்துவின் சீஷர்கள் ஒன்றுகூடியிருப்பது மிகவும் நல்லது. அவர்கள் ஆவிக்குரிய பொதுவான காரியங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து பேசிக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய காரியங்களைப்பற்றியும், கர்த்தருடைய ஊழியங்களைப்பற்றியும்  கர்த்தருடைய பிள்ளைகள் கலந்து பேசிக்கொள்வது மிகவும் நல்லது. 

சீஷர்கள் கூடியிருக்கும்போது, இயேசுகிறிஸ்து தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று சித்தமுள்ளவராகயிருக்கிறார். அவர்கள் கூடியிருக்கும் வேளையையே இயேசுகிறிஸ்து  அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த தெரிவுசெய்திருக்கிற வேளையாகும். இதன் மூலமாக இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு, அவர்களெல்லோரும் ஒருமித்து சாட்சிகளாயிருப்பார்கள்.  தோமா அவர்களில் ஒருவர். தோமாவின் பெயர் பேதுருவின் பெயருக்குப் பின்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு தோமா சீஷர்களோடில்லை. அப்போது தோமா இயேசுவைக் காணும் சிலாக்கியத்தை இழந்துவிட்டான். அதுபோன்ற இழப்பு தனக்கு மறுபடியும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தோமா இப்போது சீஷர்களோடு  கூடவே இருக்கிறான். 

மீன்பிடிக்கப்போகிறேன்

சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை       (யோவா 21:3). 

இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் மீன்பிடிக்கப்போவதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்கள். மீன்பிடிக்கப்போவதைப்பற்றி  சீமோன் பேதுருவே முதலாவதாக, மற்றவர்களை நோக்கி ""மீன்பிடிக்கப்போகிறேன்'' என்று கூறுகிறான். அதற்கு அவர்கள் ""நாங்களும் உம்முடனேகூட வருகிறோம்'' என்று கூறுகிறார்கள். பொதுவாக கூட்டாகத் தொழில்செய்யும்போது, கூட்டுச் சேர்பவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையிருக்காது.  ஆனால் இங்கோ இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஏழுபேரும், ஒற்றுமையாக மீன்பிடிக்கப்போகிறார்கள். 

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்கள் சும்மாயிருக்க விரும்பவில்லை. வீணாகப் பொழுதுதைப் போக்க அவர்கள் நினைக்கவில்லை. ஏதாவது தொழில்செய்து ஜீவனம்பண்ணவேண்டும் என்று தீர்மானம்பண்ணுகிறார்கள். இப்போது அதற்குரிய நேரம் வந்திருக்கிறது. இதுவரையிலும் அவர்கள் இயேசுகிறிஸ்துவோடு கூடவே இருந்தார்கள். இப்போதோ இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்திருக்கிறார். ஆகையினால் சீஷர்களால் அவரோடுகூட எப்போதும் கூடவே இருக்கமுடியவில்லை. இயேசுகிறிஸ்து இல்லாமல், சும்மாயிருப்பதற்குப் பதிலாக, மீன்பிடிக்கப்போகலாமென்று சீஷர்கள் தீர்மானம்பண்ணுகிறார்கள். மீன்பிடிப்பது இவர்களுக்குப் பொழுதுபோக்கல்ல. இது இவர்களுடைய தொழில். 

இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் சோம்பேறிகளல்ல. அவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடியவர்கள். தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் அவர்கள் ஏதாவது ஒருவழியில்  பிரயோஜனமாகச் செலவுபண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து சொன்னபிரகாரம் கலிலேயாவிலுள்ள மலைக்குப் போய் அவரைச் சந்திப்பதற்கு ஆயத்தமாகயிருக்கிறார்கள். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.  காத்திருந்தாலும் அவர்கள் சும்மாயிருக்கவில்லை.  

கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் நேரத்திற்கு நாம் அவருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். நாம் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளவேண்டும். நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வேலையையும்  நேர்த்தியாகச் செய்து முடிக்கவேண்டும். சும்மாயிருந்தால் சோம்பேறித்தனம் வந்துவிடும். ஆகையினால் பிரயோஜனமுள்ள ஏதாவது ஒரு வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்யவேண்டும். நம்முடைய கைகளினால் நாம் வேலை செய்து பிழைக்கும்போது, மற்றவர்களுக்குப் பாரமாகயிருக்கமாட்டோம். அப்போஸ்தலர் பவுல் கூடாரம்பண்ணுகிற தொழிலைச்                     செய்து, தனக்கும் தன்னோடிருந்தவர்களுக்கும் ஆதரவாகயிருந்தான். அதேவேளையில் அவன் கர்த்தருடைய ஊழியத்தையும் சிறப்பாகச் செய்தான். 

இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் மீன்பிடிப்பதற்காகப் புறப்பட்டுப்போய், உடனே  படவிலே ஏறுகிறார்கள். கடலிலே வலைகளைப் போடுகிறார்கள். ஆனால் அந்த இராத்திரியிலே  அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. இவர்களுடைய கைகள் சுறுசுறுப்பாக வேலை செய்யும். விசுவாசத்தோடு வலைகளைப் போடுகிறார்கள். ஆனால் வெறுமையாகவே இழுக்கிறார்கள். ஒரு மீனும் அகப்படவில்லை.

சீஷர்கள் வலைகளைப்போட்டு ஒரு மீனையும் பிடிக்காததினால் ஏமாற்றமடைந்திருப்பார்கள். இவர்களிடத்தில் ஒரு தவறுமில்லை. தாங்கள் செய்யவேண்டிய வேலைகளை முறைப்படி செய்கிறார்கள். கடலுக்குப் போய் வலைகளைப் போடுகிறார்கள். இவர்களைப்போலத்தான் இக்காலத்தில் நல்லவர்கள் பலர் நேர்மையாக உழைக்கிறார்கள்.  அவர்களுடைய உழைப்பு கடினமாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு பிரயோஜனமும் அவர்களுக்கு உண்டாவதில்லை. எவ்வளவு முயற்சிபண்ணினாலும் தொழிலில் முன்னேற்றமும் வியாபாரத்தில் லாபமும் கிடைப்பதில்லை. 

சீஷர்கள் கடலிலே வலைகளைப்போடுகிறபோது அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. நம்முடைய வலைகளில் மீன்கள் விழுவதும், விழாமற்போவதும் கர்த்தருடைய சித்தம். நாம் விசுவாசத்தோடு வலைகளைப்போடவேண்டும். இயேசுகிறிஸ்துவின் தெய்வீக சித்தத்தின் பிரகாரம், சீஷர்கள் வலைகளைப்போட்டபோது அவர்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. அவர்களுடைய சுயமுயற்சியினாலும், சுயபிரயாசத்தினாலும் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகவில்லை. இதுவும் தேவனுடைய சித்தமாகவே இருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைக் கைவிட்டுவிடவில்லை. அவர்களுடைய சொந்தப் பிரயாசத்தினால் அவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் போனாலும், தம்முடைய கிருபையினாலும், அற்புத வல்லமையினாலும், இயேசுகிறிஸ்து அவர்களுக்கு ஏராளமான மீன்களைக் கிடைக்கச் செய்கிறார். 

இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் கடலிலே இரவு முழுவதும் வலைகளைப்போடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமாயிற்று. சீஷர்கள் ஏமாற்றத்தோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ விடியற்காலத்தில் அவர்களுக்கு அற்புதமாக மீன்களைக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் ஏமாற்றங்கள் வரும்போது நமக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். அதே வேளையில்  தேவனுடைய கிருபையினால் நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்போது நமக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும். 

இயேசு கரையிலே நின்றார்

விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்           (யோவா 21:4). 

சீஷர்கள் இரவு முழுவதும் வலைகளைப்போட்டு ஒன்றையும் பிடிக்காமல், விடியற்காலமானபோது ஏமாற்றத்தோடு கரைக்கு வருகிறார்கள். இயேசுகிறிஸ்து அங்கு அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார்.  இயேசுகிறிஸ்து தம்மை வெளிப்படுத்தும்போது, அவருடைய வெளிப்பாட்டின் நான்கு பகுதிகளை நாம் காண்கிறோம். அவையாவன: 1. இயேசுகிறிஸ்து ஏற்ற வேளை வரும்போது தம்மை வெளிப்படுத்துகிறார். 2. இயேசுகிறிஸ்து கொஞ்சம் கொஞ்சமாக  தம்மை வெளிப்படுத்துகிறார். 3. இயேசுகிறிஸ்து தம்முடைய கிருபையுடனும் இரக்கத்துடனும் தம்மை வெளிப்படுத்துகிறார். 4. இயேசுகிறிஸ்து தம்முடைய வல்லமையினால் தம்மை வெளிப்படுத்துகிறார். 

விடியற்காலமாயிற்று அப்போது இயேசு கரையிலே நிற்கிறார். சீஷர்கள் மிகுந்த ஏமாற்றத்திலிருக்கிறார்கள். அவர்களுடைய கைகளின் பிரயாசத்திற்குப் பலன் ஒன்றும் கிடைக்காமல் கவலையோடிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வேளையில்தான் இயேசுகிறிஸ்து அவர்களை ஆறுதல்பண்ணுவதற்காக  அவர்களைத் தேடி வருகிறார். தங்களுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை, எல்லாம் தங்களுக்கு நஷ்டமாகிவிட்டது என்று சீஷர்கள் ஏமாற்றத்தோடிருக்கும்போது, தாமே அவர்களுக்கு நம்பிக்கையாக இருப்பதாக இயேசு தம்மை வெளிப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து இதற்கு முன்பு கடலில் நடந்து தம்முடைய சீஷர்களிடத்தில் வந்தார். ஆனால் இப்போதோ அதுபோல கடலில் நடக்காமல், கரையிலே நிற்கிறார். இதுவரையிலும் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்கள் இருக்குமிடத்திற்குச் தேடிச்சென்றவர், இப்போது அவர்கள் தம்மிடத்தில் வருவதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சித்தமுள்ளவராகயிருக்கிறார். 

நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் செல்லுகிற பாதை கடினமாகவும் பிரச்சனை நிறைந்ததாகவும் இருக்கும்போது, இயேசுகிறிஸ்து கரையிலே நமக்காக  எதிர்பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறார். அவரிடத்தில் நாம் விரைந்து சேரவேண்டும். இயேசுகிறிஸ்துவிடத்தில் நாம் சேர்ந்துவிட்டால் நமக்குச் சமாதானமும், நிம்மதியும், பாதுகாப்பும் ஆசீர்வாதமும் உண்டு. அதுவரையிலும் பிரச்சனைதான். ஆகையினால் இயேசுகிறிஸ்துவிடம் வராமல் கவலையிலும் துக்கத்திலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறவர்கள், எவ்வளவு சீக்கிரமாக இயேசுகிறிஸ்துவிடம் வரமுடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அவரிடத்தில் வந்துவிடவேண்டும். 

இயேசுகிறிஸ்து கரையிலே நிற்கிறார். ஆனால் சீஷர்களோ அவரை இயேசு என்று  அறியாதிருக்கிறார்கள். பல சமயங்களில் நாமும் சீஷர்களைப்போலவே இருக்கிறோம். இயேசு நமக்கு அருகாமையிலிருக்கிறார். ஆனால் அவர் நமக்கு அருகாமையிலிருப்பதை நாம் அறியாதிருக்கிறோம். நாம் ஆராதிக்கிறவர் இன்னாரென்பதையும், அவர் நமக்கு அருகாமையிலிருக்கிறார் என்பதையும் நாம் அறிந்திருப்போமென்றால், நம்முடைய பாரங்களெல்லாவற்றையும் அவர்மீது வைத்துவிடலாம். அவருடைய தெய்வீக ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய ஆவிக்குரிய பிரயாணத்தில் சந்தோஷமாக முன்னேறிச் செல்லலாம். இயேசுகிறிஸ்து தம்மை வெளிப்படுத்தும்போது, தம்முடைய சீஷர்களுக்குத் தம்மை முழுவதுமாக வெளிப்படுத்தாமல், கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துகிறார்.

இருட்டாக இருந்ததினாலோ அல்லது அவர்களுக்கு இடையிலுள்ள தூரம் அதிகமாக இருந்ததினாலோ அல்லது இயேசு கிறிஸ்துவின் ரூபம் மாறியிருந்ததினாலோ அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.

பிள்ளைகளே

இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்         (யோவா 21:5). 

 இயேசுகிறிஸ்து கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். தம்முடைய சீஷர்களைக் கிருபையினாலும் இரக்கத்தினாலும் சந்திக்க வருகிறார். இரவு முழுவதும் வலைகளைப்போட்டு, அவர்கள் ஒரு மீனும் பிடிக்கவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் ஏமாற்றமும் கவலையும் நிறைந்திருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்வதற்காகவும், அவர்களை ஆசீர்வதிப்பதற்காகவும் இயேசுகிறிஸ்து அவர்களைத் தேடி வந்திருக்கிறார். 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை நோக்கி ""பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில்  உண்டா'' என்று மிகவும் கரிசனையோடு கேட்கிறார். இயேசுகிறிஸ்துவின் கரிசனை சீஷர்களுக்குத் தெரியும். ஒரு தகப்பன் தன் பிள்ளைகளிடம் அன்போடும் ஆதரவோடும்  பேசுவதுபோல, இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் பேசுகிறார். சீஷர்கள் வயதில் சிறுபிள்ளைகளல்ல. ஆனாலும் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். பிதாவாகிய தேவன்  இவர்களை இயேசுவினிடத்தில் பிள்ளைகளாக ஒப்புக்கொடுத்திருக்கிறார். 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் பேசும்போது அவருடைய அன்பும், கிருபையும், கரிசனையும் வெளிப்படுகிறது. ""பிள்ளைகளே,  புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா'' என்று அன்போடு கேட்கிறார். கர்த்தர் நம்முடைய சரீரத்திற்குரியவர் (1கொரி 6:13). தம்முடைய பிள்ளைகளின் சரீரப்பிரகாரமான தேவைகளையும் இயேசுகிறிஸ்து மிகுந்த கரிசனையோடு சந்திக்கிறார். தேவனுடைய கிருபை நமக்குப்போதுமானது. அந்தக் கிருபையோடு அவர் நமக்குப் போஜனமும் கொடுத்து குறைவில்லாமல் போஷிக்கிறார். 

இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளில் சிலர் போஜனமில்லாமல் பசியோடிருக்கலாம். இயேசுகிறிஸ்துவோ அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து, அவர்களிடத்தில் ""புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா'' என்று ஆதரவோடும் கரிசனையோடும் கேட்கிறார். இயேசுகிறிஸ்துவே நம்மைப் போஷித்துப் பராமரிக்கிறவர். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைக் கரிசனையோடு விசாரித்ததுபோல, நாமும் சகவிசுவாசிகளைக் கரிசனையோடு விசாரிக்கவேண்டும். விசுவாசிகள் பசியிலிருந்தால் அவர்களுக்குப் போஜனம்கொடுத்து உதவிபுரியவேண்டும்.  ஒரு சிலர் வேலை செய்ய முடியாமல் வியாதிலிருப்பார்கள். அவர்களுடைய குடும்பமே கஷ்டப்படும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், கர்த்தர் நமக்கு உதவிபுரிவதுபோல, நாமும் அவர்களுக்கு உதவிபுரிய முன்வரவேண்டும். அவர்களுடைய நன்மைகளை விசாரிக்கவேண்டும். புசிப்பதற்கு அவர்களிடத்தில் போஜனமுண்டா என்று விசாரித்தறிந்து அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும். 

பல சமயங்களில் நம்முடைய தேவைகள் பிறருக்கு வெளிப்படையாகத் தெரியாது. நாம் பசியோடிருப்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. மற்றவர்களின் கஷ்டங்களை நாம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். சீஷர்கள் பசியோடிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில் ""புசிப்பதற்கு ஏதாகிலும் உண்டா'' என்று கேட்கிறார். அவர்கள் மிகவும் சுருக்கமாக  ""ஒன்றுமில்லை'' என்று பதில் கூறுகிறார்கள்.

சீஷர்களின் தேவை இயேசுகிறிஸ்துவுக்குத் தெரியும். அவர்களைப் பார்க்கும்போதே அவர்கள் பசியாகயிருக்கிறார்கள் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருக்கிறது. அவருக்குத் தெரியாத இரகசியம் ஒன்றுமேயில்லை. அவருக்கு மறைவாக நம்மால் எதையும் மூடிமறைக்க முடியாது. சீஷர்களின் தேவைகளைத் தெரிந்திருந்தும், இயேசுகிறிஸ்து அவர்களிடத்தில்  ""புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா'' என்று கேட்கிறார். தங்களுடைய தேவைகளை சீஷர்கள் உணர்ந்து, தம்மிடம் விண்ணப்பம்பண்ணவேண்டுமென்று இயேசுகிறிஸ்து எதிர்பார்க்கிறார். சீஷர்கள் தங்களை வெறுமையாக்கவேண்டுமென்றும், தங்களுடைய சுயபலத்தை சார்ந்திராமல், தம்மையே சார்ந்திருக்கவேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து எதிர்பார்க்கிறார். நாம் தேவனிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினால், முதலாவதாக நம்மையே நாம் வெறுமையாக்க வேண்டும். நம்மிடத்தில் ஒன்றுமில்லை என்று  அங்கீகரிக்கவேண்டும். 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை  ""பிள்ளைகளே'' என்று அழைக்கிறார். இந்த வசனத்தில் ""பிள்ளைகளே'' என்பதன் கிரேக்க வார்த்தை ""பைதியோன்''  என்பதாகும். இதற்கு சிறுகுழந்தை, விளையாட்டுப்பிள்ளை என்று பொருள். இயேசு கிறிஸ்து தமது சீஷர்களைச் சிறுபிள்ளைகளாகப் பாவிக்கிறார். ""ஏதாகிலும் உண்டா'' என்னும் வாக்கியம் மூலபாஷையில் ""ஏதாகிலும் மீன் உண்டா'' என்றுள்ளது. இதன் கிரேக்க வார்த்தை ""பிரோஸ்பகியோன்'' இதற்கு மீன் என்றோ அல்லது அப்பத்தோடு தொட்டுச் சாப்பிடும் உணவு என்றோ பொருள்படும். ஒரு வேளை ஆண்டவர் கடற்கரையில் மீன்வாங்குகிறவர் போல நின்றிருக்கலாம்.

வலதுபுறமாக வலையைப்போடுங்கள் 

அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்க மாட்டாதிருந்தார்கள் (யோவா 21:6).  

 இயேசுகிறிஸ்து கரையிலே கிருபையுள்ளவராகவும் வல்லமையுள்ளவராகவும் நிற்கிறார். ""ஒன்றுமில்லை'' என்று சொன்ன தம்முடைய  சீஷர்களுக்கு, இயேசுகிறிஸ்து அற்புதமாக உதவி செய்யச் சித்தமாயிருக்கிறார். அவர்களிடத்தில் ""நீங்கள் படவுக்கு வலதுபுறமாக  வலையைப்போடுங்கள்'' என்று சொல்லுகிறார். சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின் பிரகாரமாக படகுக்கு வலதுபுறமாகத் தங்கள் வலையைப்போடுகிறார்கள். ""அப்பொழுது உங்களுக்கு அகப்படும்'' என்று இயேசு சொன்னார். அவர் சொன்ன பிரகாரமாகவே  சீஷர்களுக்கு மீன்கள் அகப்பட்டது. 

சீஷர்கள் இரவு முழுவதும் கடலில் வலையைப்போட்டும், ஒன்றும் பிடிக்காமல், வெறும் கையோடு வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து வெறுமையாகவும் பசியாகவும் இருக்கும் சீஷர்களை சந்தித்து, அவர்களை நிறைவாக அனுப்புகிறார். 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கட்டளை கொடுக்கும்போது, அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால் அவர்களுக்கு  கிடைக்கப்போகும் ஆசீர்வாதத்தையும் சேர்த்துச் சொல்லுகிறார். ""நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும்'' என்பதே  இயேசுகிறிஸ்துவின் கட்டளையும் வாக்குத்தத்தமும் ஆகும். எந்த இடத்தில் வலையைப்போடவேண்டும் என்று இயேசுகிறிஸ்து மிகவும் தெளிவாகச் சொல்லுகிறார். படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடவேண்டும். தேவனுடைய கட்டளை எப்போதுமே மிகவும் தெளிவாக இருக்கும். சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் நாம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படியவேண்டும்.  கிறிஸ்துவின் வார்த்தையை மிகவும் கவனமாகக் கேட்கவேண்டும். இயேசுகிறிஸ்து சொன்னபடியே சீஷர்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டாயிற்று. 

சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். அதனால் அவர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதம் உண்டாயிற்று. கரையில் நிற்கிறவர் இயேசு என்பதை சீஷர்கள் அறியாதிருக்கிறார்கள். ஆனாலும் அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஒருவருக்கு ஒன்றுமில்லையென்றால் அவர் யார் சொன்னாலும் கேட்பார். எல்லோருடைய ஆலோசனைக்கும் கீழ்ப்படிவார். அதேவேளையில் அவரிடத்தில் எல்லாம் இருக்குமென்றால், அவர் யார் சொன்னாலும் கேட்கமாட்டார். யாருடைய கட்டளைக்கும் உடனே கீழ்ப்படியமாட்டார். யார் சொன்னாலும் எதிர்த்துப் பேசுவார். முடியாது என்றும் மறுத்துவிடுவார். சீஷர்கள் இப்போது ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள். ஆகையினால் தங்களுக்குக் கட்டளையிடுவது இயேசுகிறிஸ்துதான் என்று அறியாதிருந்தாலும்,  அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் சொன்னபடியே படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடுகிறார்கள். 

தங்களுக்கு உதவி செய்ய விரும்புகிற யாரோ அந்நியர் ஒருவருக்கு தாங்கள் கீழ்ப்படிவதாக நினைத்து, தங்களுடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கே, தங்களையும் அறியாமல் கீழ்ப்படிகிறார்கள். இந்தச் சம்பவம் அற்புதமாகவும், ஆசீர்வாதமாகவும் முடிவடைகிறது. இரவு முழுவதும் வலைகளைப்போட்டு சரீர வேதனையோடிருக்கிறார்கள். ஒரு மீனும் பிடிக்காததினால் இருதயத்திலும் வேதனையடைந்திருக்கிறார்கள். இப்போதோ இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து  செயல்பட்டபோது, அவர்களுக்கு மிகுந்த பலன் உண்டாயிற்று. இது அவர்களுடைய பிரயாசத்தின் பலனல்ல. விசுவாசித்து செயல்பட்டதினால் உண்டான பலன். 

நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாமும் கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படியவேண்டும். அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதினால் நமக்கு  ஒரு நஷ்டமும் உண்டாகிவிடப்போவதில்லை. நம்மை நஷ்டப்படுத்தவேண்டுமென்பதோ, வேதனைப்படுத்த வேண்டுமென்பதோ, ஒன்றுமில்லாமல் வெறுமையாக அனுப்பிவிடவேண்டுமென்பதோ இயேசுகிறிஸ்துவின் நோக்கமல்ல. அது அவருடைய சித்தமுமல்ல. நாம் ஜீவன் பெறவேண்டுமென்பதும், நம்முடைய ஜீவன் பரிபூரணமடையவேண்டுமென்பதுமே இயேசுகிறிஸ்துவின் சித்தமாயிருக்கிறது. 

சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடுகிறார்கள். அப்பொழுது அவர்களுக்குத் திரளான மீன்கள் அகப்படுகிறது. அதை இழுக்கமாட்டாதிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து கரையில் நிற்கிறார். சீஷர்களும் கரைக்கு அருகாமையில் படவிலிருக்கிறார்கள். நடுக்கடலில் தங்கள் வலையைப்போடுவதற்குப் பதிலாக, இயேசுகிறிஸ்து சொன்ன பிரகாரமாக, கடற்கரைக்கு அருகில், தாங்கள் இருக்குமிடத்திலேயே, தங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடுகிறார்கள். இந்த இடத்தில் திரளான மீன்கள் அகப்படுவது மிகப்பெரிய அற்புதம். இப்படிப்பட்ட காரியத்தை  மனுஷனால் செய்ய முடியாது. மனுஷனால் கூடாதது தேவனால் கூடும். சீஷர்களின் சுயபலத்தினாலோ, சுயமுயற்சியினாலோ திரளான மீன்கள் அகப்படவில்லை. இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலேயே திரளான மீன்கள் அவர்களுக்கு அகப்பட்டது. 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் கிருபையாகவும் இரக்கமாகவும் இருக்கிறார். சீஷர்கள் கடலில் இரவு முழுவதும் வலைகளைப்போட்டார்கள். அவர்களுக்கு ஒன்றும் அகப்படவில்லை. அவர்களுடைய  முயற்சிகளும் பிரயாசமும் வீணாயிற்று. தோற்றுப்போன நிலமையில் தங்களுக்கு ஒன்றுமேயில்லை என்னும் நிலமை வரும்போது, இயேசுகிறிஸ்து தம்முடைய அற்புத வல்லமையினால் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.   இயேசுகிறிஸ்துவின் வல்லமை அவர்களுடைய வெறுமையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களைத் தேவனுடைய ஆசீர்வாதங்களினால் நிரப்புகிறது. 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷருக்கு இதற்கு முன்பே இப்படிப்பட்ட அதிசயத்தைச் செய்திருக்கிறார். சீமோன் பேதுருவின் படவில்  இயேசுகிறிஸ்து அமர்ந்து திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம்பண்ணினார் (லூக் 5:4). பேதுரு தன்னுடைய படவை ஆண்டவருக்கு இரவலாகக் கொடுத்தான். அதற்காக இயேசுகிறிஸ்து திரளான மீன்களினால் அவனை ஆசீர்வதித்தார். அவன் ஒரு மீனும் பிடிக்காமல் கரையில் ஏமாற்றத்தோடு இருந்தபோது, இயேசுகிறிஸ்து அவனை ஆழத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு வலைகளைப்போடுமாறு கூறுகிறார். இயேசுகிறிஸ்து சொன்ன பிரகாரமாகவே சீமோன் பேதுரு ஆழத்தில் வலையைப்போட்டு திரளான மீன்களைப் பிடித்தான். 

சீமோன் பேதுரு தனக்கு இயேசுகிறிஸ்து ஏற்கெனவே செய்த அற்புதத்தையும், இப்பொழுது செய்கிற இந்த அற்புதத்தையும் நினைத்துப்பார்க்கிறான். இவை சீமோன் பேதுருவின் உள்ளத்தில் பதிகிறது. தன்னுடைய சுயமுயற்சியினால் ஒரு பிரயோஜனமுமில்லை என்பதை பேதுரு உணர்ந்துகொள்கிறான். ஒவ்வொரு முறை போஜனம்பண்ணும்போதும், இந்தப் போஜனம் கர்த்தருடைய கிருபையினால் தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நினைவுகூருகிறான் கர்த்தரைத் துதிக்கிறான். விசுவாசிகளாகிய நாமும் போஜனம்பண்ணும்போது, இந்தப் போஜனம்  கர்த்தர் தம்முடைய கிருபையினால் நமக்குக் கொடுத்திருக்கிற போஜனம் என்பதை நினைவுகூர்ந்து, அவரைத் துதிக்கவேண்டும்.  

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை உலகம் முழுவதும் அனுப்பப்போகிறார். அவர்கள்  சர்வசிருஷ்டிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கப்போகிறார்கள். அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் அற்புத வல்லமை தெரிந்திருக்கவேண்டும். ஆபத்து வேளையில் அவர் தங்களுக்கு உதவிபுரிய வருவார் என்பதை  சீஷர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்து சொன்ன பிரகாரமாகவே செயல்பட்டால், ஊழியத்தில் ஆசீர்வாதம் உண்டாகும். இதைச் சீஷர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தச் சம்பவத்திற்கு பின்பு பேதுரு பிரசங்கம்பண்ணியபோது, ஒரே நாளில் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்படுகிறார்கள். அப்போது இயேசுகிறிஸ்து சொன்னபிரகாரமாக, தாங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடுகிறோம் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்கிறார்கள். 

கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாம்,  தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஊழியத்தை  உண்மையாகவும், உத்தமமாகவும் செய்யவேண்டும். சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாகவும் செய்யவேண்டும். சுவிசேஷம் என்னும் வலையை  நாம் பல வருஷங்களாக வீசியிருக்கலாம். நம்முடைய வலையில் ஒரு ஆத்துமா கூட வந்து விழாமல்போயிருக்கலாம். ஆனாலும் சோர்ந்துபோய்விடவேண்டிய அவசியமில்லை.  இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின் பிரகாரமாக நாம் தொடர்ந்து சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்போது, இரட்சகருடைய இரட்சிப்பின் வல்லமையினால், ஏராளமான ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.  

அவர் கர்த்தர் 

ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு  கட-லே குதித்தான் (யோவா 21:7).

இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் யோவான் அவருக்கு மிகவும் அன்பானவன். சாதுரிய ஞானமுள்ளவன். எதையும் சீக்கிரத்தில் புரிந்துகொள்ளும் விவேகமுள்ளவன். இயேசுகிறிஸ்துவுக்கு மிகவும் அன்பானவனாக இருக்கிறபடியினால், யோவானிடத்தில் இதுபோன்ற விசேஷித்த குணாதிசயம் காணப்படுகிறது. கரையில் நிற்பது இயேசுகிறிஸ்துதான் என்பது யோவானுக்குத் தெரிகிறது. அவன் கர்த்தரென்பதை யோவான் அறிந்துகொள்கிறான். தன் அருகில் இருக்கும் சீமோன் பேதுருவிடம் ""அவர் கர்த்தர்'' என்று சொல்லுகிறான். 

இயேசுகிறிஸ்துவைப்பற்றித் தனக்குத் தெரிந்ததை யோவான் மறைக்காமல்  தனக்கு அருகிலுள்ளவர்களிடம் வெளிப்படுத்துகிறான். விசுவாசிகளாகிய நாமும் யோவானைப்போலவே, இயேசுகிறிஸ்துவைப்பற்றி நமக்குத் தெரிந்திருப்பதை, மற்றவர்களுக்கு விசுவாசத்தோடு அறிவிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவை பிறருக்கு அறிமுகம் செய்து வைக்கவேண்டும். நம்முடைய கருத்தை மற்றவர்களிடம் பலவந்தமாகத் திணிக்கவேண்டும் என்னும் அவசியமில்லை.  இயேசுவைப்பற்றி மற்றவர்களிடம் சொன்னாலே போதுமானது. 

படவிலே மொத்தம் ஏழு சீஷர்கள் இருக்கிறார்கள். யோவான் மற்ற ஆறுபேரிடம்  இயேசுவைப்பற்றிச் சொல்லுவதற்குப் பதிலாக, சீமோன் பேதுருவிடம் குறிப்பாகச் சொல்லுகிறான். இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்ளும்போது, மற்றவர்களைவிட சீமோன்பேதுருவுக்கு அதிக சந்தோஷம் உண்டாகும் என்பது யோவானுக்குத் தெரியும்.

சீமோன் பேதுரு இயேசுகிறிஸ்துவிடம்  பக்திவைராக்கியமாகயிருக்கிறான். அவருக்காக எழும்பிப்பிரகாசிக்கிறவன். ""அவர் கர்த்தர்'' என்னும் செய்தியைக் கேட்டவுடன், அவனால் படவில் இருக்கமுடியவில்லை. உடனே கடலில் குதித்துவிடுகிறான். படவு கரைக்கு வருவதற்கு முன்பாக, கடலில் குதித்து, நீந்தி, இயேசுகிறிஸ்துவிடம் வரவேண்டுமென்று ஆர்வத்தோடு செயல்படுகிறான். 

பேதுரு வஸ்திரமில்லாதவனாக இருக்கிறான் என்று எழுதப்பட்டிருக்கிறது. இவன் நிர்வாணமாகயில்லை. கடலில் மீன்பிடிக்கிறவர்கள் அணிந்திருக்கும் அரைகுறை ஆடையை அணிந்திருக்கிறான்.  கர்த்தருக்கு முன்பாக இந்த ஆடையோடு நிற்பது கண்ணியமாக இருக்காது என்று நினைக்கிறான். ஆகையினால் தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்து இயேசுவினிடத்தில் வருகிறான். தன்னிடத்திலுள்ள நல்ல வஸ்திரத்தை அணிந்துகொண்டு இயேசுவுக்கு முன்பாக வரவேண்டுமென்று பிரயாசப்படுகிறான். 

இயேசுகிறிஸ்துவிடம் வரவேண்டுமென்றால் படவில்தான் வரவேண்டும் என்னும் அவசியமில்லை. சீமோன் பேதுருவோ படவை சார்ந்திருக்கவில்லை.  கடலுக்குள் குதித்து நீந்தியோ அல்லது நடந்தோ வருகிறான். கடலில் குதித்தால் நீந்தவேண்டும். இல்லாவிட்டால் மூழ்கிவிடுவோம். பேதுருவுக்கோ  இயேசுகிறிஸ்துவிடம் எப்படியாவது வந்து சேர்ந்துவிடவேண்டும் என்னும் ஆவல் இருக்கிறது. ஆகையினால் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து இருந்தாலும், இயேசுகிறிஸ்துவைக் காணவேண்டுமென்னும் வைராக்கியத்தினால், எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள ஆயத்தமாகயிருக்கிறான். படவைவிட அவனுக்கு  இயேசுகிறிஸ்துவோடு கூடயிருப்பதே சந்தோஷமாகவும், சமாதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. 

பேதுரு இயேசுகிறிஸ்துவை மூன்று முறை மறுதலித்திருக்கிறான். இயேசுகிறிஸ்து இவனுடைய பாவத்தை மன்னித்திருக்கிறார். மற்றவர்களைவிட பேதுருவுக்கு அதிகமாக மன்னிக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் மற்ற சீஷர்களைவிட பேதுரு இயேசுவின்மீது அதிக அன்பாயிருக்கிறான். இயேசுகிறிஸ்துவோடு கூடயிருக்கிறவர்கள், அவரோடு கூடயிருக்கவேண்டுமென்பதற்காகவும், அவரிடத்தில் வரவேண்டுமென்பதற்காகவும் எதையும் செய்ய ஆயத்தமாகயிருப்பார்கள். கடலில் நீந்தவேண்டியதானாலும், கடும் புயலில்  பயணம் செய்யவேண்டியதானாலும், அவர்கள் இயேசுவுக்காக எதையும் செய்ய ஆயத்தமாகயிருப்பார்கள். 

மற்ற சீஷர்கள்

மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவி-ருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்  (யோவா 21:8). 

சீமோன் பேதுருவைப்போல மற்ற சீஷர்கள்  கடலில் குதிக்கவில்லை. அவர்கள் மிகவும் கவனமாகயிருக்கிறார்கள். எதையும்  சிந்தித்துச் செயல்படுகிறார்கள். படவைக் கரைக்கு வலித்துவருகிறார்கள். எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக கரைக்கு வருகிறார்கள். 

தேவன் தம்முடைய வரங்களை  ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவின்படி கொடுத்திருக்கிறார். ஒரு சிலர் பேதுருவையும் யோவானையும்போல மிகவும் நேர்த்தியாகக் காரியங்களைச் செய்கிறார்கள். இவர்களிடத்தில்  வரங்களும் கிருபைகளும் அதிகமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற சீஷர்களோ இயேசுகிறிஸ்துவிடத்தில் விசுவாசமாயிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பேதுருவையும் யோவானையும்போல விசேஷித்த சீஷர்களாகயில்லை. சாதாரண சீஷர்களாகவே இருக்கிறார்கள். தங்களுடைய கடமைகளில் கவனமாகயிருக்கிறார்கள்.

நாம் இயேசுகிறிஸ்துவுக்கு விசேஷமானவர்களா அல்லது சாதாரணமானவர்களா என்பது முக்கியமல்ல. நாம் இயேசுகிறிஸ்துவை உண்மையுள்ள மனதோடு விசுவாசிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் மகிமையில் நாமெல்லோரும் ஒன்றுபோலவே பிரவேசிப்போம். ஒன்றுபோலவே அவருடைய சமுகத்தில் இளைப்பாறுதல் அடைவோம். பரலோகத்தில் முந்தினோர் பிந்தினோராகவும், பிந்தினோர் முந்தினோராகவும் இருப்பார்கள்.  

ஒரு சில விசுவாசிகள் யோவானைப்போல  அறிவில் சிறந்தவர்களாகியிருப்பார்கள்.  தேவனுடைய ஞானம் இவர்களுக்கு அதிகமாய் கொடுக்கப்பட்டிருக்கும். சபை ஊழியங்களில்  ஞானமாய் செயல்படுவார்கள். ஒரு சிலர் பேதுருவைப்போல சுறுசுறுப்பானவர்களாகவும் தைரியமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்ற விசுவாசிகள் மத்தியிலும், சபையிலும் இப்படிப்பட்டவர்கள் சுறுசுறுப்பாக ஊழியம் செய்வார்கள். எந்த ஊழியத்தையும் தைரியமாகச் செய்வார்கள். ஒரு சிலர் சபையின் கண்களைப்போல பிரயோஜனமுள்ளவர்களாகயிருப்பார்கள். மற்றவர்களோ சபையின் கைகளைப்போல செயல்படுவார்கள். 

சரீரத்திற்கு கண்ணும் தேவை. கையும் தேவை. சரீரத்தில் அநேக அவயவங்கள் இருந்தாலும், சரீரம் சீராகச் செயல்படுவதற்கு எல்லா அவயவங்களும் தேவைப்படுகிறது. அதுபோலவே சபையானது சிறப்பாக ஊழியம் செய்வதற்கு எல்லாவிதமான விசுவாசிகளும் தேவை. 

விசுவாசிகளெல்லோரும் இயேசுகிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார்கள். ஆயினும் அவர்கள் இயேசுவை மகிமைப்படுத்தும் அளவில் வித்தியாசமுண்டு. இயேசுகிறிஸ்துவோ  தம்மை மகிமைப்படுத்துகிறவர்களெல்லோரையும் அங்கீகரிக்கிறார். இயேசுகிறிஸ்துவை அதிகமாக மகிமைப்படுத்துகிறவர்களும், குறைவாக மகிமைப்படுத்துகிறவர்களும் அவருக்குப் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். 

இயேசுகிறிஸ்துவிடத்தில் வருவதற்கு பேதுரு  கடலில் குதித்துத்தான் வரவேண்டும் என்னும் அவசியமில்லை. அவன் மற்றவர்களைப்போல  படவிலேயே வரலாம். ஆனாலும் கடலில் குதித்து வருவது, மீனையும் 

இயேசுவின்மீது அவன் வைத்திருக்கும் பக்திவைராக்கியத்தைக் காண்பிக்கிறது. இயேசுகிறிஸ்துவுக்காக பேதுரு எதையும் செய்வான் என்னும் தைரியத்தையும் காண்பிக்கிறது. இயேசுகிறிஸ்துவோ கடலில் குதித்து தம்மிடத்தில் வரும் பேதுருவையும் ஏற்றுக்கொள்கிறார், படவில் நிதானமாக வரும் மற்ற சீஷர்களையும் ஏற்றுக்கொள்கிறார். 

விசுவாசிகளெல்லோருமே இயேசுகிறிஸ்துவின்மீது அன்புகூருகிறார்கள்.  ஆயினும் அவர்கள் அன்புகூரும் அளவிலும் வித்தியாசமுண்டு. ஒரு சிலர் மரியாளைப்போல  இயேசுகிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய உபதேசத்தைக் கேட்கிறார்கள். உலககாரியங்களில் ஈடுபடாமல் இயேசுவின் பாதம் ஒன்றே போதும் என்று நினைக்கிறார்கள். வேறு சிலரோ உலகக்காரியங்களில் பணிசெய்கிறார்கள், அவர்களும் இயேசுவின்மீது அன்புகூருகிறார்கள். 

வேலையோ, தொழிலோ அல்லது வியாபாரமோ செய்கிறவர்கள்      இந்த உலகத்தில் தாங்கள் செய்யவேண்டிய வேலைகளையும் செய்வார்கள். இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியமும் செய்வார்கள். இவர்கள் படவிலிருக்கும் மற்ற சீஷர்களைப்போன்றவர்கள். மற்ற சீஷர்கள்  படவில் இருந்துகொண்டே, மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு கரைக்கு வருகிறார்கள். 

கரையில் இயேசு நிற்கிறார். பேதுருவைப்போன்றவர்களோ படவில் இருக்காமல், கடலில் குதித்து இயேசுகிறிஸ்துவிடம் வருகிறார்கள். பேதுருவைப்போலவும் பலர் ஊழியம் செய்கிறார்கள். உலகப்பிரகாரமாக இவர்கள் எந்த வேலையும் செய்யாமல், தங்கள் முழுநேரத்தையும் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்கு அர்ப்பணிக்கிறார்கள்.   

நாம் எங்கிருந்தாலும் இயேசுகிறிஸ்துவுக்கு  உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருக்கவேண்டும். நம்முடைய விசுவாசத்தில் உண்மையும் நேர்மையும் இருக்கவேண்டும்.  நாம் படவிலிருந்தாலும், கடலில் குதித்தாலும் கர்த்தருடைய பிள்ளையாக இருக்கவேண்டும். படவிலிருக்கிறவர்கள், படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை உண்மையோடு இழுத்துவரவேண்டும். கடலில் குதிக்கிறவர்கள்  வேகமாக நீந்தி வரவேண்டும். நாம் எந்த ஸ்தலத்திலிருந்தாலும் இயேசுகிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். 

இயேசுகிறிஸ்து தச்சனுடைய  குமாரனாகயிருந்து, தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நேர்த்தியாகச் செய்தார். அதேவேளையில் பிதாவாகிய தேவன் தம்மிடத்தில் ஒப்புக்கொடுத்த ஊழியத்தையும் நேர்த்தியாகச் செய்து முடித்தார். இயேசுகிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாகிய நாமும்,  நம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளை நேர்த்தியாகச் செய்து முடிக்கவேண்டும். 

கரையிலே வந்திறங்கினபோது

அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்  (யோவா 21:9). 

சீஷர்கள் கரையிலே வந்து இறங்குவதற்கு  முன்பாகவே, இயேசுகிறிஸ்து அவர்களைப் போஷிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார். சீஷர்கள் கரைக்கு வரும்போது கடல் நீரில் நனைந்தவர்களாகவும், குளிரில் நடுங்குகிறவர்களாகவும், களைப்படைந்தவர்களாவும், பசியுள்ளவர்களாகவும் வருகிறார்கள். அவர்கள் கரையிலிருந்து வந்திறங்கினவுடனே, அவர்களுடைய குளிரைப்போக்குவதற்கு, அங்கு  இயேசுகிறிஸ்து கரிநெருப்புப் போட்டிருக்கிறார். குளிருக்கு நடுங்குகிறவர்கள் இப்போது கரிநெருப்பின் உஷ்ணத்தில் தங்களைச் சூடுபடுத்திக்கொள்ளலாம். 

இயேசுகிறிஸ்து கரிநெருப்பின்மீது மீனையும் அப்பத்தையும் வைத்திருக்கிறார். பசியோடிருக்கிறவர்கள் மீனையும் அப்பத்தையும் புசித்து தங்கள் பசியைப் போக்கிக்கொள்ளலாம். இந்தக் கரிநெருப்பு எங்கேயிருந்து வந்தது? எப்படி வந்தது? என்னும் கேள்வி நமக்குத் தேவையற்றது. அப்பமும்  மீனும் இயேசுகிறிஸ்துவுக்கு எப்படி கிடைத்தது? என்பதும் நமக்கு தேவையற்ற கேள்விதான். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களைப் பராமரிக்கிறார். போஷிக்கிறார்.  

இயேசுகிறிஸ்து பசியோடிருக்கும் சீஷர்களுக்கு பெரிய விருந்து பரிமாறவில்லை.  சாதாரணமான மீனையும் அப்பத்தையுமே அவர்களுக்குக் கொடுக்கிறார். சீஷர்களோ பசியோடிருக்கிறார்கள். அவர்களுக்கு ருசியைவிட, பசி நீங்கவேண்டும் என்பதே முக்கியம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும்  ருசியுள்ள பதார்த்தத்திற்கு ஆசைப்படக்கூடாது. கர்த்தர் எதைக்கொடுத்தாலும் அது நமக்குப் போதும் என்னும் மனப்பாங்கு நம்மிடத்தில் காணப்படவேண்டும். இயேசுகிறிஸ்து நமக்குப்போதுமானவர். அவருடைய கிருபை நமக்குப் போதுமானது. அவருடைய பாதுகாப்பும் பராமரிப்பும் நமக்குப் போதுமானது. 

இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு  சாதாரணமான மீனும் அப்பமும் கொடுத்ததுபோல, இயேசுகிறிஸ்து நமக்கு சாதாரணமான வாழ்க்கைத்தரத்தையே கொடுத்திருக்கலாம். இருப்பதில்       திருப்தியடைய நாம் கற்றுக்கொள்ளவேண்டும். போதுமென்ற பக்தியே மிகுந்த ஆதாயம். இயேசுகிறிஸ்துவும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக நினையாமல், தாழ்மையின் ரூபமெடுத்து, நம் மத்தியிலே ஊழியம் செய்தார்.  

இயேசுகிறிஸ்து நமக்கு எப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார் என்பதைவிட, அவர் நம்முடைய தேவைகளை ஏற்றவேளையில் சந்திக்கிறார் என்பதே நமக்கு முக்கியம். சீஷர்கள் பசியோடிருக்கும்போது அவர்களுக்குப் போஜனம்கொடுக்கிறார். அவர்கள் குளிரோடிருக்கும்போது அவர்களுக்கு கரிநெருப்பு கொடுக்கிறார். 

சீஷர்கள் இராமுழுவதும் கடலில் வலைகளைப்போட்டு, படவைச் செலுத்தி வருகிறார்கள். களைப்பாய் வருகிறார்கள். பசியோடு வருகிறார்கள். இவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகள். இயேசுகிறிஸ்துவே இவர்களைப் போஷித்துப் பராமரிக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் இந்த உலகத்தில் கர்த்தருக்காக ஊழியம் செய்கிறோம். நம்முடைய தேவைகள் சந்திக்கப்படவேண்டும் என்று நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையே சார்ந்திருக்கவேண்டும். அவரே நம்முடைய ஊழியத்திற்கு எஜமான். அவர் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்களில் நாம் திருப்தியோடிருக்கவேண்டும். மேன்மையான ஆசீர்வாதங்கள் பரலோகத்தில் நமக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. 

சீஷர்கள் திரளான மீன்களைப் பிடித்ததுபோலவே இங்கு வேறொரு அற்புதம் நடைபெறுகிறது. கர்த்தர் அவர்களுடைய   தேவைகளையெல்லாம் சந்திக்கிறார். அவர்கள் மறுபடியும் கடலுக்குச் சென்று மீன்பிடித்துத் தங்களுடைய ஜீவனத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இல்லை. கர்த்தருக்காக அவர்கள் ஊழியம் செய்யும்போது கர்த்தர் அவர்களைப் போஷிப்பார்.

மீன்களில் சிலவற்றை

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்    (யோவா 21:10).  

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடம் ""படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அகப்படும்'' என்று சொன்னார். சீஷர்களும் அப்படியே வலையைப் போட்டார்கள். திரளான மீன்கள் அகப்பட்டது.  அந்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவருமாறு இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் கூறுகிறார். அவர்கள் தங்கள் கைகளின் பிரயாசங்களினால் கிடைத்த ஆசீர்வாதங்களில் போஜனம்பண்ணவேண்டும். தேவனுடைய கிருபையினால் நாம் வேலை செய்கிறோம். நம்முடைய கைகளின் பிரயாசங்களை அவர் ஆசீர்வதிக்கிறார். நாம் கடினமாக உழைத்து, நேர்மையாக சம்பாதிக்கும்போது, அந்தச் சம்பாத்தியம் நமக்கு மிகுந்த ஆசீர்வாதத்தைத் தரும். அந்தச் சம்பாத்தியமே இன்பமானது.  துன்மார்க்கமான சம்பாத்தியம் நமக்குச் சாபமாகவே இருக்கும். 

கிறிஸ்துவின் சீஷர்கள்   இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, படவுக்கு வலதுபுறமாக வலையைப்போட்டு, மீன்களைப் பிடித்திருக்கிறார்கள். இது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதம். இந்த ஆசீர்வாதத்தை அவர்கள் சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாக இருக்கிறான். இயேசுகிறிஸ்துவின் ஆசீர்வாதத்தை சீஷர்கள் ருசித்துப் பார்க்கவேண்டும். 

நம்மிடத்திலுள்ளதைப் பயன்படுத்த வேண்டுமென்று இயேசுகிறிஸ்து நமக்குக் கற்றுத்தருகிறார். சீஷர்கள் பிடித்த மீன்களில் சிலவற்றை அவர்கள் புசிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் ஆசீர்வாதத்தின் ஒரு பகுதியை சீஷர்கள் அனுபவிக்கவேண்டும்.  இயேசுகிறிஸ்து கொடுக்கும் ஆசீர்வாதங்களைப் பூமியில் புதைத்து வைக்கக்கூடாது. அவற்றை ஸ்தோத்திரத்தோடே பயன்படுத்தவேண்டும். இயேசுகிறிஸ்து விசுவாசிகளாகிய நமக்கு பல ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார். இவற்றை நாம் ஸ்தோத்திரத்தோடே  அனுபவிக்கவேண்டும். 

 உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், கர்த்தர் நமக்குக் கொடுக்கும் அளவுக்குத்தக்கதாக, ஸ்தோத்திரம்பண்ணி அனுபவிக்கவேண்டும். அப்போது இயேசுகிறிஸ்து நம்மோடு போஜனம்பண்ணுவார். நாமும் அவரோடு போஜனம்பண்ணுவோம். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மனுஷரைப்பிடிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஊழியக்காரர்கள் தாங்கள் பிடித்திருக்கும் மனுஷர்களை இயேசுகிறிஸ்துவிடத்தில் கொண்டு  வரவேண்டும். இயேசுகிறிஸ்துவே ஊழியக்காரர்களுக்கு எஜமானாக இருக்கிறவர்.   

சீமோன் பேதுரு

சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை  (யோவா 21:11). 

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் அவர்கள் பிடித்த மீன்களில் சிலவற்றை கொண்டுவருமாறு கூறுகிறார். சீஷர்கள் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்.  அவர்களுடைய வலையில் திரளான மீன்கள் அகப்பட்டதினால் அதை இழுக்கமாட்டாதிருக்கிறார்கள். அவர்களுடைய சொந்த முயற்சியினால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுகிறிஸ்து அவர்களுக்குக் கட்டளையிட்ட பின்போ அவர்களால் மீன்களால் நிறைந்த வலையை கரையில் இழுக்க முடிகிறது. 

கர்த்தருடைய  ஊழியக்காரர்கள் சுவிசேஷம் என்னும் வலையில் திரளான ஆத்துமாக்களைப் பிடிக்கிறார்கள். அந்த ஆத்துமாக்களை அவர்களால் சபைகளுக்குக் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை  என்றால், அவர்கள் ஆரம்பித்த நற்கிரியையை அவர்களால் செய்து முடிக்க முடியவில்லை என்றே பொருள். தேவனுடைய கிருபை இல்லையென்றால் ஊழியம் பாதியிலேயே அரைகுறையாக நின்றுவிடும். ஊழியத்தின் ஒவ்வொரு பகுதியும் நல்லமுறையில் நடைபெறவேண்டுமென்றால் அதற்குத் தேவனுடைய கிருபையும், உதவியும், ஒத்தாசையும் தேவை. 

இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் சீமோன் பேதுரு முன்னின்று செயல்படுகிறான். இயேசுகிறிஸ்துவிடம் வருவதற்காக அவன் படவிலிருந்து கடலில் குதித்தவன். இப்போது  எல்லோரும் கரையிலிருக்கிறார்கள். சீமோன் பேதுருவோ படவில் ஏறுகிறான். எல்லோரும் படவிலிருந்தபோது சீமோன் பேதுரு கடலில் குதித்தான். எந்தக் காரியமாக இருந்தாலும் சீமோன் பேதுரு முதல் ஆளாக நின்று கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறான்.  

பேதுரு இயேசுவின்மீது பக்திவைராக்கியமாக இருக்கிறான். கர்த்தரின் கட்டளைக்கு மற்ற சீஷர்களைவிட முன்னின்று கீழ்ப்படிகிறான். எப்போதுமே கீழ்ப்படிவதற்கு ஆயத்தமாகயிருக்கிறான். எல்லாரும் சீஷர்கள்தான். எல்லாரும் விசுவாசிகள்தான்.  ஆனாலும் எல்லோரும் ஒன்றுபோல் கீழ்ப்படிவதில்லை. எல்லோரும் ஒருமித்து முன்செல்வதில்லை. வேகத்தில் வித்தியாசமிருக்கிறது. 

வலையிலிருந்த மீன்கள்  எண்ணப்பட்டிருக்கிறது. அந்த வலையில் நூற்றுஐம்பத்து மூன்று பெரிய மீன்கள் இருக்கிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷரிடத்தில் கிருபையுள்ளவராகயிருக்கிறார்.  அவருடைய கிருபையும் பெரிது. வலையில் நிறைந்திருக்கும் மீன்களும் பெரிது. வலையில் இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இதுவே இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பும் பராமரிப்பும். தங்களுக்குக் கிடைத்த மீன்களில் சீஷர்கள் ஒன்றையும் இழந்துபோகவில்லை. அவர்களுடைய வலையும் கிழியவில்லை. 

சுவிசேஷத்தின் வலையில் ஏராளமான ஆத்துமாக்கள் வந்து சேருவார்கள். ஒரே நாளில்  மூவாயிரம்பேர் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதனால் சபை உடைந்துபோகவில்லை. இன்னும் எத்தனை ஆத்துமாக்கள் வேண்டுமானாலும் சபையில் வந்து சேரலாம். சபை உடைந்துபோகாது. ஏனெனில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே சபையைக் கட்டுகிறவர். அவரே தமது சபைக்கு அஸ்திபாரமாக இருக்கிறவர். நாம் சுவிசேஷத்தின் வலையைத் தொடர்ந்து பயன்படுத்தி ஆத்துமாக்களைப் பிடிக்கலாம்.  நமது வலையும் கிழியாது. ஆத்துமாக்களும் தப்பித்துப்போகாது. ஊழியம் கர்த்தருடையது. கர்த்தர் பார்த்துக்கொள்வார்.  

கேட்கத்துணியவில்லை




Umn ministry 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*