தாலந்துகளின் உவமை
அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான் (மத் 25:14,15).
ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான் (மத் 25:16-18).
வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்பிவித்தீரே; அவைகளைக் கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை
அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான் (மத் 25:19-21).
இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு
தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான்
அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்,அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்;
உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான் (மத் 25:22,23).
ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள
மனுஷன் என்று அறிவேன்.
ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான் (மத் 25:24,25).
அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால்,
நீ என் பணத்தைக் காசுக்காரர்
வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை
வட்டியோடே வாங்கிக் கொள்வேனே, என்று சொல்-, அவனிடத்தி-ருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.
உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்தி-ருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான் (மத் 25:26-30).
புறத்தேசத்துக்கு பிரயாணம்
அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்
தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்
(மத் 25:14,15).
ஒரு மனுஷன் ƒபுறத்தேசத்திற்கு பிரயாணமாய் போகிறான்.
அவனிடம் மூன்று ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். அவன் தன்
ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புவிக்கிறான். ஊழியக்காரர்களுடைய திறமைக்குத்தக்தாக அவர்களுக்கு தாலந்துகளைக் கொடுத்து அந்த மனுஷன் பிரயாணப்பட்டுப்போகிறான்.
ஊழியக்காரர்கள் தங்களிடம்
கொடுக்கப்பட்ட தாலந்துகளை
பயன்படுத்தி, சம்பாதிக்க வேண்டுமென்பது இந்த உவமையின் முக்கிய உபதேசமாகும்.
இந்த ஊழியக்காரர்களைப்போலவே விசுவாசிகளாகிய நமக்கும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தாலந்துகளை கொடுத்திருக்கிறார்.
நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
தாலந்துகளை நாம் பயன்படுத்தவேண்டும்.
நம்மிடம் பொறுப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியங்களில் நாம் உண்மையாகவும் விவேகமாகவும், சுறுசுறுப்பாகவும் ஈடுபடவேண்டும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே நம்முடைய எஜமானாக இருக்கிறார். அவருடைய பிள்ளைகள் எல்லோருமே அவருக்கு ஊழியக்காரர்களாக இருக்கிறோம்.
புறதேசத்திற்கு போகும் மனுஷன் தன்
மூன்று ஊழியக்காரர்களிடமும் தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுக்கிறான். அவர்களை சும்மா இருக்க சொல்லாமல், தன் ஆஸ்திகளை நிர்வாகம்பண்ணும் பொறுப்புக்களை தன் ஊழியக்காரர்களுக்கு கொடுக்கிறான். தம்முடைய ஊழியக்காரர்கள் ஊழியம் செய்யாமல் சும்மா இருப்பது இயேசுகிறிஸ்துவின் சித்தமல்ல. தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்தியின் பங்கிலிருந்து அவர்கள் பணிபுரியவேண்டும்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் இயேசுகிறிஸ்துவிடமிருந்து தங்களிடத்திலுள்ள எல்லாவற்றையும் பெற்றிருக்கிறார்கள். ஊழியக்காரர்களுக்கு சொந்தமாக எதுவுமில்லை. நம்முடைய பாவம் தான் நமக்கு சொந்தமாக இருக்கிறது.
நாம் இயேசுகிறிஸ்துவிடமிருந்து தாலந்துகளை பெற்றுக்கொள்ளும்போது, அவற்றை பயன்படுத்த வேண்டும். கிறிஸ்துவுக்காக அவற்றை பயன்படுத்தவேண்டும். நம்மை நம்பி நம்முடைய தேவன் நம்மிடம் ஒப்புக்கொடுத்திருக்கும் தாலந்துகளை அவருடைய நாம மகிமைக்காக பயன்படுத்தவேண்டும்.
தன்னுடைய ஆஸ்திகளை பராமரிக்கும் பொறுப்பை தன் ஊழியக்காரர்களிடம் அந்த எஜமான் நம்பி ஒப்புக்கொடுக்கிறான். அதன்பின்பு அவன் உடனே புறத்தேசத்திற்கு பிரயாணப்பட்டுப்போகிறான். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் உன்னதத்திற்கு ஏறிப்போனபோது மனுஷருக்கு வரங்களை கொடுத்தார்.
நம்முடைய ஆண்டவர் பரமமேறிப்போனதைப்போல,
இந்த மனுஷன் புறத்தேசத்திற்கு புறப்பட்டுப்போனான்.
இயேசுகிறிஸ்து பரமேறிப்போனபோது தம்முடைய சபைக்குத் தேவையான எல்லாக் காரியங்களையும் தம்முடைய ஊழியக்காரரிடம் பொறுப்பாக ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்து தற்போது நம் மத்தியில் பிரத்தியட்சமாக காணப்படவில்லை. ஆயினும் தம்முடைய சபையை பராமரிப்பதற்கு தேவையான அனைத்து காரியங்களையும் கிறிஸ்து இயேசு தம்முடைய ஊழியக்காரர்களிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார். கிறிஸ்து பரமேறிப்போனபோது தம்முடையது அனைத்தையும் தமது சபையிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
ஊழியக்காரர்களுக்கு அவர்களுடைய திறமைக்குத்தக்கதாக புறத்தேசத்திற்கு போன மனுஷன் தாலந்துகளை கொடுத்தான். இயேசுகிறிஸ்துவும் தம்முடைய பிள்ளைகளுக்கு தாலந்துகளை கொடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வெகுமதிகள் விலையேறப்பெற்றவை.
அவர் தமது சுயஇரத்தத்தினாலே இவையெல்லாவற்றையும் சம்பாதித்திருக்கிறார். இவை எதுவும் மனுஷருக்குரியதல்ல.
எந்த மனுஷனாலும் கிறிஸ்துவின் தாலந்துகளை சம்பாதிக்க முடியாது. அவர் சிலருக்கு அதிகமான தாலந்துகளையும், வேறு சிலருக்கு குறைவான தாலந்துகளையும் அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக கொடுக்கிறார்.
தேவனுடைய தெய்வீக பராமரிப்பு எல்லோருக்கும் ஒன்றுபோல் கொடுக்கப்படுவதில்லை. தம்முடைய சித்தத்தின் பிரகாரமாகவும், மனுஷருடைய திறமைக்குத்தக்க பிரகாரமாகவும் தேவன் தம்முடைய தாலந்துகளை கொடுக்கிறார்.
இந்த திறமையும் தேவனிடமிருந்தே வருகிறது. ஆவிக்குரிய வரங்களை தேவன் தமது கிருபையினால் தமது பிள்ளைகளுக்கு கொடுக்கிறார்.
தேவனுடைய பிள்ளைகள் எல்லோருக்குமே குறைந்த பட்சம் ஏதாவது ஒரு
தாலந்தாகிலும் கொடுக்கப்பட்டிருக்கும்.
நாம் ஒவ்வொருவரும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை மூலதனமாக வைத்து நமது ஊழியத்தை ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே எல்லா தாலந்துகளும் நமக்கு கொடுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது.
நம்முடைய ஆத்துமாவே தேவன் நமக்கு கொடுத்திருக்கும் மிகப் பெரிய தாலந்தாகும். தேவன் நம்மிடம் நம்முடைய ஆத்துமாவை நம்பி ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
நாம் அதை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். நம்மை சுற்றிலுமுள்ள ஜனங்களுக்கு நாம் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். நம்மால் முடிந்த எல்லா உதவிகளையும் நாம் செய்யவேண்டும். மற்றவர்களுக்கு உபகாரம் செய்யவேண்டுமே தவிர, உபத்திரவம் செய்து விடக்கூடாது.
எல்லோருமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நம்முடைய திறமைகளில் வித்தியாசம் இருக்கும். நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்களிலும் வித்தியாசம் இருக்கும். தேவன் நம் ஒவ்வொருவரையும் தம்முடைய ஊழியத்திற்கு அழைக்கிறார்.
தேவனுடைய ஊழியத்தில் பல பகுதிகள் உள்ளன. அதில் ஒரு பகுதியை ஒரு சிலருக்கும், வேறு பகுதியை வேறுசிலருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். நாம் எல்லோருமே வித்தியாசமான ஊழியங்களை செய்தாலும், எல்லோரும் சேர்ந்து தேவனுடைய ஊழியத்தையே செய்கிறோம். நமது சரீரத்தில் பல அவயவங்கள் இருப்பதுபோல தேவனுடைய ஊழியத்திலும் பல பகுதிகள் உள்ளன.
சம்பாதித்தான்
ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்
(மத் 25:16,17).
மூன்று ஊழியக்காரர்களில் இரண்டுபேர் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட தாலந்துகளை நல்லமுறையில் பயன்படுத்துகிறார்கள். தங்களிடமுள்ள தாலந்துகளைக் கொண்டு வியாபாரம்பண்ணி மேலும் பல தாலந்துகளை சம்பாதிக்கிறார்கள். தங்களுடைய எஜமான் புறத்தேசத்திற்கு போனவுடனே தாலந்துகளை பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். காலதாமதம் செய்யவில்லை.
விசுவாசிகளாகிய நமக்கும் நமது தேவன்
பல ஊழியப்பொறுப்புக்களை கொடுத்திருக்கிறார். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை காலதாமதம் பண்ணாமல் விரைவாக
செய்து முடிக்கவேண்டும்.
இரண்டு ஊழியக்காரர்களும் போய் வியாபாரம் பண்ணினார்கள். உண்மையான விசுவாசி ஆவிக்குரிய வியாபாரியைப்போல இருக்கவேண்டும்.
வியாபாரம் பண்ணுகிறவர் தான் செய்ய வேண்டிய தொழிலை முதலாவது தெரிந்தெடுப்பார். அதன்பின்பு அந்த தொழிலை எப்படி செய்வது என்று ஆர்வமாக கற்றுக்கொள்வார். தான் செய்யும் தொழில் நன்றாக நடைபெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்.
தன்னுடைய வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்ற வேலைகளையெல்லாம் தன்னுடைய தொழிலுக்கு உட்படுத்துவார். தான் செய்யும் தொழிலில் தனக்கு நியாயமாக கிடைத்த வருமானத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்.
நாம் தொழில் செய்வதற்கு முதலீடுபண்ண, நமக்கு சொந்தமாக மூலதனம் எதுவுமில்லை. நம்முடைய எஜமானன் நம்மிடம் பொறுப்பாக ஒப்புக்கொடுத்த தாலந்துகளை மூலதனமாக முதலீடுபண்ணி ஊழியம் செய்யவேண்டும். நம்முடைய எல்லா சிந்தனைகளும், செயல்களும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.
சுவிசேஷத்தின் பிரமாணங்களை நாம் கைக்கொள்ளவேண்டும். பிரமாணங்கள் எந்த நோக்கத்திற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்தை நாம் புரிந்துகொண்டு, அதற்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். தேவனோடு ஒப்புரவாகி ஐக்கியமாக இருக்கவேண்டும்.
ஆவியானவர் நமக்கு கொடுத்திருக்கும் வரங்களையும் கிருபைகளையும் தேவநாம மகிமைக்காகவும் பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காகவும் பயன்படுத்தவேண்டும்.
இரண்டு ஊழியக்காரர்களும் நல்லமுறையில் வியாபாரம்பண்ணுகிறார்கள். தங்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட தாலந்துகளை இரட்டிப்பாக்குகிறார்கள். சுறுசுறுப்புள்ளவனுடைய கைகள் ஐசுவரியத்தை சம்பாதிக்கும்.
நற்கிரியைகளை செய்வதினால் ஐசுவரியமும் ஆறுதலும் பெருகும்.
நம்முடைய ஆவிக்குரிய ஊழியத்திலும்,
நாம் சோம்பேறிகளாக இல்லாமல் உற்சாகமாக ஊழியம் செய்யவேண்டும். நாம் கர்த்தரிடமிருந்து எவ்வளவு பெற்றுக்கொண்டோமோ, அதற்கு தகுந்தாற்போல் சம்பாதிக்கவேண்டும். தேவன் நமக்கு ஏராளமான வரங்களை கொடுத்திருந்தால் அவை
எல்லாவற்றையுமே நாம் பயன்படுத்தவேண்டும்.
பெரிய தொழில்களைச் செய்கிறவர்கள் பெரிய நிர்வாகம் பண்ணுவார்கள். அதுபோல ஆவிக்குரிய வரங்களை அதிகமாக பெற்றிருக்கிறவர்கள் பெரிய ஊழியங்களை செய்ய வேண்டும்.
இரண்டு தாலந்துகளை பெற்றுக்கொண்டவன், அந்த இரண்டு தாலந்துகளை மூலதனமாக வைத்து வியாபாரம்பண்ணுகிறான். அவனுடைய வியாபாரம் இரண்டு தாலந்துகளுக்கு ஏற்றாற்போலவே இருக்கும். அவனுடைய தொழிலில் இரண்டு தாலந்துகளுக்குரிய முன்னேற்றமே காணப்படும்.
தேவன் நம்மிடம் எத்தனை தாலந்துகள் கொடுத்திருந்தாலும், அவற்றை பயன்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புக்களை தேடிப்பார்க்கவேண்டும். முழு ஆற்றலோடு அவற்றை பயன்படுத்தவேண்டும்.
நாம் மற்றவர்களைப்போல அதிகமாக ஊழியம் செய்யவில்லையென்றாலும், தேவன் நமக்கு கொடுத்திருக்கும் தாலந்துகளுக்கு ஏற்ப குறைவில்லாமல் ஊழியம் செய்யவேண்டும்.
ஐந்து தாலந்துகளை பெற்றுக்கொண்டவன் ஐந்து தாலந்துகளுக்குகேற்பவும், இரண்டு தாலந்துகளை பெற்றுக்கொண்டவன் இரண்டு தாலந்துகளுக்குகேற்பவும் குறைவில்லாமல் ஊழியம் செய்யவேண்டும்.
புதைத்து வைத்தான்
ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான் (மத் 25:18).
ஒரு தாலந்தை வாங்கினவன் ஒரு வேலையும் செய்யாமல் சும்மாயிருக்கிறான். நிலத்தை தோண்டி தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைக்கிறான். இவன் உண்மையில்லாத ஊழியக்காரன்.
இவனுக்கு ஒரு தாலந்து மாத்திரமே கொடுக்கப்பட்டது. இவனுடைய திறமையும் ஒரு தாலந்துக்கு மாத்திரமே பெறும். அந்த ஒரு தாலந்தைக்கூட இவன் பயன்படுத்தவில்லை. அந்த தாலந்தை நிலத்தை தோண்டி புதைத்துவிடுகிறான். இவனைப்போலவே கர்த்தருடைய பிள்ளைகளில் சிலர் இருக்கிறார்கள்.
தங்களுக்கு கொடுக்கப்படும் தாலந்துகளை பயன்படுத்தாமல் புதைத்துவிடுகிறார்கள். ஒரு தாலந்து மாத்திரமல்ல, ஒரு சிலர் தங்களுக்கு கொடுக்கப்படும் ஐந்து தாலந்துகளைக்கூட நிலத்தில் புதைத்துவிடுகிறார்கள். தங்களுடைய திறமைகள், வாய்ப்புக்கள், கல்வியறிவு, ஐசுவரியம் போன்ற எல்லா திறமைகளையும் எந்தவிதத்திலும் பயன்படுத்தாமல் புதைத்துப் போடுகிறார்கள்.
நம்மிடம் கொடுக்கப்பட்ட தாலந்துகளுக்கு நம்முடைய ஆண்டவர் நிச்சயமாகவே நம்மிடம் கணக்கு கேட்பார்.
ஒரு தாலந்தை வாங்கினவன் அதை நிலத்தை தோண்டி புதைத்து வைக்கிறான். இவனிடம் ஐந்து தாலந்துகளை கொடுத்திருந்தால் அவை அனைத்தையும் நிலத்தை தோண்டி புதைத்துப்போட்டிருப்பான்.
ஒரு சிலரால் தேவனுக்கு அதிகமாக
ஊழியம் செய்யமுடியும். ஆனால் தங்களால் முடிந்த அளவிற்கு ஊழியம் செய்யாமல் மிகவும் குறைவாகவே ஊழியம் செய்வார்கள். இதற்கு சில சாக்குபோக்குகளையும் கூறுவார்கள்.
தாங்கள் சொன்ன பிரகாரம் செய்யமாட்டார்கள். தங்களால் முடிந்த பிரகாரமும் செய்யமாட்டார்கள். ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பார்கள். இவர்கள் சோம்பேறிகள். இவர்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு தாலந்தைக்கூட இவர்கள் முறையாக பயன்படுத்தாமல் அக்கறையில்லாமல் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.
ஒரு தாலந்தை வாங்கினவனோ போய் நிலத்தை தோண்டி தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைக்கிறான். யாராவது இதை திருடிக்கொள்வார்களோ என்று பயந்து புதைத்துவிடுகிறான். பணம் ஒரு குப்பைமேட்டைபோல் இருக்கிறது.
குப்பைமேடாக இருக்கும்போது அதனால்
ஒரு பயனுமில்லை. அந்த குப்பையை எடுத்து நிலத்தில் உரமாக பயன்படுத்தும்போது அது அதிக பயனுள்ளதாக இருக்கும். ஆவிக்குரிய வரங்களும் இதுபோலவே உள்ளது.
வரங்களை பயன்படுத்தாமல் குவித்து வைப்பதினால் ஒரு பயனுமில்லை. அதை பயன்படுத்தும் போதுதான் அதனால் பிரயோஜனமுண்டாகும். தேவன் நமக்கு அநேக வரங்களை கொடுத்திருக்கிறார்.
அவற்றை பயன்படுத்துவதற்காகவே கொடுத்திருக்கிறார். நம்மில் அநேகர் தேவன் நம்மிடம் ஒப்புக்கொடுத்திருக்கும் வரங்களை பயன்படுத்தாமல் புதைத்துப்போடுகிறோம்.
ஒரு தாலந்தை வாங்கினவன் தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைக்கிறான். இது இவனுடைய பணமல்ல. எஜமானுடைய பணம். ஆனால் இவனோ தன் எஜமானுடைய பணத்தை தன்னுடைய பணம்போல நினைத்து தனக்கு
இஷ்டமானபடி அதை புதைத்து வைக்கிறான்.
எஜமானுடைய மற்ற இரண்டு ஊழியக்காரர்களும் வியாபாரம்பண்ணி தாலந்துகளை சம்பாதிக்கும்போது இவனோ பணத்தை புதைப்பதற்காக நிலத்தை தோண்டிக்கொண்டிருக்கிறான்.
இந்த சூழ்நிலையை ஆவிக்குரிய காரியங்களிலும் நாம் பார்க்கிறோம். ஒரு சில ஊழியக்காரர்கள் உற்சாகமாக ஊழியம் செய்கிறார்கள். வேறு சிலரோ எந்த ஊழியமும் செய்யாமல் சும்மாயிருக்கிறார்கள்.
தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை பயன்படுத்தாமல், அதை புதைப்பதற்கு நிலத்தில் குழிதோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கணக்குக் கேட்டான்
வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான் (மத் 25:19).
புறதேசத்திற்கு பிரயாணப்பட்டுப்போனவன் வெகுகாலமான பின்பு திரும்பி வருகிறான். போகும் முன்பு தன் ஊழியக்காரர்களிடம் அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக தன் ஆஸ்திகளை அவர்களிடம் ஒப்புக்கொடுத்திருந்தான்.
இப்போதோ அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்த தாலந்துகளுக்கு கணக்கு கேட்கிறான். புறதேசத்திற்கு போனவுடனே எஜமான் கணக்கு கேட்கவில்லை. வெகுகாலமான பின்பு கணக்கு கேட்கிறான். அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை கொண்டு வியாபாரம்பண்ணி சம்பாதிக்க அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கிறான்.
வெகுகாலமாக எஜமான் வரவில்லை. இறுதியாக அவன் திரும்பி வரும் நாள் வந்துவிடுகிறது. எஜமான் திரும்பி வந்ததும் அவர்களிடம் கணக்கு கேட்கிறான்.
பரமேறிப்போன நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்து மறுபடியும் இங்கு திரும்பி வரும்போது நம்மிடமும் கணக்கு கேட்பார். நம்முடைய ஆத்துமாவிற்கு நாம் என்ன நன்மை செய்திருக்கிறோம் என்று நம்மிடம் கணக்கு கேட்பார். அத்தோடு மற்ற ஆத்துமாக்களுக்கும் நாம் என்ன நன்மையை செய்திருக்கிறோம் என்று நம்மிடம் விவரமாக கணக்கு கேட்பார்.
சம்பாதித்தேன்
அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்பிவித்தீரே; அவைகளைக் கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான் (மத் 25:20).
ஐந்து தாலந்தை வாங்கியவனும், இரண்டு தாலந்தை வாங்கியவனும் தங்கள் எஜமானுக்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள். தங்கள் எஜமான் கணக்கு கேட்கும்போது அவனுக்கு உண்மையோடும் பணிவோடும் கணக்கு ஒப்புவிக்கிறார்கள். தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட தாலந்துகளைக் கொண்டு மேலும் அதிகமான தாலந்துகளை சம்பாதித்ததாக இவ்விரண்டு ஊழியக்காரர்களும் கணக்கு ஒப்புவிக்கிறார்கள்.
தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட தாலந்துகளுக்காகவும், பொறுப்புக்களுக்காகவும் இவர்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்களைப்போலவே கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரர்களும் தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட ஊழியங்களுக்காக கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஆண்டவரே அப்பிரயோஜனமான எங்களிடம் இவ்வளவு மகத்துவமான ஊழியத்தை நம்பி ஒப்புக்கொடுத்திருக்கிறீரே என்று நாம் நன்றியோடும் பணிவோடும் கூறவேண்டும்.
இயேசுகிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டதை மறந்து போகாமல் நினைவுகூரவேண்டும். அப்போதுதான் ஆண்டவர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். நாம் பெற்றுக்கொண்ட அளவிற்கு ஏற்றபிரகாரம் அவருக்கு கணக்கு ஒப்புவிக்க நாம் ஆயத்தமாக இருப்போம்.
கர்த்தருக்காக நாம் செய்யும் ஊழியங்களில் வளர்ச்சி காணப்படும்போது நமது உள்ளத்தில் பெருமை வரக்கூடாது. தேவனுடைய கிருபையையும், அவர் நமக்கு கொடுத்திருக்கும் சிலாக்கியத்தையும் நினைத்து அவருக்கு நன்றி கூரவேண்டும். நம்மை நம்பி ஒப்புக்கொடுத்திருக்கும் ஊழியத்தை உண்மையோடு செய்யவேண்டும். தேவன் நம்மை உயர்த்தும் போது நாம் தாழ்மையோடு இருக்கவேண்டும்.
நாம் கர்த்தருக்கு அதிகமாக ஊழியம் செய்யும்போது அவர் நமக்கு மேலும் பல ஊழியப்பொறுப்புக்களை கொடுப்பார். தேவனிடமிருந்து அதிகமாக பெற்றுக்கொள்கிறவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படும்.
தங்கள் எஜமானிடமிருந்து தாலந்துகளை பெற்றுக்கொண்ட இவ்விரண்டு ஊழியக்காரர்களும் அந்த தாலந்தைக்கொண்டு தாங்கள் சம்பாதித்த தாலந்துகளுக்கு கணக்கு ஒப்புவிக்கிறார்கள். இவர்களைப்போலவே தேவனுடைய ஊழியக்காரர்களும் கர்த்தருக்கு தங்கள் ஊழியத்தைக்குறித்து கணக்கு ஒப்புவிக்கவேண்டும். நமது விசுவாசத்தை கிரியையில் காண்பிக்கவேண்டும் (யாக் 3:13). கிரியையில்லாத விசுவாசம் செத்ததாக இருக்கிறது.
இரண்டு தாலந்தைப் பெற்றுக்கொண்டு வேறு இரண்டு தாலந்தை சம்பாதித்த ஊழியக்காரன் தன் எஜமானிடம் சந்தோஷமாக கணக்கு ஒப்புவிக்கிறான்.
ஐந்து தாலந்தை வைத்து வேறு ஐந்து தாலந்தை சம்பாதித்தவனைப்போல இவனும் சந்தோஷமாக கணக்கு ஒப்புவிக்கிறான். கணக்கு ஒப்புவிக்கும் நாளில் நமது உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
நமது ஊழியத்தில் எவ்வளவு வளர்ச்சி உண்டாயிற்று என்பதைவிட நமது இருதயத்தின் உண்மையும் நேர்மையும் மிகவும் முக்கியமானது. நமக்கு எவ்வளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்பதைவிட, நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்தினோம் என்பது மிகவும் முக்கியம்.
உண்மையாயிருந்தாய்
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்,
அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே;
அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான் (மத் 25:21-23).
எஜமான் இவ்விரண்டு ஊழியக்காரர்களையும் பாராட்டுகிறான். ""நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே'' என்று அவர்களை புகழ்ந்து கூறுகிறான். நாம் தேவனை இப்போது மகிமைப்படுத்தி கனப்படுத்தினால்,
ஏற்றவேளை வரும்போது அவர் நம்மை கனப்படுத்துவார். இயேசு கிறிஸ்துவை நாம் இப்போது மறுதலிக்காமல் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டால், ஏற்றவேளை வரும்போது அவரும் நம்மை மறுதலிக்காமல் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வார். கிறிஸ்துவுக்காக உண்மையாக ஊழியம் செய்கிறவர்களை ""நல்லது உண்மையும் உத்தமமும் உள்ளவர்களே'' என்று அழைப்பார்.
நம்முடைய ஊழியங்களை அங்கீகரிப்பார். நாம் செய்யும் ஊழியங்களை ஆராய்ந்து, அளவிட்டுப்பார்த்து ""நல்லது'' என்று அறிக்கை செய்வார்.
தமக்காக ஊழியம் செய்வதற்கு இயேசு கிறிஸ்து நல்ல ஊழியக்காரர்களை மாத்திரமே அழைக்கிறார். நல்ல ஊழியக்காரர்கள் உத்தமமும் உண்மையும் உள்ளவர்களாக இருப்பார்கள்.
நாம் நன்மையான காரியங்களை நன்றாகச்செய்யும்போது, நமது நல்ல வேலைகளுக்ககாக நாம் பாராட்டப்படுவோம். ஆனால் ஒருசில எஜமான்கள் தங்கள் வேலைக்காரர்களை நல்ல வார்த்தைகளைக்கூறி பாராட்டமாட்டார்கள். தங்களால் பாராட்டப்படுவதற்கு ஊழியக்காரர்கள் தகுதியற்றவர்கள் என்று நினைத்து அமைதியாக இருந்துவிடுவார்கள்.
நம்முடைய எஜமான் இயேசு கிறிஸ்துவோ தம்முடைய ஊழியக்காரர்களை பாராட்டுகிறவர். நம்மை மனுஷர் பாராட்டவில்லை என்றாலும், நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் செய்யும் நல்ல ஊழியங்களைப்பார்த்து நம்மை பாராட்டுவார். அவர் நம்மிடம் ""நல்லது, உத்தமமும் உண்மையும் உள்ள ஊழியக்காரனே'' என்று கூறும்போது நமக்கு சந்தோஷமாக இருக்கும்.
இந்த உவமையில் நன்றாக ஊழியம் செய்த தன்னுடைய ஊழியக்காரர்களில் இரண்டுபேரை எஜமான் பாராட்டுகிறான். அவர்களுடைய கடினமான உழைப்பிற்கு அவன் வெகுமதி கொடுக்கிறான்.
""நீங்கள் கொஞ்சத்திலே உண்மையாய் இருந்தீர்கள், அநேகத்தில்மேல் உங்களை அதிகாரியாக வைப்பேன்'' என்று எஜமான் புகழ்ந்து பேசுகிறான். ராஜாக்களுடைய அரண்மனைகளிலும், மிகப்பெரிய செல்வந்தர்களுடைய வீடுகளிலும் உண்மையுள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நம்பிக்கைக்குரியவர்களை பெரும் பதவிகளில் நியமிப்பார்கள்.
சிறிய காரியங்களில் உண்மையுள்ளவர்களாக இருக்கிறவர்களுக்கும் பெரிய பொறுப்புக்கள் கொடுக்கப்படும்.
நம்முடைய எஜமான் இயேசுகிறிஸ்து தமக்காக ஊழியம் செய்வதற்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களை மாத்திரமே அங்கீகரிக்கிறார். தம்மை மகிமைப்படுத்துகிற ஊழியக்காரர்களை கிறிஸ்துவும் மகிமைப்படுத்துகிறார்.
இந்த பூமியில் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் தரித்திரர்களாக இருந்தாலும் பரலோகத்தில் அவர்கள் ஜசுவரியவான்களாக இருப்பார்கள். இங்கு அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும் பாடுகளை அனுபவிக்கிறவர்களாகவும். இருந்தாலும், பரலோகத்தில் அவர்கள் கிறிஸ்துவோடு ஆளுகை செய்கிறவர்களாகவும் இருப்பார்கள்.
நாம் செய்யும் ஊழியத்தின் அளவுக்கும் நமக்கு கொடுக்கப்படும் வெகுமதியின் அளவுக்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கும். நாம் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தாலும், அநேகத்தின்மேல் அதிகாரியாக வைக்கப்படுவோம். கொஞ்சம் உழியத்தை உண்மையாக செய்தாலும் நமக்கு அநேக ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படும்.
நாம் ஒரு சில காரியங்களில் தேவனை மகிமைப்படுத்தினாலும், பல காரியங்களில் நாம் தேவனோடுகூட மகிமை அடைவோம்.
தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட ஊழியங்களை உண்மையாக செய்யவேண்டும். இந்த உலகத்தில் நாம் தேவனுக்காக கொஞ்சம் ஊழியத்தை செய்தாலும் அதை உண்மையாக செய்யவேண்டும். உண்மையாக ஊழியம் செய்யும்போது நமக்கு பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் நியமிக்கப்பட்டிருக்கும். நாம் தேவனுக்காக கொஞ்சம் செய்தாலும், அதை உண்மையாக செய்யும்போது, நமக்கு
மிகுந்த ஆசீர்வாதம் உண்டு.
உண்மையுள்ள இரண்டு ஊழியக்காரர்களையும் எஜமான் பாராட்டிப்பேசும்போது ""உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி'' என்று கூறுகிறான். நாம் ஆசீர்வதிக்கப்படுவதே நமக்கு சந்தோஷம். ஆசீர்வாதமான இடம் நமக்கு சந்தோஷமான இடம்.
பரிசுத்தவான்களின் ஐக்கியமும், பரிசுத்த தேவனுடைய பிரசன்னமும் நமக்கு மிகுந்த சந்தோஷத்தைக்கொடுக்கும். இந்த சந்தோஷம் பூரணமாக இருக்கும். இதுவே எஜமானுடைய சந்தோஷமாகும்.
தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தமது சுய இரத்தத்தினால் சம்பாதித்த சந்தோஷத்தை கிருபையாக கொடுக்கிறார். தம்முடைய பாடுகளினாலும், வருத்தத்தினாலும், வேதனையினாலும், நம்முடைய மீட்பர் சந்தோஷத்தை கிரயமாக வாங்கி மீட்கப்பட்டவர்களுக்கு அதை இலவசமாக கொடுக்கிறார்.
இது தேவனுடைய சுத்த கிருபை.
தம்முடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பதற்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களை அனுமதிக்கிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அவரோடு உடன் சுதந்தரராக இருக்கிறார்கள்.
மகிமையடைந்த பரிசுத்தவான்கள் கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பார்கள். ஆயத்தமாக இருக்கிறார்கள் கலியாண விருந்தில் பந்தியிருப்பார்கள். பரலோகத்தில் பிரவேசிக்கிறவர்கள் அங்கு நித்திய காலமாக வாசம்பண்ணுவார்கள்.
ஒரு தாலந்தை வாங்கினவன்
ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான் (மத் 25:24,25).
ஒரு தாலந்தை வாங்கினவன் சோம்பலுள்ளவனாக இருக்கிறான். தன் எஜமானுடைய பணத்தை நிலத்தை தோண்டி புதைத்துவைத்துவிட்டான். தன்னுடைய தவறான செய்கைக்கு எஜமானிடம் சாக்குப்போக்கு கூறுகிறான். இவனுக்கு ஒரு தாலந்துதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு தாலத்திற்கு மாத்திரம் இவன் கணக்குகொடுத்தால் போதுமானது.
தேவன் நமக்கு கொடுத்ததற்கு மாத்திரமே நம்மிடம் கணக்கு கேட்பார். நமக்கு கொடுத்ததற்கு அதிகமாக நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கமாட்டார். ஆனால் நாம் பெற்றுக்கொண்டதற்கு கட்டாயம் கணக்கு ஒப்புவித்தே ஆகவேண்டும்.
ஒரு தாலந்தை வாங்கினவன் தன்
எஜமானை நோக்கி ""இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்'' என்று கூறுகிறான். மற்றவர்களைப்போல தனக்கு கொடுக்கப்பட்ட தாலந்தைக் கொண்டு இவன் அதிகமாக சம்பாதிக்கவில்லையென்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை தான் அழித்துப்போடவில்லையென்று நிதானமாக கூறுகிறான்.
எஜமான் தன்னிடம் கொடுத்ததை பாதுகாப்பாக வைத்திருப்பதே சிறந்த ஊழியம் என்று இவன் நினைக்கிறான். அதிக தாலந்துகளை சம்பாதிப்பதைவிட தன்னிடம் கொடுக்கப்பட்ட தாலந்தை பத்திரமாக வைத்திருப்பது இவனுக்கு முக்கியமானதாக தெரிகிறது. சோம்பலுள்ள ஊழியக்காரர்கள் இவனைப்போலவே இருப்பார்கள். கர்த்தருக்காக எந்த ஊழியத்தையும் பிரயாசப்பட்டு செய்யமாட்டார்கள்.
ஆயினும் அதிகமாக ஊழியம் செய்கிறவர்களைப்போல தங்களையும் பாராட்டவேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
ஒரு தாலந்தை வாங்கினவன் எஜமானிடம் வந்து ""இதோ உம்முடையதை வாங்கிக்கொள்ளும்'' என்று கணக்கு ஒப்புவிக்கிறான். இவ்வாறு கணக்கு ஒப்புவித்தால் போதுமானது என்று நினைக்கிறான். கர்த்தருடைய பிள்ளைகளில் அநேகர் இப்படித்தான் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கிறார்கள்.
இந்த பூமியில் கர்த்தருக்காக எந்த ஊழியமும் செய்யாவிட்டாலும், பரலோகத்தின் மேன்மை தங்களுக்கு கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை பாதுகாத்துக்கொண்டால் போதுமானது என்று நினைக்கிறார்கள்.
தாலந்தை பயன்படுத்தவேண்டும் என்னும் தரிசனம் இவர்களிடத்தில் இல்லை. தேவன் தங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று இவர்கள் தவறாக நினைக்கிறார்கள்.
தன் எஜமான் கொடுத்த ஒரு தாலந்தை இவன் நிலத்தைத்தோண்டி புதைத்துவைத்திருக்கிறான். தனக்கு கொடுக்கப்பட்ட தாலந்தை தான் தவறாக பயன்படுத்தவில்லை என்றும், அதை திருடிக்கொண்டு வேறு எங்கும் ஓடிவிடவில்லை. என்றும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தன் எஜமானிடம் கூறுகிறான்.
இதற்காக தன் எஜமான் தன்னை பாராட்டவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். தான் புதைத்து வைத்திருந்த தாலந்தை மறுபடியும் தோண்டி எடுத்து தன் எஜமானிடம் திரும்பக்கொடுக்கிறான்.
ஒரு தாலந்தை வாங்கினவன் பொல்லாதவனும் சோம்பனுமாக இருந்தாலும் தன்னுடைய சோம்பல் தனத்தை நியாயப்படுத்துகிறான். ""நீர் கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன், ஆகையால் நான் பயந்துபோனேன்'' என்று தன் பயத்தை வெளிப்படுத்துகிறான்.
பக்தியுள்ளவர்கள் தேவனைப்பற்றி சிந்திக்கும்போது அவருடைய அன்பே அவர்களுக்கு பிரதானமாக வெளிப்படும். தேவனுடைய அன்பை நினைவுகூர்ந்து பரிசுத்தவான்கள் கர்த்தரைத்துதிப்பார்கள். கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாகவும் உத்தமமாகவும் செய்வார்கள்.
துன்மார்க்கர்கள் தேவனைப்பற்றி நினைக்கும்போது அவர்களுக்கு பயம் உண்டாகும். தேவனுடைய ஆக்கினையையும் கோபத்தையும் நினைத்து பயப்படுவார்கள். நமக்கு பயம்வரும்போது.
நாம் பொல்லாதவர்களாகவும் சோம்பலுள்ளவர்களாகவும் மாறிவிடுவோம். பயம் நம்மை சீரழித்துவிடும்.
ஒரு தாலந்தை வாங்கினவன் தன் எஜமானைப்பற்றி அவர் கடினமுள்ள மனுஷன் என்று அறிந்து வைத்திருக்கிறான். தான் பெற்றுக்கொண்ட தாலந்தை மேலும் அதிகமாக சம்பாதிக்காமல், நிலத்தை புதைத்து வைத்ததற்கு காரணம் கூறுகிறான். தன் எஜமான் கடினமுள்ள மனுஷனென்று இவன் எப்படி அறிந்து கொண்டான் என்று தெரியவில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்களில் சிலர் ஒரு ஊழியமும் செய்யாமல் இவனைப்போலவே சாக்குப்போக்கு கூறுகிறார்கள்.
கர்த்தரை கடினமுள்ளவர் என்று அறிவிக்கிறார்கள். இந்த உலகம்முழுவதும் அவரை நல்லவர் என்றும், அன்புள்ளவர் என்றும் கிருபையுள்ளவர் என்றும், இரக்கமுள்ளவர் என்றும் அறிந்திருக்கும்போது அவருடைய சத்துருக்கள் மாத்திரம் அவரை கடினமுள்ளவர் என்று அறிந்திருக்கிறார்கள்.
இந்த பூமி கர்த்தருடைய நன்மையினால் நிறைந்திருக்கிறது. இவர் கடினமுள்ளவர் அல்ல. இவர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் அல்ல. விதைக்கிற இடத்தில் அறுக்காமல் இருக்கிறவரும் அல்ல. விதைத்ததை அறுப்பதற்காக இயற்கையின் மூலமாக பல பராமரிப்புக்களை கொடுக்கிறார். சூரியனை உதிக்கச்செய்து வெளிச்சத்தைக் கொடுக்கிறார். மழையை பெய்யச்செய்து தண்ணீரைக் கொடுக்கிறார். பட்சபாதம் இல்லாமல் நல்லோர்மீதும் பொல்லார் மீதும் தம்முடைய மழையை பெய்யச்செய்கிறார். மனுஷருடைய இருதயங்களை சந்தோஷத்தினாலும் நன்மையினாலும் நிறப்புகிறார்.
துன்மார்க்கர்கள் தங்களுடைய பாவங்களை அங்கீகரிப்பதில்லை. தேவனுடைய கிருபையை புறக்கணித்துவிட்டு பாவத்தில் ஜீவிக்கிறார்கள். பாவமும் அழிவும் இவர்களுடைய வாசற்படியில் படுத்திருக்கும்போது, தங்கள் மீது வந்திருக்கும் சாபத்திற்கு தேவனை குறைகூறுகிறார்கள். நாம் அழிந்துபோனால் நமது சுய பாவமே நமது அழிவுக்கு காரணமாக இருக்கும். நம்முடைய அழிவுக்கு தேவனை ஒருபோதும் காரணமாகக்கூறமுடியாது.
ஒரு தாலந்தை வாங்கினவன் தான் பயந்துபோனதாக கூறுகிறான். பயப்படுவது அடிமைத்தனத்தின் ஆவி. தேவனிடத்தில் பக்தியில்லாதவர்களும், அன்புகூராதவர்களும், தேவன் கடினமுள்ளவர் என்று தவறாக நினைத்து அவருக்கு பயப்படுவார்கள். தேவனைப்பற்றி தவறான எண்ணம் உடையவர்கள் அவரை விட்டு விலகியே இருப்பார்கள்.
பயப்படுகிறவர்கள் கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்யமாட்டார்கள். கர்த்தர் மீது மெய்யான அன்புள்ளவர்களே கர்த்தருக்கு அதிகமாக ஊழியம் செய்வார்கள். கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம். ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவனுடைய பயம் அவனுடைய பொல்லாத குணத்தினாலும், சோம்பல்தனத்தினாலும் வந்திருக்கிறது.
ஊழியக்காரன் தன் எஜமானைக் குற்றப்படுத்துகிறான். தனது சோம்பற்தனத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமாறு கூறுகிறான்.
சோம்பேறி மற்றவர்களைக் குறித்து இப்படித்தான் நினைக்கிறான். மற்றவர்கள் எல்லாம் திறமைசாலிகள். ஆகையினால் அவர்களுக்கு எல்லாக் காரியமும் கைகூடி வருகிறது. வாழ்வில் வளம்பெறுகிறார்கள். ஆனால் தான் மட்டும் ஒன்றுமில்லாதவனாக இருப்பதாக நினைக்கிறான். இந்தச் சோம்பேறி ஒருவேலையும் செய்வதில்லை.
சோம்பேறி பயப்படுவான். எந்த முயற்சியும் எடுக்கமாட்டான். ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்தால் நஷ்டம் வருமோ என்று பயந்து ஒன்றுமே செய்யமாட்டான்.
பொல்லாதவனும், சோம்பனும்
அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக் கொள்வேனே, என்று சொல்- (மத் 25: 26,27).
ஒரு தாலந்தை வாங்கினவன் கூறிய காரணத்தை அவனுடைய எஜமான் அங்கீகரிக்கவில்லை. அவனுடைய சோம்பல் தனத்திற்காகவும், பொல்லாத சுபாவத்திற்காகவும் எஜமான் அவனை கடிந்துகொள்கிறான். அவனை அழைக்கும்போது ""பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே'' என்னும் வார்த்தைகளால் அழைக்கிறான்.
சோம்பலான ஊழியக்காரன் பொல்லாதவனாகவும் துன்மார்க்கமான ஊழியக்காரனாகவும் இருப்பான். கர்த்தருடைய ஊழியத்தில் கவனக்குறைவாக இருக்கிறவன். பிசாசின் கிரியைகளை உற்சாகமாகச்செய்வான்.
நமக்கு கொடுக்கப்படும் ஊழியத்தை செய்யாமல் தவிர்ப்பதும் பாவமாகும். செய்யவேண்டிய ஊழியத்தை செய்யாமல் இருந்தாலும் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். சோம்பல் தனம் துன்மார்க்கத்திற்கு வழிவகுக்கும் வீடு வெறுமையாக இருந்தால் அசுத்த ஆவிகள் அங்கு வந்து குடிபுகுந்துவிடும். நாம் தூங்கும்போது சத்துரு களைகளை விதைக்கிறான்.
2
தன்னிடம் ஒரு தாலந்தை வாங்கினவனிடம் எஜமான் தன்னைப்பற்றி கூறுகிறான். தன் ஊழியக்காரன் தன்னைப்பற்றி கூறிய வார்த்தைகளையே அவனிடம் திரும்பக்கூறுகிறான். ""நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே, அப்படியானால், நீ என் பணத்தை காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது''
என்று எஜமான் தன் ஊழியக்காரனிடம் கூறுகிறான்.
தான் கடினமுள்ள எஜமான் என்பதை அங்கீகரிக்கிறான். தன்னுடைய சுபாவம் கடினமானதாக இருப்பதினால், தன்னுடைய ஊழியக்காரன் மிகவும் கவனமாகவும், சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாகவும் ஊழியம் செய்யவேண்டும். அப்போதுதான் கடினமான எஜமானை சந்தோஷப்படுத்தமுடியும். அன்பினால் ஊழியம் செய்யாவிட்டாலும், பயத்தினாலாவது ஊழியம் செய்யவேண்டும்.
ஊழியக்காரன் எஜமானை கடினமானவனென்று அறிந்திருக்கிறான். ஆகையினால் எஜமானுடைய பணத்தை ஊழியக்காரன் நிலத்தைத்தோண்டி புதைத்துவைக்கக்கூடாது. குறைந்த பட்சம் காசுக்காரர் வசத்திலாவது போட்டுவைக்கவேண்டும்.
எஜமான் வரும்போது அவர் தன்னுடைய பணத்தை வட்டியோடே வாங்கிக்கொள்வார். கடினமுள்ள எஜமான் வட்டிவாங்க யோசிக்கமாட்டார்.
ஒரு சில காரியங்களை நம்மால் செய்ய முடியாது என்றும், அது மிகவும் கடினமானது என்றும் யோசித்து, அந்த வேலையை ஆரம்பிக்கவே மாட்டோம். எளிதான, பாதுகாப்பான வேலைகளையே செய்யவிரும்புவோம். ஒரு ஊழியம் கடினமானது என்பதற்காக அதை செய்யாமல் விட்டுவிடக்கூடாது. ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட ஓரளவாவது செய்வது மிகவும் மேன்மையானது. கடினமான ஊழியங்களில் நாம் முழுபலத்தோடு ஈடுபடவேண்டும். கடினமான வேலைகளை செய்யவிரும்பாதவர்கள் சாதாரண வேலைகளையும் செய்யமாட்டார்கள்.
எஜமான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்று ஊழியக்காரன் கூறுகிறான். எஜமானைப்பற்றி ஊழியக்காரன் இவ்வாறு கூறுவதற்கு அவனுக்கு உரிமையில்லை. ஏனெனில் எஜமான் இந்த ஊழியக்காரனிடத்தில் ஒரு தாலந்தை விதைத்திருக்கிறான். அவன் வசத்தில் ஒரு தாலந்தை ஒப்புக்கொடுத்திருக்கிறான். சும்மா வைத்திருப்பதற்காக எஜமான் அந்த தாலந்தை அவனுக்கு கொடுக்கவில்லை. அந்த தாலந்தைக்கொண்டு மேலும் பல தாலந்துகள் சம்பாதிப்பதற்காகவே எஜமான் அவனுக்கு ஒரு தாலந்தைக்கொடுத்திருக்கிறான்.
சோம்பேறி எஜமானைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறான். ஆகையினால், இவன் நம்பிக்கையோடு முயற்சி பண்ணியிருக்க வேண்டும். ஆனால் இவனோ தனக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் புதைத்து வைத்துவிடுகிறான்.
சோம்பலுள்ள ஊழியக்காரனின் சுபாவங்கள்
1. நன்றியில்லாதவன் (மத் 25:18)
2. தவறு புரிகிறவன் (மத் 25:18,24)
3. நீதியில்லாதவன் (மத் 25:18)
4. மற்றவர்களிடம் குற்றம் கண்டு பிடிப்பான், மற்றவர்கள்மீது குற்றம் சுமத்துவான் (மத் 25:24)
5. தான் செய்வது நியாயமானது என்று சாதிப்பான் (மத் 25:24)
6. பயப்படுவான் (மத் 25:25)
7. துன்மார்க்கன் (மத் 25:26)
உள்ளவனெவனோ
அவனிடத்தி-ருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்தி-ருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (மத் 25:28,29).
பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. அவனிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற தாலந்து அவனைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும். உண்மையும் உத்தமமும் உள்ளவனெவனோ அவனுக்கு தாலந்துகள் கொடுக்கப்படும். உலகப்பிரகாரமான ஐசுவரியங்களும், சொத்துக்களும் உண்மையுள்ளவர்களுக்கு மாத்திரமே பொறுப்பாக ஒப்புக்கொடுக்கப்படும்.
கர்த்தர் நம்மிடத்தில் பொறுப்பாக ஒப்புக்கொடுத்திருக்கும் எல்லா காரியங்களையும் தேவனுடைய மகிமைக்காக நாம் பயன்படுத்தவேண்டும். பரிசுத்தவான்களின் பிரயோஜனத்திற்காக அவற்றை பயன்படுத்தவேண்டும்.
ஒருவனிடத்தில் உண்மையும், உத்தமமும் இல்லையென்றால் அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். தேவன் நம்மிடத்தில் கொடுத்திருக்கும் தாலந்துகளையும், வாய்ப்புக்களையும் தேவனுடைய நாம மகிமைக்காக பயன்படுத்தவேண்டும்.
பயன்படுத்தவில்லையென்றால். தேவ கிருபை நம்மைவிட்டு அகற்றப்படும். தேவன் நமக்கு கொடுக்கும் எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி ஊழியத்தின் எல்லைகளை விஸ்தாரம் பண்ணவேண்டும்.
ஆவியானவர் விசுவாசிகளுக்கு வரங்களைக்கொடுக்கிறார். வரங்களைப்பெற்றிருக்கிறவர்கள் அவற்றை உண்மையோடும், உத்தமத்தோடும் பயன்படுத்தவேண்டும். எந்தெந்த வழிகளிலெல்லாம். வரங்களை பயன்படுத்த முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அவற்றைப் பயன்படுத்தி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தவேண்டும். நமக்கு கொடுக்கப்படும் வரங்களை நாம் உண்மையோடும் உத்தமத்தோடும் பயன்படுத்தும்போது கர்த்தர் மேலும் பல வரங்களைத்தருவார்.
நம்மிடத்தில் உள்ள வரங்களை நாம் அனல்மூட்டி எழுப்பிவிடவேண்டும் இல்லையென்றால் அவை அணைந்துபோகும்.
புறம்பான இருள்
பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான் (மத் 25:30).
பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரன் புறம்பான இருளிலே தள்ளப்படுகிறான். பிரயோஜனமற்ற ஊழியக்காரனுக்கு இதுபோன்ற தண்டனையே கிடைக்கும். சோம்பலான ஊழியக்காரனால் ஒரு பிரயோஜனமும் இராது. திருச்சபையில் சோம்பலானவர்கள் மரத்திலிருந்து உதிர்ந்த இலையைப்போன்று பயன்னற்றவர்களாக இருப்பார்கள். சரீரத்திலிருந்து தரித்துப்போடப்பட்ட அவயவம்போல இருப்பார்கள். சரீரத்தில் அங்கமாக இராத அவயவத்தினால் ஒரு பிரயோஜனமும் இராது.
ஆவிக்குரிய ரீதியாக ஆராய்ந்துபார்க்கும்போது நாம் எல்லோருமே அப்பிரயோஜனமான ஊழியக்காரர்களாகவே இருக்கிறோம். கர்த்தர் நமக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்து முடித்தபின்பு "" நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்'' என்று கூறவேண்டும் (லூக் 17:10). கர்த்தருடைய ஊழியக்காரர்கள் நன்மை செய்யவேண்டும். ஆவியின் கனியை வெளிப்படுத்தவேண்டும்.
நாம் எவ்வளவுதான் நன்மைசெய்தாலும், உற்சாகமாக ஊழியம் செய்தாலும் அதனால் தேவனுக்கு பிரயோஜனமில்லை. ஆயினும் நமது ஊழியத்தின் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படும். நாம் மிகுந்த கனிகளைக்கொடுப்பதினால் நமது பரலோகப்பிதா மகிமைப்படுவார். நாமும் நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கு சீஷராயிருப்போம் (யோவா 15:8).
பிரயோஜனமற்ற ஊழியக்காரன் புறம்பான இருளிலே தள்ளப்படுகிறான். இது ஒரு பூரண இருள். இந்த இருளில் எந்த மனுஷனாலும் கிரியை நடப்பிக்கமுடியாது. சோம்பலான ஊழியக்காரனுக்கு இதுவே சரியான தண்டனை. இவன் உள்ளான இருளில் தள்ளப்படவில்லை.
புறம்பான இருளில் தள்ளப்படுகிறான். பரலோகத்தின் வெளிச்சத்திற்கு புறம்பே தள்ளப்படுகிறான். கர்த்தருடைய சந்தோஷத்திற்கும் சமாதானத்திற்கும் பாத்திரவானாகயிராதபடி புறம்பே தள்ளப்படுகிறான் உண்மையுள்ள ஊழியக்காரர்கள் கர்த்தருடைய சமூகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
பொல்லாத ஊழியக்காரர்களோ கர்த்தருடைய சமுகத்தைவிட்டு புறம்பே தள்ளப்படுவார்கள். பொல்லாத ஊழியக்காரர்களுக்கு கர்த்தருடைய பந்தியில் இடமில்லை. புறம்பான இருளில் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். பொல்லாத ஊழியக்காரனுக்கு இந்த பங்கே நியமிக்கப்பட்டிருக்கிறது.
from வேதாகம களஞ்சியம்