திராட்சை தோட்டத்து கூலி ஆட்கள்
மத் 20 : 1-16
மத் 20:1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷருக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
மத் 20:2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூ-பேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.
மத் 20:3 மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு:
மத் 20:4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூ- கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
மத் 20:5 மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.
மத் 20:6 பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
மத் 20:7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூ- பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
மத் 20:8 சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள் வரைக்கும் அவர்களுக்குக் கூ-கொடு என்றான்.
மத் 20:9 அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
மத் 20:10 முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களக்கு அதிக கூ- கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
மத் 20:11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:
மத் 20:12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பக-ன் கஷ்டத்தையும் வெயி-ன் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
மத் 20:13 அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?
மத் 20:14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டுபோ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
மத் 20:15 என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா: நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
மத் 20:16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
இயேசுகிறிஸ்து பரலோக ராஜ்யத்தை வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். இவருடைய திராட்சைத்தோட்டத்தில் வேலையாட்கள் பணிபுரிகிறார்கள். தேவனுடைய ராஜ்யத்தின் பிரமாணம் மறைபொருளாகயில்லை.
மலைப்பிரசங்கத்தைப்போல மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. பரலோக ராஜ்யத்தின் பிரமாணங்களை நாம் புரிந்து கொண்டு, நமக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும். பரலோக ராஜ்யத்தைக்குறித்து நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இயேசுகிறிஸ்து பல உவமைகள் மூலமாக இதை விளக்குகிறார்.
மத்தேயு 19-ஆவது அதிகாரத்தில் பரலோக ராஜ்யத்தைப்பற்றி குறிப்பிடும்போது அதில் பலர் பிரவேசிப்பார்கள் என்று வெளிப்படுத்துகிறார். அதே சமயத்தில் அங்கு முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றும் விவரிக்கிறார்.
தேவன் யாருக்கும் கடனாளியாக இருப்பதில்லை. இது ஒரு முக்கியமான சத்தியமாகும். தேவனுக்கு யாரெல்லாம் கொடுக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். தேவன் யாரிடமும் கடன் வைத்திருப்பதில்லை.
ஆவிக்குரிய ஜீவியத்தில் சிலர் பிந்தி வந்திருப்பார்கள். என்றாலும் தேவனுடைய கிருபையினாலும் ஆசீர்வாதத்தினாலும் அவர்கள் முந்தி வந்தவர்களைவிட தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வேகமாக வளர்ச்சி பெறுவார்கள். மற்றவர்களைவிட அதிக பிரயோஜனமாக இருப்பார்கள். யோவான் வேகமாக ஓடக்கூடியவன்.
இயேசுவின் கல்லறைக்கு எல்லோரையும்
விட இவனே முதலாவதாக ஓடி வந்தான். ஆயினும் பேதுரு இவனைவிட தைரியமுள்ளவன். யோவானுக்குப்பின் ஓடி வந்த பேதுருவே கல்லறைக்குள் முதலாவதாக பிரவேசித்தவன்.
இவ்வாறாக பிந்தினோர் அநேகர் முந்தினோராய் இருக்கிறார்கள். அதுபோலவே முந்தினோர் அநேகர் பிந்தினோராயும் இருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் உபதேசம்
சீஷர்களுக்கு எச்சரிப்பின் சத்தமாக இருக்கிறது. இயேசுவைப் பின்பற்றும் சீஷர்கள் சோர்ந்துபோய் தங்களுடைய உற்சாகத்தை இழந்துவிடக்கூடாது. இவர்களுக்கு நல்ல ஆரம்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கவனமாக இல்லையென்றால் முந்தினோராக இருக்கும் இவர்கள் பிந்தினோராகி விடுவார்கள்.
ஒரு சிலர் தங்களுடைய வாழ்க்கையின் கடைசி காலத்தில் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். தேவனுடைய கிருபையினால் இவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வேகமாக வளர்ச்சி பெற்று, தங்களுக்கு முன்பு இரட்சிக்கப்பட்டவர்களைவிட அதிக வல்லமையோடு ஊழியம் செய்வார்கள்.
எல்லா பரிசுத்தவான்களுக்கும் கர்த்தர் வெகுமதி கொடுப்பார். அவர்கள் இரட்சிக்கப்பட்ட கால அளவை வைத்தோ, அல்லது யார் முந்தி இரட்சிக்கப்பட்டார்கள் என்னும் மூப்பு அடைப்படையிலோ தேவன் யாருக்கும் வெகுமதி கொடுப்பதில்லை. இயேசுகிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சிக்குத் தக்கதாக யாரெல்லாம் வளர்ந்து பூரண புருஷராக இருக்கிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியின் பிரகாரம் தேவன் வெகுமதி கொடுப்பார்.
ஒரு சிலர் தங்களுடைய முதிர்வயதில் கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவிப்பார்கள். திருச்சபையின் ஆரம்ப காலத்தில் அப்போஸ்தலர்களும், ஏராளமான விசுவாசிகளும் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். இவர்கள் எல்லோருக்குமே தேவன் வெகுமதி கொடுப்பார்.
இரத்த சாட்சிகளாக மரித்தவர்களை நாம் வெகுவாக போற்றிப் புகழ்ந்தாலும், தற்காலத்தில் கிறிஸ்துவுக்கு உண்மையோடு ஊழியம் செய்யும் விசுவாசிகளுக்கும், முற்பிதாக்களைப்போலவே வெகுமதி கொடுக்கப்படும்.
வீட்டெஜமான்
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷருக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
வேலையாட்களுடன் நாளொன்றுக்கு
ஒரு பணம் கூ-பேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூ- கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும்,
ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான். பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூ- பெற்றுக்கொள்வீர்கள் என்றான் (மத் 20:1-7).
ஒரு வீட்டெஜமான் திராட்சைத்தோட்டம் ஒன்று வைத்திருக்கிறார். அதற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்படுகிறார். நமக்கு நம்முடைய தேவனாகிய கர்த்தரே வீட்டெஜமானாக இருக்கிறார். அவரிடம் பல ஊழியங்கள் உள்ளன. தம்முடைய ஊழியத்தை செய்வதற்காக அவர் ஊழியக்காரர்களை அமர்த்துகிறார். தேவன் வீட்டெஜமானைப்போலவே தம்முடைய ஊழியத்திற்காக ஊழியக்காரர்களைதேடிக் கண்டுபிடித்து ஊழியத்தில் பயன்படுத்துகிறார்.
கடைத்தெருவில் சும்மா நிற்கிற ஜனங்களை இரட்சித்து அவர்களை தமது ஊழியத்தை பயன்படுத்தி ஆசீர்வதிக்கிறார். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருக்கும் ஜனங்களுக்கு தேவனுடைய ராஜ்யத்தில் ஊழியம் செய்யும் சிலாக்கியம் கிடைக்கிறது.
தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுவது வரையிலும், ஊழியக்காரர்கள் கடைத்தெருவில் சும்மா இருக்கிறவர்களைப் போல இருக்கிறார்கள். தேவன் மனுஷனை சிருஷ்டித்தபோது அவனை வேலை செய்ய தகுதியுள்ளவனாகவே சிருஷ்டித்திருக்கிறார். ஏதாவது ஒரு வேலையை செய்யவேண்டுமென்று மனுஷனுடைய ஆத்துமா ஏங்கிக்கொண்டிருக்கும். தேவனுடைய ஊழியத்திற்கு வாய்ப்பு கொடுக்கும்போது அவன் நீதிக்கு ஊழியக்காரனாகிறான். இந்த வாய்ப்பை அவன் பெற்றுக்கொள்ளவில்லையென்றால் அவன் அநீதிக்கு ஊழியக்காரனாயிருப்பான்.
சும்மா இருக்கும் ஜனங்களை பிசாசும் தேடிக் கண்டுபிடிக்கிறான். அவர்களை சோதனைக்கு உட்படுத்தி, தன்னுடைய கண்ணியில் சிக்க வைத்து, பன்றிகளை மேய்க்கும் கூட்டத்தில் வேலைக்கு அமர்த்துகிறான். தேவனோ தம்முடைய சுவிசேஷத்தினால் தமது திராட்சத்தோட்டத்தில் பணிபுரிவதற்கு வேலைக்காரர்களை அமர்த்துகிறார். வேலைக்கு அமர்த்தப்பட்ட இவர்கள் திராட்சத்தோட்டத்தை பராமரிக்கவேண்டும். நிலத்தை பண்படுத்தவேண்டும். இது ஒரு ஆசீர்வாதமான வேலையாகும்.
எந்த வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாம் தான் தீர்மானம்பண்ணவேண்டும். தேவனுடைய ஊழியத்திற்கு நாம் அமர்த்தப்படும் வரையிலும் கடைத்தெருவில் சும்மா நிற்கிற ஜனங்களைப்போல பிரயோஜனமற்றவர்களாக இருப்போம். அப்படி சும்மா இருக்கும் ஜனங்களுக்கு சுவிசேஷத்தின் மூலமாக அழைப்பு கொடுக்கப்படுகிறது. சந்தைவெளியில் சும்மா நிற்கும் ஜனங்கள் அந்த இடத்திலேயே தங்களுடைய ஊழியத்தைக் குறித்து தீர்மானம் பண்ணவேண்டும்.
சந்தைவெளி மிகவும் விருவிருப்பாக இருக்கும் இடமாகும். அங்கு சிறு பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள் (மத் 11:16). இவற்றுக்கு மத்தியில் நாம் தேவனுடைய அழைப்புக்கு கீழ்ப்படியவேண்டும்.
சந்தைவெளியில் ஒரு வேலையும்
இல்லாமல் சும்மா இருக்கும் ஜனங்களைப்பார்த்து ""இந்த சந்தைவெளியை விட்டு என்னுடைய திராட்சத்தோட்டத்திற்கு பணிபுரிய வாருங்கள்'' என்று வீட்டெஜமான் அழைக்கிறார். தேவனுடைய சபையும் திராட்சத்தோட்டத்தைப் போலவே இருக்கிறது. சபையில் தேவனால் நாட்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
சபையிலுள்ள விசுவாசிகளுக்கு தேவன் ஜீவத்தண்ணீரைக்கொடுத்து, அவர்களை வளர்த்து, வேலியடைத்து பாதுகாத்து பராமரித்து வருகிறார். இந்த திராட்சத்தோட்டத்தில் ஊழியம் செய்வதற்கு தேவன் நம்மை அழைக்கிறார்.
நம் ஒவ்வொருவருக்கும் பராமரிப்பதற்காக நமக்கென்று ஒரு திராட்சத்தோட்டத்தை தேவன் கொடுக்கிறார். நமது ஆத்துமாவே தேவன் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கும் திராட்சத்தோட்டமாகும். நமது ஆத்துமா தேவனுக்குரியது. அதை நாம் தேவனுக்காக பாதுகாத்து வளர்க்கவேண்டும். அதைப் பண்படுத்தி பரிசுத்தமாக காத்துக்கொள்ள வேண்டும்.
தேவனுடைய ஊழியத்தில் நாம் சோம்பேறிகளாகவோ, வீண் பேச்சு பேசுகிறவர்களாகவோ, சும்மா சுற்றி அலைகிறவர்களாகவோ இருக்கக்கூடாது. வேலை செய்கிறவர்களுக்குத்தான் வேலையாள் என்று பெயர். அதுபோலவே ஊழியம் செய்கிறவர்கள்தான் ஊழியக்காரர்கள். தேவனுக்காக ஊழியம் செய்கிறவர்கள் சோம்பலாக ஊழியம் செய்யக்கூடாது. ஊழியம் செய்யாமல் ஏமாற்றிக்கொண்டு அலைகிறவர்கள் தங்களை ஊழியக்காரர்கள் என்று அழைத்துக் கொள்ளக்கூடாது.
ஒருவன் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் அவன் நரகத்திற்குத்தான் போவான். பரலோகத்திற்கு போக விரும்புகிறவன் விறுவிறுப்பாக செயல்படவேண்டும்.
தம்முடைய திராட்சத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்களுக்கு வீட்டெஜமான் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி தருவதாக பேசி அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார். ஒரு பணம் என்பது ஒரு நபருடைய அன்றாட செலவுக்கு போதுமானதாக இருக்கும். தேவனுக்கு நாம் கீழ்ப்படிந்து ஊழியம் செய்வதை வேலை என்று சொல்லக்கூடாது. அது நமக்குள்ள கடமை. தேவனுக்கு ஊழியம் செய்ய நாம் கடன்பட்டிருக்கிறோம். தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்கிறவர்களுக்கு அவர் வெகுமதியைக் கொடுக்கிறார். அவர் கொடுக்கும் வெகுமதி நமக்கு போதுமானதாக இருக்கும்.
வீட்டெஜமான் வேலைக்காரர்களுக்கு நியாயமானபடி கூலி கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார். தமக்காக ஊழியம் செய்யும் ஊழிக்காரர்கள் எல்லோருக்குமே தேவன் நியாயமானபடி வெகுமதி கொடுப்பார். தேவனுக்காக ஊழியம் செய்தவர்களை அவர் ஒருபோதும் சும்மா அனுப்பிவிடமாட்டார். தம்முடைய ஊழியக்காரர்களின் நன்மைகளை தேவன் விசாரிக்கிறவர்.
வீட்டெஜமான் வேலைக்காரர்களை அமர்த்தும்போது ஒரு நாள் வேலைக்காக அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார். ஒரு நாள் வேலை செய்தால் அவர்களுக்கு அதற்குரிய கூலி கொடுக்கப்படும். தேவன் நம்மை அவருடைய ஊழியத்திற்கு அழைக்கும்போது, நம்முடைய வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்வதற்காக அழைக்கிறார். நமக்கு ""ஒரு நாள்'' என்பது நம்முடைய வாழ்நாள் முழுவதுமாகும். அதற்காகத் தேவன் நமக்கு நித்திய ஜீவனை வெகுமதியாக கொடுக்கிறார். இதைப்பெற்றுக்கொள்வதற்கு நமது வாழ்நாளில் மாத்திரம் அவருக்கு ஊழியம் செய்தால் போதுமானது.
நம்முடைய ஆயுசு காலம் மிகவும் குறுகியது. ஆகையினால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியங்களை மிகவும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும், சோம்பல் இல்லாமலும் செய்து நிறைவேற்றவேண்டும். நமது ஊழியங்களில் பாடுகளும், வேதனைகளும், கடினங்களும், சோதனைகளும் வரலாம். இவையெல்லாமே ஒரு நாள் பொழுதாகிய நம்முடைய வாழ்நாள் மாத்திரமே இருக்கும். நமது ஜீவியக்காலம் முடிந்தவுடன் நமது வேதனைகளும் முடிந்து போகும். அப்போது நமது வேலைக்காக வெகுமதி கொடுக்கப்படும். அப்போது கர்த்தருடைய நிழலில் நாம் ஆறுதலாக ஓய்வெடுப்போம்.
காலம் குறைவாக இருப்பதினால் நம்முடைய விசுவாசத்தையும், பொறுமையையும் காத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளுக்கு பல மணி நேரங்கள் உண்டு. வீட்டெஜமான் சிலரை அதிகாலையிலும், சிலரை மூன்றாம் மணி வேளையிலும், ஆறாம் ஒன்பதாம் மணி வேளையிலும்,
பதினோராம் மணி வேளையிலும்
வேலைக்கு அமர்த்துகிறார். அதுபோலவே தேவன் நம்மை நம்முடைய ஆயுசு காலத்தில் வெவ்வேறு வயதில் நம்மை ஊழியத்திற்கு அழைத்து பயன்படுத்துகிறார்.
ஒரு சிலர் இளவயதிலேயே இரட்சிக்கப்படுகிறார்கள். வேறு சிலரோ வாலிப வயதிலும், வயதான காலத்திலும் இரட்சிக்கப்படுகிறார்கள். எல்லா வயதில் உள்ளவர்களுக்கும் அழைப்பு ஒன்றுதான். நாம் அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளும்போது நமக்கு தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.
ஒரு சிலர் தங்களுடைய வாலிப
வயதிலேயே ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டு கர்த்தருக்கு நீண்ட காலம் ஊழியம் செய்கிறார்கள். இவர்கள் அதிகாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களைப் போன்றவர்கள். இவர்களுடைய பிரயாணம் அதிகமாக இருக்கும். இவர்கள் தங்களுடைய ஆயுசு காலம் முழுவதிலும் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும்.
வேறு சிலரோ தங்களுடைய வாலிப பருவமெல்லாம் கடந்தபின்பு, முதிர்வயதில் இரட்சிக்கப்படுகிறார்கள். ஊழிய அழைப்பை பெற்றுக்கொள்கிறார்கள்.
இவர்கள் மூன்றாம், ஆறாம்,
ஒன்பதாம் மணி நேரத்தில் திராட்சத்தோட்டத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள். தேவனுடைய தெய்வீக கிருபை ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு காலத்தில் கிடைக்கிறது. ஒரு சிலர் இளமைப்பருவத்திலேயே இரட்சிக்கப்படுகிறார்கள்.
வேறு சிலரோ வாலிப பருவமெல்லாம்
கடந்த பின்பு முதுமை பருவத்தில் இரட்சிக்கப்படுகிறார்கள். அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய ஜீவியத்தின் முக்கியமான பருவத்தில் இரட்சிக்கப்பட்டார். உலகத்தின் அதிகாரங்களை தன் கையில் பெற்றுக்கொண்டு தன் இஷ்டம்போல வாழ்க்கையை அனுபவித்தபோது தேவன் பவுலை இரட்சித்தார்.
தேவன் எல்லா வயதினர் மத்தியிலும் கிரியை செய்கிறார். எந்த வயதாக இருந்தாலும் தேவன் அவர்களை ஒதுக்கி தள்ளிவிடுவதில்லை. நமது கடந்த காலம் பாவமானதாக இருக்கலாம். நாம் பாவத்திற்கு ஊழியம் செய்திருக்கலாம். அப்படிப்பட்ட நம்மை தேவன் இரட்சித்து ""நீங்களும் திராட்சத்தோட்டத்திற்கு போங்கள்'' என்று அன்போடு அழைக்கிறார். தேவனுக்கு ஊழியம் செய்ய விருப்பமுள்ள எல்லோரையுமே தமது ஊழியத்தில் அவர் பயன்படுத்துகிறார். யாரையும் புறக்கணித்து புறம்பே தள்ளுவதில்லை.
பதினோராம் மணி வேளையிலும் ஒரு சிலர் கடைத்தெருவில் சும்மா நிற்கிறார்கள். வீட்டெஜமான் அவர்களையும் சந்தித்து திராட்சத்தோட்டத்திற்கு அனுப்புகிறார். அதுபோலவே தேவன் ஒரு சிலரை அவர்களுடைய முதிர்வயதில் சந்தித்து அவர்களை இரட்சிக்கிறார்.
பதினோராம் மணி வேளையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரம் மாத்திரமே வேலை செய்வார்கள். பன்னிரண்டு மணி ஆகும்போது பகல் பொழுது முடிந்துபோகும். அந்த வேளையில்கூட சும்மா நிற்கிறவர்களை வீட்டெஜமான் தன் திராட்சத்தோட்டத்தில் பயன்படுத்துகிறார். நமக்கு ஜீவன் இருக்கும் வரையிலும் இரட்சிக்கப்படுவதற்கும், தேவனுடைய ஊழியத்தை செய்வதற்கும் வாய்ப்புள்ளது.
நம்முடைய பழைய ஜீவியம் பாவம் நிறைந்ததாக இருந்தாலும், தேவன் நம்மை இரட்சிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். காலதாமதம் பண்ணாமல் மனந்திரும்பவேண்டும். உண்மையாக மனந்திரும்புதல் எப்போதுமே காலதாமதம் ஆகாது. மனந்திரும்பும்போது நமக்கு நம்பிக்கை கிடைக்கிறது. தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நாம் பதினோராம் மணி வேளையில் மனந்திரும்பினாலும் தேவன் நம்மை இரட்சிக்க, தமது ஊழியத்தில் பயன்படுத்த ஆயத்தமாக இருக்கிறார்.
வேலைக்கு அமர்த்தப்பட்டவுடன், இதுவரையிலும் சும்மா இருந்தவர்கள், சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். அதுபோல நாம் இதுவரையிலும் பிரயோஜனமில்லாமல் இருந்தாலும், இரட்சிக்கப்பட்டவுடன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரயோஜனமுள்ள ஊழியக்காரர்களாக ஊழியம் செய்யவேண்டும். நிக்கொதேமு தன்னுடைய முதிர்வயதில் இரட்சிக்கப்பட்டதாக வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள்.
நம்முடைய ஜீவியக்காலத்தை அசட்டை செய்து, வயதான பின்பு இரட்சிக்கப்படலாம் என்று சோம்பேறியாக இருந்துவிடக்கூடாது. நமது ஜீவன் எப்போது முடியும் என்று நமக்குத் தெரியாது. இப்போதுள்ள நமது வயதே நமக்கு பதினோராம் மணியைப்போல இருக்கலாம். ஆகையினால் காலதாமதம் பண்ணாமல் மனந்திரும்பி இயேசுகிறிஸ்து கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும்.
பதினோராம் மணி வேளை வரையிலும் நம்மை யாருமே வேலைக்கு அழைக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக எல்லோருமே நம்மை கைவிட்டுவிட்டார்கள் என்று நாம் சோர்வடைந்திருக்கலாம். அப்படிப்பட்ட நம்மை இயேசுகிறிஸ்து தேடி வந்து அன்போடு அழைக்கிறார். சும்மா இருக்கும் நம்மை தம்முடைய ஊழியத்தை செய்யுமாறு கூறுகிறார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளும்போது தேவன் நம்மைப் பார்த்து ""நீங்களும் திராட்சத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள்'' என்று கூறி அழைக்கிறார். தேவனுடைய சப்தத்திற்கு கீழ்ப்படிந்தால் நமக்கு ஆசீர்வாதம் வரும்.
யூதருடைய முறைமையில் ஒரு நாளை அதிகாலை, மூன்றாம்மணி வேளை என்று சில பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். அந்தப் பிரிவின் விவரம்.
1. அதிகாலை - 6.00 மணி - காலை
2. மூன்றாம்மணி வேளை - 9.00 மணி - காலை
3. ஆறாம்மணி வேளை - 12.00 மணி - மதியம்
4. ஒன்பதாம் மணிவேளை - 3.00 மணி - மாலை
5. பதினொறாம் மணிவேளை - 5.00 மணி - மாலை
வேலையில்லாத மனுஷர் கடைத்தெருவில் கூடிவருவார்கள். வேலை கொடுப்பவர்கள் இங்கு வந்து தங்களுடைய வேலைக்குத் தேவையான ஆட்களைத் தெரிந்தெடுத்து, அழைத்துச் செல்வார்கள்.
காலை 6.00 மணி வேளையில் மட்டுமே வேலை செய்வதற்கு ஒரு பணம் கூலி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மற்ற நேரங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கு ""நியாயமானபடி கூ- பெற்றுக்கொள்வீர்கள்'' என்றே கூறப்பட்டது. மத் 19:27 ஆவது வசனத்தில் பேதுருவின் கேள்விக்கு இந்த வசனம் பதில் கூறுகிறது.
வேலையாட்கள்
சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள் வரைக்கும் அவர்களுக்குக் கூ-கொடு என்றான்.
அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூ- கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள் (மத் 20:8-10).
வீட்டெஜமானால் வேலைக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் அவருடைய திராட்சத்தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். சாயங்காலமாயிற்று. சாயங்காலமாகும்போது
வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும். வீட்டெஜமான் தன் காரியக்காரனிடம் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்குமாறு கட்டளையிடுவார். இந்த சாயங்கால வேளை வேலையாட்களுக்கு மகிழ்ச்சியான வேளையாக இருக்கும். இது வேலை முடிகிற வேளை. தங்களுடைய வேலைக்கு சம்பளம் கொடுக்கப்படும் வேளை.
கர்த்தருக்கு உண்மையாக ஊழியம்
செய்த ஊழியக்காரர்களுக்கு, அவர்களுடைய மரணத்தின்போது தேவன் அவர்களுக்கு வெகுமதி கொடுப்பார். அதுவரையிலும் ஊழியக்காரர்கள் பொறுமையோடு காத்திருக்கவேண்டும். உற்சாகமாக ஊழியம் செய்யவேண்டும்.
தேவன் தம்முடைய திராட்சத்தோட்டத்தில் ஊழியம் செய்வதற்காக ஊழியக்காரர்களை அழைத்திருக்கிறார். ஒவ்வொரு ஊழியக்காரரும் அவரவர்களுக்கு கொடுக்கப்படும் ஊழியங்களை
நேர்த்தியாக செய்யவேண்டும்.
ஊழியக்காரர்களுக்கு மரணம் வரும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊழியங்களிலிருந்து அவர்கள் ஓய்வு பெறுவார்கள். அப்போது அவர்களுடைய ஊழியத்திற்குரிய வெகுமதியை தேவன் கொடுப்பார்.
தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் நாம் ஊழியத்திற்கு அழைக்கப்படுவது நமக்கு கிடைத்திருக்கும் பெரிய சிலாக்கியம். தேவனுடைய ஊழியத்தில் பங்குபெறுவது நமக்கு மிகுந்த ஆசீர்வாதம். தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றி நமது நித்திய ஓய்வில் பிரவேசிப்பது நமக்கு கிடைக்கும் பரம சந்தோஷம்.
வேலை செய்யும் வேலையாட்களை எஜமான் அழைக்கும்போதுதான் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும். அதுவரையிலும் அவர்கள் பொறுமையோடு வேலைசெய்ய வேண்டும். அதுபோலவே தேவனுடைய ஊழியத்தை செய்யும் நாமும், தேவன் நம்மை அழைக்கும் காலம் வரையிலும் பொறுமையோடு ஊழியம் செய்யவேண்டும். தேவனுடைய வேளைக்காக காத்திருக்கவேண்டும்.
திராட்சத்தோட்டத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் கூலியாக வாங்குகிறார்கள். பரலோகத்தில் விசுவாசிகளுக்கு கொடுக்கப்படும் மகிமையில் வித்தியாசம் இருக்கும். அதேவேளையில் பரலோகத்தில் பிரவேசிக்கிற எல்லோருக்குமே பூரண சந்தோஷம் உண்டாயிருக்கும். பரலோகத்தில் பிரவேசிக்கும் எல்லா பாத்திரங்களும் நிரம்பியிருக்கும். ஆனாலும் எல்லா பாத்திரங்களும் ஒரே அளவாகயிராது. சில பாத்திரங்கள் பெரியதாகவும், சில பாத்திரங்கள் சிறியதாகவும் இருக்கும். எல்லா பாத்திரங்களும் நிரம்பியிருக்கும். இதுவே பரலோகத்தின் மகிமை.
திராட்சத்தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களில் சிலர் அதிகாலை வேளையிலிருந்து பன்னிரண்டாம் மணி வேளை வரையிலும் வேலை செய்கிறார்கள். பதினோராம் மணி வேளையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரம் மாத்திரம் வேலை செய்கிறார்கள்.
அவர்கள் பத்து மணி நேரம் வேலை செய்யவில்லை. வீட்டெஜமான் ஒரு மணி நேரம் மாத்திரம் வேலை பார்த்த இவர்களுக்கும் ஒரு நாளுக்குரிய முழு சம்பளமாகிய ஒரு பணத்தையும் கூலியாக கொடுக்கிறார்.
தேவன் தம்முடைய கிருபையையும் வெகுமதியையும் தம்முடைய தெய்வீக ஆளுகையின் பிரகாரமாக பகிர்ந்து கொடுக்கிறார். தேவன் யாருக்கும் கடனாளியல்ல. நாம் எல்லோருமே தேவனுடைய கிருபையின் கீழ் இருக்கிறோம். நாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களல்ல. நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்ததற்காக யாருக்கும் வெகுமதி கொடுக்கப்படுவதில்லை.
தேவன் தமது கிருபையினாலேயே தம்முடைய பிள்ளைகளை அதிகமாக ஆசீர்வதிக்கிறார்.
முந்தி வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கும் ஒரு பணம் மாத்திரமே கூலியாக கொடுக்கப்படுகிறது. அவர்கள் வீட்டெஜமானிடம் முறுமுறுக்கிறார்கள். பரலோகத்தில் இதைப்போல யாரும் முறுமுறுக்க மாட்டார்கள். இந்த பூமியில் மாத்திரமே முறுமுறுப்புக்கள் உண்டாயிருக்கும்.
பரலோகத்தையும், பரலோக காரியங்களையும் குறித்து விசுவாசிகள் இந்த பூமியில் முறுமுறுப்பார்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், ஆசீர்வாதங்களையும் குறித்து ஊழியக்காரர்கள் இங்கு முறுமுறுப்பார்கள்.
திராட்சத்தோட்டத்தில் வேலை பார்த்த வேலையாட்கள் வீட்டெஜமானிடம் முறுமுறுக்கிறார்கள். அவரோடு விவாதம்பண்ணுகிறார்கள். அவரிடத்தில் குறை கண்டுபிடிக்கிறார்கள். எஜமான் இவர்களுக்கு கொடுப்பதாக ஒத்துக்கொண்ட கூலியை குறைவில்லாமல் கொடுத்துவிடுகிறார்.
ஆகையினால் இந்த வேலையாட்கள் தங்கள் கூலியைப்பற்றி வீட்டெஜமானிடம் விவாதம்பண்ணவில்லை. வீட்டெஜமான் முந்தி வந்த இவர்களை பிந்தி வந்தவர்களோடு சமமாக்கிவிட்டார். இதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
""பிந்தி வந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரம் மாத்திரம் வேலை செய்தார்கள். பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களை சமமாக்கினீரே'' என்று முந்தி வந்த வேலையாட்கள் முறுமுறுக்கிறார்கள். தேவனுடைய ஆசீர்வாதம் மற்றவர்களைவிட நமக்கு குறைவாகவே உள்ளது என்று ஒரு சில விசுவாசிகள் தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறார்கள்.
தங்களைவிட தேவன் மற்ற ஊழியக்காரர்களை அதிகமாக நேசித்து, அவர்களை வல்லமையாக பயன்படுத்துகிறார் என்று மனதிற்குள் புலம்புகிறார்கள்.
மற்றவர்களுடைய பாடுகளைப்பற்றி நாம் சிந்திப்பதேயில்லை. நமது பாடுகளும் நமது வேதனைகளும்தான் நமக்கு பெரியதாக தெரியும். தேவனோ பட்சபாதமில்லாதவர். தமது கிருபையையும் ஆசீர்வாதத்தையும் எல்லோருக்கும் குறைவில்லாமல் கொடுக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
இயேசுகிறிஸ்து இந்த உவமையை பேதுருவுக்கு விசேஷமாக கூறுகிறார். பேதுரு மற்றவர்களைவிட அதிகமாக ஊழியம் செய்வதாக நினைத்து பெருமைப்படக்கூடாது.
பகலின் கஷ்டத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் மற்ற சீஷர்களைவிட தான் அதிகமாக சகிப்பதாக நினைத்து வேதனைப்படக்கூடாது. இந்த பூமியில் இருக்கும்போது நாம் பரலோகத்தின் ஆசீர்வாதங்களையே நோக்கிப் பார்க்கவேண்டும்.
தேவனுக்காக அதிகமாக பாடுகளை அனுபவிக்கிறவர்கள் மற்ற விசுவாசிகளை தாழ்வாக நினைக்கக்கூடாது. பெருமை என்னும் சுபாவம் நம்மைவிட்டு அகலவேண்டும். தேவனுடைய தெய்வீக சுபாவமும், சிந்தனையும் நமது உள்ளத்தில் நிரம்பியிருக்கவேண்டும்.
அந்த நாளுக்குரிய கூலி மாலை 6.00 மணி அளவில் எல்லா வேலையாட்களுக்கும் வழங்கப்படும். (லேவி 19:13; உபா 24:14-15) மாலை 5.00 மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கும் ஒரு (மத் 20:2) ஆனால் இவர்களுக்கு ஒரு பணம் கூலியாக கொடுக்கப்படும் என்று எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை. நியாயமானபடி கூ- பெற்றுக்கொள்வீர்கள் என்று மட்டுமே கூறி இவர்களை வேலைக்கு அமர்த்தினார்கள்.
மாலை 5.00 மணிக்கு வேலைக்கு வந்தவர்களுக்கு ஒரு பணம் கூலியாகக் கிடைத்தது. இவர்கள் அதிகாலையில் காலை 6.00 மணிக்கே வேலைக்கு வந்தவர்கள் ஆகையினால் தங்களுக்கு ஒரு பணத்தை விட அதிகமாகக் கூலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இவர்களுக்கும் ஒரு பணம் மட்டுமே கூலியாகக் கிடைத்தது.
முறுமுறுத்தார்கள்
பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பக-ன் கஷ்டத்தையும் வெயி-ன் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள் (மத் 20:12).
ஒரு பணத்திற்கு வேலைக்கு வருவதாக இவர்கள் ஏற்கெனவே சம்மதித்திருந்தார்கள். ஆனால் இந்த ஒப்பந்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள். பிந்தி வந்தவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டதினால் தங்களுக்கும் அதிகமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் வீட்டெஜமான் தான் ஏற்கெனவே கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பிரகாரம் அவர்களுக்கு ஆளுக்கு ஒரு பணம் மட்டுமே கொடுத்தான். இதில் அவர்களுக்குத் திருப்தியில்லை. ஆகையினால் அவர்கள் வீட்டெஜமானைப் பார்த்து ""பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பக-ன் கஷ்டத்தையும் வெயி-ன் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே'' என்று முறுமுறுத்தார்கள்.
அநியாயஞ் செய்யவில்லை
அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? (மத் 20:13).
வீட்டெஜமான் தன் வேலையாட்களுக்கு அநியாயம் செய்யவில்லை. எஜமான் தன் வேலையாளை ""சிநேகிதனே'' என்று அழைக்கிறார். மற்றவர்களோடு விவாதம்பண்ணும்போது நாம் கடினமான சொற்களை பயன்படுத்தக்கூடாது. அன்பான, மென்மையான வார்த்தைகளையே பயன்படுத்தவேண்டும். வீட்டெஜமான் தன் வேலையாளை ""சிநேகிதனே'' என்று அழைப்பது அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறது.
தேவன் ஒருபோதும் தவறு செய்வதில்லை. தேவன் நமக்காக செய்வது எல்லாமே நமக்கு நன்மையாகவே இருக்கும். தேவன் நமக்கு செய்யாத காரியங்களினாலும் நமக்கு நன்மையே உண்டாகும். தேவன் நமக்கு காண்பிக்காத கிருபைகளை மற்றவர்களுக்கு காண்பிக்கும்போது, அதன்மூலமாக அவர்கள் மீது தேவன் வைத்திருக்கும் அன்பு வெளிப்படுகிறது. மற்றவர்களை நேசிக்கும்போது, தேவன் நமக்கு அநியாயம் செய்யவில்லை. நம்மை காயப்படுத்தாதவாறு தேவன் மற்றவர்களுடைய காயத்தை கட்டுகிறார். இதனால் நமக்கு இழப்பு இல்லை. காயம்பட்டவருக்கு காயம் ஆறும். மற்றவர்களை தேவன் ஆசீர்வதிக்கும்போது நாம் தேவன்மீது கோபப்படக்கூடாது.
வீட்டெஜமான் தான் செய்த காரியங்களை வேலையாளிடம் எடுத்துக் கூறுகிறார். ""நீ என்னிடத்தில் ஒரு பணத்திற்கு சம்மதிக்கவில்லையா'' என்று வேலையாளுக்கு அவன் சம்மதித்ததை நினைவுபடுத்துகிறார். நாமும் தேவனுடைய சமுகத்தில் முதன்முதலில் வந்தபோது, அவரிடத்தில் பல காரியங்களை விண்ணப்பம் பண்ணியிருப்போம். நம்மைக்குறித்து பல காரியங்களை அறிக்கை செய்திருப்போம்.
இவையெல்லாவற்றையும் மறந்துவிடக்கூடாது. நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஆரம்பத்தில் பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றால் போதுமென்று நினைத்திருப்போம். அதன்பின்பு ஏராளமான ஆசீர்வாதங்கள் மீது ஆசைப்பட்டு, அவையெல்லாம் நமக்கு வேண்டுமென்று விண்ணப்பம் பண்ணுவோம். நாம் விரும்பியது கிடைக்கவில்லையென்றால் சோர்வடைந்துவிடுவோம். சோர்ந்துபோகும் போதெல்லாம்,
ஆரம்பத்தில் நாம் தேவனிடத்தில் ஏறெடுத்த விண்ணப்பங்களை நினைவுகூரவேண்டும். உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கக்கூடாது. இம்மையில் நாம் எல்லோருமே நம்முடைய பங்கை தேவனிடமிருந்து பெற்றிருக்கிறோம் (சங் 17:14).
என்னுடைய இஷ்டம்
உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டுபோ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம் (மத் 20:14).
நம்மிடத்திலுள்ள ஆசீர்வாதங்களெல்லாம் தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஈவு. இவற்றை அவர் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார். ஆகையினால் நம்மிடத்தில் உள்ளவற்றில் நாம் திருப்தியாக இருக்கவேண்டும். தேவன் நம்மைவிட பிறரை அதிகமாக ஆசீர்வதிக்கலாம். அப்போதுகூட அவர் நமக்குரிய பங்கை நிச்சயமாகவே கொடுப்பார்.
தேவன் நமக்கு எதைக்கொடுத்திருக்கிறாரோ அதில் திருப்தியடையவேண்டும். மற்றவர்கள் பெற்றிருக்கும் ஆசீர்வாதங்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது. தேவனிடத்திலும் முறுமுறுப்பாக இருக்கக்கூடாது.
வீட்டெஜமான் தன் வேலையாளிடம் ""உனக்கு கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்'' என்று அறிவிக்கிறார். ஆகையினால் ""உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ'' என்று கூறிவிடுகிறார்.
தயாளன்
என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா: நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான் (மத் 20:15).
வேலையாளுக்கு எஜமானோடு விவாதம்பண்ணுவதற்கு எந்தவித உரிமையும் இல்லை. ஏனெனில் எஜமான் தனக்குரியதைத்தான் கொடுக்கிறார். அதை அவருடைய இஷ்டப்படி செய்ய அவருக்கு அதிகாரமுள்ளது. இதற்கு முன்பு எஜமான் ""உனக்கு நான் அநியாயம் செய்யவில்லை'' என்று கூறினார். இப்பொழுது தன்னுடைய அதிகாரத்தைப்பற்றி கூறுகிறார். எஜமான் தனக்கு இஷ்டமான பிரகாரம், ஒருவரை ஆசீர்வதிக்கவும், வேறொருவரை ஆசீர்வதிக்காமல் இருக்கவும் அவருக்கு அதிகாரமுள்ளது.
தேவனிடத்தில் உள்ளதெல்லாம் அவருக்கே உரியது. தேவன் தமது தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக தமது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதங்களை பகிர்ந்து கொடுக்கிறார். சர்வ ஜீவராசிகளையும் போஷித்து பராமரிக்கிறார். தேவன் தம்முடையதை தம்முடைய இஷ்டப்படி செய்கிறார். நமக்கு பிரியமானதை தேவன் எடுத்துக்கொள்ளும்போது நாம் அமைதியாக இருக்கவேண்டும். தேவன் கொடுத்தார். தாம் கொடுத்ததை அவர் எடுத்துக்கொண்டார் என்னும் நினைவு நமது உள்ளத்தில் இருக்கவேண்டும்.
நாம் எல்லோருமே தேவனுடைய கரத்தில் இருக்கிறோம். குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல் இருக்கிறோம். நம்மை இவ்வாறுதான் வனையவேண்டும் என்று கூறும் அதிகாரம் நமக்கு இல்லை. நாம் எந்த விஷயத்திலும் தேவனுக்கு ஆலோசனை கூறக்கூடாது. அவரோடு சண்டைபோடும் அதிகாரமும் நமக்கில்லை. குயவன் தனக்கு சித்தமான பிரகாரம் களிமண்ணை தனக்குச் சித்தமான பாத்திரமாக வனைகிறான். அதுபோலவே தேவனும் தமக்கு சித்தமான பிரகாரம் நம்மை உருவாக்குகிறார்.
திரட்சத்தோட்டத்திற்கு அதிகாலையிலேயே தான் வேலைக்கு வந்ததற்காக வேலையாள் வருத்தப்படக்கூடாது. அவன் வீட்டெஜமானுடைய அழைப்பை பெற்றபோதுதான் திராட்சத்தோட்டத்திற்கு வேலைக்கு வந்தான்.
நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி கொடுத்தால், அந்த நாள் முழுவதும் திராட்சத்தோட்டத்தில் வேலை செய்வதாக சம்மதித்திருந்தான். அவனுக்கு பேசப்பட்ட பிரகாரம் ஒரு பணம் கூலியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பேசியபடி அவன் கூலியை பெற்றுக்கொண்டதினால் எஜமானிடம் அவன் விவாதம்பண்ணக்கூடாது.
எஜமான் தயாளனாக இருக்கிறார். அவருடைய வேலையாட்களாகிய நாம் வன்கண்ணனாக இருக்கக்கூடாது. வன்கண்ணனாக இருப்பது பொறாமையின் சுபாவம். நமது கண்களே பாவத்தின் நுழைவாயிலாக இருக்கிறது. மற்றவர்கள் நன்றாக இருந்தால் நம்முடைய வன்கண்ணுக்கு பிடிக்காது. பொறாமைப்படும். மற்றவர்கள்
நன்மையை பெற்றுக்கொள்ளாமல், தீமையை பெற்றுக்கொள்ளவேண்டும்
என்று விரும்பும்.
தேவன் நல்லவர். அவர் தயாள குணமுள்ளவர். பொறாமை அவருடைய சுபாவமல்ல. அவர் நன்மை செய்கிறார். நன்மை செய்வதில் அவர் பிரியப்படுகிறார். நாம் மற்றவர்மீது பொறாமைப்படும்போது தேவனுடைய பிரமாணத்தை மீறுகிறோம்.
நம்மை நாம் நேசிப்பதுபோல பிறரை
நேசிக்க தவறிவிடுகிறோம். நம்முடைய தேவன் தயாளராக இருக்கிறபடியினால் நாம் வன்கண்ணனாக இருக்கக்கூடாது.
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார் (மத் 20:16).
இயேசுகிறிஸ்து பரலோக ராஜ்யத்தை வீட்டெஜமானை உவமையாக கூறி விளக்குகிறார். இந்த உவமையின் உட்கருத்தை இயேசுகிறிஸ்து இந்த வசனத்தில் தெளிவுபடுத்துகிறார். இந்த உவமையைக் கூறுவதற்கு முன்பாக ஏற்கெனவே இயேசுகிறிஸ்து ""முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்'' (மத் 19:30) என்று கூறியிருக்கிறார். அதே வாக்கியத்தை இங்கு மறுபடியும் கூறுகிறார்.
ஒரு சில விசுவாசிகள் மற்ற விசுவாசிகளைவிட ஞானத்திலும், அறிவிலும், கிருபையிலும், பரிசுத்தத்திலும் குறைவுள்ளவர்களாக இருக்கலாம். மற்ற விசுவாசிகள் இவர்களை ஏளனமாகவும் தாழ்மையாகவும் பார்க்கலாம்.
ஒரு சிலருடைய ஊழியம் சிறப்பாக இருக்கலாம். பதினோராவது மணி நேரத்தில் திராட்சத்தோட்டத்தில் வேலைக்கு வந்தவர்களைப்போல, ஒரு சில ஊழியக்காரர்கள் இப்போதுதான் ஊழியத்திற்கு வந்திருக்கலாம்.
பரிசுத்த ஆவியானவர் எல்லா ஊழியக்காரர்களையும் அபிஷேகித்து
தமது ஊழியத்தில் பயன்படுத்துகிறார். எல்லோரையும் பாதுகாத்து பராமரிக்கிறார். எல்லா ஊழியக்காரருடைய நன்மைகளையும் விசாரிக்கிறார். ஆகையினால் பழைய விசுவாசிகள் புதிய விசுவாசிகளைப்பார்த்து பொறாமைப்படக்கூடாது.
பொறாமைக் குணமுள்ளவர்கள் மனந்திரும்பவேண்டும். மனந்திரும்பாத ஊழியக்காரர்கள் மாய்மாலக்காரர்கள். தேவன் தயாளராக இருக்கும்போது ஊழியக்காரர்கள் வன்கண்ணனாக இருக்கக்கூடாது. இயேசுகிறிஸ்து தமது ஊழியத்திற்கு அநேகரை அழைக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் அநேகராக இருந்தாலும்
தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலராகவே இருக்கிறார்கள். தேவன் கூப்பிட்டும் ஒரு சிலர் கேட்கமாட்டோம் என்கிறார்கள் (நீதி 1:24). விசுவாசிகள் என்று பலர் தங்களை அழைத்தாலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசிகள் ஒரு சிலரே இருக்கிறார்கள்.
""தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்'' என்னும் வசனத்தின் கருத்தோடு இந்த வாக்கியம் ஒத்திருக்கிறது. இந்த உவமைக்கு பல விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.
1. திராட்சைத்தோட்டம் - சபை
2. வேலைக்காரர்கள் - விசுவாசிகள்
3. வெவ்வேறு வேளைகள் - விசுவாசிகளின் திறமை, வயது மற்றும் பல வேற்றுமைகள்
4. ஒருபணம் கூலி - இரட்சிப்பு
இந்த உவமைக்கு வேதபண்டிதர்கள் வேறொரு வியாக்கியானமும் தருகிறார்கள். முந்தினோர் என்பது யூதர்களையும், பிந்தினோர் என்பது புறஜாதியாரையும் குறிக்கும் என்பது வேறொரு வியாக்கியானம்.
""அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்'' - எல்லோருமே இரட்சிக்கப்படுமாறு அழைக்கப் படுகிறார்கள். (மத் 11:28; யோவான் 3:16; வெளி 22:17) ஆனால் ஒருசிலர் மட்டுமே இரட்சிக்கப் படுகிறார்கள். (மத் 7:13-14; லூக்கா 13:23-30)
from வேதாகம களஞ்சியம் Umn ministry