பரலோகராஜ்யம்
விலை உயர்ந்த முத்து
நல்லமுத்துக்களை தேடுகிற வியாபாரி
மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான் (மத் 13:45,46).
உலகப்பிரகாரமான ஜனங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். கடினமாக வேலை செய்து தங்களுக்கு சொத்து சுகங்களை சேகரிக்கிறார்கள். உலகப்பிரகாரமான நல்ல முத்துக்களையும் அவர்கள் சம்பாதிக்கிறார்கள். ஒரு சிலர் செல்வந்தராக வேண்டுமென்று விரும்புகிறார்.
சிலர் பேரும் புகழும் கிடைக்கவேண்டுமென்று விரும்புகிறார். சிலர் அதிக கல்வி கற்றவேண்டுமென்று விரும்புகிறார். இவையெல்லாம் இவர்களுடைய வாழ்க்கையில் முத்துக்களைப்போல இருக்கிறது. ஆனால் இவை உண்மையான முத்துக்களல்ல. போலி முத்துக்கள். இவை முத்துக்களை போல தோற்றமளிக்கும். முத்துக்களின் மெய்யான சுபாவம் இவற்றில் இராது.
இயேசுகிறிஸ்துவே விலையுயர்ந்த முத்து. நாம் இயேசுகிறிஸ்துவை பெற்றுக்கொண்டால் விலையுயர்ந்த முத்தை பெற்றுக்கொண்டவர்களாக இருப்போம். இதனால் உண்டாகும் சந்தோஷம் நமக்கு நித்திய சந்தோஷமாக இருக்கும்.
ஒரு உண்மையான விசுவாசி ஆவிக்குரிய வியாபாரியைப்போல இருக்கிறார். அவர் விலையுயர்ந்த முத்தை தேடி கண்டுபிடிக்கிறார். ஆவிக்குரிய ரீதியாக ஐசுவரியவான்களாக வேண்டுமென்று விரும்புகிறவர்கள் அதிக முயற்சி எடுத்து விலையுயர்ந்த முத்தை தேடுவார்கள்.
நல்ல வியாபாரி முத்தை கண்டுபிடித்து அதற்குரிய விலையை பேரம்பேசுவார். பேரம் பேசிக்கொண்டே பொழுதை போக்கிவிடமாட்டார். எவ்வளவு விலையானாலும் அந்த முத்தை கிரயத்திற்கு வாங்கி அதைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார்.
இயேசுகிறிஸ்துவிலுள்ள இரட்சிக்கும் கிருபையை கண்டுபிடிக்கிறவர்கள், அதை என்ன கிரயம் ஆனாலும் செலுத்தி பெற்றுக்கொள்வார்கள். அவரை பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்வார்கள். ஒருவன் பொன்னை விலைக்கு வாங்கலாம். அது முக்கியமல்ல. விலையுயர்ந்த முத்தாகிய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும். அதுவே நமது ஜீவனுக்கு நல்லது. இம்மைக்கு மாத்திரமல்ல, மறுமைக்கும் இது ஆசீர்வாதமாக இருக்கும்.
இஸ்ரவேல் ராஜ்யம் பொக்கிஷத்தைப் போன்றது. தன்னுடைய அழைப்பின்பிரகாரம் நடந்து கொள்ளாததினால் பூமியில் புதைக்கப் பட்டிருக்கிற பொக்கிஷத்தைப் போல இருக்கிறது. (ரோமர் 9-11) இந்த உலகமே நிலம். (மத் 13:38) இயேசு கிறிஸ்துவே பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கிற மனுஷர் அவர் தமது பரலோக மேன்மையை விட்டுவிட்டு பாவிகளை இரட்சிப்பதற்காக இவ்வுலகத்திற்கு மனுஷனாக வந்தார். பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னும் பூமிக்குள்ளேயே இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் இந்த பொக்கிஷத்தைப் பற்றிக்கொள்வார்.
பொக்கிஷத்தைப் பற்றிய உவமையில் நிலம் கொள்ளப்படுகிறது. பொக்கிஷம் கொள்ளப்பட்ட நிலத்திற்குள் மறைந்திருக்கிறது. அதைப் பூமியிலிருந்து வெளியே எடுக்க வேண்டும். முத்தைப் பற்றிய உவமையிலோ முத்து கொள்ளப்படுகிறது.
from வேதாகம களஞ்சியம் umn ministry