உயிர்த்தெழுந்த இயேசு
வாரத்தின் முதலாம் நாள்
ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனாமரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள் (மத் 28:1).
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு கர்த்தருடைய தூதனும், இயேசுகிறிஸ்துவும் சாட்சி பகருகிறார்கள். தேவனுடைய அளவற்ற ஞானத்தை நம்முடைய குறைபாடுள்ள மனுஷ ஞானத்தினால் பூரணமாக புரிந்துகொள்ள முடியாது. இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக இருக்கிறவர்கள் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவையே தரிசித்திருக்கிறார்கள். அவர் உயிர்த்தெழும்போது இவர்கள் இயேசுவை தரிசிக்கவில்லை.
ஓய்வுநாள் முடிந்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுகிறார். இயேசுகிறிஸ்து மரித்து மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழும் சம்பவம் நடைபெறுகிறது. வாரத்தின் ஆறாம் நாளின் மாலைவேளையில் இயேசுகிறிஸ்து அடக்கம்பண்ணப்படுகிறார். அடுத்த வாரத்தின் முதலாம் நாளின் காலைப்பொழுதில் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுகிறார்.
யூதருடைய ஓய்வுநாள் முடிந்தபின்பு இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுகிறார். இந்த ஓய்வுநாள் பஸ்கா ஓய்வுநாளாகும். இயேசுகிறிஸ்து ஆறாம்நாளில் தமது கிரியைகள் அனைத்தையும் முடித்து, ""எல்லாம் முடிந்தது'' என்று கூறுகிறார். ஏழாம் நாளில் அவர் ஓய்வாக இருக்கிறார். அதன்பின்பு அடுத்தவாரத்தின் முதலாம் நாளில், ஒரு புதிய உலகம் ஆரம்பமாவது போல, இயேசுகிறிஸ்து புதிய கிரியைகளை செய்வதற்கு பிரவேசிக்கிறார். பரிசுத்தவான்கள் தங்களுடைய கல்லறைகளில் படுத்திருப்பது அவர்களுக்கு ஒய்வுநாளில் ஓய்வெடுப்பதைப் போன்றதாகும். பரிசுத்தவான்கள் தங்களுடைய கல்லறையில் இளைப்பாறுகிறார்கள். துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது. பெலனற்று விடாய்த்துப்போன பரிசுத்தவான்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள் (யோபு 3:17).
இயேசுகிறிஸ்து வாரத்தின் முதலாம் நாளில் உயிர்த்தெழுகிறார். ஆதியிலே தேவன் முதலாம் நாளில் ""வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று கூறினார். அப்போது வெளிச்சம் உண்டாயிற்று. வாரத்தின் அதே முதலாம் நாளில் இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிற இயேசுகிறிஸ்து கல்லறையின் இருளிலிருந்து வெளிச்சமாக உதித்திருக்கிறார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ""கர்த்தருடைய நாள்'' எனப்படுகிறது (வெளி 1:10). இதுவே ஓய்வுநாளின் முதலாம் நாளாகும். புதிய ஏற்பாட்டில் வாரத்தின் முதலாம் நாளாகிய இந்த நாள் மாத்திரமே கர்த்தருடைய நாள் என அழைக்கப்படுகிறது.
தேவன் தமது சிருஷ்டிப்பின் கிரியையை பரிபூரணமாக நிறைவேற்றியதற்கு அடையாளமாகவும் ஞாபகமாகவும் ஓய்வுநாள் ஆசரிக்கப்படுகிறது (ஆதி 2:1). ஆனால் மனுஷனோ தன்னுடைய மீறுதலின் மூலமாக தேவனுடைய பரிசுத்த கிரியையை மாசுபடுத்தி விடுகிறான். இயேசுகிறிஸ்து தமது மரணத்திலிருந்து மறுபடியும் உயிர்த்தெழும் வரையிலும் தேவனுடைய கிரியை மாசுபட்டதாகவே இருக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவே அந்த மாசுகளையெல்லாம் அகற்றி தேவனுடைய கிரியையை பரிசுத்தப்படுத்துகிறார். தேவனால் தேவனுக்காக சகலமும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் இயேசுகிறிஸ்துவுக்காக இப்போது மறுபடியும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
இயேசுகிறிஸ்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் உயிர்த்தெழுகிறார். தாம் மரித்து மூன்றாம் நாள் விடிந்து வரும்போது இயேசு உயிர்த்தெழுகிறார். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களை சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னத்திலிருந்து தோன்றிய அருணோதயம் முதலாம் நாள் விடிந்து வருகையில் நம்மை சந்தித்திருக்கிறது (லூக் 1:78). இயேசுகிறிஸ்து இரவு வேளையில் பாடுகளை அனுபவிக்க ஆரம்பிக்கிறார். சூரியன் அந்தகாரமடைகையில் இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். மாலைப்பொழுதில் இயேசுகிறிஸ்துவின் சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்படுகிறது. அடக்கம்பண்ணப்பட்ட அதே இயேசுகிறிஸ்து கல்லறையிலிருந்து சூரியன் விடிந்து வருகையில் உயிர்த்தெழுகிறார். இயேசுகிறிஸ்துவே மெய்யான ஒளியாகவும், மெய்யான வெளிச்சமாகவும் இருக்கிறார். அவரே பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம் (வெளி 22:16).
இயேசுகிறிஸ்து அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் கல்லறையில் மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் பார்க்க வருகிறார்கள். இவ்விருவரும் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம்பண்ணியபோது கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தவர்கள் (மத் 27:61). இந்த ஸ்திரீகள் இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தவர்கள். இயேசுகிறிஸ்துவின்மீது தங்களுக்குள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக இவர்கள் கல்லறைக்கு வந்திருக்கிறார்கள்.
கல்லறைக்கு எதிராக இவர்கள் உட்கார்ந்திருந்தாலும் இவர்களுடைய இருதயமெல்லாம் கல்லறைக்குள் அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் இயேசுகிறிஸ்துவைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. தம்முடையவர்கள்மீது கிறிஸ்து பிரியமாக இருப்பதுபோல, அவருடையவர்களும் அவர்மீது பிரியமாக இருக்கிறார்கள். கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் இயேசுகிறிஸ்து பரிசுத்தவான்களால் நேசிக்கப்படுகிறவர். அதுபோலவே கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் பரிசுத்தவான்களையும் இயேசுகிறிஸ்து நேசிக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கும் அவருடைய பரிசுத்தவான்களுக்கும் இடையிலுள்ள அன்பை கல்லறையினால் பிரிக்க முடியாது.
இந்த ஸ்திரீகள் கல்லறையை பார்க்க வந்ததாக மத்தேயு எழுதியிருக்கிறார். இவர்கள் இயேசுவின் சரீரத்திற்கு சுகந்தவர்க்கமிட வந்ததாக மற்ற சுவிசேஷங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அடக்கம் பண்ணப்பட்டிருக்கும் தங்கள் ஆண்டவர்மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக இந்த ஸ்திரீகள் மறுபடியுமாக கல்லறைக்கு வருகிறார்கள்.
பரிசுத்தவான்கள் அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் கல்லறைகளைப் போய் பார்ப்பது விசுவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிலும் விசேஷமாக இயேசுகிறிஸ்து அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் கல்லறையை நமது மனக்கண்களினால் அடிக்கடி தரிசிக்க வேண்டும். இயேசு அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் இடத்தில் நம்முடைய பாவங்களும் அடக்கம்பண்ணப்பட்டிருக்கும். அவர் அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் அந்த இருட்டறையில் தேவனுடைய இரட்சிக்கும் அன்பு வெளிச்சமாக பிரகாசிக்கும்.
கர்த்தருடைய தூதன்
அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்தி-ருந்திறங்கிவந்து, வாச--ருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது (மத் 28:2,3).
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழும்போது பூமி மிகவும் அதிர்கிறது. அவர் கல்வாரி சிலுவையில் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தபோதும் பூமி அதிர்ந்தது. கன்மலைகளும் பிளந்தது. இந்த பூமியதிர்ச்சி பயத்தினால் உண்டாயிற்று. ஏனெனில் தமது ஜீவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த இயேசுகிறிஸ்துவை அவரால் சிருஷ்டிக்கப்பட்ட பூமி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக பூமி பயத்தினால் அதிர்ந்தது. கன்மலைகளும் பயத்தினால் பிளந்தது. இப்போதோ இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்திருக்கிறார். அடக்கம்பண்ணப்பட்ட இயேசு இந்த பூமியிலிருந்து உயிர்த்தெழுந்து வந்ததினால் இந்த பூமி சந்தோஷத்தினால் அதிர்கிறது. பூமியின் அதிர்வு கிறிஸ்துவின் வெற்றிக்கு அடையாளமாகும். பரிசுத்தமாக்கப்பட்ட பரிசுத்தவான்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெறும்போது அவர்களுக்குள் பெரிய மாற்றங்கள் உண்டாகும். பூமியதிர்ச்சியின்போது ஏற்படும் கலக்கமும், அதிர்ச்சியும், அசைவும் உண்டாகும்.
கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வருகிறான். தூதர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு பல சமயங்களில் பணிவிடை செய்திருக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவித்தபோது ஒருதூதனும் அவருக்கு பணிவிடை செய்ய வரவில்லை. பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை கைவிட்டபோது, தேவதூதர்களும் கிறிஸ்துவை கைவிட்டுவிட்டு அகன்றுபோய்விடுகிறார்கள். இப்போதோ இயேசுகிறிஸ்து தமது மகிமையை மறுபடியும் பெற்றுக்கொள்கிறார். ஆகையினால் தேவனுடைய தூதர்கள் இயேசுகிறிஸ்துவை ஆராதிக்கிறார்கள்.
கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து கல்லறையின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கல்லை புரட்டி தள்ளி, அந்தக் கல்லின்மேல் உட்கார்ந்திருக்கிறான். நம்முடைய பாவங்களின் கல்லும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கல்லறையின் வாசல் பக்கமாக புரட்டி தள்ளப்பட்டிருக்கிறது. பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவின் நீதியை அங்கீகரித்து, வானத்திலிருந்து ஒரு தூதனை அனுப்பி, கல்லறையில் அடைக்கப்பட்டிருக்கும் கல்லை புரட்டி தள்ளுகிறார். மரணத்தின் எல்லா வல்லமைகளும், அந்தகாரத்தின் எல்லா வல்லமைகளும் தேவனுடைய ஆளுகைக்கு உட்படுத்தப்படுகிறது. தேவன் ஒளியாகவும் ஜீவனாகவும் இருக்கிறார். மரணமும் இருட்டும் ஒளியாலும் ஜீவனாலும் ஆளுகை செய்யப்படுகிறது.
வானத்திலிருந்து இறங்கி வந்திருக்கும் தூதனுக்கு முத்திரையை உடைக்கும் வல்லமைƒஉள்ளது. இயேசுகிறிஸ்துவின் கல்லறையை மூடப்பட்டிருக்கும் கல்லில் யூதமார்க்கத்தின் ஆலோசனைச்சங்கத்தார் முத்திரைபோட்டிருக்கிறார்கள். இந்த முத்திரை இஸ்ரவேலின் மகா முத்திரையாகும். முத்திரை போடப்பட்ட இந்தக் கல்லை புரட்டித்தள்ளும் வல்லமை கர்த்தருடைய தூதனுக்கு உள்ளது. இந்தக் கல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இதன்மீது போடப்பட்டிருக்கும் முத்திரை எவ்வளவு அதிகாரமுள்ளதாக இருந்தாலும் அதையெல்லாம் புரட்டிப்போடும் வல்லமை கர்த்தருடைய தூதனுக்கு உள்ளது.
கர்த்தருடைய தூதன் கல்லறையின் வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி அதன்மேல் உட்காருகிறான். தேவதூதன் கல்லின்மேல் உட்கார்ந்திருப்பது அங்கிருப்பவர்களுக்கு பிரத்தியட்சமாக தெரிகிறது. நரகத்தின் எல்லா அந்தகார வல்லமையையும் முறியடித்தவனாக கர்த்தருடைய தூதன் கல்லின்மேல் உட்கார்ந்திருக்கிறான். கல்லறைக்கு காவல் காப்பவன்போல இந்த தூதன் அந்தக்கல்லின்மீது அமர்ந்திருக்கிறான். அவனை பார்த்தவுடன் கல்லறையை காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளர் அவனுக்குப் பயந்து திடுக்கிட்டு, செத்தவர்கள் போலானார்கள். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றி அங்கு வரும் ஸ்திரீகளுக்கு தெளிவான அறிக்கையை கொடுப்பதற்கு கர்த்தருடைய தூதன் ஆயத்தமாக இருக்கிறான்.
இந்த தூதனுடைய ரூபம் மின்னலைப்போலவும் அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருக்கிறது. காவலாளர்கள்மீது இவன் பார்த்த பார்வை மின்னலைப்போல பிரகாசமாக இருந்திருக்க வேண்டும். ஆகையினால்தான் அவர்கள் பயத்தினால் திடுக்கிட்டு செத்தவர்கள் போலானார்கள். அவனுடைய வெண்மையான வஸ்திரம் பரிசுத்தத்திற்கும், சந்தோஷத்திற்கும், ஜெயத்திற்கும் அடையாளமாகும்.
இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தபோது பரலோகத்தில் மிகுந்த துக்கம் உண்டாயிற்று. இதன் அடையாளமாக சூரியன் அந்தகாரமடைந்தது. அவர் உயிர்த்தெழுந்தபோதோ தேவதூதர்கள் எல்லோரும் துதியின் வஸ்திரங்களை மறுபடியுமாக தரித்துக்கொள்கிறார்கள். தேவதூதனுடைய மகிமை கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்து மறுரூபமானபோது அவருடைய முகம் சூரியனைப்போல பிரகாசித்தது. அவருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று (மத் 17:2).
காவலாளர்
காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள் (மத் 28:4).
காவலாளர் பொதுவாக வீரர்களாக இருப்பார்கள். அவர்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள். அவர்களுடைய இருதயம் கடினமாக இருக்கும். அஞ்சா நெஞ்முடையவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் கர்த்தருடைய தூதனைப் பார்த்தவுடன் பயத்தினால் திடுக்கிட்டு செத்தவர்கள் போலாகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவருடைய சிநேகிதர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அவர்களுடைய சத்துருக்களுக்கோ திகிலாகவும், பயங்கரமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. இந்த வசனத்தில் அவர்கள் ""பயந்ததினால் திடுக்கிடுகிறார்கள்'' என்னும் வாக்கியத்திற்கு ""பூமியதிர்ச்சிக்கு'' பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூமி அதிர்வதுபோல காவலாளர்கள் பயத்தில் அதிர்ந்துவிடுகிறார்கள்.
இந்த பூமி அதிரும்போது, இந்த உலகத்தின் பிள்ளைகள் தங்கள் பங்கிற்கு பூமியோடு சேர்ந்து இவர்களும் அதிருவார்கள். ஆனால் தங்கள் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் பரலோகத்தின்மீது வைத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகள் பூமி நிலைபெயர்ந்தாலும் பயப்படமாட்டார்கள்.
கல்லறையில் வைக்கப்பட்டிருக்கும் இயேசுகிறிஸ்துவின் சரீரத்திற்கு காவல் புரிவதற்காக இந்த காவலாளர்கள் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது மிகவும் எளிதான வேலை. கல்லறைக்கு யாரும் வரமாட்டார்கள் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் சரீரமும் தப்பித்து ஓடிவிடாது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் கல்லறைக்கு காவல்புரிவது எளிதான வேலையல்ல. இந்த வேலை காவலாளருக்கு மிகவும் கடினமான வேலையாயிற்று. தாங்கள் வேலையிலிருக்கும்போதே தேவதூதனைப் பார்த்து, பயந்து, திடுக்கிட்டு, செத்தவர்கள் போலானார்கள்.
தேவனுக்கு முன்பாகத் திடுக்கிட்டவர்கள்
1. எலிப்பாஸ் (யோபு 4:14)
2. மோசே (எபி 12:21)
3. எசேக்கியேல் (எசே 12:18)
4. பல புருஷர்கள் (தானி 10:5#7)
5. காவலாளர் (மத் 28:4)
6. பவுல் (அப் 9:6)
7. சிறைச்சாலைக்காரன் (அப் 16:29)
செத்தவர்கள்போல இருந்தவர்களுக்கு எடுத்துக்காட்டுக்கள்
1. ஆபிரகாம் (ஆதி 15:12#17)
2. மோசே (உபா 9:18,25)
3. எசேக்கியேல் (எசே 1:28; எசே 3:23; எசே 4:4#17; எசே 43:3)
4. தானியேல் (தானி 8:17; தானி 10:5#19)
5. சீஷர்கள் (மத் 17:6)
6. காவலாளர் (மத் 28:4)
7. பவுல் (அப் 9:4)
8. பேதுரு (அப் 10:10#16)
9. யோவான் (வெளி 1:17; வெளி 19:10; வெளி 22:8)
பயப்படாதிருங்கள்
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன் (மத் 28:5).
கல்லறைக்கு தனிமையாகவும், அமைதியான சூழ்நிலையிலும் வருவதற்கு பயமாகவே இருக்கும். ஆண்கள் கல்லறைக்கு துணிச்சலோடு சென்றாலும், ஸ்திரீகள் அங்கு செல்வதற்கு பயப்படுவார்கள். இயேசுகிறிஸ்துவின் கல்லறையை பார்க்க வந்த ஸ்திரீகள், கல்லின்மேல் உட்கார்ந்திருக்கும் கர்த்தருடைய தூதனை காண்கிறார்கள். அவனை பார்த்து பயப்படுகிறார்கள். கர்த்தருடைய தூதன் அவர்களிடம் ""பயப்படாதிருங்கள்'' என்று ஆறுதலாக கூறுகிறான். இதே தூதனை காவலாளர்கள் பார்த்தபோது, அவனுக்கு பயந்து திடுக்கிட்டு செத்தவர்கள் போலானார்கள். ஆனால் அந்த தூதன் இந்த ஸ்திரீகளைப் பார்த்தோ ""பயப்படாதிருங்கள்'' என்று அன்போடு கூறுகிறான்.
தூதனுடைய வார்த்தை இந்த ஸ்திரீகளுக்கு ஆறுதலாகவே இருக்கிறது. ஏனெனில் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவருக்கு காத்திருப்பவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை இந்த ஸ்திரீகள் தேடுகிறார்கள் என்பதை கர்த்தருடைய தூதன் அறிந்திருக்கிறான். இவர்களை பயமுறுத்துவதற்காக தூதன் வரவில்லை. அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே வந்திருக்கிறான். கிறிஸ்துவை தேடுகிறவர்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை. அவரை உண்மையான மனதோடு தேடுகிறவர்கள் அவரை கண்டுகொள்வார்கள்.
இந்த ஸ்திரீகள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை தேடுகிறார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டபோதிலும் இந்த ஸ்திரீகள் அவரை தேடி வந்திருக்கிறார்கள். இயேசுவின்மீது இவர்கள் வைத்திருக்கும் அன்பு பெரியது. இயேசுகிறிஸ்துவின்மீது உண்மையான அன்பு வைத்து அவரை தேடுகிறவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவின்மீதும் அன்பு கூருவார்கள். அவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களையெல்லாம் மனதில் ஏற்றுக்கொள்ளாமல், இயேசுவை மாத்திரமே தங்கள் மனதில் ஏற்றுக்கொள்வார்கள்.
இயேசு இங்கே இல்லை
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; (மத் 28:6).
இயேசு உயிர்த்தெழுந்ததை கர்த்தருடைய தூதன் அங்கு வந்திருக்கும் ஸ்திரீகளுக்கு உறுதிபண்ணுகிறான். அவர்களுடைய பயத்தை போக்குவதற்கு இந்த ஆறுதலான செய்தியே போதுமானதாக இருக்கும். இயேசுகிறிஸ்து இந்த கல்லறையில் இல்லை என்று அறிவிக்கிறான். இந்த ஸ்திரீகள் இயேசுகிறிஸ்துவை பார்ப்பதற்காகவே இந்த கல்லறைக்கு வந்திருக்கிறார்கள். அவர் இங்கே இல்லை என்று கேள்விப்படும்போது ஸ்திரீகளுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். அந்த ஏமாற்றத்தை நீக்கி அவர்களுக்கு ஆறுதல் கொடுப்பதற்காக ""தாம் சொன்னபடியே இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார்'' என்று தேவதூதன் அறிவிக்கிறான். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி அந்த ஸ்திரீகளுக்கு அறிவிக்கப்படவில்லையென்றால் அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பார்கள்.
இக்காலத்தில் இயேசு இங்கே இருக்கிறார் என்றும், அவரை அங்கே இருக்கிறார் என்றும் பலர் கூறுகிறார்கள். ஆனால் அவரோ இங்கேயும் இல்லை, அங்கேயும் இல்லை. அவர் தாம் சொன்ன பிரகாரமாக உயிர்த்தெழுந்துவிட்டார். நாம் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவைத்தான் தேடிப்பார்க்கவேண்டும். ஒரு சிலர் இயேசுகிறிஸ்துவின் படத்தை கண்ணாடி சட்டத்தில்போட்டு சுவற்றில் ஆணியடித்து தொங்கவிடுகிறார்கள். இயேசு இந்த சுவற்றில் தொங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் இயேசு இந்த படத்தில் இல்லை. அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். நாம் தேவனோடு ஆவிக்குரிய ரீதியாக ஐக்கியம் வைத்திருக்கவேண்டும். அவருடைய வசனத்தை விசுவாசித்து அவருக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். மிகுந்த பயபக்தியோடும் மனத்தாழ்மையோடும் அவரை தேடிப்பார்க்கவேண்டும். அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார். இதனால் அவருடைய மகிமை வெளிப்படுகிறது.
நாம் இயேசுகிறிஸ்துவை தேடும்போது நமது சிந்தை பரலோகத்திற்கேற்ற பிரகாரமாக இருக்கவேண்டும். இந்த உலகம்தான் நம்முடைய வீடு என்று முடிவு பண்ணிவிடக்கூடாது. நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் காலம் வரையிலும் நாம் இந்த பூமியில் இருப்போம். இயேசுகிறிஸ்து இந்த பூமியில் இருந்தால் நன்றாக இருக்குமென்று நாம் விரும்புவோம். ஆனால் அவர் இங்கே இல்லை. இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார். இயேசுவை தேடுகிற நமது இருதயம் இந்த உலகத்தை மாத்திரம் சுற்றி பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. நமது இருதயமும் உயிர்த்தெழவேண்டும். உன்னதத்திலிருக்கிற தேவனை நோக்கி பார்க்கவேண்டும்.
கர்த்தருடைய தூதன் இந்த ஸ்திரீகளிடம் பேசும்போது இரண்டு காரியங்களை கூறி அவர்களுடைய விசுவாசத்தை உறுதிபடுத்துகிறான். இயேசுகிறிஸ்து தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் என்று அறிவிக்கிறான். இயேசுகிறிஸ்துவின் வார்த்தை நிறைவேறியிருக்கிறது. இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தைகளை இந்த ஸ்திரீகள் மறந்துவிடாமல் நினைவில் வைத்திருப்பார்கள். தாம் உயிர்த்தெழப்போவதாக இயேசுகிறிஸ்து ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். அவர் கூறியதை நாம் விசுவாசிக்கவேண்டும். தேவனுடைய வார்த்தை நிச்சயமாகவே நிறைவேறும். நாம் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாகவே நிறைவேறும்.
தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது நமது நம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களும் கிறிஸ்துவின் வார்த்தைக்கு ஏற்ற பிரகாரமாக உயரவேண்டும். இயேசுகிறிஸ்து நமக்காக வாக்குத்தத்தம்பண்ணியிருக்கும் காரியங்கள் நமது ஜீவியத்தில் நிறைவேறும்போது, நாம் ஆச்சரியப்படக்கூடாது. ஏனெனில் நமக்கு என்ன செய்வதாக இயேசுகிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கிறாரோ அதையே அவர் நமக்காக செய்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு அவருடைய கல்லறை காலியாக இருக்கிறது. கர்த்தருடைய தூதன் அந்த ஸ்திரீகளைப் பார்த்து ""கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்'' என்று அழைக்கிறான். நாம் கேட்டதையும், பார்த்ததையும் இணைத்து நமது விசுவாசத்தை திடப்படுத்திக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழப்போவதை இந்த ஸ்திரீகள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறார்கள். இப்போது அவர் வைத்த இடத்தை இந்த ஸ்திரீகள் தங்கள் கண்களால் பார்க்கப்போகிறார்கள். அந்த இடத்தில் இயேசுகிறிஸ்து இல்லை என்பதை அவர்கள் பார்த்து உறுதிபண்ணுவார்கள். அப்போது அவர்களுடைய விசுவாசம் மேலும் பலப்படும்.
நாம் கல்லறையை பார்க்கும்போது பயந்து விடக்கூடாது. கல்லறையில் ஒருநாள் நாமும் அடக்கம்பண்ணப்படுவோம் என்னும் தெளிந்த சிந்தனை நமக்குள் இருக்கவேண்டும்.
சீஷர்களுக்கு சொல்லுங்கள்
சீக்கிரமாய் போய், அவர் மரித்தோரி-ருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே க-லேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான் (மத் 28:7).
இயேசுகிறிஸ்துவை கல்லறையில் வைத்த இடத்தை காண்பிப்பதற்கு கர்த்தருடைய தூதன் அந்த ஸ்திரீகளை கல்லறைக்குள் அழைத்துச் செல்கிறான். அங்கு அவர் இல்லை. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார். இந்த நற்செய்தியை கிறிஸ்துவின் சீஷர்களிடம் அறிவிக்குமாறு கர்த்தருடைய தூதன் அந்த ஸ்திரீகளுக்கு கூறுகிறான். ""சீக்கிரமாய் போய் அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்'' என்று கூறுகிறான்.
இயேசுகிறிஸ்து வைக்கப்பட்ட கல்லறையில் அமர்ந்திருந்து அவரை பற்றி தியானித்துப் பார்ப்பது இந்த ஸ்திரீகளுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கோ ஒரு கடமை நியமிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவம் இவர்களுக்கு மாத்திரம் தெரிந்தால் போதாது. எல்லோருக்கும் தெரியவேண்டும். இந்த ஸ்திரீகள் மாத்திரம் சந்தோஷமாக இருந்தால் போதாது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கவேண்டும். ஆகையினால் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை அவருடைய சீஷர்களுக்கு சொல்லுமாறு கர்த்தருடைய தூதன் அந்த ஸ்திரீகளை சீக்கிரமாய் போகச்சொல்லுகிறான். தேவனோடு நாம் தனிமையாக இருந்து அவரோடு ஐக்கியமாக இருப்பது நமது ஆத்துமாவிற்கு நல்லது. அதே வேளையில் கர்த்தருடைய சமுகத்தில் எல்லோரும் வந்து அவரை ஆராதிப்பதற்கு நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கடமைகளையும் நிறைவேற்றவேண்டும்.
இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார். இந்த சத்தியம் கிறிஸ்துவின் சீஷர்களுக்கு முதலாவதாக அறிவிக்கப்படுகிறது. கர்த்தருடைய தூதன் ஸ்திரீகளைப்பார்த்து, பிரதான ஆசாரியரிடத்திலும் பரிசேயரிடத்திலும் கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று சொல்லுமாறு அவர்களை அனுப்பவில்லை. கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை இவர்கள் கேட்டால் இவர்களுக்கு கோபமும் பொறாமையும்தான் உண்டாகும். ஆனால் கிறிஸ்துவின் சீஷர்களுக்கோ அவர் உயிர்த்தெழுந்ததை கேட்கும்போது அவர்களுக்கு ஆறுதல் உண்டாகும். ஆகையினால் அவர் உயிர்த்தெழுந்த செய்தியை முதலாவதாக அவர்களுக்கே அறிவிக்குமாறு கர்த்தருடைய தூதன் கூறுகிறான். தம்முடைய சத்துருக்களின் அவமானத்தைவிட, தம்முடைய சிநேகிதரின் சந்தோஷத்தையே இயேசுகிறிஸ்து அதிகமாக விரும்புகிறார்.
இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் இப்போது வருத்தத்திலும், துன்பத்திலும், துயரத்திலும், விரக்தியிலும் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி இவர்களுக்கு அறிவிக்கப்பட்டால் இவர்களுக்கு ஆறுதல் உண்டாகும். உற்சாகம் பிறக்கும். சீஷர்கள் பயத்திலும் துக்கத்திலும் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி அவர்களுடைய பயத்தைப் போக்கும்.
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி சீஷர்களுக்கு அறிவிக்கப்படும்போது, அவர்களும் இயேசுவை சந்திப்பதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்துவை நாம் நெருக்கமாக கிட்டிச் சேரும்போது அவரைப்பற்றிய ரகசியங்கள் நமக்கு அதிகமாக வெளிப்படுத்தப்படும். இப்போது இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததைப் பற்றி தங்கள் காதுகளால் கேள்விப்படப்போகும் சீஷர்கள், வெகு விரைவில் தங்கள் கண்களால் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்துவைத் தரிசிக்கப்போகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு அவர் மரித்தோரிலிருந்து எழுந்த செய்தியை அறிவிக்கும் சிலாக்கியம் இந்த ஸ்திரீகளுக்கே கொடுக்கப்படுகிறது. இவர்கள் இயேசுகிறிஸ்துவை கலிலேயாவிலிருந்து அவர் சிலுவையில் அறையப்பட்ட ஸ்தலத்திற்கும், அதன்பின்பு அவரை அடக்கம்பபண்ணப்பட்ட கல்லறைக்கும் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின்மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை மறுதலியாமல் தங்கள் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதியாக இருக்கிறார்கள். கிறிஸ்துவின் சீஷர்களோ அவரை கைவிட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். ஆகையினால் இந்த ஸ்திரீகளுக்கு சிலாக்கியம் உண்டாக, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிய நற்செய்தியை முதலாவதாக அறிவிக்கும் பாக்கியம் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
ஏதேன் தோட்டத்தில் கர்த்தருடைய கட்டளைக்கு ஸ்திரீயே முதலாவதாக கீழ்ப்படியாமல் மீறினாள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாக தங்கள் மீறுதல்களுக்கு மன்னிப்பு உண்டாகும் என்பதை இந்த ஸ்திரீகளே முதலாவதாக விசுவாசிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிய ரகசியம் இந்த ஸ்திரீகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட பின்பே, கிறிஸ்துவின் சீஷர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை சீஷர்களுக்கு அறிவிப்பதற்காக இந்த ஸ்திரீகள் சீக்கிரமாக போகவேண்டும். இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் நாம் சோர்வாக இருக்கக்கூடாது. விரைந்து செயல்படவேண்டும். கர்த்தருடைய நற்செய்தியை எப்போது அறிவித்தாலும் ஒன்றுதான் என்று அமைதியாக இருந்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் சீஷர்கள் இப்போது பயத்தினாலும் துக்கத்தினாலும் நிரம்பியிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தார் என்னும் நற்செய்தியே அவர்களுடைய பயத்தையும் துக்கத்தையும் நீக்கும். அந்த நற்செய்தியை காலதாமதம் பண்ணாமல் அறிவித்து, அவர்களுக்கு ஆறுதல்பண்ணவேண்டுமென்று கிறிஸ்து விரும்புகிறார். நமது சகோதரருக்கு நன்மை செய்ய நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். நாம் செய்வதை விரைந்து செய்யவேண்டும். காலதாமதம் பண்ணுவது நல்லதல்ல. ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் நேர்த்தியாக செய்து முடித்துவிடவேண்டும்.
கிறிஸ்துவின் சீஷர்கள் கலிலேயாவுக்குப் போய் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவை காணவேண்டும். இவர்கள் அங்கு போவதற்கு முன்பாகவே இயேசுகிறிஸ்து அங்கே போகிறார். கலிலேயா எருசலேமிலிருந்து சுமார் நூறு மைல் தூரத்திலுள்ளது. சீஷர்கள் இயேசுகிறிஸ்துவை கலிலேயாவில் காண்பார்கள் என்னும் வாக்கியத்திற்கு வேதபண்டிதர்கள் இரண்டுவிதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள். அவையாவன :
1. சீஷர்கள் இப்போது கலிலேயாவிலேயே இருக்கிறார்கள். அவர்களால் எருசலேமுக்கு வரமுடியவில்லை. அவர்கள் பயந்துபோய் கலிலேயாவிலேயே தங்கிவிடுகிறார்கள். தம்முடைய சீஷர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து வைத்திருக்கிறார். அவர்கள் இருக்கும் இடத்திற்கே இயேசு போகிறார். நாமும் இயேசுகிறிஸ்துவின் கிருபைக்கு தூரமாக இருந்தாலும், அவர் நம்மை தேடி வந்து விசாரித்து, தமது கிருபையை நமக்கு வெளிப்படுத்துவார்.
2. சீஷர்கள் இப்போது எருசலேமிலே இருக்கிறார்கள். பயத்தோடும், நடுக்கத்தோடும், திகிலோடும் எருசலேமின் வீதிகளிலே வெளியே வராமல், ஏதோ ஒரு வீட்டிற்குள் ஒளிந்திருக்கிறார்கள். இவர்கள் இன்னும் யூதர்களுக்கு பயப்படுகிறார்கள். ஆலோசனைச்சங்கத்தார் தங்களையும் பிடித்துக்கொள்வார்களோ என்று பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்கள். சீஷர்களின் பயத்தை இயேசு அறிந்து வைத்திருக்கிறார். ஆகையினால் அவர்களை எருசலேமிலிருந்து வெளியேற்றி அவர்களுக்கு பாதுகாப்பான கலிலேயாவுக்கு போகுமாறு கூறுகிறார். இயேசுகிறிஸ்து நம்முடைய குறைபாடுகளை அறிந்திருக்கிறார். ஆகையினால் ஆபத்தான சூழ்நிலைகளில் நம்மை நிறுத்தாமல், அந்த ஆபத்துக்களிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான சூழ்நிலைகளில் நம்மை நிறுத்துகிறார். நம்முடைய நன்மையை அவர் விசாரிக்கிறவர்.
கர்த்தருடைய தூதன் ஸ்திரீகளிடம் தன்னுடைய வார்த்தையை உறுதிபண்ணுகிறான். ""இதோ உங்களுக்குச் சொன்னேன்'' என்று அறிவிக்கிறான். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை சீஷர்களுக்கு அறிவித்து உறுதிபண்ணுவதற்காக இந்த தூதன் அனுப்பப்பட்டிருகிறான். தான் அனுப்பப்பட்ட காரியத்தை ""இதோ உங்களுக்கு சொல்லிவிட்டேன்'' என்று அறிவிக்கிறான். இவன் கர்த்தரிடமிருந்து வந்திருக்கும் தூதன். தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் செய்தியை உண்மையாக அறிவித்துவிடுகிறான். இந்த தூதனைப்போலவே நாமும் கர்த்தர் நம்மிடம் கொடுத்திருக்கும் சுவிசேஷத்தின் நற்செய்தியை ஜனங்களுக்கு உண்மையோடு அறிவிக்கவேண்டும்.
பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும்
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள் (மத் 28:8).
ஸ்திரீகள் கல்லறையை விட்டு புறப்பட்டுப் போகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் பயமும் மகா சந்தோஷமும் நிறைந்திருக்கிறது. ஒரே வேளையில் ஒரே ஆத்துமாவில் பயமும் சந்தோஷமும் கலந்திருக்கிறது. இது ஒரு விநோதமான கலப்பு. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதைக் கேட்டபோது ஸ்திரீகளுக்கு சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் இயேசுகிறிஸ்துவின் கல்லறைக்குப் போவதும், கர்த்தருடைய தூதனைப் பார்ப்பதும், இயேசுகிறிஸ்துவின் மரணத்தைக்குறித்து பேசுவதும் அவர்களுக்கு பயத்தை உண்டாக்கிற்று.
இயேசுகிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பது ஒரு நல்ல செய்தி. ஆனால் இது மிகவும் நல்ல செய்தியாக இருப்பதினால், இது உண்மையாக இருக்கவேண்டுமே என்னும் பயம் அவர்களுடைய உள்ளத்தை நிரப்பிற்று. அவர்களுடைய சந்தோஷம் சாதாரண சந்தோஷமல்ல. அவர்கள் மகா சந்தோஷத்தினால் நிரம்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பயமோ சாதாரண பயம்தான். அது மகா பயம் என்று இங்கு குறிப்பிடப்படவில்லை. பரிசுத்தமான பயத்தோடு சந்தோஷமும் சேர்ந்திருக்கும். பூரணமான அன்பும் சந்தோஷமும் பயத்தை புறம்பே தள்ளும்.
ஸ்திரீகள் கல்லறையைவிட்டு சீக்கிரமாய் புறப்பட்டுப் போகிறார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க இந்த ஸ்திரீகள் ஓடுகிறார்கள். பயமும் சந்தோஷமும் அவர்களுடைய வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. விரைவாக செயல்படுகிறார்கள். தேவனுடைய செய்தியை அறிவிக்கச் செல்லுகிறவர்கள் விரைந்து செல்லவேண்டும். அங்கும் இங்கும் தேவையில்லாமல் சுற்றிக்கொண்டு பொழுதைப் போக்கக்கூடாது.
ஸ்திரீகள் நற்செய்தியை அறிவிக்க ஓடுகிறார்கள். தங்களை ஆறுதல்படுத்திய அதே செய்தியை இயேசுவின் சீஷர்களுக்கும் அறிவித்து அவர்களை ஆறுதல்படுத்துவதற்காக ஓடுகிறார்கள். இந்த ஆறுதல் தேவனுடைய ஆறுதலாகும். இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகள் தங்களுடைய ஆவிக்குரிய அனுபவங்களை தங்களுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளாமல், மற்றவர்களுக்கும் அறிவிக்கவேண்டும். தங்கள் ஆத்துமாக்களுக்கு தேவன் செய்திருக்கும் நன்மையான காரியங்களை மற்றவர்களுடைய பக்திவிருத்திக்காக அவர்களுக்கு அறிவிக்கவேண்டும். கிறிஸ்துவுக்குள் நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்று நினைத்து, அந்த சந்தோஷத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் அதை நமக்கென்று வைத்துக்கொள்ளக்கூடாது. அது சுயநலம்.
வாழ்க
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள் (மத் 28:9).
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நற்செய்தியை சீஷர்களுக்கு அறிவிக்க ஸ்திரீகள் வேகமாக ஓடுகிறார்கள். அப்போது இயேசுகிறிஸ்து தாமே அவர்களுக்கு எதிர்ப்படுகிறார். கர்த்தருடைய தூதனால் அறிவிக்கப்பட்ட வார்த்தையை இயேசுகிறிஸ்து உறுதிபண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நற்செய்தியை இந்த ஸ்திரீகளே முதலாவதாக தங்கள் காதுகளால் கேட்கிறார்கள். இந்த ஸ்திரீகளே இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு அவரை முதலாவதாக தங்கள் கண்களால் காண்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து பல சமயங்களில் தாம் வாக்குத்தத்தம் பண்ணியதற்கும் அதிகமாக நன்மை செய்கிறவர். அவர் ஒருவருக்கும் தீங்கு செய்கிறவரல்ல. கர்த்தருடைய பிள்ளைகள் அவருக்காக காத்திருக்கும்போது சோர்ந்து போகக்கூடாது. ஏற்றவேளையில் கர்த்தருடைய கரங்களிலிருந்து நன்மையை பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசத்தோடு காத்திருக்கவேண்டும்.
ஸ்திரீகள் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களுக்கு அவர் உயிர்த்தெழுந்த நற்செய்தியை அறிவிக்கப்போகிறபோது இயேசுதாமே அவர்களுக்கு எதிர்ப்படுகிறார். நாம் தேவனுக்காக கிரியை செய்யும்போது தேவன் தமது கிருபையினால் நம்மை சந்திப்பார். நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது தேவன் நம்மோடு பேசுவார். இந்த ஸ்திரீகள் கர்த்தருடைய நற்செய்தியை அறிவிப்பதற்காக வேகமாக போகிறார்கள். அவர்களை இயேசுகிறிஸ்து சந்திக்கிறார். இந்த சந்திப்பை ஸ்திரீகள் எதிர்பார்க்கவில்லை. நாம் எதிர்பார்ப்பதற்கும் அதிகமாக நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு அருகாமையில் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவைப் போலவே அவருடைய வார்த்தையும் நமக்கு அருகாமையில் இருக்கிறது.
இயேசுகிறிஸ்து இந்த ஸ்திரீகளைப் பார்த்து ""வாழ்க'' என்று கூறுகிறார். வாழ்க என்னும் வார்த்தைக்கு ""எல்லா நலமும் பெற்று சகல ஆரோக்கியத்தோடும் இருப்பீர்களாக'' என்பது பொருளாகும். இயேசுகிறிஸ்து நம்மை வாழ்த்தும்போது நமக்கும் நமது சந்தோஷத்திற்கும் அவர் தமது நன்மையை தருகிறார். இயேசு தமது சீஷர்களை சிநேகிதர்களே என்று அழைக்கிறார். அவருடைய பரிசுத்தமான சமுகத்தில் அவரோடு ஐக்கியமாக இருக்கவும், அவரை கிட்டிச் சேரவும் நமக்கு சிலாக்கியம் கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து நம்மை வாழ்க என்று வாழ்த்தும்போது அவர் நமக்கு அருகாமையில் வருகிறார்.
இந்த வசனத்தில் இயேசுகிறிஸ்து ஸ்திரீகளை ""வாழ்க'' என்று வாழ்த்தும் கிரேக்க வார்த்தைக்கு ""நீங்கள் சந்தோஷமாக இருங்கள், நீங்கள் மகிழ்ந்து களிகூருங்கள்'' என்று பொருள். இந்த ஸ்திரீகள் பயத்தோடும் சந்தோஷத்தோடும் இருக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ இந்த ஸ்திரீகளிடம், பயத்தை அகற்றிப்போட்டு சந்தோஷத்தினால் நிறைந்திருங்கள் என்று கூறுகிறார். கர்த்தருக்குள் சந்தோஷப்படும்போது நம்முடைய பயம் நம்மைவிட்டு அகன்றுபோகும்.
இயேசுகிறிஸ்து ஸ்திரீகளிடம் ""பயப்படாதிருங்கள்'' என்று கூறுகிறார். கர்த்தருடைய பிள்ளைகள் சந்தோஷத்தோடு மகிழ்ந்து களிகூரவேண்டுமென்பது கர்த்தருடைய சித்தமாகும். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாக அவருடைய பிள்ளைகளுக்கு அளவற்ற ஆனந்த சந்தோஷம் உண்டாகிறது.
இயேசுகிறிஸ்து தங்களை ""வாழ்க'' என்று வாழ்த்தியவுடன் ஸ்திரீகள் அவருக்கு கிட்ட வருகிறார்கள். அவர் பாதங்களை தழுவி அவரை பணிந்துகொள்கிறார்கள். தங்களுடைய பக்தியையும் மரியாதையையும் கிறிஸ்துவுக்கு காண்பிக்கிறார்கள். கிறிஸ்துவின்மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பையும் நேசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் பாதங்களை ஸ்திரீகள் தழுவிக்கொண்டு, அவரை அதற்குமேல் எங்கும் போகவிடாதவாறு, அவருடைய பாதங்களை பிடித்துக்கொள்கிறார்கள். ஸ்திரீகளின் சந்தோஷம் பொங்கிவழிகிறது. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து விட்டார் என்று கர்த்தருடைய தூதன் அறிவித்தான். அந்த சத்தியத்தை இப்போது இயேசுகிறிஸ்து தாமே தமது பிரத்தியட்சமான தரிசனத்தின் மூலமாக நிரூபித்திருக்கிறார்.
பயப்படாதிருங்கள்
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் க-லேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார் (மத் 28:10).
இயேசுகிறிஸ்து ஸ்திரீகளுக்கு எதிர்ப்பட்டு அவர்களை வாழ்க என்று வாழ்த்துகிறார். ஆனால் அந்த ஸ்திரீகளோ இயேசுவுக்கு பிரதியுத்தரமாக ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவர்கள் கிறிஸ்துவின் பாதங்களை தழுவுகிறார்கள். அவரை பணிந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு வார்த்தையும் பேசமுடியவில்லை. கர்த்தருடைய தூதன் சொன்ன அதே வார்த்தைகளையே இங்கு இயேசுகிறிஸ்துவும் கூறுகிறார்.
இயேசு ஸ்திரீகளைப் பார்த்து ""பயப்படாதிருங்கள்'' என்று கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிய செய்தி விநோதமாக இருந்தாலும் அது மெய்யான செய்தியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது. ஜனங்களுடைய பயத்தை போக்குவதற்காக இயேசுகிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார். அவர் உயிர்த்தெழுந்ததே ஜனங்களை அமைதிப்படுத்துவதற்கு போதுமானது.
கர்த்தருடைய தூதன் சொன்ன செய்தியை இங்கு இயேசுகிறிஸ்து மறுபடியுமாக கூறுகிறார். ""நீங்கள் போய், என் சகோதரருக்கு சொல்லுங்கள்'' அவர்கள் கலிலேயாவுக்குப் போக ஆயத்தமாகவேண்டும். அங்கு அவர்கள் இயேசுவைக் காண்பார்கள். நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்கும்போது, அவர் நம்மை சந்திப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவார். அதற்குச் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி தருவார்.
இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை கலிலேயாவுக்கு போகும்படி சொல்லுகிறார். அவர்கள் கலிலேயாவுக்கு வரும்போது இயேசு நிச்சயமாகவே அவர்களை சந்திப்பார். இயேசு தம்முடைய சீஷர்களை ""என் சகோதரர்'' என்று அழைக்கிறார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழும் வரையிலும் அவர் தம்முடைய சீஷர்களை சகோதரரே என்று அழைக்கவில்லை. இந்த வசனத்திலும், யோவா 20:17#ஆவது வசனத்திலும் மாத்திரமே இயேசு தமது சீஷர்களை சகோதரர் என்று அழைக்கிறார். தமது மரணத்திற்கு முன்பு இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடு எப்படி அந்நியோநியமாகவும் திடமாகவும் பேசினாரோ அதுபோலவே அவர் உயிர்த்தெழுந்த பின்பும் பேசுகிறார். கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய வேதனையான வேளையில் அவரை விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவர்களை விட்டு விலகிப்போய் விடவில்லை. அவர்களை தமது சகோதரராக பாவித்து, கலிலேயாவிலே அவர்களை சந்திப்பதற்கு சித்தங்கொண்டிருக்கிறார்.
காவல்சேவகர்
அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள் (மத் 28:11).
இவர்கள் மூப்பரோடே கூடவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: நாங்கள் நித்திரை பண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள் (மத் 28:12#14).
அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிற்று (மத் 28:15).
இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் கெத்செமனே தோட்டத்தில் அவரை விட்டு ஓடிப்போனார்கள். தங்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம் இயேசுவை விட்டு விலகியே இருந்தார்கள். அவர்களுடைய பாவங்களை இயேசு கிறிஸ்து மன்னித்து விட்டதற்கு அடையாளமாக அவர்களைச் ""சகோதரர்'' என்று அழைக்கிறார்.
நடந்த யாவற்றையும்
அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள் (மத் 28:11).
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அவருடைய சத்துருக்கள் விரோதமாகவே செயல்படுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் கல்லறையை காவல்புரிந்த காவலாளர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவுக்கு சத்துருக்களாக இருக்கிறார்கள். பிரதான ஆசாரியரும், மூப்பரும், காவலாளரும் சேர்ந்து உண்மைக்கு புறம்பாக யோசனை பண்ணுகிறார்கள்.