அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிளிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி,
அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்
என்றார் (லூக் 17:7-10).
நாம் கர்த்தருக்காக எப்படிப்பட்ட ஊழியம் செய்தாலும் நம்மிடத்தில் பெருமை இருக்கக்கூடாது. மனத்தாழ்மையே இருக்க வேண்டும். அப்போஸ்தலர்கள் மற்ற எல்லா விசுவாசிகளைவிட கர்த்தருக்காக
அதிகமாய் ஊழியம் செய்தவர்கள்.
அவர்கள்கூட தங்களுடைய ஊழியத்தில் பெருமைப்படக்கூடாது. தாங்கள் செய்யும் ஊழியத்தின் மூலமாக தேவன் தங்களுக்கு கடனாளி என்னும் சிந்தனை அப்போஸ்தலருக்கு வந்துவிடக்கூடாது.
விசுவாசிகளாகிய நாம் எல்லோருமே கர்த்தருக்கு ஊழியக்காரர்களாக இருக்கிறோம். நம்முடைய முழுபலமும் முழுநேரமும் கர்த்தருக்கே உரியது.
இவற்றை அவருடைய சித்தத்தின் பிரகாரம் அவருக்காகவே பயன்படுத்த வேண்டும். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் எல்லா நேரத்திலும் நாம் அவருக்காக ஊழியம் செய்யவேண்டும். ஒரு ஊழியம் நிறைவுபெறும்போது நாம் அடுத்த ஊழியத்தை ஆரம்பித்துவிடவேண்டும்.
இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரரைப்பற்றி விவரிக்கும்போது, வயல்வெளியில் வேலைசெய்யும் ஒரு எஜமானுடைய ஊழியக்காரனைப்பற்றி குறிப்பிடுகிறார். இவன் தன் எஜமானுடைய வயலில் உழுது அல்லது எஜமானுடைய மந்தைகளை மேய்த்து வயலிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வருகிறான்.
இவனுடைய வேலை இத்துடன் முடிந்துபோகவில்லை. தன் எஜமான் வீட்டில் செய்யவேண்டிய வேலை இவனுக்காக இன்னும் காத்திருக்கிறது. தன் எஜமானுக்கு சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, அவர் போஜனபானம் பண்ணுமளவும் அவருக்கு ஊழியம் செய்யவேண்டும்.
நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்யும்போது நம்முடைய ஊழியம் ஒருபோதும் முடிந்துவிடுவதில்லை. நாம் தேவனுக்காக செய்ய வேண்டிய ஊழியம் இன்னும் இருக்கிறது. அது எப்போதும் இருக்கும். கர்த்தர் வருமளவும் இருக்கும். கர்த்தருக்காக ஊழியம் செய்வது மாத்திரமே நம்முடைய கடமை. நமக்கு ஆறுதலைக்கொடுப்பதும்,
இளைப்பாறுதலைக் கொடுப்பதும், நம்மைப் பாராட்டுவதும் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரம் நடைபெறும். ஊழியம் செய்வதை மாத்திரம் நாம் செய்துகொண்டு, மற்ற காரியங்களை கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்துவிடவேண்டும்.
எந்த எஜமானும் தான் சாப்பிடுவதற்கு முன்பாக, தன் ஊழியக்காரனைப்பார்த்து,
""நீ முன்பு போய் சாப்பிட்டு வா'' என்று சொல்லவேமாட்டார். பகல் நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்த பின்பு, நமக்கு ஓய்வுகொடுத்து அனுப்பிவிடமாட்டார். நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் இருக்கும்போது, அந்த வேலைகளைச் செய்யுமாறு நமக்கு கட்டளையிடுவார்.
ஆகையினால் தேவன் நமக்குக் கொடுக்கும் ஊழியங்களை உண்மையோடும், உத்தமத்தோடும், மனத்தாழ்மையோடும், பொறுப்போடும் நிறைவேற்ற வேண்டும். இதற்கு ஏற்ற பலன் ஏற்ற காலத்தில் தேவனிடமிருந்து வரும்.
நாம் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் என்றால், நம்முடைய எஜமானாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டியது நம்முடைய கடமை. இந்த ஊழியமே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சிலாக்கியம். நம் எஜமானுக்காக அரைக்கட்டிக்கொண்டு ஊழியம் செய்யவேண்டும்.
எஜமானுக்கு சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைக்கட்டிக்கொண்டு, அவர் போஜனபானம் பண்ணுமளவும் அவருக்கு ஊழியம் செய்யவேண்டும். அதன்பின்பு நாம் புசித்து குடிப்பதற்கு நம்முடைய எஜமான் நமக்கு அனுமதி கொடுப்பார்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் அவருக்காக ஊழியம் செய்யும்போது தங்களுடைய அரைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். இடுப்பில் உள்ள வஸ்திரத்தினால் நம்முடைய அரையை அதாவது இடுப்பை, கட்டிக்கொள்ளும்போது, நம்முடைய மற்ற வஸ்திரங்கள் நம்முடைய ஊழியத்திற்கு இடையூறாக இராது. கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போது, நம்முடைய வஸ்திரத்தையும் கவனிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை.
அரைகட்டப்பட்டிருக்கும்போது எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக இருக்கும். வஸ்திரம் கழண்டு விழுந்துவிடாது. ஆகையினால் ஊழியக்காரர்களாகிய நம்முடைய அரை கட்டப்பட்டதாக இருக்கவேண்டும். அரைக்கட்டப்படுவது நம்முடைய பணிவையும், ஆயத்தத்தையும் வெளிப்படுத்துகிறது.
தமக்கு ஊழியம் செய்யும்போது, தம்முடைய ஊழியக்காரர்களுடைய அரைகள் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்று எஜமான் எதிர்பார்க்கிறார். இயேசுகிறிஸ்து நம்மிடம் இப்படி எதிர்பார்த்தாலும், அவர் ஒருபோதும் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை.
ஏனெனில் தம்முடைய சீஷர்கள் நடுவே அவரும் ஊழியம் செய்யும் ஒருவராகவே கிரியை செய்து வந்தார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு ஊழியம் கொள்ளவராமல் ஊழியம் செய்வதற்காகவே வந்திருக்கிறார். தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவி தாம் ஊழியம் செய்வதற்கு வந்திருப்பதை உறுதிபண்ணுகிறார்.
கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் கர்த்தருக்காக ஊழியம் செய்யும்போது, தாங்கள் செய்யும் ஊழியத்திற்காக கர்த்தர் தங்களை பாராட்ட வேண்டுமென்றோ அல்லது அவர் தங்களுக்கு நன்றி கூறவேண்டுமென்றோ எதிர்பாôர்க்ககூடாது. தான் கட்டளையிட்டவைகளை தன்னுடைய வேலைக்காரன் செய்ததற்காக,
எந்த எஜமானும் அவனுக்கு உபசாரம் செய்யமாட்டான். கர்த்தருக்காக ஊழியம் செய்யும் ஊழியக்காரர்கள், தாங்கள் செய்யும் ஊழியத்தினால், கர்த்தரிடமிருந்து உபசாரத்தை எதிர்பார்க்கக்கூடாது.
தேவனுடைய கரத்திலிருந்து நன்மையைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தகுதியுள்ளவர்களல்ல. நம்முடைய ஊழியமும் தகுதியானது அல்ல. தேவனுடைய கிருபையையும் நன்மையையும் நம்முடைய கிரியைகளினால் சம்பாதிக்க முடியாது.
நாம் கிறிஸ்துவுக்காக எந்த ஊழியம் செய்தாலும் அது நம்முடைய கடமை என்று மாத்திரமே நினைக்க வேண்டும். கர்த்தருக்கு ஊழியம் செய்தால் அவர் நமக்கு உபகாரம் செய்வாரென்றோ அல்லது நம்மை பெருமைப்படுத்தி உயர்த்துவாரென்றோ எதிர்பார்க்கக்கூடாது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கர்த்தர் நமக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்து முடிக்க வேண்டும்.
ஆனால் கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாமோ பல சமயங்களில் கர்த்தர் நமக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்து முடிக்க தவறிவிடுகிறோம். நம்முடைய ஊழியங்களில் குறை காணப்படுகிறது. கர்த்தருக்காக நாம் செய்யும் எல்லா ஊழியத்தையும் நாம் அவர்மீது வைத்திருக்கும் அன்பினால் நிறைவேற்ற வேண்டும். நம்முடைய முழு இருதயமும் முழு ஆத்துமாவும் கர்த்தரிடத்தில் அன்புகூரவேண்டும். இந்த அன்பின் நிமித்தமாகவே நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்கிறோம்.
கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரர்களாக ஊழியம் செய்கிறவர்கள் தங்களை பெருமைப்படுத்தாமல் கர்த்தருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துவார்கள்.
தாங்கள் அப்பிரயோஜனமான
ஊழியக்காரர் என்று தேவனுடைய சமுகத்தில் தங்களைத் தாழ்த்தி அங்கீகரிப்பார்கள். நம்முடைய ஊழியத்தின் மூலமாக தேவனுக்கு ஒரு
பிரயோஜனமும் உண்டாகாது.
நம்மால் தேவனுக்கு ஒரு லாபமும் இல்லை. நம்முடைய ஊழியத்தின் மூலமாக தேவன் ஒருபோதும் நமக்கு கடனாளியாக இருக்கமாட்டார். ஆகையினால் தேவனுக்கு முன்பாக நம்மை நாமே அறிக்கை செய்யும்போது ""நாங்கள்
அப்பிரயோஜனமான ஊழியக்காரர்'' என்று அறிக்கை செய்யவேண்டும். அவருடைய ஊழியம் பிரயோஜனமுள்ள ஊழியம். ஆனால் நாமோ அப்பிரயோஜனமான ஊழியக்காரர்.
தேவனுடைய ஊழியக்காரர்கள் தாங்கள் செய்யும் காரியங்களுக்குப் பெருமைப்படக் கூடாது. நம்மிடம் எப்போதும் தாழ்மை இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதை மாத்திரமே செய்திருக்கிறோம் என்று எண்ண வேண்டும். (லூக்கா 18:1)
பிரதிபலன் எதிர்பாராமல் நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும். உண்மையோடும், உத்தமமாகவும் மனத்தாழ்மையோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும். நமது ஊழியத்தில் பெருமைப்பாராட்டக்கூடாது. (மத் 6:1#6; யோவான் 12:43)
from வேதாகம களஞ்சியம் https://ift.tt/2UaclYb
via IFTTT Umn ministry