ரோமசபைக்கு எழுதப்பட்ட கடிதம் Letter to the Church of Rome

0





ரோமசபைக்கு எழுதப்பட்ட கடிதம்



1. எழுதிய ஆசிரியர்: பவுல்

பவுலைக்குறித்த சில விபரங்கள்

பவுல் முதலாவதாக சவுல் என்று அழைக்கப்பட்டார். வசதிபடைத்த தர்சு பட்டணத்திலே ஒரு வசதியான குடும்பத்தில் இவர் வாழ்ந்தார். சிறிய கோத்திரமாகிய பென்யமீன் கோத்திரத்தில் பிறந்தவர். பவுலின் தகப்பன் ரோமக்குடியுரிமையை உடையவராக இருந்தபடியால், பவுல் யூதனாக மாத்திரமல்ல, ரோமக்குடியுரிமை பெற்றவராகவும் இருந்தார். இவர் ஒரு பரிசேயன், கமாலியேல் என்ற தத்துவஞானியிடம் கல்வி கற்றவராவார்.

அப்-22: 3 நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேனின் பாதத்தருகே வளர்ந்து, முன்ணனோர்களுடைய வேதப் பிரமாணத்தின் படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாய் இருக்கிறது போல நானும் வைராக்கியம் உள்ளவனாய் இருந்தேன்.

அப்-5: 34 அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன்.

அப்-16: 37 அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்.

பிலி-3: 5 நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் அடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரேயரில் பிறந்த எபிரேயன், நியாயப் பிரமாணத்தின் படி பரிசேயன்.

மோசேயின் நியாயப் பிரமாணத்தில் நன்கு கற்பிக்கப்பட்ட ஒரு பரிசேயனாக, கிறிஸ்துவை அறியாத நாட்களில் ஆதிசபையைத் துன்புறுத்துவதில் சவுல் தீவிரமாகச் செயல்பட்டார். ஸ்தேவான் கல்லால் எறிந்து கொல்லப்பட்ட சம்பவதின்போது சவுலை முதலாவதாக பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து மரித்த ஒருசில வருடங்களுக்குள் பவுல் இரட்சிக்கப்பட்டார். தேவன் சவுலைப் பவுலாக மாற்றி சபைகளை உருவாக்குபவராகவும், சபைகளைத் திடப்படுத்துபவராகவும் பயன்படுத்தினார். அதன் விளைவாக எழுதப்பட்டவைகள்தான் புதிய ஏற்பாட்டிலுள்ள அவருடைய 13 நிரூபங்களாகும்.

அப்-7: 58 சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்.

அப்-8: 1, 3 அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். 3. சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரிகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான்.

பவுலின் தோராயமான வருடங்கள்:

கி.பி.33 கிறிஸ்துவால் சந்திக்கப்பட்டது

கி.பி.36 எருசலேமிற்கு முதன்முறை செல்லுதல்

கி.பி.40 பர்னபா தர்சீஸுக்குச் சென்று, பவுலை அந்தியோகியாவுக்கு அழைத்துவருதல்

கி.பி.47 பவுலும், பரனபாவும் தீத்துவுடன் எருசலேமிற்குச் செல்லுதல்

கி.பி.47-48 முதலாவது மிஷனரிப் பயணம்

கி.பி.49 எருசலேம் சங்கம் கூடுதல்

கி.பி.50-52 2ஆவது மிஷனரிப் பயணம்

கி.பி.54-56 3ஆவது மிஷனரிப் பயணம்

கி.பி.56-58 செசாரியாவில் சிறையிலடைக்கப்பட்டது

கி.பி.59 ரோமாபுரிக்கு வந்துசேருதல்

கி.பி.61 ரோம சிறையிருப்பின் முடிவு

கி.பி.64 பவுலின் மரணம்

பவுலின் கடிதங்கள்: மொத்தம் 13 (எபிரேயரைச் சேர்க்காமல்)

9 கடிதங்கள் சபைகளுக்கு எழுதப்பட்டவைகள்

4 கடிதங்கள் தனிநபருக்கு எழுதப்பட்டவைகள்

பவுலின் கடிதங்களில் நாம் பார்க்கவிருப்பவைகள்:

•யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்

•யாருக்கு எழுதப்பட்டது? எழுதப்பட்ட மக்கள்

•எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்

ரோமருக்கு எழுதப்பட்ட கடிதம்
யார் எழுதியது: பவுல்




ரோம-1: 1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்து எடுக்கப்பட்டவன் ஆகிய பவுல்.

∗இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் (மனப்பூர்வமான அடிமை)

∗அப்போஸ்தலன் ஆகும்படி அழைக்கப்பட்டவன் (அழைப்பு தேவனால் வருகிறது. அப்போஸ்தலன் என்றால் அனுப்பப்படுபவன் என்று அர்த்தமாகும்)

∗தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்து எடுக்கப்பட்டவன் (இதுவே அவருடைய வேலை)

தோராயமாக கி.பி.57ல் தன்னுடைய 2ஆவது மிஷனரிப் பயணத்தின்போது கொரிந்துவிலிருந்து பவுல் இதை எழுதினார். கொரிந்து பட்டணத்தில் இருந்தபோது காயு என்பவர் பவுலை உபசரித்தார். ரோம-16: 23 என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். கொரிந்து பட்டணத்தில் துவக்க ஊழியநாட்களின்பொது காயு இரட்சிக்கப் பட்டவராவார். 1கொரி-1: 15 நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை.

ரோமாபுரியில் கடைசியாகச் சிறைச்சாலைக்குச் செல்வதற்குமுன்பாக கி.பி.57-58ல் பவுல் இந்தக் கடிதத்தை எழுதி இருந்திருக்க வேண்டும். பிறகு சிறையில் இருந்துகொண்டு அவர் எழுதிய பல கடிதங்களைக் குறித்தும் நாம் பார்க்கிறோம்.

யாருக்கு எழுதப்பட்டது:

ரோம-1: 2 ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும், பரிசுத்தவான்கள் ஆகும்படி அழைக்கப் பட்டவர்கள் ஆகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது.

†ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியர், என்பது அங்கிருந்த இரட்சிச்கப்பட்ட சபைமக்களைக் குறிக்கிறது

†பரிசுத்தவான்கள் ஆகும்படி அழைக்கப்பட்ட அனைவரும், இது இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமுள்ள வாழ்வு வாழுமாறு அழைக்கப் பட்டிருக்கிற உலகெங்குமள்ள யாவரையும் குறிக்கிறது.

†எனவே இந்த நிரூபம் நமக்கும் சொந்தமானதாக இருக்கிறது.

எதற்காக எழுதப்பட்டது:

ரோம-1: 4, 15-16 இயேசு கிறிஸ்துவைக் குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், 15. ஆகையால் ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன் (ஆயத்தமாய் இருக்கிறேன்). 16. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், முன்பு யூதரிலும், பின்பு கிரேக்காரிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாய் இருக்கிறது.

ரோம-1: 18 சத்தியத்தை (உண்மை என்னவென்று அறிந்தும் அதை) அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது (கடந்தகாலத்தில் இருக்கிறது).

இந்தத் தேவகோபத்திற்கு நீங்கலாகி தப்புவிக்கப்பட ஒரே வழிதான் உண்டு. அதை ரோமர்-1: 17 விவரிக்கிறது.

†ரோம-1: 17 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப் படுகிறது (நிகழ்காலத்தில் இருக்கிறது).

இயேசுவை விசுவாசிப்பதன்மூலம் தேவிநீதியைப் பெறமுடியும் என்பது, கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் வெளிப்படுத்தப் படுகிறது என்பதை, இந்தப் புத்தகத்தின்மூலம் பல்வேறு கோணங்களில் பவுல் விவாதித்து விவரிக்கிறார்.

தேவ நீதியைக் குறித்த சத்தியத்தைக் குறித்து தெளிவு படுத்துவதற்காக, பவுல் இந்தக் கடிதத்தை சபைக்கு எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தில்:

ரோம-3: 21 இப்படியிருக்க, நியாயப் பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப் பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப் பிரமாணமும் தீர்க்க தரிசனங்களும் சாட்சியிடுகிறது. 22. அது இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

↻நீதி என்ற வார்த்தை 36 முறை வந்திருக்கிறது.

↻நீதிமானாகுதல் என்பதைக்குறிக்கும் வார்த்தை 15 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

மனுக்குலத்திற்கு தேவநீதி கொண்டுவரப் படுதலைக் குறித்து விவரிக்கும் புத்தகமாக இது இருக்கிறது. அதைப்போல தேவநீதியோடு தொடர்புடைய விதத்தில்:

∗பாவம் என்ற வார்த்தை 47 முறையும்,

∗கிருபை என்ற வார்த்தை 27 முறையும்,

∗விசுவாசித்தல் என்ற வார்த்தை 21 முறையும்

∗விசுவாசம் என்ற வார்த்தை 40 முறையும்

∗சுவிசேஷம் என்ற வார்த்தை 10 முறையும், பயன்படுத்தப் பட்டுள்ளன.

ரோமர் 1, 14ன்படி உலகில் உள்ள மக்கள் அனைவரும் பொதுவாக 4 கோணங்களில் பார்க்கப்படுகிறார்கள்

1. கிரேக்கர்

2. மற்ற அந்நியர்கள்

3. ஞானிகள்

4. மூடர்

ரோமர் 1: 16ன்படி உலகில் உள்ள மக்கள் 2 பிரிவாகப் பார்க்கப்படுகிறார்கள் (இது யூதர்களின் பார்வையில் உள்ளது)

1. யூதர்கள் (இஸ்ரவேலர்கள்: ஆபிரகாமின்-ஈசாக்கு வழிவந்தவர்கள்)

2. கிரேக்கர்கள் (புறஜாதியார்: யூதர்களல்லாத மற்ற சகல தேசத்தார்கள்)

யார் எப்படிப்பட்ட கோணத்தில் பார்க்கப் படுபவர்களாக இருந்தாலும், இயற்கையான பிறப்பால் எல்லாருமே தேவ கோபாக்கினைக்குக் கீழ் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால்தான் ஒருநபர் தேவகோபத்துக்கு விலகும்படி, தேவ நீதியைப் பெற்று நீதிமானாக்கப் படமுடியும் என்பதை சுவிசேஷம் வெளிப்படுத்துகிறது.



ரோமருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் தொகுப்பு:


(மொத்தம் 16 அதிகாரங்கள். 7 பகுதிகளாகப் பிரிக்கலாம்)

I. அதிகாரம் 1: 1-17 முகவுரை

1. வாழ்த்து (1: 1-7)

2. ரோமாபுரிக்கு வருதலுக்கான பவுலின் விருப்பம் (1: 8-15)

3. சுவிசேஷத்திற்கான துணிச்சல் (1: 16-17)

II. அதிகாரங்கள் 1: 18 முதல் 3: 20 பாவத்தின் ஆதிக்கம்

1. மனிதனின் அநியாயம் மற்றும் அவபக்தியின்மீது தேவகோபம் (1: 18-19)

2. ஆக்கினைக்கு ஏதுவான படிகள் (1: 20-32)

அ. மெய்யான தேவனை விடுதல் (1: 20-21)

ஆ. தேவனுடைய சாயலை அழிவுள்ள உருவங்களுக்கு ஒப்பாக்குதல் (1: 22-23)

இ. படைத்தவரை ஆராதிக்ககாமல் படைப்புக்களை வணங்குதல் (1: 24-25)

ஈ. ஓரிணப் புணர்ச்சியின் முறைகேடுகளுக்கு உட்படுதல் (1: 26-27)

உ. தேவனை அறிதலுக்குப் பதிலாக தகாதவைகளைச் செய்தல் (1: 28-32)

3. தேவன் அனைவரையும் சமமாகவே நியாயந்தீர்க்கிறார் (2: 1-16)

4. யூதர்கள் புறஜாதிகள் என்று அவர் பட்சபாதம் காட்டுபவர் அல்ல (2: 17-24)

5. விருத்தசேதனம் ஒருநபரை இரட்சிக்காது (2: 25-29)

6. யூதர்கள் தேவவார்த்தையைப் பெற்றவர்களாவார்கள் (3: 1-8)

7. ஆகிலும், யாவருமே பாவிகள்தான் (3: 9-20)

III. அதிகாரங்கள் 3: 21 முதல் 4: 25 வரை இரட்சிப்பின் கொடுக்கப்படுதல்

1. இயேசுவை விசுவாசிப்பதால், தேவன் பாவிகளை நீதிமானாக்குகிறார் (3: 21-26)

2. மேன்மை பாராட்டுதலை இது அகற்றுகிறது (3: 27 முதல் 4: 8)

3. விசுவாசத்தினால் வரும் நீதி ஆபிரகாமிற்குரிய வாக்குறுதியில் அமைந்திருக்கிறது (4: 13-25)

IV. அதிகாரங்கள் 5 முதல் 8: பரிசுத்தமாக்குதல் தொடரப்படுதல்

1. தொடர்ந்து அன்றாட வாழ்விற்கான கிருபையையும் விசுவாசத்தாலே அடைகிறோம் (5: 1-11)

2. கிருபை பாவத்தின்மீது ஜெயமெடுக்கிறது (5: 12-21)

3. கிருபைக்கீழ் இருப்பவர்கள் பாவத்திற்கு அடிமைகள் அல்ல (6: 1-14)

4. கிருபைக்குக்கீழ் இருப்பவர்கள் பாவத்தைத் தெரிந்தெடுக்கக் கூடாது (6: 15-23)

5. ஆவியினால் நடத்தப் படுவதற்காக, நாம் கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருக்கிறோம் (7: 1-6)

6. பிரச்சினை நியாயப் பிரமாணத்தில் இல்லை, என்னிடம்தான் இருக்கிறது (7: 7-12)

7. எனது மாம்சத்தில் நன்மையானது ஒன்றுமே இல்லை 7: 13-25)

8. ஆவியில் பிழைக்கும்படி மாம்சத்தினின்று நான் விடுதலை ஆக்கப் பட்டிருக்கிறேன் (8: 1-17)

9. பாடுகள் கிறிஸ்துவுக்காக வாழ்வதற்கான ஆசையை அதிகரிக்கிறது (8: 18-23)

10. நம்பிக்கையினால் நாம் இரட்சிக்கப் படுகிறோம் (8: 24-25)

11. ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார் (8: 26-27)

12. தேவன் சகலத்தையும் நன்மைக்காகவே செய்கிறார் என்று அறிந்திருக்கிறோம் (8: 28-30)

13. தேவன் நம் பட்சத்திலிருக்கிறார் (8: 31-39)

V. அதிகாரங்கள் 9 முதல் 11: இஸ்ரவேலரின் தன்மை

1. பவுல் இஸ்ரவேலரை நேசிக்கிறார் (9: 1-5)

2. தேவன் தமது சித்தத்தின்படி தெரிந்தெடுக்கிறார் (9: 6-29)

3. தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் இடறினார்கள் (9: 30-33)

4. தேவ நீதியைக் குறித்து இஸ்ரவேலர்கள் அறியாமல் இருக்கிறார்கள் (10: 1-3)

5. விசுவாசிக்கிற யாவருக்கும் கிறிஸ்து நீதியைக் கொடுக்கிறார் (10: 4-13)

6. இதற்காகவே யாவருக்கும் நாம் சுவிசேஷத்தை அறிவித்தாகவேண்டும் (10: 14-17)

7. இஸ்ரவேலர்கள் கேள்விப்பட்டும் உதறித்தள்ளினார்கள் (10: 18-21)
8. ஆனாலும் தேவன் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளிவிடவில்லை (11: 1-6)
9. இஸ்ரவேல் தற்காலிகமாக இருதயக் கடினத்தில் இருக்கிறது (11: 7-27)
10. தேவன் அவர்களை இப்பொழுதும் நேசிக்கிறார் (11: 28-36)
VI. அதிகாரங்கள் 12 முதல் 15: 13 வரை: ஊழியம் செய்தலை நடைமுறைப் படுத்துதல்
1. ஒப்புக் கொடுத்தல் மூலம் தேவசித்தத்தைப் பகுத்தறிதல் (12: 1-2)
2. தேவனுடைய வரங்களைவைத்து ஒருவர் ஒருவருக்கு ஊழியம்செய்தல் (12: 3-8)
3. கிறிஸ்தவர்களாக வாழுதல் (12: 9-21)
4. அரசு அதிகாரங்களுக்குக் கீழ்படிதல் (13: 1-7)
5. ஒருவரைஒருவர் நேசித்தல் (13: 8-10)
6. கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுல் (13: 11-14)
7. பிறருக்கு இடறல் உண்டாக்குகிற வைகளைச் செய்யாதிருத்தல் (14: 1-23)
8. பிறருடைய பக்தி விருத்திக் கேதுவாக நடந்துகொள்ளுதல் (15: 1-4)
9. ஒருமனதைக் காத்துக்கொள்ளுதல் (15: 5-13)
VII. அதிகாரங்கள் 15: 14 முதல் 16
1. புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக பவுல் (15: 14-21)
2. ரோமாபுரிக்கு வருவதற்குரிய பவுலின் திட்டம் (15: 22-32)
3. சபைக்கு பவுலின் வாழ்த்து (16: 1-16)
4. பிரிவினை உண்டாக்குபவர்களை விட்டுவிலகுங்கள் (16: 17-20)
5. பவுலோடுகூட இருநதபவர்களின் வாழ்த்து (16: 21-24)
6. இறுதி ஆசீர்வாதம் (16: 25-27)








Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*