தானியேல் விளக்கவுரை அதிகாரம் 7

0




தானியேல் விளக்கவுரை அதிகாரம் 7
 

 
தானியேல் 7-ஆம் அதிகாரம் முதல் 12-ஆம் அதிகாரம் வரை தானியேல் கண்ட தரிசனங்களை குறித்து வாசிக்கமுடியும். அவைகள் அனைத்தும் எதிர்காலத்தில் சம்பவிக்கபோகிற காரியங்களை குறிப்பதாகும். பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சார் ஆட்சி செய்த முதலாம் வருஷத்திலே, சொப்பனங்களையும், தரிசனங்களையும் கண்டான். இந்த சொப்பனங்களும், தரிசனங்களும் தானியேலை கலங்கப்பண்ணினது. காரணம் கடைசி காலத்திலே சம்பவிக்கப் போகிற காரியங்களை தரிசனமாய் கண்ட போது, அவற்றின். பயங்கரம், கலக்கத்தை உண்டாக்கிற்று. ராஜாவின் உணவை ஒதுக்கிய போதும், சிங்கக்கெபியில் போடப்பட்ட போதும் தானியேல் விசுவாசத்தில் உறுதியாய் கலங்காமல் நின்றார். ஆனால் கடைசி கால சம்பவங்களை தரிசனத்தில் பார்த்த போது கலக்கம் அடைந்தார். கர்த்தர் நியமித்திருக்கிற குறித்த நாட்களிலே நாம் அவருடைய ராஜ்யத்தின் பாத்திரவான்களாய் மாறவில்லை என்றால் கடைசி கால சம்பவங்கள் நம்மையும் கலங்கப்பண்ணும்.


தானியேல் கண்ட சொப்பனம்(தானி.7:2,3)
'
இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது  அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின".
வானத்தின் நாலு காற்றுகள் என்று எழுதப்பட்டிருப்பது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளிலிருந்து வீசுகிற காற்றை குறிக்கிறது. சமுத்திரம் மத்தியதரை கடலை குறிக்கிறது. சமுத்திரத்திலிருந்து வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் எழும்பின என்பது பூமியில் தோன்றுகிற நான்கு சாம்ராஜ்யங்களை குறிக்கிறது. எப்படியெனில் வெளி.17.1,15 வசனங்களில் திரளான தண்ணீர்களின் மேல் உட்கார்திருக்கிற வேசியை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அந்த தண்ணீர் ஜனங்களையும், கூட்டங்களையும், ஜாதிகளையும் பாஷைகாரரையும் குறிக்கிறது.

முதலாவது மிருகம்(தானி.7:4)

'முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது. அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது. மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது"
சிங்கம் நேபுகாத்நேச்சாரை குறிக்கிறது. நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் பொன்னான தலை நீரே என்று கூறுகிறார். பொன் உலோகங்களின்; ராஜா. சிங்கம் மிருகங்களின் ராஜா. இது நேபுகாத்நேச்சாரின் மேன்மையான ராஜ்யபாரத்தை குறிக்கிறது. பாபிலோன் சாம்ராஜ்யத்தை குறிக்கிறது. ஒருநாள் நேபுகாத்நேச்சார் மேட்டிமையினால் "என்னுடைய மகிமை பிரதாபத்திற்கு என்று நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா(தானி.4:30)" என்று கூறிய உடன் அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைள இறகுகளைப்போல மாறிற்று. மிருகத்தைபோன்ற பறவையைப்போன்ற ரூபமுடையவனாய் மாறினான். 

இரண்டாவது மிருகம் 7:5


'கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன். அது ஒரு பக்கமாய்ச் சாய்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. எழும்பி வெகு மாம்சம்தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது."

கரடி சிங்கத்தை காட்டிலும் சற்று பலவீனமானது. இது மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. நேபுகாத்நேச்சாருடைய சொப்பனத்தில் வெள்ளிக்கு ஒப்பிடப்பட்ட ராஜ்யம் இதுவே. தரியு, கோரேஸ், அர்த்தசஷ்டா, அகாஸ்வேரு போன்ற ராஜாக்களின் ஆட்சியைக் குறிக்கிறது. ஒரு பக்கமாய் சாய்ந்து நின்றது என்பது மேதிய ஆட்சியை காட்டிலும் பெர்சிய ஆட்சி மேன்மையானது என்பதைக் குறிக்கிறது. மூன்று விலா எலும்புகளை கவ்விகொண்டிருந்தது என்பது, பாபிலோன், லிதியா(டுலனயை) மற்றும் எகிப்தின் மேல் கொண்ட வெற்றியை குறிக்கிறது.

மூன்றாவது மிருகம் 7:6

'அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன். அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது. அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது. அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது"
மூன்றாவது மிருகமாகிய சிவிங்கி கிரேக்க சாம்ராஜ்யத்தை குறிக்கிறது. சிவிங்கி கரடியை காட்டிலும் பலகீனமானது. நேபுகாத்நேச்சாருடைய சொப்பனத்தில் வெண்கலத்திற்கு ஒப்பிடப்பட்ட ராஜ்யம் இதுவே. கிரேக்க ராஜ்யத்தின் தலைவர் மகா அலெக்சாண்டர். முதுகின் மேல் பட்சியின் செட்டைகள் நான்கும், நான்கு தலைகளும் இருந்தது என்பது, அலெக்சாண்டரின் மறைவிற்கு பின்பு ஆட்சியானது நான்காக பிரிக்கப்பட்டதை குறிக்கிறது. அவனுடைய நான்கு இராணுவ தளபதிகள் தேசத்தை பிரித்து ஆளுகை செய்தார்கள்.

நான்காவது மிருகம் 7:7,8


'அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன். அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது. அதற்குப் பெரிய இரும்புப்பற்கள் இருந்தது. அது நொறுக்கிப் பட்சித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது. அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது. அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது".

நாலாம் மிருகத்தை எந்த மிருகத்தோடும் ஒப்பிடவில்லை. காரணம் மற்ற எல்லா மிருகத்தை காட்டிலும் வேற்றுருவமாயிருந்தது. ஆனால் கெடியும் பயங்கரமும் பலத்ததுமாயிருந்தது. இரும்பு பற்களால் நொறுக்கி பட்சித்து கால்களால் மிதித்துபோடுகிறதாய் இருந்தது. இது கொடுமையாக ஆட்சிசெய்த ரோம சாம்ராஜ்யத்தை குறிக்கிறது. இந்த ராஜ்யம் கிரேக்க ராஜ்யத்தைகாட்டிலும் பலகீனப்பட்டது. நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் இரும்பிற்கு ஒப்பிடப்பட்டிருந்தது. ரோமர்களின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாக காணப்பட்டது. இவர்களின் ஆட்சியில் சபை மிகவும் துன்பப்படுத்தப்பட்டது. கி.பி. 300 முதல் 1500 வரை அனேக தேவபிள்ளைகள் சிங்கங்களுக்கு இரையாக்கபட்டார்கள். அக்கினியில் போடப்பட்டார்கள். அதன்பின்பு ரோம சாம்ராஜ்யம் பலவீனப்பட்டு பல சிறுநாடுகளாய் மாறினது.
ஆனால் கடைசி நாட்களில் ரோம சாம்ராஜ்யம் மீண்டும் உயிர்பெறும்;.  'அதற்கு பத்துகொம்புகள் இருந்தது" என்பது கடைசி நாட்களில் ரோம சாம்ராஜ்யத்தில் தோன்றுகிற பத்து ராஜ்யங்களைக்குறிக்கிறது. இந்நாட்களில் காணப்படுகிற ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ரோம சாம்ராஜ்யத்திலிருந்து தோன்றினவைகளே. ஒருவேளை அனேக நாடுகள் இந்நாட்களில் காணப்பட்டாலும் இந்த கூட்டமைப்பு பத்து வல்லமையான நாடுகளுடைய அமைப்பாய் மாறும். அப்போது அவைகளின் மத்தியில் இருந்து சின்னகொம்பு தோன்றும். அந்த்க்கிறிஸ்துவின் வெளிப்படுதலை குறிக்கிறது. முதலில் சின்னகொம்பாய் தோன்றுவான். தோன்றினவுடனே மூன்று ராஜ்யங்களில் ஆட்சியை தன் கீழ்கொண்டுவருவான்.

நீண்ட ஆயுசுள்ளவர் (7:9,10)

பிதாவாகிய தேவன் நீண்ட ஆயுசுள்ளவர்.  அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் காணப்படுகிறது. தேவனுடைய மகிமையின் சாயலாக காணப்படுகிறது. குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலும் பிதாவின் சாயலுக்கு ஒத்திருக்கிறதை வெளி.1:13-18-ல் பார்க்கமுடியும். தேவனுடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது. நம்முடைய தேவன் அக்கினியின் தேவன் என்பதை காட்டுகிறது. அவர் பட்சிக்கிற அக்கினி (எபி.12:29). ஆயிரமாயிரும்பேர் அவரைச் சேவித்தார்கள். கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள். நியாயசங்கம் உட்கார்ந்தது. கர்த்தருடைய சந்நிதியில் காணப்படுகிற பரிசுத்தவான்களை குறிக்கிறது.  புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. ஜீவபுஸ்தகம், நியாபகபுஸ்தகம், கிரியைகளின் புஸ்தகம் போன்ற புஸ்தகங்கள் திறக்கப்படுகிறது.

கொம்பின் (அந்திகிறிஸ்து) நியாயத்தீர்ப்பு (தானி. 7:11,12)

8-வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சின்ன கொம்பானது பெருமையானவைகளை பேசினதினிமித்தம் கொலைசெய்யப்படுகிறது. அதின் உடல் எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது. வெளி. 19:20-ல் அந்திகிறிஸ்து கந்தகம் எரிகிற அக்கினி கடல் தள்ளப்பட்டான் என்று எழுதப்பட்டிருக்கிறது. மற்ற ராஜாக்களும் ஆளுகையிலிருந்து தள்ளப்படுகிறார்கள். அந்திக்கிறிஸ்துவின் முடிவைப்பற்றி இந்த அதிகாரத்தின் கடைசியில் பார்க்கலாம்.


மனுஷகுமாரனுடைய ஆளுகை (தானி. 7:13,14)

மனுஷகுமாரன் இயேசு கிறிஸ்துவாக காணப்படுகிறார்.  பிதாவாகிய தேவன் குமாரனுக்கு ஆளுகையை கொடுக்கிறார். சகல  ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் குமாரனை சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவத்தையும் மகிமையையும் ராஜரிகத்தையும் பிதா கொடுக்கிறாhர். 'இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்(பிலி. 2:10,11)".

தானியேலுக்கு சொப்பனத்தின் பொருள் வெளிப்படுதல் (தானி. 7:15-26)

தானியேல் சொப்பனங்களின் தரிசனங்களின் பொருள் அறியாமல் தன் ஆவியிலே சஞ்சலமும் கலக்கமும் கொண்டான். அவ்வேளையில் சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் சொல்லும்படி, அவனைக் வேண்டிக்கொண்டான். ஒருவேளை தேவதூதனாககூட இருக்கலாம். அப்பொழுது அவன் அந்த சொப்பனங்களின் தரிசனங்களின்  அர்த்தத்தை தானியேலுக்கு விளக்கினான். கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் (ஆமோ.3:7). நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? (ஆதி. 18:18). இந்த வசனங்களின்படி எதிர்காலத்தில் நடக்கப்போகிற காரியங்களை தீர்க்கதரிசியாகிய தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார்.

நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நான்கு ராஜாக்கள். பூமியில் தோன்றுகிற எல்லா ராஜ்யங்களும் நிரந்தரமற்றது.  தேவனுடைய ராஜ்யம் ஒன்றே நிலைத்திருக்கும். அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது (லூக்கா 1:33). ஆயிர வருட அரசாட்சியில்  அவருடைய பிள்ளைகளகிய பரிசுத்தவான்கள் ஆளுகையை  பெற்று, என்றென்றைக்குமுள்ளu சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். ...அவாகள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனே ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்(வெளி.20:4).
தானியேல் தான் கண்ட சொப்பனத்தின் நான்காவது மிருகத்தைப்பற்றி அறிய மனதாயிருக்கிறான். காரணம் அந்த மிருகத்தின் ரூபம் மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதும், இரும்புப் பற்களும், வெண்கல நகங்களும், நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாய் இருந்தது. அதின் தலைமேல் பத்துக்கொம்புகள் இருந்தது. அவைகளில் மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பின வேறேயொரு கொம்பைப்குறித்து அறிய விரும்புகிறான். அந்த கொம்பு கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய் காணப்பட்டது. மேலே 7,8 வசனங்களில் பார்த்ததுபோல இந்த கொம்பு அந்திகிறிஸ்துவை குறிக்கிறது. கடைசி நாடககளில் ரோமசாம்ராஜ்யம் மீண்டும் உயிர்பெரும்;.  இந்த நாடுகளில் இருந்து சின்ன கொம்பாகிய அந்திகிறிஸ்து தோன்றுவான்.
இயேசுவின் இரகசிய வருகையில் மணவாட்டி சபை எடுத்துகொள்ளப்பட்டபின்பு,  7 வருஷம் பூமி இவனுடைய ஆட்சிக்குள்ளாக காணப்படும்.  உபத்திரவகாலத்தின் மறுபாதியாகிய மகாஉபத்திரவக்காலத்திலே, பரிசுத்தவான்களை ஒடுக்குவான். அவர்கள் ஒரு காலமும் (ஒரு வருஷம்), காலங்களும்(இரண்டு வருஷம்), அரைக்காலமும்(அரை வருஷம்) செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். கடைசி மூன்றரை வருஷங்காகிய உபத்திரவகாலத்திலே ஆண்டவரை கண்டுகொண்ட பரிசுத்தவான்களாகிய இஸ்ரவேலரை துன்பப்படுத்துவான்.  உன்னதமான தேவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசுவான். காலங்களையும் பிரமாணங்களையும்(வசனங்கள்;) மாற்ற நினைப்பான்.  அதன்பின்பு இயேசு வெண்குதிரையின் மேல் (வெளி. 19:11-20) வந்து யுத்தம் செய்து அவனை பிடித்து கந்தகம் எரிகிற அக்கினி கடலிலே உயிரோடு தள்ளுவார் (வெளி. 19:20).


தேவனுடைய நித்தியராஜ்யம் (தானி. 7:27,28)

ஆயிரவருட அரசாட்சியில் வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்தவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம். சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும். அல்லேலூயா!



                       God bless you 

             Umn ministry Chennai 


 


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*