தானியேல்
புத்தகம் ஒரு கண்ணோட்டம்
முன்னுரை
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில், எருசலேம் பாழாக்கப்பட்டிருப்பதாகவும், அது வனாந்தரமாயிருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் இப்போது அழிந்துபோயிருக்கிற எருசலேம், சீக்கிரத்தில் தன்னுடைய பழைய மகிமையை திரும்பவும் பெற்றுக்கொள்ளும் என்று எசேக்கியேல் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்.
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தைத் தொடர்ந்து, தானியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் பரிசுத்த வேதாகமத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. சிறையிருப்பின் முந்திய காலத்தில், எசேக்கியேல் தான் கண்ட தரிசனங்களை தீர்க்கதரிசனமாக எழுதியிருக்கிறார். சிறையிருப்பின் பிந்திய காலத்தில், தானியேல் தான் கண்ட தரிசனங்களை தீர்க்கதரிசனமாக எழுதியிருக்கிறார்.
இஸ்ரவேல் வம்சத்தார் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருக்கிறார்கள். அவர்கள் அங்கே அநேக வேதனைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை ஒவ்வொருவராக இஸ்ரவேல் வம்சத்தார் மத்தியிலே அனுப்பி, அவர்களை உற்சாகப்படுத்துகிறார். கர்த்தர் தம்முடைய ஜனத்தை முற்றிலுமாய் வெறுத்து ஒதுக்கிவிடவில்லை என்னும் நற்செய்தியை, தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு சொல்லுகிறார்கள்.
தானியேல் என்பது அவருடைய எபிரெய பெயர். இந்தப் பெயருக்கு ""தேவனுடைய நியாயத்தீர்ப்பு'' அல்லது ""தேவன் என்னுடைய நியாயாதிபதி'' என்று பொருள் சொல்லலாம். தானியேல் பாபிலோன் தேசத்து சிறையிருப்புக்குப்போனபோது, அவருக்கு கல்தேயருடைய பெயர் கொடுக்கப்பட்டது. தானியேல் இப்போது ""பெல்தெஷாத்சார்''என்று அழைக்கப்படுகிறார்.
தானியேல் யூதாகோத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் தாவீதின் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர். அவரிடத்தில் ஞானமும் தேவபக்தியும் அதிகமாயிருக்கிறது. எசேக்கியேல் தீர்க்கதரிசி, தானியேலைவிட வயதில் மூத்தவர். அவர் தீருவின் ராஜாவைப்பற்றி சொல்லும்போது, தானியேலின் ஞானத்தைப்பற்றியும் சொல்லுகிறார்.
""இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல'' (எசே 28:3).
நோவா, தானியேல், யோபு ஆகியோர் பரலோகத்தின் காரியங்களில் அதிக ஆர்வமுள்ளவர்கள் என்றும் எசேக்கியேல் சொல்லுகிறார்.
""அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'' (எசே 14:14).
யூதமார்க்கத்து ரபீமார்கள், தானியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தை, பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசன ஆகமத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. அவர்கள், தானியேல் புஸ்தகத்தை ""ஹாகியோ கிரைப்பா'' என்று அழைத்து, அதை தீர்க்கதரிசன ஆகமத்தில் சேர்க்காமல், ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
எரேமியா போன்ற தீர்க்கதரிசிகள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். தானியேலோ பாபிலோன் தேசத்து அரமனையில், ஒரு பிரபுவைப்போல வாழ்ந்தவர். ஆனாலும் மற்ற தீர்க்கதரிசிகளைப்போலவே தானியேலும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் (தானியேல் 6-ஆவது அதிகாரம்). தானியேலும் மற்ற தீர்க்கதரிசிகளைப்போல, தன்னுடைய சரீரத்தை வருத்தியிருக்கிறார். அவர் ருசிகரமான அப்பத்தைப் புசிக்கவில்லை (தானி 10:3). தானியேல் சோர்வடைந்து, வியாதிப்பட்டிருந்தார் (தானி 8:26).
தானியேல் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்தபோது, கர்த்தர் அவருக்கு தரிசனம் கொடுத்தார். தானியேல் அந்நிய தேசத்திலே தன்னுடைய தீர்க்கதரிசன புஸ்தகத்தை எழுதினார். அவர் இஸ்ரவேலில் இந்தப் புஸ்தகத்தை எழுதவில்லை. ஆகையினால் தானியேலின் புஸ்தகத்தை தீர்க்கதரிசன ஆகமத்தில் சேர்க்கக்கூடாது என்று, யூதமார்க்கத்து ரபீமார்களில் சிலர் விவாதம் பண்ணினார்கள்.
எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கும் பாபிலோன் தேசத்தில்தான் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. யூதமார்க்கத்து ரபீமார்கள், தானியேலை, இந்தக் காரணத்திற்காக, தீர்க்கதரிசியாக அங்கீகரிக்கவில்லையென்றால், அவர்கள் எசேக்கியேலையும் தீர்க்கதரிசியாக அங்கீகரிக்கமாட்டார்கள்.
தானியேல் மேசியாவின் வருகையைப்பற்றி தெளிவாகச் சொன்னார். யூதர்கள் இந்த சத்தியத்தை செவிகொடுத்து கேட்கமாட்டார்கள். மேசியாவின் வருகையைப்பற்றிய செய்திக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவும் மாட்டார்கள். தானியேல் மேசியாவின் வருகையைப்பற்றி தெளிவாகச் சொன்னதினால், யூதமார்க்கத்து ரபீமார்கள், தானியேலின் தீர்க்கதரிசன புஸ்தகத்தை, தீர்க்கதரிசன ஆகமத்தில் சேர்க்காமல், ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.
தானியேலுக்கு அரண்மனை உத்தியோகம் கொடுக்கப்பட்டிருந்தது. தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட ஆளுகையையும், பொறுப்பையும் தானியேல் தெய்வகிருபையினால் நேர்த்தியாய்ச் செய்தார்.
நேபுகாத்நேச்சார், கோரேசு, தரியு ஆகிய பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில், தானியேல் கர்த்தருடைய ஊழியத்தை செய்திருக்கிறார். இந்தப் பேரரசர்களுக்கு தானியேல் கர்த்தருடைய வார்த்தைகளை ஆலோசனையாகவும் சொல்லியிருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் காற்றைப்போல, தமக்கு இஷ்டமான இடத்திலும், திசையிலும் வீசுவார். இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிலர், அரசாங்க உத்தியோகங்களிலிருக்கிறார்கள். வேறு சிலர் பல்வேறு துறைகளில் பணிபுரிகிறார்கள். இவர்களில் அநேகர் தாங்கள் செய்யும் உத்தியோகங்களை காரணமாகச் சொல்லி, கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபடமாட்டார்கள். தானியேலோ அரசாங்க உத்தியோகம் பார்த்தாலும், அவர் கர்த்தருடைய ஊழியத்தையும் நேர்த்தியாய்ச் செய்தார்
தானியேல் புஸ்தகத்தின் முதல் ஆறு அதிகாரங்கள் சரித்திர பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வசனங்களும் வார்த்தைகளும் தெளிவாக இருக்கும். புரிந்துகொள்வதற்கும் எளிமையாயிருக்கும். இந்தப் புஸ்தகத்தின் மீதமுள்ள ஆறு அதிகாரங்களில் தீர்க்கதரிசன செய்திகள் எழுதப்பட்டிருக்கிறது. தானியேலின் காலத்திலிருந்து, வரப்போகிற மேசியாவின் காலம் வரையிலும் நடைபெறும் சம்பவங்களை, தானியேல் இந்த அதிகாரங்களில் தீர்க்கதரிசனமாய் எழுதியிருக்கிறார்.
தானியேல் புஸ்தகத்தின் முதலாவது அதிகாரமும், இரண்டாவது அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களும் எபிரெய பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. அதன் பின்பு, எட்டாவது அதிகாரம் வரையிலும், கல்தேயருடைய பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. ஒன்பதாவது அதிகாரத்திலிருந்து, பன்னிரண்டாவது அதிகாரம் வரையிலும் மறுபடியும் எபிரெய பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது.
கல்தேயர்கள் தானியேல் மீது அன்பாயிருந்தார்கள். அவருக்கு தாகமாயிருந்தபோது, குளிர்ந்த தண்ணீரைப் பருகக்கொடுத்தார்கள். ராஜாவின் திராட்சரசத்தினால் தானியேல் தன்னைத் தீட்டுப்படுத்தவில்லை.
தானியேல் யூதர்களின் சிறையிருப்பை வரிசை கிரமமாக எழுதுகிறார். கல்தேயர்கள் எருசலேமை முற்றிக்கையிட்டது, அவர்கள் யூதர்களை தங்கள் தேசத்திற்கு சிறைப்பிடித்து கொண்டுபோனது ஆகிய சம்பவங்கள் தானியேல் எழுதுகிற சரித்திரத்தின் ஆரம்பமாயிருக்கிறது. ரோமாபுரியார் பாபிலோனை அழிப்பது வரையிலும் தானியேல் எழுதுகிறார்
அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது ப-யையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்'' (தானி 9:27).
தானியேல் சொன்ன தீர்க்கதரிசனங்களில் சில கல்தேயருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேறும். தானியேல் பெர்சிய தேசத்து ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலும் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்.
தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு வியாக்கியானம் சொன்னார். அதில் கிரேக்க பேரரசைப்பற்றியும், ரோமப்பேரரசைப்பற்றியும் தானியேல் விளக்கம் சொல்லியிருக்கிறார். அந்தியோகசின் காலத்தில் யூதர்களுக்கு வரும் உபத்திரவங்களைப்பற்றியும் தானியேல் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லியிருக்கிறார்.
யோசபஸ் என்பவர் ஆதித்திருச்சபையின் சரித்திர ஆசிரியர். இவர் தானியேலைப்பற்றிச் சொல்லும்போது, தானியேல் மிகச் சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று சொல்லுகிறார்.
தானியேலின் புஸ்தகம் கி.மு. 606 அல்லது கி.மு 616 ஆறாம் வருஷத்திலிருந்து கி.மு. 536 ஆம் வருஷம் வரையிலும் பாபிலோனிலிருந்தும், சூசானிலிருந்தும் எழுதப்பட்டது.
தானியேல். சிறையிருப்பிலிருக்கும் யூதாவின் அதிபதி (தானி 1:3-6). சொப்பனங்களையும், தரிசனங்களையும் வியாக்கியானம் பண்ணியவர். (தானி 1:17; தானி 2:12-49; தானி 4:8-27; தானி 5:10-31) பல ராஜாக்களுக்குப் பிரதான அதிகாரியாக இருந்தவர். (தானி 2:46-49; தானி 5:29; தானி 6:1-3) தேவனுடைய தீர்க்கதரிசி. (தானி 7:28; தானி 8:1; தானி 9:21-23; தானி 10:1-12; தானி 12:4-13).
தானியேலின் காலத்திலிருந்த புறஜாதி தேசங்களிலிருந்து ஆயிரம்வருஷ அரசாட்சி, பூமியில் தேவனுடைய நித்திய ராஜ்யம் ஆகிய காலம் வரையிலுமுள்ள காலங்களைக் குறித்த தீர்க்கதரிசனங்கள். (தானி 2:38-45; தானி 7:17-27; தானி 8:20-25; தானி 9:24-27; தானி 11:40-12:13).
நேபுகாத்நேச்சார் (தானி 2:1-4:37), பெல்ஷாத்சார் (தானி 5:1-31; தானி 7:1; தானி 8:1), மேதியனாகிய தரியு (தானி 6:1-28; தானி 9:1), பெர்சியனாகிய கோரேசு (தானி 10:1-11:1) ஆகியோரின் காலங்களின்கீழ் இருந்த பாபிலோனின் வரலாற்றையும், மேதிய-பெர்சிய தேசத்தின் வரலாற்றையும் தானியேல் எழுதியிருக்கிறார்.
பொருடளக்கம்
ஒ. தானியேலின் வரலாறு
1. காலம் - முதலாவது வெளியேற்றம் (1:1-2)
2. தானியேலும் அவனுடைய நண்பர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் (1:3-6)
3. அவர்களுடைய பெயர்கள் மாற்றப்பட்டன (1:7)
4. தானியேலின் தீர்மானம் (1:8-11)
5. பத்து நாள் சோதனை (1:12-14)
6. விளைவு - அவர்களுடைய பராமரிப்பு (1:15-16)
7. தேவனுடைய ஆசீர்வாதங்கள் (1:17)
8. மற்றவர்களை விட இவர்களுடைய மேன்மை (1:18-21)
ஒஒ. நேபுகாத்நேச்சாரின் சொப்பனம்
1. கல்தேயர்களை வரவழைத்தார்கள் (2:1-3)
2. நேபுகாத்நேச்சாரின் கோரிக்கை (2:4-9)
3. சாஸ்திரிகளின் இயலாமை (2:10-11)
4. நேபுகாத்நேச்சாரின் கோபம் (2:12-13)
5. ஞானத்திற்காக ஜெபம் (2:14-18)
6. தானியேலுக்கு சொப்பனம் வெளிப் படுத்தப்படுகிறது (2:19-23)
7. தானியேலை அழைத்து வருகிறார்கள் (2:24-26)
8. சொப்பனத்தில் காணப்பட்ட பொருள்களும் ஆட்களும் - தேவனைப் பற்றிய சாட்சி (2:27-30)
9. பெரிய சிலை - ஐந்து பாகங்கள் (2:31-35)
10. வியாக்கியானம்
(1) பசும்பொன்னாலான தலை - இஸ்ரவேலை துன்புறுத்தும் மூன்றாவது உலகப் பேரரசு - பாபிலோன் (2:36-38)
(2) வெள்ளியாலான மார்பும் புயங்களும் - நான்காம் உலகப் பேரரசு - மேதிய பெர்சியா (2:39)
(3) வெண்கலத்தாலான வயிறும் தொடையும் - ஐந்தாம் உலகப் பேரரசு - கிரேக்கு
(4) இரும்பாலான கால்கள் - ஆறாம் உலகப் பேரரசு - ரோம் (2:40)
(5) இரும்பும் களிமண்ணினாலுமான பாதங்கள் - ஏழாம் உலகப் பேரரசு - பிந்தைய ரோம் (2:41-43)
(6) கல் - ஒன்பதாவதும் கடைசியானதுமான உலகப் பேரரசு - பூ உலகில் மேசியா ஆளுகை செய்யும் பரலோக இராஜ்ஜியம் (2:44-45)
11. தேவன் உயர்த்தப்படுகிறார் - தானியேலுக்குப் பதவி உயர்வு (2:46-49)
ஒஒஒ. தானியேலின் சகோதரருக்கு ஏற்பட்ட சோதனை - எரிகிற அக்கினிச்சூளை
1. இராஜா சிலையைப் பண்ணுவித்து நிறுத்தினான் (3:1)
2. சிலையின் பிரதிஷ்டை (3:2-3)
3. எல்லோரும் வழிபடவேண்டுமென்ற கட்டளை (3:4-7)
4. மூன்று யூதர்கள்மீது குற்றச்சாட்டு (3:8-12)
5. சிலையை வழிபடவேண்டுமென்று கட்டளை (3:13-15)
6. மூன்று யூதர்களும் மறுத்துவிடுகிறார்கள் (3:16-18)
7. எரிகிற அக்கினிச்சூளையினால் அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை (3:19-23)
8. இராஜா பிரமித்தான் (3:24-25)
9. இராஜா சம்மதிக்கிறான் (3:26-28)
10. நேபுகாத்நேச்சாரின் ஆணை (3:29-30)
ஒய. நேபுகாத்நேச்சார் அரசபதவியிலிருந்து தள்ளப்படுவான்
1. இராஜாவின் அறிவிப்பு (4:1-3)
2. சொப்பனம் (4:4-5)
3. வியாக்கியானம் தேவைப்படுகிறது (4:6-7)
4. சொப்பனத்தைக் கூறுகிறான் (4:8-18)
5. சொப்பனத்திற்கு வியாக்கியானம் (4:19-26)
6. இராஜாவுக்கு ஆலோசனை (4:27)
7. இராஜா ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை (4:28-30)
8. சொப்பனம் நிறைவேறுகிறது (4:31-33)
9. இராஜா தேவனைத் துதிக்கிறான் (4:34-37)
ய. பாபிலோனின் வீழ்ச்சி
1. பெல்ஷாத்சாரின் பெரிய விருந்து (5:1-4)
2. சுவரின்மீது எழுத்து (5:5)
3. பெல்ஷாத்சாருக்கு ஏற்பட்ட விளைவு (5:6)
4. ஞானிகளும் அவர்களுடைய இயலாமையும் (5:7-9)
5. இராணியின் ஆலோசனை (5:10-12)
6. ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு தானியேல் அழைக்கப்படுகிறான் (5:13-16)
7. பெல்ஷாத்சாரைக் கடிந்து கொள்கிறான் (5:17-25)
8. எழுத்தின் வியாக்கியானம் (5:26-29)
9. எழுத்து நிறைவேறுகிறது (5:30-31)
யஒ. தானியேலுக்குச் சோதனைகள் - சிங்கங்களின் கெபி
1. மேதிய பெர்சிய தேசத்தில் தானியேலின் உயர்ந்த ஸ்தானம் (6:1-3)
2. பொறாமைகளும் பிரச்சனைகளும் (6:4-5)
3. ஆணையைப் பெற்றுக் கொண்டார்கள் (6:6-9)
4. தானியேலின் உறுதியான சுபாவம் (6:10)
5. தானியேலின்மீது குற்றச்சாட்டு (6:11-13)
6. இராஜாவின் முயற்சிகள் (6:14-15)
7. சிங்கங்களின் கெபியிலே தானியேலைப் போட்டார்கள் (6:16-17)
8. தேவன் தானியேலை மீட்டார் (6:18-22)
9. தானியேலின் விரோதிகள் அழிக்கப் பட்டார்கள் (6:23-24)
10. தரியுவின் ஆணை - ஏழு காரணங்கள் (6:25-28)
யஒஒ. தானியேலின் முதலாவது தரிசனம் - நான்கு மிருகங்கள்
1. தரிசனம்
(1) நான்கு காற்றுக்களும் நான்கு மிருகங்களும் (7:1-3)
(2) முதலாவது மிருகம் - சிங்கம் - இஸ்ரவேலை துன்புறுத்தும் மூன்றாவது உலகப் பேரரசு - பாபிலோன் (7:4)
(3) இரண்டாவது மிருகம் - கரடி - நான்காவது உலகப் பேரரசு - மேதியரும் பெர்சியரும் (7:5)
(4) மூன்றாவது மிருகம் - சிவிங்கி - ஐந்தாவது உலகப் பேரரசு - கிரேக்கம் (7:6)
(5) நான்காவது மிருகம் - பெயர் இல்லை - ஆறாவது உலகப் பேரரசு - ரோம் (7:7)
(6) பத்து கொம்புகளும் சின்னக் கொம்பும் - பிந்தைய ரோமும் பிந்தைய கிரேக்கமும் (7:8)
(7) நியாயத்தீர்ப்பு
(அ) நியாயாதிபதி (7:9)
(ஆ) நியாயத்தீர்ப்பு (7:10)
(இ) சின்னக்கொம்பு அழிக்கப்பட்டது (7:11)
(ஈ) மற்ற மிருகங்களுடைய ஆளுகை (7:12)
(8) மேசியாவின் இரண்டாம் வருகை (7:13-14)
2. வியாக்கியானம்
(1) தூதனின் வியாக்கியானம் (7:15-16)
(2) நான்கு மிருகங்கள் - நான்கு இராஜாக்கள் அல்லது இராஜ்யங்கள் (7:17)
(3) ஒன்பதாவதும் கடைசியானதுமான உலகப்பேரரசு (7:18)
(4) தானியேலின் விசாரிப்பு (7:19-20)
(5) தானியேலின் தரிசனம் - சின்னக்கொம்பு பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணிற்று (7:21-22)
(6) நான்காவது மிருகம் (7:23)
(7) பத்து கொம்புகள் (7:24)
(8) அவர்களுக்குப் பின்பு வேறொருவன் எழும்புவான்
(9) பரிசுத்தவான்களுக்கு எதிரான யுத்தம் - அவனுடைய காலமும் ஆளுகையின் நீளமும் (7:25)
(10) சின்னக்கொம்பு அல்லது அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையின் முடிவில் தேசங்கள்மீது நியாயத் தீர்ப்பு உலக இராஜ்யங்களும், மேசியாவின் நித்திய இராஜ்யத்தின் நிறுவனங்களும் (7:26-28)
யஒஒஒ. தானியேலின் இரண்டாம் தரிசனம் - ஆட்டுக்கடாவும் வெள்ளாட்டுக் கடாவும்
1. தரிசனம்
(1) காலம் (8:1-2)
(2) ஆட்டுக்கடா - மேதிய பெர்சியா (8:3-4)
(3) வெள்ளாட்டுக்கடா - கிரேக்கு (8:5)
(4) யுத்தம் - மேதிய பெர்சியா, கிரேக்கு (8:6-7)
(5) நான்கு கொம்புகள் (8:8)
(6) சின்னக்கொம்பு - அந்திக்கிறிஸ்து (8:9-14)
2. வியாக்கியானம்
(1) வியாக்கியானம் செய்யும் தேவதூதர்கள் (8:15-16)
(2) நிறைவேறும் காலம் (8:17-19)
(3) ஆட்டுக்கடா - மேதிய பெர்சியா (8:20)
(4) வெள்ளாட்டுக்கடா - கிரேக்கு (8:21)
(5) நான்கு கொம்புகள் - கிரேக்கு, துருக்கி, சீரியா, எகிப்து (8:22)
(6) சின்னக்கொம்பு (8:23)
(7) அவனுடைய வல்லமையும் பரிசுத்தவான்களோடு யுத்தமும் (8:24)
(8) அவனுடைய பெருமை (8:25)
(9) மேசியாவோடு அவனுடைய யுத்தம்
(10) தரிசனத்தின் காலம் (8:26-27)
ஒல. தானியேலின் மூன்றாம் தரிசனம் - எழுபது வருஷங்களின் வாரங்கள்
1. காலமும் சூழ்நிலையும் (9:1-2)
2. தானியேலின் ஜெபமும் தனக்காகவும் இஸ்ரவேலுக்காகவும் செய்த பாவ அறிக்கையும் - இஸ்ரவேலின் பன்னிரெண்டு பாவங்கள் (9:3-19)
3. வியாக்கியானம் செய்த தேவதூதன் (9:20-23)
4. ஆறு காரியங்கள் நிறைவேறுவதற்கு இஸ்ரவேல்மீதும் எருசலேம்மீதும் வருஷங்களின் எழுபது வாரங்கள் (9:24)
5. ஏழு வாரங்களின் முதலாவது காலத்தின் ஆரம்பம் - சிறையிருப்பிற்குப் பின்பு எருசலேம் கட்டப்படுகிறது - இதன் பின்பு அறுபத்திரண்டு வாரங்களின் இரண்டாம் காலம் துவங்குகிறது - எருசலேம் மறுபடியும் கட்டப்படுவதிலிருந்து மேசியா சிலுவையில் அறையப்படும் காலம் வரையிலும் - 483 வருஷங்கள் கொண்ட காலம் (9:25-26)
6. ஒரு வாரத்தின் மூன்றாவது காலம் - இக்காலத்தில் அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலோடு உடன்படிக்கையை ஏற்படுத்தி அதை முறித்துப் போடுகிறான் - மேசியாவின் இரண்டாம் வருகையோடு இக்காலம் முடிவு பெறுகிறது (9:27)
தானியேலின் நான்காம் தரிசனம் - கடைசி நாட்களில் அந்திக்கிறிஸ்துவிற்குக் கீழ் இஸ்ரேல்
1. காலம், இடம், சூழ்நிலை (10:1-4)
2. மேசியாவின் தரிசனம் (10:5-6)
3. இதன் விளைவு (10:7-11)
4. தேவதூதனின் வியாக்கியானம் (10:12)
5. பெர்சியாவில், சாத்தானின் தூதர்கள் காபிரியேலைப் பிடித்து வைத்தார்கள் (10:13)
6. தரிசனத்திலுள்ள நபர்களும் பொருட்களும் (10:14)
7. தானியேல்மீது ஏற்பட்ட விளைவு (10:15-19)
8. கிரேக்கு தேசத்தின் அதிபதி (10:20)
9. மிகாவேலும் காபிரியேலும் (10:21)
10. தரியுவின் காலத்திலிருந்து வருங்கால அந்திக்கிறிஸ்து வரையிலும் வரலாறு
(1) காபிரியேல் மிகாவேலுக்கு உதவி புரிந்ததற்கு ஐந்து வருஷங்களுக்கு முன்பு - பெர்சியாவின் அதிபதி வருவதற்காக பாபிலோன்மீது இருந்த சாத்தானின் அதிகாரங்களை அகற்றிப் போட்டான் (11:1)
(2) மகா அலெக்ஸôண்டரின் ஆட்சிக்கு முன்பாக பெர்சியாவில் ஆட்சி புரிந்த நான்கு இராஜாக்கள் (11:2)
(3) பராக்கிரமமுள்ள இராஜா (11:3)
(4) கிரேக்கு தேசம் நான்கு இராஜ்ஜியங்களாக உடைந்து போயிற்று (11:4)
(5) தென்றிசை இராஜா
வடதிசை இராஜா (11:5)
(6) ஒருவரோடொருவர் சம்பந்தம் (11:6)
(7) வேர்களின் கிளை (11:7-9)
(8) அவனுடைய குமாரர்கள் யுத்தம் செய்ய எத்தனிப்பார்கள் (11:10-12)
(9) சில வருஷங்கள் சென்றபின்பு மறுபடியும் யுத்தம் (11:13-16)
(10) செம்மை மார்க்கத்தார் (11:17)
(11) தீவுகளுக்கு நேராக முகத்தை திருப்புவான் (11:18-19)
(12) தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் எழும்புவான் (11:20)
(13) அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்
(அ) இவன் இச்சகம் பேசி இராஜ்யத்தைக் கட்டிக் கொள்கிறான் (11:21)
(ஆ) வஞ்சகமாய் காரியங்களை நடப்பித்து பலப்படுகிறான் (11:22-24)
(இ) தென்திசை இராஜாவுக்கு விரோதமாக போர் செய்ய எழும்புவான் (11:25-27)
ஈ) பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாயிருப்பான் (11:28)
(உ) பின் நடபடியும் முன் நடபடியும் (11:29-31)
(ஊ) உடன்படிக்கைக்கு துரோகிகள் (11:32-34)
11. அறிவாளிகள் விழுவார்கள்
(1) தரிசனத்தின் காலம் (11:35)
(2) வடக்கு இராஜாவின் சுபாவம் (11:36-39)
(3) கடைசி காலத்தில் சீரியாவிற்கும் (வடக்கு) எகிப்திற்கும் (தெற்கு) இடையில் யுத்தம் - அந்திக்கிறிஸ்து (சீரியா, வடக்கு) எகிப்தின்மீது (தெற்கு) வெற்றி கொள்வான் - தானியேலின் எழுபதாவது வாரத்தின் நடுப்பாகம் வரையிலும் பல தேசங்களை வெற்றி கொள்வான் - அப்போது எட்டாவது அல்லது பிந்தைய கிரேக்க சாம்ராஜ்ஜியம் உருவாகும் (11:40-43)
(4) பிந்தைய ரோம சாம்ராஜ்ஜியத்தின் பத்து இராஜ்ஜியங்களை வெற்றி பெற்று அடிமைப்படுத்திய பின்பு வடக்கிலும் கிழக்கிலும் புதிய துயரங்கள் உண்டாகும் - மூன்றரை வருஷங்களின்
இறுதியில் அந்திக்கிறிஸ்து வெற்றி பெறுவான் - இஸ்ரவேலர்களை அழிப்பதற்கு அவர்களைப் பாலஸ்தீன தேசத்திற்கு அழைத்து வருவான் - அவர்களோடு தன் உடன்படிக்கையை முறித்துக் கொண்ட பின்பு இதுவே அந்திக் கிறிஸ்துவின் நோக்கமாகும் - சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான் (11:44)
(5) எருசலேமிலுள்ள யூதர்களின் தேவாலயத்தில் தன் சிங்காசனத்தை வைப்பான் (11:45)
(6) எழுபது வாரத்தின் கடைசி மூன்றரை வருஷங்களில் மகா உபத்திரவம் - 1,44,000 பேர்கள் விடுவிக்கப் படுவார்கள் (12:1)
12. உயிர்த்தெழுதல்கள் (12:2)
13. ஞானவான்களுக்கு வெகுமதிகள் (12:3)
14. முடிவுகாலமட்டும் முத்திரை போடப்பட்ட புஸ்தகம் (12:4)
15. தூதனின் கேள்வி (12:5-6)
16. பதிலுரை - மூன்றரை வருஷங்கள் உபத்திரவம் (12:7)
17. தானியேலின் கேள்வி (12:8)
18. பதிலுரை - மூன்றரை வருஷங்களுக்குப் பின்பு இரண்டு காலங்கள் (12:9-13)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.