Servant of the Lord/பிரபுவின் ஊழியக்காரர்

0

 




பிரபுவின் ஊழியக்காரர்



சீக்கிரமாய் வெளிப்படும்


அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நிளைத்த படியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்  (லூக் 19:11)





இயேசுகிறிஸ்து எருசலேமுக்குப் போய்கொண்டிருக்கிறார். தம்முடைய

கடைசி பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதற்காக அங்கு போகிறார். அவர் எருசலேமுக்குப் போகும்போது அவருடைய சீஷர்கள் அவரைப்பற்றியும்,




தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றியும் பலவிதமான எதிர்பார்ப்புக்களோடு கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்பதை தெரிந்துகொள்வதில் பரிசேயரும் ஆர்வத்தோடிருக்கிறார்கள் (லூக் 17:20).




பரிசேயரைப்போலவே இயேசுகிறிஸ்துவின் சீஷர்களும் தேவனுடைய ராஜ்யம் வரப்போவதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவலோடு

தேவனுடைய ராஜ்யம் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்படும்போது அது மிகுந்த

வல்லமையோடும், ஆடம்பரத்தோடும், பிரத்தியட்சமாக ஸ்தாபிக்கப்படும் என்பது

சீஷர்களுடைய எதிர்பார்ப்பு.




தேவன் தம்முடைய ராஜ்யத்தை எருசலேம் நகரத்தில்

ஸ்தாபிப்பார் என்று அவர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். ஆகையினால்

இயேசுகிறிஸ்து எருசலேமுக்கு சமீபித்திருக்கிறபடியினால், தேவனுடைய ராஜ்யம்

சீக்கிரமாய் வெளிப்படும் என்று சீஷர்கள் நினைக்கிறார்கள். இயேசுகிறிஸ்து

எருசலேமுக்கு விரைவாக

சென்று இன்னும் சிறிது காலத்திற்குள்,





சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வாரென்று சீஷர்கள் கற்பனை

செய்கிறார்கள். தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றி சில சமயங்களில், இயேசுவின்

சீஷர்களைப்போலவே, வேதபண்டிதர்களில் சிலரும் தவறான

வளர்த்துக்கொள்கிறார்கள்.




தூரதேசத்திற்குப் புறப்பட்ட பிரபு


பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான் (லூக் 19:12).





தம்முடைய சீஷர்களின் தவறான எதிர்பார்ப்பை இயேசுகிறிஸ்து அறிந்து வைத்திருக்கிறார். அவர்களுடைய தவற்றை திருத்துகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தை இப்போது ஸ்தாபிக்கப்போவதினால், அவர் தமது மகிமையோடு வெளிப்பட வேண்டுமென்று சீஷர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாக வராது என்பதையும், அது பூமிக்குரிய ராஜ்யத்தைப்போல ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்படாது என்பதையும் இயேசுகிறிஸ்து தெளிவுபடுத்துகிறார்.






இதைப்பற்றி விளக்குவதற்காக இயேசு இங்கு ஒரு உவமையைக் கூறுகிறார். பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தை பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படி தூரதேசத்திற்குப் போக புறப்படுகிறான். இந்தப் பிரபு இயேசுவுக்கு உவமையாக இருக்கிறார். இவர் ராஜ்யத்தை பெற்றுக்கொண்ட பின்பு திரும்பி வருவார். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போதும், எருசலேம் நகரம் அழிக்கப்படும்போதும் இயேசுகிறிஸ்து மறுபடியும் திரும்ப வருவார். ஆனால் இந்த உவமையில் பிரபுவின் வருகை இயேசுகிறிஸ்துவின் மகாநாளைக் குறிப்பிடுகிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை இந்த நாள் குறிப்பிடுகிறது. விசுவாசிகளாகிய நாம் இந்த நாளுக்காக, இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம்.




வியாபாரம்பண்ணும் ஊழியக்காரர்




புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரபில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்தூ: நான் திரும்பிவரும்மளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான் (லூக் 19:13).





எருசலேம் நகரத்தில் இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும்போது, அவருடைய ஆளுகையில் அப்போஸ்தலருக்கு மிகப்பெரிய அந்தஸ்து கொடுக்கப்படும் என்று சீஷர்கள் எதிர்பார்க்கிறார்கள். சீஷர்கள் எல்லோரும் பிரபுக்களாகவும், நீதிபதிகளாகவும், ஆளுகை செய்கிறவர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்பது இவர்களுடைய எண்ணம். இயேசுகிறிஸ்து ஆளுகை செய்யும் கொலுமண்டபத்தில் சீஷர்கள் அலங்காரமாகவும் ஆடம்பரமாகவும் அமர்ந்திருந்து தேவனுடைய ராஜ்யத்தின் மேன்மையையும் மகிமையையும் அனுபவிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.





இயேசுகிறிஸ்துவோ தம்முடைய சீஷர்களுக்கு இப்படிப்பட்ட ஆடம்பரமான அந்தஸ்து எதையும் வாக்குப்பண்ணவில்லை. அதற்குப் பதிலாக தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் வியாபாரம் பண்ணும் மனுஷராக இருக்கவேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். இந்த உலகத்தில் சீஷர்கள் மிகப்பெரிய சிலாக்கியம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. நியாயமாக வியாபாரம்பண்ணி, கடினப்பட்டு உழைத்து, உழைப்பின் பலனை அனுபவிக்கும் வியாபாரிகள் போலவே சீஷர்களும் செயல்படவேண்டும். இது தவிர வேறு விசேஷித்த சலுகைகள் எதையும் இவர்கள் இயேசுவிடம் எதிர்பார்க்கக்கூடாது.





தூரதேசத்திற்கு போக புறப்பட்ட எஜமான் தன் ஊழியக்காரர்களுக்கு பத்து ராத்தல் திரவியங்கள் கொடுக்கிறார். இதைக்கொண்டு அவர்கள் வியாபாரம் பண்ணவேண்டும். தங்களுடைய பிரபுக்கு இவர்கள் ஊழியம் செய்து, அவருடைய ராஜ்யத்தின் நன்மையை நாட வேண்டும். நம்முடைய ஆண்டவராகிய




இயேசுகிறிஸ்துவும் நமக்கு தாலந்துகளைக் கொடுத்திருக்கிறார். இவற்றை தேவனுடைய நாமமகிமைக்காக பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக தேவனுடைய பிள்ளைகள் பிரயோஜனமடைய வேண்டும். தேவனுடைய ராஜ்யம் இந்தப் பூமியில் ஸ்தாபிக்கப்படுவதற்கும் விஸ்தாரம்பண்ணப்படுவதற்கும் இவர்கள் தங்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட தாலந்துகளை பயன்படுத்த வேண்டும்.






நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் வாய்ப்பு தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்திருக்கும் மிகப்பெரிய சிலாக்கியமாகும். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை தேவநாம மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை தேவனுக்காக செலவுபண்ண வேண்டும். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளையும் ஐசுவரியங்களையும் போதுமென்ற மனதுடன் பரிசுத்தமாக அனுபவிக்க வேண்டும்.







தேவனுடைய ராஜ்யத்தில் அவருடைய வலதுபாரிசத்திலும் இடதுபாரிசத்திலும் வீற்றிருக்க வேண்டுமென்று சீஷர்கள் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையோ சீஷர்களுடைய கற்பனையை தகர்த்துவிடுகிறது. தங்கள் இஷ்டப்படி கற்பனை செய்வதற்குப் பதிலாக நடைமுறையில் என்ன செய்யவேண்டுமென்று தேவன் இவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.





கர்த்தருடைய பிள்ளைகள் சும்மாயிருக்க முடியாது. இப்போது இவர்களுக்கு மிகப்பெரிய வேலை நியமிக்கப்பட்டிருக்கிறது. இதுபோலவே பிரபுவின் ஊழியக்காரருக்கும் மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்படுகிறது. ஒரு ராஜ்யத்தை பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி பிரபு தூரதேசத்திற்குப் போக புறப்படுகிறான். அவன் புறப்படும்போது தன் ஊழியக்காரர் ஒவ்வொருவருக்கும் பத்து ராத்தல் திரவியம் கொடுக்கிறான். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் ஊழியக்காரர்களுக்கு தாலந்து கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருக்கிறது (மத் 25).





கர்த்தருடைய ஊழியக்காரர்கள் தாழ்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். தேவனுடைய ராஜ்யத்தில் அவரோடுகூட சிங்காசனத்தில் அமர்ந்திருந்து ஜனங்களை ஆளுகை செய்வோம் என்னும் கற்பனையில் ஆணவமாக இருக்கக்கூடாது. இந்த உலகத்தில் தேவன் நம்மை வியாபாரம் பண்ணுகிறவர்களாக நியமித்திருக்கிறார். நாம் சாதாரண சில்லரை வியாபாரிகளைப்போல இருக்கிறோம்.




மொத்த வியாபாரிகளைப்போல விசுவாசிகள் தனவந்தர்களல்ல. தம்முடைய ஊழியக்காரர்களுக்கு இந்தப் பிரபு பத்து ராத்தலைக் கொடுத்ததுபோல, தேவன் நம் ஒவ்வொருவருக்கும் சில தாலந்துகளைக் கொடுத்து, இவற்றை தேவனுடைய நாம மகிமைக்காகவும், அவருடைய பிள்ளைகளின் பிரயோஜனத்திற்காகவும் பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிறார்.




இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்வரையிலும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளை பயன்படுத்த வேண்டும். நாம் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும்.


பிரபு தன் ஊழியக்காரரிடத்தில்

பத்து ராத்தல் திரவியம் கொடுத்து, இதை கொண்டு இப்பொழுதே வியாபாரம் பண்ணுங்கள் என்று கூறுகிறான். பிரபு திரும்பி வருமளவும் அவனுடைய ஊழியக்காரர்கள் வியாபாரம் பண்ணவேண்டும். வியாபாரம் பண்ணுகிறவர்கள் எதிர்பார்ப்போடு வியாபாரம் பண்ணவேண்டும்.




தங்கள் வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். உண்மையான அக்கரையும் ஆர்வமும் இருக்கிறவர்களால் மாத்திரமே வியாபாரம் பண்ணி சம்பாதிக்க முடியும்.



இந்த உலகத்தில் கிறிஸ்தவ விசுவாசிகள் எல்லோருக்குமே ஊழிய வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் விசேஷமாக ஊழியக்காரர்களுக்கு அதிக பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் ஊழியத்தை செய்வதற்கு ஊழியக்காரர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். இதனால் மற்ற விசுவாசிகள் ஒரு ஊழியமும் செய்யாமல் சோம்பேறியாக சும்மாயிருந்து விடக்கூடாது. தேவன் கொடுக்கும் ஊழிய வாய்ப்புக்களை நாம் எல்லோருமே பயன்படுத்த வேண்டும். தமக்காக ஊழியம் செய்யும்



ஒவ்வொருவருக்கும் தேவன் ஊழிய வரங்களைக் கொடுக்கிறார். யாரிடத்தில் வரங்களை கொடுக்கிறாரோ அவர்கள் அதை பயன்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். யாரிடத்தில் வல்லமையைக் கொடுக்கிறாரோ அவர்கள் வல்லமையாக ஊழியம் செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்.





தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வரங்களைக் கொடுக்கும்போது, இவற்றைப் பயன்படுத்தி ஊழியம் செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற நாம் அவர் திரும்பி வருமளவும், அவர் கொடுத்திருக்கும் தாலந்துகளைக் கொண்டு ஊழியம் செய்யவேண்டும்.





பிரபு திரும்பி வருவதற்கு முன்பாக தங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் திரவியங்களைக் கொண்டு வியாபாரம் பண்ணி ஆதாயம் சம்பாதிக்க வேண்டும். இவர்களுக்கு மிகவும் குறுகிய காலமே வியாபாரம் பண்ண நியமிக்கப்பட்டிருக்கிறது.





ஊரார் அவனை பகைத்து...



அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்  (லூக் 19:14).






ராஜ்யத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரபு  தூரதேசத்திற்குப் போகிறார். அவர் போன பின்பு  பிரபுவின் ஊரார் அவனைப் பகைக்கிறார்கள். இவன் எங்கள்மேல் ராஜாவாக இருக்கக்கூடாது என்றும், இவனை எங்களுக்கு ராஜாவாக அங்கீகரிக்க மனதில்லை என்றும் சொல்லுகிறார்கள், அந்தப் பிரபுவுக்கு எதிராக ஸ்தானாபதிகளை அனுப்புகிறார்கள். 




இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறிப்போன பின்பு, யூதஜனங்கள் தேவபக்தியற்றவர்களாகவும், இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களாகவும்,



கலகம்பண்ணுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.  தம்முடைய ராஜ்யத்தை பெற்றுக்கொள்வதற்காக இயேசுகிறிஸ்து பரலோகத்திற்கு போன பின்பும், யூதர்கள் அவருக்கு விரோதமாக தொடர்ந்து கிரியை நடப்பிக்கிறார்கள். ""இயேசுகிறிஸ்து எங்கள்மேல் தேவனாக இருக்கிறது எங்களுக்கு மனதில்லை'' என்று கூறுகிறார்கள்.




இயேசுகிறிஸ்து தங்களை ஆளுகை செய்யக்கூடாது என்று யூதர்கள் கலகம்பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறிப்போனபோது, இப்படிப்பட்ட சம்பவம் யூதர் மத்தியில் மெய்யாகவே நடைபெற்றது. கிறிஸ்துவின் நுகத்திற்கு தங்களுடைய கழுத்துக்களை ஒப்புக்கொடுக்க யூதர்கள் மறுத்துவிடுகிறார்கள்.  





இந்த வசனம் இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக கலகம்பண்ணிய யூதர்களைக் குறிப்பதோடு  அவிசுவாசிகள் எல்லோரையும் பொதுவாக குறிப்பிடுகிறது. இயேசுகிறிஸ்து தங்களை இரட்சிக்க வேண்டும் என்னும் விருப்பம் புறஜாதியார் மனதில் இல்லை. இயேசுகிறிஸ்துவின் ஆளுகையையும் இவர்கள்  அங்கீகரிக்கவில்லை. 




தேவனுடைய ராஜ்யம் காலதாமதமாக வருவதற்கு மற்றொரு காரணம் ஜனங்களுடைய கிரியைகளும், ஊழியக் காரருடைய செயல்களும் ஆகும். இந்த உவமையில் ஊழியக்காரர் என்பது ராஜாவினுடைய விசேஷித்த வேலையாட்களைக் குறிக்கும். ஊரார் என்பது ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஜனங்களைக் குறிக்கும். 




இந்த உவமையைத் தேவனுடைய ராஜ்யத்திற்கும் ஒப்பிட்டுக் கூறலாம். ஊழியக்காரர்கள் என்பது தேவனுடைய ஊழியக்காரர்களையும், விசுவாசிகளையும் குறிக்கும். இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். ஊரார் என்பது கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத யூதரையும், சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளாத அவிசுவாசிகளையும் குறிக்கும். 




அகஸ்துராயன் ஆட்சிபுரிந்தபோது, யூதர்கள் ஏரோதுவிற்கு எதிராக ராயனுக்குச் செய்தி அனுப்பினார்கள். இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் செய்தி அதுபோன்ற ஒரு காரியமாக இருக்கலாம். 




ஆதாயம் கிடைத்தது


அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய            ராத்த-னால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால்



பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்த-னால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்   (லூக் 19:15-19). 




பிரபு தன்னுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வருகிறார். தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த, தன் ஊழியக்காரரில், அவனவன்  வியாபாரம் பண்ணி சம்பாதித்தது இவ்வளவு என்று அறியும்படி, அவர்களை தன்னிடத்தில் அழைத்து வரச் சொல்லுகிறார். 




கிறிஸ்துவின் ஊழியத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும் ஊழியம் செய்கிறவர்கள் ஆதாயம் பெறுவார்கள். ஒரு சிலர் கடினமாக உழைத்து வியாபாரம் பண்ணுவார்கள்.  ஆயினும் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்காமல் போய்விடும்.



சில வேளைகளில் நஷ்டம் உண்டாகலாம். ஆனால் கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்கிறவர்களுக்கோ ஒருபோதும் நஷ்டம் உண்டாவதில்லை. ஆத்தும ஆதாயமே இவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பலன். இரட்சிக்கப்படும் ஒவ்வொரு ஆத்துமாவும் இயேசுகிறிஸ்துவுக்கு மிகப்பெரிய ஆதாயமாக இருக்கும். 




கிறிஸ்துவின் ஊழியக்காரர்

ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியத்தைக் குறித்து  கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். சுவிசேஷத்தின் வலையை விரித்து எப்படிப்பட்ட மீன்களையெல்லாம் பிடித்திருக்கிறோம் என்பதைக் குறித்து ஊழியக்காரர் ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவுக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். ஆத்தும ஆதாயமே கிறிஸ்தவ ஊழியக்காரர்களுக்கு கிடைக்கும் பலனாகும். 




பிரபுவின் ஊழியக்காரரில் ஒரு சிலர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திரவியத்தினால்  நல்ல ஆதாயம் சம்பாதித்திருக்கிறார்கள். அவர்களை எஜமான் பாராட்டுகிறார். இரண்டு ஊழியக்காரர்களைப்பற்றி இந்த வசனப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருமே  தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ராத்தலினால் ஆதாயம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இருவரும் ஒன்றுபோல் ஒரே அளவிற்கு ஆதாயம் பண்ணவில்லை. இவர்களில் ஒருவன் பத்து ராத்தல் ஆதாயம் பண்ணுகிறான்.



மற்றவனோ ஐந்து ராத்தல் மாத்திரமே ஆதாயம் பண்ணுகிறான். இவ்விருவருக்கும் ஒன்றுபோலவே பத்து ராத்தல் திரவியம் கொடுக்கப்பட்டிருந்தாலும், இவர்கள் சம்பாதித்த ஆதாயம் ஒன்றுபோல் இல்லை. 




இவர்களைப்போலவே கர்த்தருடைய ஊழியக்காரர்களும் உண்மையுள்ளவர்களாக ஊழியம் செய்கிறபோதிலும், அவர்களுடைய ஊழியத்தில் ஒரே விதமான வெற்றி கிடைப்பதில்லை. ஊழியக்காரர்கள் எல்லோரும்  விசுவாசத்தோடு ஊழியம் செய்தாலும், ஒரு சிலர் கர்த்தருடைய ஊழியத்தில் மிகவும் அக்கரையோடு ஈடுபடுகிறார். வேறு சில ஊழியக்காரர்களிடமோ ஊழிய அக்கரை குறைவாக காணப்படுகிறது. 





இவ்விரண்டு ஊழியக்காரர்களும் தங்கள் எஜமானிடம் வந்து கணக்கு ஒப்புவிக்கிறார்கள்.  தங்களுடைய சுயமுயற்சியை பெருமைப்படுத்தவில்லை. தங்களுடைய சொந்த ராத்தலினால் வியாபாரம் பண்ணினதாக உண்மைக்கு புறம்பாக பேசவில்லை. ""ஆண்டனே உம்முடைய ராத்தலினால் பத்து ராத்தல் ஆதாயம் கிடைத்தது'' என்று கூறி தங்களிடத்தில் உள்ளது தங்கள் எஜமானுடைய  ராத்தல் என்பதை அங்கீகரிக்கிறார்கள். நாமும் தேவனுக்கு முன்பாக நம்முடைய ஊழியத்தைக் குறித்து கணக்கு ஒப்புவிக்கும்போது, நம்முடைய சொந்த திறமைகளை பெருமைப்படுத்தி பேசக்கூடாது. ""ஆண்டவரே உம்முடைய கிருபையினால் ஊழியத்தில் வெற்றி கிடைத்தது'' என்று கூறி  தேவனையே மகிமைப்படுத்த வேண்டும்.  




 இரண்டு ஊழியக்காரர்களும் தங்களுடைய வியாபாரத்தில் கிடைத்த ஆதாயத்தை தங்கள் எஜமானிடம் கணக்கு ஒப்புவிக்கிறார்கள். இவர்கள் இருவருமே உண்மையுள்ளவர்களாக வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள். எஜமான் இவ்விரண்டு ஊழியக்காரர்களையும் பாராட்டுகிறார். ""நல்லது  உத்தம ஊழியக்காரனே'' என்று புகழ்ந்து கூறுகிறார். 




நாம் ஆண்டவரிடம் ஊழியத்தைக்குறித்து கணக்கு ஒப்புவிக்கும்போது, கர்த்தர் நம்மைப்பார்த்து ""நல்லது, உத்தம ஊழியக்காரனே'' என்று சொல்லும்போது அதுவே நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாகும். இவ்விரண்டு ஊழியக்காரர்களுமே வியாபாரம் பண்ணி ஆதாயம் பண்ணினாலும், இவர்கள் இருவருக்கும் எஜமான் ஒன்றுபோல் பொறுப்புக்களைக் கொடுக்கவில்லை.  




    இவர்கள் இருவரும் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். எஜமான் இவர்களை ஆசீர்வதிக்கும்போது அவர்களுடைய வியாபாரத்தில் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயத்தின் அளவுக்குத் தக்கவாறு ஆசீர்வதிக்கிறார். 




பத்து ராத்தல் ஆதாயம் பண்ணினவனை,  பத்து பட்டணங்ளுக்கு அதிகாரியாயிரு என்று கூறுகிறார். ஐந்து ராத்தல் ஆதாயம்பண்ணினவனை, ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்று கூறுகிறார். இவர்கள் எவ்வளவு ஆதாயம் பண்ணினார்களோ அந்த அளவுக்குத் தக்கதாக  ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கிறார்கள். யாரிடத்தில் எவ்வளவு பொறுப்பு கொடுக்க வேண்டுமென்பது எஜமானுக்குத் தெரியும். தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், முதலாவதாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்  கொஞ்சத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஆரம்பம் சிறியதாக இருந்தாலும் முடிவு மகிமையாக இருக்கும்.




தம்முடைய ஊழியக்காரர்களையும் கர்த்தர்  இதுபோலவே ஆசீர்வதிக்கிறார். நம்முடைய ஊழியத்தில் எந்த அளவிற்கு உண்மையுள்ளவர்களாகவும், உற்சாகமாகவும் ஊழியம் செய்து வெற்றி பெறுகிறோமோ, அந்த அளவிற்கு கர்த்தர் நமக்கு மேலும் பல ஊழியப்பொறுப்புக்களைக் கொடுப்பார். 




தம்முடைய பிள்ளைகள் எல்லோருமே தமக்கு ஊழியம் செய்யவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். ஒரு சில அப்போஸ்தலர்கள் கடினமாக ஊழியம் செய்து அநேக சபைகளை ஸ்தாபிக்கிறார்கள். இவர்களுக்கு அதிகமான ஊழியப்பொறுப்புக்கள் கொடுக்கப்படும். இம்மையில் மாத்திரமல்ல இவர்கள் மறுமையிலும் இயேசுகிறிஸ்துவோடு ஆளுகை செய்வார்கள். நம்முடைய ஊழியத்தில் வெற்றி உண்டாகும்போது பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகும். தமக்காக ஊழியம் செய்கிறவர்களை கர்த்தர் பரலோகத்தில் கனப்படுத்துவார். ஆயினும் எல்லா ஊழியக்காரர்களும் ஒன்றுபோல் கனப்படுத்தப்படுவதில்லை. இதில் வித்தியாசம் இருக்கும். 




பத்து ராத்தல் ஆதாயம் பண்ணுபவருக்கு பத்து பட்டணங்களும், ஐந்து ராத்தல் ஆதாயம் பண்ணுபவருக்கு ஐந்து பட்டணங்களும் கொடுக்கப்பட்டதுபோல, ஊழியக்காரர்களுக்கும் அவரவர்களுடைய ஊழிய வெற்றியின் பிரகாரம் மேன்மை கொடுக்கப்படும். எல்லா பாத்திரங்களும் நிரப்பப்பட்டாலும், எல்லா பாத்திரங்களின் அளவுகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை. பாத்திரம் நிரம்பியிருக்கும். ஆனால் பாத்திரத்தின் அளவில் வித்தியாசம் இருக்கும்.  அதுபோலவே கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பூமியில் கர்த்தருக்காக ஊழியம் செய்த போது எவ்வளவு பிரயோஜனமுள்ளவர்களாக ஊழியம் செய்தார்கள் என்னும் அளவைப்பொறுத்தே, பரலோகத்தில் அவரவர்களுக்குரிய மேன்மை கொடுக்கப்படும். 




இதோ, உம்முடைய ராத்தல்


பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான் (லூக் 19:20,21).




பிரபுவின் ஊழியக்காரரில் ஒருவன் பொல்லாதவனாகவும் சோம்பேறியாகவும் இருக்கிறான். இப்படிப்பட்டவனுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. எஜமான் இவனிடத்திலும்  பத்து ராத்தல் திரவியத்தைக் கொடுத்திருந்தார். இதைக்கொண்டு வியாபாரம் பண்ணுமாறும் கூறியிருந்தார். ஆனால் இவனோ தன்னிடத்தில் கொடுக்கப்பட்டிருந்த ராத்தலைக்கொண்டு வியாபாரம் பண்ணவில்லை. இவனும் தன் எஜமானிடம் கணக்கு ஒப்புக்கொடுக்க வருகிறான். வியாபாரம் பண்ணாதவனுக்கு ஆதாயம் கிடைக்காது. இவன் தன் ஆண்டவனிடத்தில் வந்து ""இதே உம்முடைய ராத்தல்'' என்று கூறுகிறான். 




இந்த பொல்லாத ஊழியக்காரன் தன்னிடத்தில் கொடுக்கப்பட்ட பத்து ராத்தலைக் கொண்டு ஒரு ராத்தல்கூட ஆதாயம்பண்ணவில்லை. அதேவேளையில் தனக்கு கொடுக்கப்பட்ட ராத்தலை அழித்துப்போடவுமில்லை. அதை ஒரு  சீலையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறான். கர்த்தருடைய ஊழியக்காரர்களில் ஒரு சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள். கர்த்தர் தங்களுக்குக் கொடுத்திருக்கும் வரங்களில் எதையும் பயன்படுத்துவதில்லை.




இவர்கள் யாருக்கும் பிரயோஜனமாக ஊழியம் செய்யமாட்டார்கள். யாரைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். சபை உடைந்துபோனாலும் வருத்தப்படமாட்டார்கள்.  ஒரு சில விசுவாசிகள் பின்வாங்கிப்போனாலும் அவர்களைக் குறித்து கரிசனையில்லாமல் இருப்பார்கள். ஆனால் தங்களைப் பொறுத்தளவில் மிகவும் அமைதியாக, ஆரவாரமில்லாமல் இருப்பார்கள். 




இப்படிப்பட்ட அக்கரையில்லாத விசுவாசிகள்தான், கர்த்தர் தங்களிடத்தில் கொடுத்திருக்கும் வரங்களை  சீலையிலே பத்திரமாக வைத்திருக்கிறவர்கள். இவர்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. பிறருக்கு பிரச்சனையில்லாமல் வாழ்ந்தாலே அதுபோதுமானது என்று திருப்தியோடிருப்பார்கள். இவர்கள் யாருக்கும் தீமையும் செய்யமாட்டார்கள். அதேவேளையில் இவர்கள் யாருக்கும் நன்மையும் செய்யமாட்டார்கள். 





இப்படிப்பட்டவர்கள் தேவனுக்குப் பயப்படுவார்கள். இந்த வசனப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பொல்லாத ஊழியக்காரன்  தன் ஆண்டவனுக்குப் பயப்படுகிறான். அவர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று  இவன் அறிந்திருக்கிறான். கிரேக்க மொழியில் ""ஆஸ்டீரே'' என்னும் வார்த்தை தமிழில் ""கடினமுள்ள'' என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைக்கு ""விவேகமானவர்'' என்று பொருள்.  




இந்தப் பொல்லாத ஊழியக்காரன் தன் எஜமானைப்பற்றி நினைக்கும்போது, அவர் வைக்காததை எடுக்கிறவர் என்று நினைக்கிறான். வியாபாரம் பண்ணி ஆதாயம்  பெறுவது, தன் எஜமான் விதைக்காத இடத்தில் அறுப்பதற்கு சமம் என்று நினைக்கிறான். ஆனால் மெய்யாகவே இந்த எஜமான் விதைத்ததைத்தான் அறுக்கிறார். இவனிடத்தில் பத்து ராத்தல் திரவியத்தை விதைத்திருக்கிறார்.  அதைத்தான் அறுவடை செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்.




ஆனால் இந்த ஊழியக்காரனோ தன் எஜமானுக்குப் பயப்படுகிறான். அவர் விவேகமுள்ளவர் என்று அஞ்சுகிறான். இவன் தன் எஜமானுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு வேலையும் செய்யாமல் சும்மாயிருந்து விட்டு தன் எஜமானுக்குப் பயப்படுவதில் பொருள் எதுவுமில்லை. இவனுடைய எஜமான் இவன் சொன்ன காரணங்களை அங்கீகரியாமல் புறக்கணித்து  இவனுக்கு தண்டனை கொடுக்கிறார். 





சீலை என்பது கைக்குட்டை அல்லது வியர்வையைத் துடைக்கும் துணி. இந்த வசனத்திலும் யோவான் 11:44;

யோவான் 20:7; அப் 19:12 ஆகிய வசனங்களிலும் இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவன் பின்விளைவுகளை நினைத்துப் பயந்தான். லாபம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லை. நஷ்டமாகிவிடுமோ என்று பயந்தான். இப்படிப்பட்டவனிடத்தில் எந்தப் பொறுப்பையும் நம்பி ஒப்படைக்க முடியாது. 





அக்காலத்தில் காணப்பட்ட அநீதியை இந்த உவமை விளக்குகிறது. ராஜாக்கள் கடினமானவர்களாக இருந்தார்கள். தங்கள் விருப்பத்தை நிறைவேற்றினார்கள். ஜனங்களை ஒடுக்கிக் கொள்ளையடித்தார்கள்.



உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் 




 அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே, பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரபற்றிக்கொள்வேனே என்று சொல்-:  சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையி-ருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான் (லூக் 19:22-24).




பொல்லாத ஊழியக்காரனுடைய சாக்குப்போக்குகளை அவனுடைய எஜமான் அங்கீகரிக்கவில்லை. அவனுடைய வாய் சொல்லைக்கொண்டே அவனை நியாயம் தீர்ப்பதாக கூறிவிடுகிறார். இவன் செய்த குற்றத்திற்காக இவனுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. இவன் தன் எஜமானிடம்  தன் சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்த சாக்குப்போக்கு சொல்லி விண்ணப்பம் பண்ணினான். ஆனால் அது அவனுடைய எஜமானால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் இவன் தன்னுடைய உள்ளத்தில் குற்றப்படுத்தப்படுகிறான்.





இவனுக்கு தன் எஜமானுடைய திரவியத்தில் அக்கரையில்லை. இருந்திருந்தால் அதை சீலையில் வைக்காமல் காசுக்கடையிலாவது வைத்திருப்பான். அப்போது எஜமான் திரும்பி வரும்போது அதை வட்டியோடே தன்னுடைய அசலையும் பெற்றுக்கொள்வார். வியாபாரம் பண்ணினால் முதலுக்கு மோசமாகி விடுமோ என்று இந்தப் பொல்லாத ஊழியக்காரன் பயந்திருக்கிறான். வியாபாரம் பண்ணப் பயப்படுகிறவன், தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் திரவியங்களை குறைந்த பட்சம் காசுக்கடையிலாவது வைத்திருக்கவேண்டும். காசுக்கடைக்காரன் நிச்சயமாகவே அசலுக்கு வட்டி கொடுப்பான்.  திரவியத்தை சீலையில் வைத்திருந்தால் அந்த சீலை ஒன்றும் கொடுக்காது. 





இயேசுகிறிஸ்து இந்த உவமையில் பொல்லாத ஊழியக்காரனைப்பற்றி கூறும்போது,  தம்முடைய ஊழியக்காரர்கள் உண்மையாகவும் விவேகமாகவும் தமக்கு ஊழியம் செய்யவேண்டும் என்பதைƒவலியுறுத்துகிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் கர்த்தருக்கும், அவருடைய ராஜ்யத்திற்கும் உண்மையுள்ளவர்களாக சுறுசுறுப்பாக ஊழியம் செய்யவேண்டும். ஆனால் ஊழியக்காரர்களில் சிலர், இந்த பொல்லாத ஊழியக்காரனைப்போல,  கர்த்தர் தங்களுக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளை பயன்படுத்துவதேயில்லை. தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டாலும் இவர்களுக்குக் கவலையில்லை, ஸ்தாபிக்கப்படாவிட்டாலும் இவர்களுக்குக் கவலையில்லை. தங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லாமல், தாங்கள் சுகமாக வாழ்ந்தால் போதுமென்று இவர்கள் நினைக்கிறார்கள். பொல்லாத ஊழியக்காரனிடத்தில் கொடுக்கப்பட்டிருந்த திரவியத்தை எஜமான் அவனுடைய கையிலிருந்து எடுத்துப்போடுகிறார். அதுபோலவே நாம் கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்யாவிட்டால், அவர் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கும் தாலந்துகளை நம்முடைய கையிலிருந்தும் எடுத்துப்போடுவார்.





 தாலந்துகளை பயன்படுத்தாதவர்களுக்கு  தாலந்துகள் தேவையில்லை. இப்படிப்பட்டவர்கள்  தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்துகளை இழந்துபோவார்கள். இவர்களுடைய கையிலிருந்து, இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழியப் பொறுப்புக்களெல்லாம் எடுத்துப்போடப்படும்.





பொல்லாத ஊழியக்காரனுடைய கையிலிருந்து பத்து ராத்தலை எடுத்து, பத்து ராத்தல் உள்ள வேறொருவனுக்கு எஜமான் கொடுத்துவிடுகிறார். அவனுக்கு பத்து ராத்தல்  ஏற்கெனவே இருக்கிறது. இருந்தாலும் அவனிடத்தில் மேலும் பத்து ராத்தலை எஜமான் கொடுக்கிறார். ஏற்கெனவே பத்து ராத்தல் உள்ளவனுக்கு மேலும் பத்து   ராத்தலை ஏன் கொடுக்க வேண்டுமென்று ஒரு சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.     





அதற்கு அந்த ஆண்டவன் ""உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும்'' என்று பதில் கூறுகிறார். இதுவே நீதியான தீர்ப்பு. தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை சுறுசுறுப்பாக உண்மையாக செய்கிறவர்களுக்கு மேலும் பல பொறுப்புக்கள் கொடுக்கப்படும். இவர்கள் இன்னும் அதிகமாக  உற்சாகப்படுத்தப்படுவார்கள். இவனால் மேலும் பல பொறுப்புக்களை நேர்த்தியாக நிர்வாகம் பண்ண முடியும். இவனுக்கு இன்னும் அதிக திறமையிருக்கிறது. 





அதேவேளையில் ""இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்'' என்றும் எஜமான் கூறுகிறார். கர்த்தருடைய கரத்திலிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் அவைகளை தேவ நாம மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். வரங்களை பயன்படுத்தாதவர்களுடைய கைகளிலிருந்து தேவன் அந்த வரங்களை எடுத்துப்போடுவார். வரங்களை நல்லமுறையில் பயன்படுத்துகிறவர்களுக்கு கர்த்தர் அந்த வரங்களை கூடுதலாக கொடுப்பார். தேவனுடைய கிருபை உள்ளவர்களுக்கு இன்னும் அதிக கிருபை கொடுக்கப்படும். தேவனுடைய கிருபையை புறக்கணிக்கிறவர்களுக்கு, கொடுக்கப்பட்ட கிருபையும் எடுத்துக்கொள்ளப்படும். தேவனுடைய சமுகத்தில் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.  





ஊழியக்காரனுக்கு ராஜாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அவனிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த திரவியத்தை வட்டிக்குக் கடன் கொடுத்திருக்கலாம். இவனால் வட்டி வாங்கமுடியவில்லையென்றாலும் ராஜா வந்து வாங்கிக் கொள்வான். 




""நான் வரும்போது''  என்னும் வாக்கியம் இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறிக்கிறது. அவர் வரும்போது தமது ஊழியக்காரர்களை நியாயம்தீர்ப்பார் (மத் 16:27).




உள்ளவனுக்கு கொடுக்கப்படும் 


அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக்கா 19:26)




கிழக்கு தேசங்களில் ஐசுவரியவான்களுக்கு மட்டுமே வெகுமதி கொடுப்பார்கள். ஏழைக்கு ஒன்றும் கிடைக்காது. அவனிடத்திலுள்ள கொஞ்சத்தையும் எடுத்துக் கொள்வார்கள். லூக்கா 19:12#இல் கூறப்பட்டிருக்கும் பிரபு இந்த வசனத்தைக் கூறுகிறான். இயேசு கிறிஸ்துவின் உபதேசமும் இதுதான்.   பாத்திரவான்களுக்கு மட்டுமே வெகுமதி கொடுக்கப்படும். 




சத்துருக்கள்


அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்         (லூக் 19:27).





ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படிக்கு பிரபு ஒருவன் தூரதேசத்திற்குப் போக புறப்பட்டான். ஆனால் அவனுடைய ஊரார்  அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாக இருக்கிறது எங்களுக்கு மனதில்லை என்று கூறி, அந்த பிரபுவுக்கு எதிராக கலகம் பண்ணுகிறார்கள். அந்த பிரபுவோ ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வருகிறான். இந்த ஊராரின் மேல் தான் ராஜாவாகிறதற்கு மனதில்லாமல் இருந்தவர்களை இவன் தன்னுடைய சத்துருவாக பாவிக்கிறான். அந்த சத்துருக்களை தன்னிடத்தில் கொண்டு  வருமாறு கூறுகிறான்.






எஜமானுக்கு உண்மையுள்ளவர்களாக நடந்து கொண்டவர்களுக்கு வெகுமதி கொடுக்கப்படுகிறது. அவர்கள் பாராட்டப்படுகிறார்கள். அதே வேளையில் எஜமானுக்கு சத்துருவாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். 




தேவனுடைய ராஜ்யம் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்படும்போது, கிறிஸ்துவுக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் சத்துருவாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எஜமானுடைய சத்துருக்களை அவருக்கு முன்பாக அழைத்து வந்து அவர்களை வெட்டிப்போடுகிறார்கள். இவர்கள் தங்கள் எஜமானுக்கு விரோதமாக தொடர்ந்து கலகம் பண்ணியவர்கள். ஆரம்பம் முதலே எஜமானைப் பகைத்தவர்கள். 




தேவனுக்கு விரோதமாக யாராவது தொடர்ந்து கலகம் பண்ணிக்கொண்டிருந்தால்  அவர்கள் நிர்மூலம் பண்ணப்படுவார்கள். கர்த்தருக்கு விரோதமாக செய்த பாவங்களை உணர்ந்து, தேவனுடைய சமுகத்தில் பாவ அறிக்கை செய்யும்போது அவர்களுக்கு பாவமன்னிப்பு உண்டாகும். அப்படியில்லாமல் துணிகரமாக தொடர்ந்து பாவம் செய்கிறவர்கள்  அழிந்து போவார்கள். கிறிஸ்துவின் சத்துருக்கள் எல்லோருக்குமே அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளின்போது ""என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டு வாருங்கள்'' என்று தேவன் கட்டளையிடுவார். சத்துருக்கள் கூறும் சாக்குப் போக்குக்களையெல்லாம் தேவன் அங்கீகரிக்கமாட்டார்.  இவர்கள் செய்த பாவத்திற்குத் தக்கதாக இவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும். 







கிறிஸ்துவை தங்களுடைய ஆண்டவராக  ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவருடைய சத்துருக்களாகவே பாவிக்கப்படுவார்கள். கிறிஸ்துவின் ஆளுகையை அங்கீகரியாதவர்களும், அவருடைய ஆளுகைக்கு  தங்களை உட்படுத்திக் கொள்ளாதவர்களும் முடிவில் அழிந்து போவார்கள். நியாயத்தீர்ப்பு நாள் ஒன்று வரப்போகிறது. ஆகையினால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கிருபையின் காலத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எஜமான் திரும்பி வருவதற்கு முன்பாக, தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த திரவியங்களை வியாபாரம்பண்ணி, மேலும் அதிக திரவியங்களை சம்பாதித்த உத்தம ஊழியக்காரனைப்போல நாம் ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும். 







கிறிஸ்துவின் நுகத்திற்கு நம்மை உட்படுத்தி, சத்திய வசனங்களுக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்க வேண்டும். கீழ்ப்படியாதவர்மீது தேவகோபாக்கினை வரும். கிறிஸ்துவின் கிருபையை பெற்றுக்கொள்ளாமல் அதைப் புறக்கணிக்கிறவர்களுக்கு தேவகோபாக்கினை கொடுக்கப்படும். கிருபையின் காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள், நியாயத்தீர்ப்பு நாளின்போது கிறிஸ்துவின் கோபத்தினால் நிர்மூலம் பண்ணப்படுவார்கள். 






from வேதாகம களஞ்சியம் 

Umn ministry 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*