தேவனுடைய ராஜ்யம்

0

 

விதை முளைத்து பயிராவது



(மாற்கு 4:26-29)


தேவனுடைய ராஜ்யம்


பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;  இரவில் தூங்கி, பக-ல் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது (மாற்கு 4:26,27). 




சுவிசேஷத்தின் நல்ல விதை இந்த உலகத்தில் விதைக்கப்படுகிறது. மனுஷருடைய  இருதயங்களில் விதைக்கப்படுகிறது. சுவிசேஷத்தின் மூலமாக பல அற்புதமான நன்மைகள் உண்டாகிறது.  சுவிசேஷம் ஆரவாரமில்லாமல் அமைதியாக கிரியை நடப்பிக்கிறது. தேவனுடைய ராஜ்யம் ஆரவரத்திற்குரியதல்ல. அமைதியாக கிரியை செய்வதே தேவராஜ்யத்தின் சுபாவம். 




ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைக்கிறான். விதைத்த பின்பு விதையை பார்க்கமுடியாது. அது மண்ணுக்குள் காணாமல் போனதுபோல மறைந்து கொள்ளும். விதை மண்ணுக்குள் இருந்தாலும் அது மரித்துப்போகவில்லை. ஜீவனோடிருக்கிறது. தான் வளருவதற்குத் தேவையான எல்லாக் காரியங்களையும் விதை அந்த மண்ணுக்குள்ளே பெற்றுக்கொண்டு வளர்கிறது.




விதைக்கப்பட்ட விதைகளெல்லாம் வளரும்போது நிலத்தை பார்ப்பதற்கே பசுமையாக இருக்கும். இது எப்படி வளருகிறது என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.  விதைக்கப்பட்ட விதை அமைதியாக தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருக்கிறது. 



தான் விதைக்கும் விதை எப்படி வளருகிறது என்பதை விதைக்கிறவனால் விவரிக்கமுடியாது. இது இயற்கையின் ரகசியங்களில் ஒன்று. அவன் விதைக்கும் விதை  அவனுக்குத் தெரியாத விதமாய் முளைத்து பயிராகிறது. இதுபோலவே நாம் ஒருவருடைய உள்ளத்தில் வசனத்தை விதைக்கும்போது, அவருடைய இருதயத்தில் ஆவியானவர் எப்படிபட்ட கிரியையை நடப்பிப்பார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியாது. காற்றை நமது கண்களால் காணமுடியாது. ஆனால் காற்றடிக்கும் ஓசையை கேட்கிறோம்.



காற்று எந்த திசையிலிருந்து அடிக்கும்

என்று நம்மால் நிதானிக்க முடியாது. இதுபோல இயற்கையில் பல காரியங்கள் நம்மால் புரிந்துகொள்ள முடியாத ரகசியமாகவே உள்ளது. அதுபோலவே தேவனுடைய ராஜ்யம் நிலத்தில் நமக்கு தெரியாமல் முளைத்து பயிராகும் விதைக்கு ஒப்பாகயிருக்கிறது. 




விதைக்கிறவன் வயலில் விதைக்கச் சொல்லும்போது விதையை தூவுகிறான். இதை மாத்திரமே இவனால் செய்ய முடியும். விதையை முளைக்கச் செய்யும் வல்லமையோ அதிகாரமோ  விதைக்கிறவனுக்கு இல்லை. ஒரு விதையை முளைக்கச் செய்ய அவனுடைய சுயபலத்தினால் எதுவும் செய்யமுடியாது.




ஆகையினால் அவன் விதையை விதைத்துவிட்டு இரவில் தூங்கிவிடுகிறான். பகலில் விழித்துப் பார்க்கிறான். அந்த விதை முளைத்து பயிராயிருக்கிறது. இயற்கையின் பிரமாணத்தின்படி நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளைத்து பயிராகிறது. இதன்பின்பு அந்த பயிர் வளர்ந்து கனி தரும் மரமாகும். இதுபோலவே கிருபையின் வார்த்தையும் நமக்குள் கிரியை நடப்பிக்கிறது.





நாம் விசுவாசத்தோடு கிருபையின் வார்த்தைகளை  நமது இருதயத்தில் ஏற்றுக்கொண்டால், நம்முடைய இருதயத்தில் தேவனுடைய கிருபை கிரியை செய்யும். இது தேவனுடைய தெய்வீகப் பிரமாணம். இதுவே தேவ கிருபையின் பிரமாணம்.



முன்பு முளையையும்


எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும் (மாற்கு 4:28).




நிலத்தில் விதைக்கப்பட்ட விதை ஒரே நாளில் வளர்ந்து பயிராகி, மரமாகி, கனி தந்துவிடாது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளரும். முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாக தானாய் கொடுக்கும். அது முளைக்க ஆரம்பித்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக  தொடர்ந்து வளர்ந்துகொண்டேயிருக்கும்.


இயற்கையின் பிரமாணம் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்துகொண்டே யிருக்கும். தேவனுடைய கிருபையும் அதுபோலவே நமது இருதயத்திற்குள் தொடர்ந்து கிரியை செய்யும். 




நமக்குள் வளர்ச்சி இருக்கவேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். ஆரம்பத்தில் நமது வளர்ச்சி கொஞ்சமாக இருந்தாலும், நாம் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருக்கவேண்டும்.


ஏற்ற காலத்தில் கனிதரும் பிரகாரமாக வளர்ச்சி பெறவேண்டும். விதையை விதைக்கும்போது  முதலில் விதையின் முளைதான் நமக்குத் தெரியும். அதை பனி மூடியிருக்கும். காலால் மிதித்தால் அது நசுங்கிப்போகும். சில சமயங்களில் பனியின் குளிர் தாங்காமல் முளை கருகிப்போகும். அப்படிப்பட்ட சிறிய ஆரம்பம்தான் பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் கொடுக்கிறது.



தேவனும்  தமது கிரியைகளை இந்த விதையைப்போலவே ஆரவாரமில்லாமல், அமைதியாக,செய்கிறார். நமது ஜீவியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமது சித்தத்தை நிறைவேற்றி வருவார். தேவனுடைய கிரியை ஒருபோதும் தடைபடுவதில்லை. ஏற்ற வேளையில் அவர் தமது சித்தத்தின் பிரகாரமாக தமது காரியங்களை நிறைவேற்றுவார். 



அறுப்புக்காலம்


பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்   (மாற்கு 4:29). 




விதைக்கப்பட்ட விதை முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாக கொடுத்து  பூரண வளர்ச்சிபெறும். பயிர் வளர்ந்து அது அறுப்புக்காலத்திற்கு ஆயத்தமாக இருக்கும். அப்போது அந்த விதைகளை விதைப்பவன் அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான். அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கும் பயிர்கள் அறுவடை செய்யப்படும். 




நமது இருதயத்திலும் ஆத்துமாவிலும் விதைக்கப்பட்டிருக்கும் சத்திய வசனம் வளர்ந்து கனி தருகிறது. அப்போது அந்த கனிகளை  இயேசுகிறிஸ்து அறுவடை செய்கிறார். ஏற்ற காலத்தில் சுவிசேஷத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் ஏற்ற காலத்தில் கனிதருவார்கள். தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் கனிதரும் வளர்ச்சி பெறுவார்கள்.  இதுவே அறுவடைக்காலம். அறுவடை செய்யப்படும் கோதுமை தேவனுடைய களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப்படும் (மத் 13:30). 






from வேதாகம களஞ்சியம்.. 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*