மல்கியா 1ஆம் அதிகாரம் விளக்கம்

0


மல்கியா 1ஆம் அதிகாரம் விளக்கம்

மல்கியா தீர்க்கதரிசி யூதர்களுடைய  பாவங்களை அவர்களுக்கு உணர்த்துகிறார்.  அதன் பின்பு அவர் கர்த்தருடைய ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுகிறார். முதலாவதாக யூதர்களுடைய பாவங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களுடைய பாவங்களினிமித்தமாய்  அவர்கள் கடிந்துகொள்ளப்படுகிறார்கள். அதன்பின்பு கர்த்தருடைய வாக்குத்தத்தம் அவர்களுக்கு சொல்லப்படுகிறது. யூதர்கள் தங்கள் பாவங்களுக்கு உண்மையாய் மனந்திரும்பும்போது, கர்த்தர் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பார்.

பரிசுத்த ஆவியானவர் இதே முறைமையிலேயே  மனுஷருடைய ஆத்துமாக்களில் கிரியை நடப்பிக்கிறார். ""அவர் வந்து பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்'' (யோவா 16:8). 

பரிசுத்த ஆவியானவர் முதலாவதாக காயத்தைத் திறக்கிறார். அதன் பின்பு  அந்தக் காயத்திற்கு மருந்து போட்டு கட்டுகிறார். கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரை தமக்காகத் தெரிந்துகொண்டார்.       அவர்களுக்கு தம்முடைய தெய்வீக பராமரிப்புக்களைக் கொடுத்து அவர்களை ஆதரிக்கிறார். கர்த்தர் தம்முடைய பிரமாணங்கள் மூலமாக அவர்களைஆளுகை செய்கிறார். ஆனால் இஸ்ரவேல் வம்சத்தாரோ கர்த்தருடைய கிருபையை வீணாய்ப் பெற்றிருப்பதுபோல தெரிகிறது. 

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு  அநேக நன்மைகளை செய்திருந்தாலும், அவர்கள் கர்த்தருக்கு  நன்றியில்லாதவர்களாயிருக்கிறார்கள் (மல் 1:1-5). கர்த்தர் அவர்களுக்கு ஆராதனை பிரமாணங்களையும், நியமங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்களோ கர்த்தருடைய பிரமாணங்களுக்கு   கீழ்ப்படியாமல் அதை அசட்டைபண்ணுகிறார்கள். யூதாவின் மனுஷரைப்போலவே, ஆசாரியரும் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல், நிர்விசாரமாய் ஜீவிக்கிறார்கள்.  

நான் உங்களைச் சிநேகித்தேன் மல் 1:1-5

மல் 1:1. மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம். 

மல் 1:2. நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்;  அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். 

மல் 1:3. ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன். 

மல் 1:4. ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார். 

மல் 1:5. இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: கர்த்தர் இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள்.

மல்கியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திற்கு, ""கர்த்தருடைய வார்த்தையின் பாரம்'' ன்னும் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வார்த்தை முக்கியமானது. அது அதிக பாரமானது. ஒரு பாடலின் பாரத்தைப்போல,  கர்த்தருடைய வார்த்தையின் பாரத்தையும் நாம் திரும்ப திரும்ப வாசிக்கவேண்டும். 

கர்த்தருடைய பாரமான வார்த்தைகள்  பாவிகளுக்கு சொல்லப்படும். பாவிகள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும்.  இல்லையென்றால் அவர்கள் தங்கள் பாவங்களில் மூழ்கிப்போவார்கள். பாவிகளுக்கு கர்த்தருடைய வார்த்தை பாரமாகவும், நிந்தையாகவும் இருக்கும். 

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் பாரத்தை இஸ்ரவேலுக்கு சொல்லுகிறார்.  கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தார் மத்தியிலே அநேக தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.  அவர்களில் மல்கியாவும் ஒருவர். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கவில்லை.  ஆகையினால் கர்த்தர் அவர்கள் மத்தியில் மேலும் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார். கர்த்தர் மல்கியாவைக் கொண்டு, இஸ்ரவேலுக்கு, தம்முடைய வார்த்தையின் பாரத்தைச் சொல்லுகிறார். 




கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு  ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறார்.  அவர்களைப் பாதுகாத்து பராமரித்து வருகிறார். ஆனால் இஸ்ரவேல் வம்சத்தாரோ கர்த்தருக்கு  நன்றியில்லாதவர்களாயிருக்கிறார்கள். இதன் நிமித்தமாக, மல்கியா தீர்க்கதரிசி இஸ்ரவேல் வம்சத்தாரை கடிந்துகொள்கிறார். 

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு செய்த நன்மைகளையெல்லாம் இங்கு ஒவ்வொன்றாகச் சொல்லுகிறார். முதலாவதாக, ""நான் உங்களைச் சிநேகித்தேன்'' (மல் 1:2) என்று கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா தீர்க்கதரிசியின் பிரசங்கம், இந்த  வாக்கியத்தோடு ஆரம்பமாகிறது. ""நான் உங்களை சிநேகித்தேன்'' என்னும் ஒரே வாக்கியத்தில், கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு காண்பித்த கிருபையும், இரக்கமும் மொத்தமாய் வெளிப்படுகிறது. 

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு  தம்முடைய சிநேகத்தைப்பற்றிச் சொல்லிவிட்டு,  ஒரு கேள்வியையும் கேட்கிறார். ""அதற்கு நீங்கள், ""என்னை எப்படி சிநேகித்தீர்'' என்கிறீர்கள் என்று  யூதர்கள் கேட்பதாக, கர்த்தர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். கர்த்தர் தங்கள்மீது அன்பாயிருக்கிறார் என்னும் உணர்வு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இல்லை. 

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு கொடுத்த நன்மைகளையும், காண்பித்த கிருபைகளையும்  ஆரம்பம் முதல் அலசிப்பார்க்கிறார். கர்த்தருடைய கிருபை ஜீவஊற்றைப்போல புறப்பட்டு வருகிறது.  கர்த்தரோ இந்த ஊற்றின் ஆதாரத்தைப் பார்க்கிறார். கர்த்தர் மெய்யாகவே இஸ்ரவேல் புத்திரருக்கு நன்மை செய்திருக்கிறார்.  அவர்களை சிநேகித்திருக்கிறார். 

இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய சிநேகிதத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் கர்த்தருடைய அன்பையும்,   ஆதரவையும், சிநேகிதத்தையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

இஸ்ரவேல் வம்சத்தார் தங்களுடைய அனுபவங்களையும் நினைத்துப் பார்க்கிறார்கள். சத்துருக்கள் இவர்களை ஒடுக்கினார்கள்.  இவர்களுடைய தேசத்தைப் பாழாக்கிப்போட்டார்கள். கல்தேயர்கள் யூதர்களை தங்கள் தேசத்து சிறையிருப்புக்குக் கொண்டுபோனார்கள்.  இஸ்ரவேல் வம்சத்தாருடைய ஜீவியத்தில் ஏராளமான வேதனைகளும், உபத்திரவங்களும் உண்டாயிற்று.  

தங்களுடைய நிலமை இவ்வாறு  பரிதாபமாயிருக்கும்போது, கர்த்தர் தங்களை எப்படி சிநேகித்தார் என்னும் சந்தேகம்  அவர்களுடைய மனதில் தோன்றிற்று. கர்த்தர் தங்களை மெய்யாகவே சிநேகித்தார் என்றால், தாங்கள் ஏன் சிறையிருப்பில்  இருந்திருக்கவேண்டும் என்று யூதர்கள் நினைக்கிறார்கள். 

கர்த்தர் மெய்யாகவே இஸ்ரவேல் வம்சத்தாரை சிநேகிக்கிறார்.  இதில் சந்தேகம் எதுவுமில்லை. கர்த்தர் அவர்களை சிநேகிப்பதை இங்கு உறுதிபண்ணுகிறார். 

""எங்களை எப்படி சிநேகிக்கிறீர்'' என்னும் வாக்கியத்திற்கு வேதபண்டிதர்கள்  இவ்வாறு விளக்கம் சொல்லுகிறார்கள். ஆபிரகாம் கர்த்தரை சிநேகித்தார். இஸ்ரவேல் வம்சத்தார் ஆபிரகாமின் சந்ததியில் வந்திருக்கிறார்கள். ஆபிரகாம் கர்த்தரை சிநேகித்ததினால், கர்த்தர் ஆபிரகாமையும், அவருடைய சந்ததியையும் சிநேகிப்பதற்கு  கடன்பட்டிருக்கிறார். அதினிமித்தமாக கர்த்தர் தங்களை சிநேகித்தார் என்பதுபோல, இஸ்ரவேல் வம்சத்தார் சொல்லுகிறார்கள். 

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார். இவர்கள்  ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள் என்பது மெய்தான். ஆனாலும் இவர்களைவிட, இவர்களுடைய முற்பிதாவாகிய ஏசா,  ஆபிரகாமுக்கு மிகவும் நெருக்கமானவர். கர்த்தர் ஆபிரகாமை சிநேகிக்க கடன்பட்டிருந்தால், அவர் ஏசாவையும் சிநேகித்திருக்கவேண்டும். ஆனால் கர்த்தரோ  ""ஏசாவையோ நான் வெறுத்தேன்'' (மல் 1:3) என்று சொல்லுகிறார்.

ஏசா யாக்கோபுக்கு சகோதரன். கர்த்தர் யாக்கோபை சிநேகித்தார். ஏசாவை வெறுத்தார். யாக்கோபுக்கும் ஏசாவுக்கும்  இடையே கர்த்தர் ஒரு வித்தியாசத்தைக் காண்கிறார். ஏசா யாக்கோபின் சகோதரனாயிருந்தாலும், கர்த்தர் ஏசாவை சிநேகிக்காமல் வெறுத்துவிடுகிறார். கர்த்தர் யாக்கோபோடு உடன்படிக்கை பண்ணுகிறார். ஏசாவோடு உடன்படிக்கை பண்ண மறுத்துவிடுகிறார்.

கர்த்தர் ஏசாவுடைய மலைகளை பாழும்,  அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினார்           (மல் 1:3). கர்த்தர் தம்முடைய நீதியினால் ஏசாவை வெறுத்தார். அவர் தம்முடைய கிருபையினால் யாக்கோபை சிநேகித்தார். அப்போஸ்தலர் பவுல் இந்த வாக்கியத்தை தன்னுடைய நிருபத்தில் மேற்கோளாக எழுதுகிறார். ""அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது'' (ரோம 9:13).

ஏதோமியர் கர்த்தருடைய நீதிக்கு அடையாளமாயிருக்கிறார்கள்.  கர்த்தர் ஏசாவை வெறுத்து, அவனுடைய மலைகளை பாழாக்கினார். சேயீர் மலை ஏசாவின்   சுதந்தரம். கல்தேயருடைய சேனை எல்லா தேசங்களையும் பிடித்தார்கள். அவர்கள் ஏதோம் தேசத்தை பாழும் வனாந்தரமுமாக்கி, அதை அழித்துப்போட்டார்கள். 

""போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு  யாகமும், ஏதோம் தேசத்திலே மகா சங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்'' (ஏசா 34:6).

""நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும்       அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்'' (ஏசா 34:11). 

எருசலேம் அழிந்தபோது ஏதோமியர்கள் அதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள்.  மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். இதனால் எருசலேம் பானம்பண்ணின தத்தளிப்பின் பாத்திரத்தை,  ஏதோமியருக்கும் கொடுப்பது கர்த்தருக்கு சித்தமாயிற்று. 

""கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்  மட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே'' (சங் 137:7). 

சத்துருக்கள் யாக்கோபின் பட்டணங்களைப் பாழாக்கிப்போட்டார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுடைய  பாழாய்ப்போன பட்டணங்களை திரும்பவும் கட்டினார்கள். ஏதோமின் பட்டணங்களும் பாழாய்ப்போயிற்று. ஆனால் அவர்களால்  பாழாய்ப்போன தங்கள் பட்டணங்களை திரும்பவும் கட்ட முடியாது.




நீதிமான்கள்  துன்பப்பட்டாலும்,  முடிவில் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.  அவர்களுடைய துக்கத்திற்கு தகுந்த சந்தோஷத்தை கர்த்தர் அவர்களுக்கு திரும்பக் கொடுப்பார். நீதிமான்களுடைய துக்கம் சந்தோஷமாய் மாறும்.  துன்மார்க்கருடைய துக்கமோ, துக்கமாகவே இருக்கும். துன்மார்க்கருக்கு சந்தோஷமில்லை. 

""நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம்''  என்று ஏதோமியர் சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: ""அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன்'' என்று சொல்லுகிறார். ""ஏதோமியர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும்        சினம் வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள்'' (மல் 1:4) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.

ஏதோமியர் மாயையை நம்புகிறார்கள்.  அவர்களுடைய பட்டணங்கள் பாழாய்ப்போனது மெய்தான்.  தங்களால் பாழானவைகளை திரும்பக் கட்ட முடியும் என்று நினைக்கிறார்கள். அதை செய்து முடிப்பதற்கு தங்களிடத்தில்  பலமும் பராக்கிரமமும் இருக்கிறது என்று நம்புகிறார்கள். கர்த்தருடைய உதவியில்லாமல் ஏதோமியரால் ஒன்றும் செய்யமுடியாது.  ஏதோமியர் பாழானவைகளை திரும்பக் கட்டினாலும், கர்த்தர் அதை இடித்துப்போடுவார். 

கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக ஈயேல் எரிகோவை திரும்பக் கட்டினான். இதனால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் சாபம் வந்தது. ""அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு  சொல்-யிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்'' (1இராஜா 16:34). 

""பாழானவைகளை திரும்பக் கட்டுவோம்'' என்று ஏதோமியர் சொல்லுகிறார்கள். ஏதோமியர் என்ன சொல்லுகிறார்கள் என்பது முக்கியமல்ல. கர்த்தர் என்ன சொல்லுகிறார் என்பதே முக்கியம். ""அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும்.  

ஏதோம் தேசம் பாவத்தில் மூழ்கியிருக்கிறது.  ஏதோமியர் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பாமல்,  துன்மார்க்கமாய் ஜீவிக்கிறார்கள். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையாயிருக்கிறார்கள்.  ஆகையினால் கர்த்தர் துன்மார்க்கமான ஏதோமியர்மீது என்றைக்கும் சினம் வைக்கிறார்.

பாவிகள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப வேண்டும். துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கமான கிரியைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் பாவிகள்மீதும்,  துன்மார்க்கர்மீதும் தேவனுடைய கோபம் வரும். அவர்களுக்கு அழிவு வரும். தங்களுக்கு வரும் அழிவை அவர்களால் சீர்படுத்த முடியாமல் போய்விடும். அவர்களுக்கு வந்த அழிவு  பூரண அழிவாயும், நித்திய அழிவாயும் இருக்கும்.

இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய கிருபைக்கும் இரக்கத்திற்கும்  சாட்சிகளாகவும், அடையாளங்களாகவும் இருக்கிறார்கள். ஏதோமியர் பாவங்களும் அக்கிரமங்களும் செய்தார்கள். அவர்கள்  கர்த்தருடைய பார்வையில் அருவருப்பானவர்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தரால் வெறுக்கப்பட்டிருந்தார்கள்.  

கர்த்தர்  இஸ்ரவேல் வம்சத்தாரை  சிநேகித்தார். கர்த்தருடைய சிநேகத்தை  அவர்களுடைய கண்கள் காணும். கர்த்தர் தங்கள்மீது அன்பாகயிருக்கிறாரா என்னும் சந்தேகம்  அவர்களைவிட்டு நீங்கும். கர்த்தர் தங்களுக்கு செய்த நன்மைகளை இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் கண்களால் பார்ப்பார்கள். அப்போது, ""கர்த்தர் இஸ்ரவேலுடைய  எல்லைத்துவக்கி மகிமைப்படுத்தப்படுவார்'' (மல் 1:5) என்று இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய அன்பைக் குறித்து சாட்சி சொல்லுவார்கள்.

ஏதோமின் எல்லைகள் இன்னும் பாழாய்க் கிடக்கிறது. ஆனால் இஸ்ரவேலின் எல்லைகளோ பழுதுபார்க்கப்பட்டு, மறுபடியும் கட்டியெழுப்பப்படுகிறது.  ஏதோமின் பட்டணங்கள் இன்னும் பாழும் வனாந்தரமுமாயிருக்கிறது. யூதாவின் பட்டணங்களோ மறுபடியும் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே ஏராளமான யூதர்கள் வந்து குடியிருக்கிறார்கள். கர்த்தர் யாக்கோபை சிநேகித்தார் என்பதற்கு இது அடையாளம். 

கர்த்தருடைய நன்மையே அவருடைய மகிமை. கர்த்தர் நமக்கு நன்மை செய்யும்போது,  நாம் அவரை மகிமைப்படுத்த வேண்டும். கர்த்தருக்கு நன்றி சொல்லவேண்டும். கர்த்தரை துதிக்கவேண்டும். கர்த்தர்   நம்முடைய துதிகளுக்கு பாத்திரராயிருக்கிறார். அவர் நமக்கு நல்லவராகவே இருக்கிறார். கர்த்தர் நம்மை சிநேகிக்கிறார். 

""மல்கியா'' என்னும் பெயருக்கு ""என் தூதன்''  என்று பொருள்.

மல்கியா, நாகூம், ஆபகூக் ஆகிய மூவரும் தங்களுடைய தீர்க்கதரிசன புஸ்தகங்களின் ஆரம்பத்தில் ""கர்த்தருடைய வார்த்தையின் பாரம்'' என்று கூறி ஆரம்பிக்கிறார்கள்.  (மல் 1:1; நாகூம் 1:1; ஆப 1:1).

""இஸ்ரவேல்''  என்னும் வார்த்தை சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூதாவையும், இஸ்ரவேலையும் குறிக்கிறது.  (மல் 1:1,5; மல் 2:11,16; மல் 4:4). இவர்கள் மூன்று இடங்களில் ""யூதா'' என்று அழைக்கப்படுகிறார்கள்.  (மல் 2:11; மல் 3:4). சகரியா இவர்களை யூதா என்றும், இஸ்ரவேல் என்றும் அழைக்கிறார். (சக 1:19; சக 8:13; சக 11:14) இதுதவிர, சகரியா 22 இடங்களில் இவர்களை ""யூதா'' என்னும் பெயரை மாத்திரம் பயன்படுத்தி அழைக்கிறார்.  



தேவன் இஸ்ரவேலுக்குக் கூறிய செய்திகளும், இஸ்ரவேலின் கலகமான மறுமொழிகளும்

    1. நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்  (மல் 1:2).

    2. நான் பிதாவானால்  என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டை பண்ணினோம் என்கிறீர்கள்.  (மல் 1:6).

    3. என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்       (மல் 1:7).

    4. நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறீர்கள்.  (மல் 1:12).

    5. இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்-, அதை ஒரு திரணமாய்ப் பேசுகிறீர்கள்.  (மல் 1:13).

    6. பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள்.

    7. யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்  (மல் 2:11).

    8. கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக் குலைச்சலாக்கினார்கள்.

    9. கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும்  மாய்மாலமாக நிரப்புகிறார்கள் (மல் 2:13-14)

    10. உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்  (மல் 2:17)

    11. என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.  (மல் 3:7)

    12. மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்?  தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே. (மல் 3:8).

    13. நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள்.  (மல் 3:13)

    14. தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக் கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்? என்று சொல்லுகிறீர்கள்.  (மல் 3:14)

""ஏசாவையோ நான் வெறுத்தேன்'' (மல் 1:3) என்று கர்த்தர் சொல்லுகிறார்.  வெறுத்தல் என்னும் வார்த்தை ஒரு மொழிமரபாகும் . இதற்கு தேர்ந்தெடுத்தல்   என்று பொருள். (லூக்கா 14:25-27) கர்த்தரிடத்தில் பட்சபாதம் இல்லை. இங்கு கர்த்தர் மூத்தவனுக்குப் பதிலாக இளையவனைத் தெரிந்தெடுக்கிறார். ஏசா வேசிக்கள்ளனாக இருந்தான். ஒருவேளை போஜனத்திற்காகத் தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்டான்.  (எபி 12:16-17) யாக்கோபோ கர்த்தரை நேசித்தான். கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்று தாகத்தோடு இருந்தான்.

நிறைவேறிய முன்னறிவிப்புகள்

    1. அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன் (மல் 1:4).

    2. அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள்.

    3. இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: கர்த்தர் இஸ்ரவேலுடைய எல்லை துவங்கி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள்.       (மல் 1:5).

கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்கள் மல் 1:6-14

மல் 1:6. குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம் பண்ணுகிறார்களே; நான் பிதாவானால்  என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள். 

மல் 1:7. என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

மல் 1:8. நீங்கள் கண் ஊனமானதைப் ப-யிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

மல் 1:9. இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம், அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

மல் 1:10. உங்களில் எவன் கூ-யில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் ப-பீடத்தின்மேல் அக்கினியைக்               கூ-யில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.

மல் 1:11. சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல் 1:12. நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப்பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.

மல் 1:13. இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்-, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்.

மல் 1:14. தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு             ப-யிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல்கியா தீர்க்கதரிசி ஆசாரியர்களிடத்தில் கணக்கு கேட்கிறார். கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஆசாரியர்களை நியாயாதிபதிகளாக நியமித்திருக்கிறார்.   அவர்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டியவர்கள். ஆனாலும் ஆசாரியர்களும் கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும். சேனைகளின் கர்த்தர் தம்முடைய நாமத்தை அசட்டைபண்ணுகிற   ஆசாரியர்களிடத்தில் சில கேள்விகளைக் கேட்கிறார். 

கர்த்தர் ஆசாரியரிடத்தில் சில காரியங்களை எதிர்பார்க்கிறார். குமாரன்  தன் பிதாவைக் கனம்பண்ணுகிறான். இந்தப் பிரமாணம் இயற்கையாகவே சிறுபிள்ளைகளுடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் சீனாய் மலையிலே இந்தப் பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முன்பாகவே,  சிறுபிள்ளைகள் இந்தப் பிரமாணத்தைக் கைக்கொண்டு வருகிறார்கள். குமாரர்கள் தங்கள் பிதாக்களைக் கனம்பண்ணுகிறார்கள். 

ஊழியக்காரன் தன் எஜனமானைக் கனம்பண்ணுகிறான்.  எஜமானனைக் கனம்பண்ணுவது ஊழியக்காரனுடைய கடமை. ஊழியக்காரன் தானாகவே, ஒரு எஜமானிடத்தில் வேலை பார்க்கிறான்.  அவனுக்கு கீழ்ப்படிந்து வேலை செய்வதாக சம்மதம் தெரிவிக்கிறான். ஆகையினால் எஜமானுக்கு கீழ்ப்படிவதும், எஜமானைக் கனம்பண்ணுவதும் ஊழியக்காரனுடைய கடமையாயிருக்கிறது. 

ஆசாரியர்கள்  கர்த்தருடைய பிள்ளைகளாகவும்,   அவருடைய ஊழியக்காரராகவும் இருக்கிறார்கள்.  குமாரன் தன் பிதாவைக் கனம்பண்ணுவதுபோல, ஊழியக்காரன் தன் எஜமானைக் கனம்பண்ணுவதுபோல, ஆசாரியர்கள் கர்த்தரைக் கனம்பண்ணவேண்டும். ஆனால் அவர்களோ கர்த்தரை கனம்பண்ணவுமில்லை.  கர்த்தருக்கு பயப்படவுமில்லை. 

""குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம் பண்ணுகிறார்களே; நான் பிதாவானால்  என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே'' (மல் 1:6) என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களிடத்தில்   கேட்கிறார். 

ஆசாரியர்கள் ஜனங்களுக்கு பிதாக்களாகவும், எஜமான்களாகவும் இருக்கிறார்கள்.  ஜனங்கள் தங்களை கனம்பண்ணவேண்டுமென்று ஆசாரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

""அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ?        இஸ்ரவே-ல் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்'' (நியா 18:19).

ஆசாரியர்கள் தங்களைப் பிதாக்கள் என்றும், எஜமான்கள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்  கர்த்தர் தங்களுடைய பரலோகப் பிதா என்பதையும், தங்களுக்கு மேலாக கர்த்தர் பரலோகத்திலே எஜமானராயிருக்கிறார் என்பதையும் ஆசாரியர்கள் மறந்துவிடுகிறார்கள்.  தாங்கள் கர்த்தரைக் கனம்பண்ணவேண்டும் என்பதையும், கர்த்தருக்கு பயப்படவேண்டும் என்பதையும் ஆசாரியர்கள் நினைப்பதில்லை.

நம்முடைய தேவன் நமக்கு பரலோகப் பிதாவாயிருக்கிறார். அவர்  நம்முடைய எஜமானராயிருக்கிறார். ஆகையினால் நாம் அவரைக் கனம்பண்ணவேண்டும். கர்த்தருக்கு பயப்படும் பயம் நம்மிடத்தில் காணப்படவேண்டும்.  நம்முடைய மாம்சப்பிரகாரமான பிதாக்களை கனம்பண்ணி, அவர்களுக்கு பயப்படும்போது, நம்முடைய ஆவிக்குரிய பிதாவுக்கு பயப்படுவது மிகவும் அவசியம். 

""அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க,          நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?'' (எபி 12:9). 

இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தரைக் கனம்பண்ணவில்லை.  அவருக்கு பயப்படவில்லை. அவர்கள் கர்த்தரை அசட்டைபண்ணுகிறார்கள். இஸ்ரவேல் புத்திரர், கர்த்தர்  தங்கள்மீது சொல்லுகிற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் கர்த்தரிடத்தில், ""உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம்'' (மல் 1:6)  என்று கேட்கிறார்கள்.

ஆசாரியர்கள் கர்த்தருடைய நாமத்தையும், அவருடைய வார்த்தையையும், அவருடைய பிரமாணங்களையும்  அசட்டைபண்ணுகிறார்கள். இதனால் அவர்கள் செலுத்துகிற பலிகள் கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கிறது. ஏலீயின் குமாரர்  செலுத்திய பலிகள் கர்த்தருக்கு அருவருப்பாயிருந்ததுபோல, இந்த ஆசாரியர்கள் செலுத்துகிற பலிகளும் கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கிறது. கர்த்தர் இவர்கள் செலுத்தும் பலிகளை அங்கீகரிக்கவில்லை.

ஆசாரியர்கள் கர்த்தருடைய நாமத்தை  பரிசுத்தக்குலைச்சலாக்குகிறார்கள் (மல் 1:12). அவர்கள் கர்த்தரை அசுத்தப்படுத்துகிறார்கள்  (மல் 1:7). ஆசாரியர்கள் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சுத்தமான பலிகளை படைக்கவேண்டும். ஆனால் அவர்களோ கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் அசுத்தமானதை  படைக்கிறார்கள். ஆசாரியர்களின் இருதயமும் சுத்தமாயில்லை. அவர்களுடைய சிந்தையும் நோக்கமும் அசுத்தமாயிருக்கிறது. ஆசாரியர்களிடத்தில் சுயபெருமையும்,  பேராசையும், அளவுக்கு அதிகமான ஆடம்பரமும் காணப்படுகிறது. கர்த்தர் இந்தக் காரியங்களை ஆசாரியர்கள்மீது குற்றச்சாட்டாகச் சொல்லுகிறார். 

ஆசாரியர்களோ தங்களுடைய பாவங்களை  ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என்று சொல்லுகிறார்கள். ""உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம்'' என்றும், ""உமது நாமத்தை  எதினாலே அசட்டைபண்ணினோம்'' என்றும் ஆசாரியர்கள் கர்த்தரிடத்தில் கேட்கிறார்கள். தங்களிடத்திலுள்ள தப்பிதங்களை கர்த்தர் நிரூபிக்கவேண்டுமென்று, ஆசாரியர்கள் கர்த்தரிடத்தில் விவாதம்பண்ணுகிறார்கள்.

தங்களிடத்தில் பெருமையும், ஆணவமும் மாறுபாடும் இருப்பதை கர்த்தர் நிரூபிக்கவேண்டுமென்று ஆசாரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். கர்த்தர் தங்கள்மீது பொதுவான குற்றச்சாட்டுக்களைச் சொல்லுவதாகவும், அந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்பதும் ஆசாரியர்களின் விவாதம். தங்கள்மீது குற்றம் இருக்குமென்றால், கர்த்தர் அந்தக் குற்றத்தை தனிப்பட்ட     முறையில் தங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று ஆசாரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

""உமது நாமத்தை எதினாலே  அசட்டைபண்ணினோம்'' என்றும், ""உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம்'' என்றும்  கர்த்தர் தாமே தங்களுக்கு தெளிவாக சொல்லவேண்டுமென்று ஆசாரியர்கள் கர்த்தரிடத்தில் கேட்கிறார்கள். 

தம்மிடத்தில் விவாதம் பண்ணுகிற ஆசாரியர்களுக்கு கர்த்தர் பிரதியுத்தரம் சொல்லுகிறார். அவர்கள் சொல்லுகிற  வார்த்தையினாலேயே அவர்கள் கர்த்தரை அசுத்தப்படுத்தி, அசட்டைபண்ணுகிறார்கள். ஆசாரியர்கள் தங்கள் இருதயத்தில், ""கர்த்தருடைய பந்தி எண்ணாமற்போயிற்று''     (மல் 1:7) என்று சொல்லுகிறார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் ஆசாரியர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறார்கள்          (மல் 1:12). 

கர்த்தருடைய பந்தியானது, மற்ற பந்திகளைப்போல சாதாரணமான பந்திதான் என்றும், கர்த்தருடைய பந்தி பரிசுத்தமானதல்ல, அது அசுத்தமானது என்றும் ஆசாரியர்கள் சொல்லுகிறார்கள். கர்த்தருடைய       ஆலயத்தில் மேஜையின்மீது சமுகத்தப்பம் வைக்கப்பட்டிருக்கும். இது கர்த்தருடைய பந்தி. இது பரிசுத்தமானது.

கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்  பாவநிவாரண பலி செலுத்தப்படும்.   ஆசாரியர்கள் சமுகத்தப்பம் வைக்கப்பட்டிருக்கும் மேஜையைப்பற்றி இங்கு சொல்லுகிறார்களா அல்லது பாவநிவாரண பலி செலுத்தப்படும்  பலிபீடத்தைப்பற்றி இங்கு சொல்லுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

ஆசாரியர்களுடைய பார்வையில், கர்த்தருடைய பரிசுத்த பணிமுட்டுக்கள், பரிசுத்தமானதாகத்தெரியவில்லை. கர்த்தருடைய பந்தியையும், தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் பந்தியையும் ஆசாரியர்கள் ஒன்றுபோல நினைக்கிறார்கள். கர்த்தருடைய  பந்தியின் ஆகாரமாகிய அதன் பலனும் அற்பமானது என்று ஆசாரியர்கள் சொல்லுகிறார்கள்.

ஆசாரியர்கள் தங்களுடைய வார்த்தைகளினாலும்,  தங்களுடைய கிரியைகளினாலும் கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறார்கள். கர்த்தருக்கு எதை வேண்டுமானாலும் படைக்கலாம் என்றும்,  அதை எப்படி வேண்டுமானாலும் படைக்கலாம் என்றும் ஆசாரியர்கள் நினைக்கிறார்கள். ஆனால் கர்த்தருக்கு படைக்கப்படும் பந்தி, அவருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரகாரம் பரிசுத்தமாயிருக்கவேண்டும். 

ஆனால் ஆசாரியர்களோ ""கண் ஊனமானதைப் ப-யிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல'' என்றும், ""காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல''  என்றும் சொல்லுகிறார்கள் (மல் 1:8). 

அவர்கள் பாவநிவாரண பலியை செலுத்தும்போது, அதோடு சேர்ந்து  போஜனபலியையும் செலுத்தவேண்டும். போஜனபலியானது மெல்லிய             மாவிலே எண்ணெய் வார்க்கப்பட்டதாயிருக்கவேண்டும். ஆனால் ஆசாரியர்களோ கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறார்கள்.  

பலிபீடத்தில் படைக்கப்படும் அப்பமும் அசுத்தமாயிருக்கிறது.  பலிபீடத்தில் பலியிடப்படும் ஆடுகளும் கண் ஊனமானதாகவும், கால் ஊனமானதாகவும்,  நசல்பிடித்ததாகவும் இருக்கிறது. தாங்கள் கர்த்தருடைய பலிபீடத்தில் எதை பலியிட்டாலும்  அது பொல்லாப்பல்ல என்று ஆசாரியர்கள் சொல்லுகிறார்கள். 

ஆசாரியர்கள் பீறுண்டதையும், கால் ஊனமானதையும் நசல் கொண்டதையும் கொண்டு வந்து கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள் (மல் 1:13). பீறுண்ட ஆடுகளை கர்த்தருக்கு பலியாகச் செலுத்த வேண்டும் என்னும் அவசியமே இல்லை.  அவை தானாகவே சிலநாட்களில் செத்துப்போகும். வியாதிப்பட்டோ, காயம்பட்டோ உயிருக்கு போரடிக்கொண்டிருக்கிற ஆடுகளை கர்த்தருக்கு பலிசெலுத்தக்கூடாது. 

தகாதபலிகளை  கர்த்தருக்கு செலுத்துவது பொல்லாப்பானது என்பதுகூட  ஆசாரியருக்கு தெரியவில்லை. கண் ஊனமானதை பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்று ஆசாரியர்கள் சொல்லுகிறார்கள். கால் ஊனமானதையும்,  நசல் பிடித்ததையும் பலியிடக்கொண்டுவந்தாலும் அதுவும் பொல்லாப்பல்ல என்று ஆசாரியர்கள் சொல்லுகிறார்கள் (மல் 1:8). 

நம்முடைய தப்பிதங்களுக்கு நாம் மனந்திரும்பவேண்டும். நாம் அறியாமல்  செய்கிற தப்பிதங்களை கர்த்தர் மன்னிப்பார். நாம் துணிகரமாய்ப் பாவம் செய்தால் கர்த்தருடைய கோபம் நம்மீது வரும். ஜனங்கள் வேதப்பிரமாணத்தைப் புரிந்துகொள்ளாமல், தங்கள் அறியாமையினால் கண் ஊனமானதையும்,  கால் ஊனமானதையும் பலியிட கொண்டு வரும்போது, ஆசாரியர்கள் அதைத் தடுத்து நிறுத்தவேண்டும். ஜனங்களுக்கு வேதப்பிரமாணத்தை போதிக்கவேண்டும். அவர்கள் கண் ஊனமானதைக் பலியிடக்கொண்டு வந்தாலும், அது பொல்லாப்பல்ல என்று ஆசாரியர்கள் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசக்கூடாது.

நாம் கர்த்தருடைய பலிபீடத்திலே கண் ஊனமானதையும், கால் ஊனமானதையும், நசல் பிடித்ததையும் பலியிடக்கொண்டு வரும்போது,  நம்முடைய ஆத்துமாவும் ஊனமானதாகவும், நசல் பிடித்ததாகவும் இருக்கும். நம்முடைய மனதின் சிந்தனையைப் போலவே நம்முடைய செயல்களும் இருக்கும். கண் ஊனமானதை  கர்த்தருக்கு பலியிடக்கூடாது என்னும் உணர்வு நமக்குள் வரவேண்டும். இந்த உணர்வு நம்மிடத்தில் இல்லையென்றால், நம்முடைய ஆவியிலே நாம் ஊனமுற்றவர்களாகவும்,   நசல் கொண்டவர்களாகவும் இருப்போம். 

கர்த்தருடைய பலிபீடத்திலே எதையும் பலியிடக்கொண்டு வரலாம் என்று நம்முடைய மனதில் இறுமாப்பாய்ச் சிந்திக்கக்கூடாது.       இது கர்த்தருக்கும், அவருடைய பிரமாணத்திற்கும் விரோதமான சிந்தனை. ஊனமானதை பலியிடக்கொண்டு வருகிறவர்கள், அதன்பின்பு பீறுண்டதையும்  பலியிடக்கொண்டு வருவார்கள். துணிகரமாய்ப் பாவம் செய்வார்கள். 

நாம் கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமல், எதிர்த்து நின்று பாவம் செய்யும்போது, நம்முடைய ஆத்துமாவை  நாம் கெடுத்துப்போடுகிறோம். நம்முடைய ஆத்துமாவை நாம் ஊனப்படுத்துகிறோம். 

""உங்களில் எவன் கூ-யில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் ப-பீடத்தின்மேல் அக்கினியைக் கூ-யில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல'' (மல் 1:10) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

ஆசாரியர்கள் தாங்கள் செய்கிற  எல்லா வேலைகளுக்கும் கூலியை வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால்  அவர்களுடைய வேலைகளில் சுத்தமில்லை. அவர்கள் கர்த்தருக்குப் பிரியமான      வேலையை செய்யவில்லை. அவர்கள் சரியாக வேலை செய்யாவிட்டாலும், தாங்கள் செய்கிற வேலைகள் தங்களுக்கு மிகவும் வருத்தமானது  என்று சொல்லுகிறார்கள் (மல் 1:13). தாங்கள் இந்த வேலைகளை செய்வதினால், தங்களுடைய சரீரத்தில் களைத்துப்போயிருப்பதாக வேதனைப்படுகிறார்கள்.

தங்களுடைய ஆசாரிய ஊழியம் மிகவும் வருத்தமானது என்று, அதை ஒரு  திரணமாய்ப் பேசுகிறார்கள் (மல் 1:13). அவர்கள் கர்த்தருடைய பலிபீடத்தில் பீறுண்டதையும் கால் ஊனமானதையும்,         நசல் கொண்டதையும் கொண்டு வந்து காணிக்கையாக செலுத்துகிறார்கள். கர்த்தர் அதை அவர்களுடைய கைகளில் அங்கீகரித்துக்கொள்ளமாட்டார் (மல் 1:13). 

கர்த்தர் தம்முடைய நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியரோடு வழக்காடுகிறார். கண் ஊனமானதையும்,  கால் ஊனமானதையும், நசல் பிடித்ததையும், பலியிடக்கொண்டு வந்தாலும் அது பொல்லாப்பல்ல என்று  ஆசாரியர்கள் சொல்லுகிறார்கள். கர்த்தருக்கு எதை வேண்டுமானாலும் பலியாகச் செலுத்தலாம் என்றும், கர்த்தர் எல்லா பலிகளையும் அங்கீகரிப்பார் என்றும்  சொல்லி அவர்கள் கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறார்கள். தங்களுடைய பொல்லாப்பான வார்த்தைகளினால் கர்த்தரை அசுத்தப்படுத்துகிறார்கள். 

கர்த்தர் ஆசாரியர்களிடம் வழக்காடுகிறார்.  ""அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ'' (மல் 1:8) என்று சேனைகளின் கர்த்தர் ஆசாரியரிடம்  கேட்கிறார். ஆசாரியர்கள் கண் ஊனமானதை கர்த்தருக்கு பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்று சொல்லுகிறார்கள். கர்த்தருக்கு எதை பலிசெலுத்தினாலும்         அவர் நம்மீது பிரியமாயிருப்பார் என்று ஆசாரியர்கள் தூஷணவார்த்தைகளைச் சொல்லுகிறார்கள்.  

கண் ஊனமானதையும், கால் ஊனமானதையும், நசல் பிடித்ததையும்,  ஆசாரியர்கள் இந்த உலகப்பிரகாரமான அதிபதிக்கு செலுத்தினால், அவன் அதை அங்கீகரிக்கமாட்டான். அவன் ஆசாரியர்கள்மேல் பிரியமாயிருக்கமாட்டான்.  உலகப்பிரகாரமான அதிபதி ஆசாரியருடைய முகத்தைக்கூட பார்க்கமாட்டான்.

உலகப்பிரகாரமான அதிபதிக்கு பிரியமில்லாததை, ஆசாரியர்கள் கர்த்தருக்கு  பலியிட கொண்டு வந்தால், கர்த்தரும் அவர்கள்மேல் பிரியமாயிருக்கமாட்டார்.  ஆசாரியர்கள் செலுத்தும் காணிக்கையை உலகப்பிரகாரமான அதிபதிகளே அங்கீகரியாதபோது,  சர்வலோகத்திற்கும் அதிபதியாகயிருக்கிற கர்த்தர், அவர்களுடைய அருவருப்பான பலிகளை அங்கீகரிக்கமாட்டார்.  ""அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ'' (மல் 1:13) என்று கர்த்தர் ஆசாரியரிடத்தில் கேட்கிறார்.

நாம் கர்த்தருக்கு பலிசெலுத்தும்  முன்பாக, நம்முடைய இருதயம் கர்த்தரோடு ஒப்புரவாகவேண்டும். நம்முடைய ஆவியும் ஆத்துமாவும் பரிசுத்தமாயிருக்கவேண்டும். நம்மிடத்திலும் பரிசுத்தமில்லாமல், நாம் செலுத்துகிற  பலியிலும் பரிசுத்தமில்லாமலிருக்கும்போது, கர்த்தர் நம்முடைய பலிகளை அங்கீகரிக்கமாட்டார். கர்த்தர் நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார். 

காயீனும் ஆபேலும் கர்த்தருக்கு  பலியிட வந்தார்கள். கர்த்தர் அவர்களுடைய பலிகளை பார்ப்பதற்கு முன்பாக, கர்த்தர் அவர்களை முதலாவதாக பார்த்தார். அதன் பின்பே, கர்த்தர் அவர்கள் செலுத்திய   பலிகளை பார்த்தார். 

ஆசாரியர்கள்  கர்த்தருடைய பலிபீடத்திலே பலிகளைச் செலுத்தி,  ஜனங்களுக்காக பரிந்து பேசுகிறார்கள். கர்த்தரோ ஆசாரியர்கள் செலுத்தும் பலிகளை அங்கீகரிக்கவில்லை.  அவர்கள் ஏறெடுக்கும் பரிந்து பேசும் விண்ணப்பங்களுக்கும் கர்த்தர் செவிகொடுக்கமாட்டார். ஆசாரியர்கள் கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறார்கள். அவர்கள் கர்த்தரை அசுத்தம்பண்ணுகிறார்கள்.  ஆகையினால் கர்த்தர் ஆசாரியர்களையும், அவர்களுடைய பரிந்துபேசும் விண்ணப்பங்களையும் அங்கீகரிக்கமாட்டார். 

ஆசாரியர்கள் எந்த வேலையையும் கூலியில்லாமல் இலவசமாய்ச் செய்யவில்லை. தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவது, பலிபீடத்தின்மேல்  அக்கினியைக் கொளுத்துவது ஆகிய எல்லா வேலைகளுக்கும் ஆசாரியர்கள் அதற்குரிய கூலியை வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சுத்தமில்லாததை கர்த்தருக்கு பலிசெலுத்துகிறார்கள்.  ஆசாரியர்கள் தங்கள் வாயின் வார்த்தைகளினாலும், தங்களுடைய கிரியைகளினாலும் கர்த்தருடைய நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறார்கள். 

ஆசாரியர்கள் கர்த்தருடைய  பலிபீடத்திலே உற்சாகமாய் ஊழியம் செய்யவேண்டும். ஆனால் அவர்களோ, பலிபீடத்திலே பலிசெலுத்தும்போது, ""இது எவ்வளவு வருத்தமானது'' என்று  திரணமாய்ப் பேசுகிறார்கள். தங்களுடைய வேலை மிகவும் கடினமானது என்று சலித்துக்கொள்கிறார்கள். 

கர்த்தருடைய நாமத்தை அசுத்தப்படுத்தும் ஆசாரியர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்று மல்கியா சொல்லுகிறார். ""இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்;      அப்பொழுது நம்மேல் இரங்குவார். இது உங்களாலே வந்த காரியம்'' (மல் 1:9) என்று மல்கியா ஆசாரியர்களிடத்தில் சொல்லுகிறார்.

நம்முடைய பாவங்களுக்காக நாம்  தேவனுடைய சமுகத்தை நோக்கி கெஞ்சவேண்டும். நம்மைத் தாழ்த்தவேண்டும்.  கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கவேண்டுமென்று மன்றாட்டு ஜெபங்களை ஏறெடுக்கவேண்டும்.  ஆசாரியர்கள்மீது கர்த்தருடைய கோபமும், நியாயத்தீர்ப்பும், சாபமும் வந்திருக்கிறது. ""இது ஆசாரியர்களாலே வந்த காரியம்'' என்று  மல்கியா சொல்லுகிறார். கர்த்தருடைய கோபத்திற்கு ஆசாரியர்களுடைய பாவங்களே காரணம்.

கர்த்தருடைய நாமம் மகத்துவமானது. ""சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்;  எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்'' (மல் 1:11) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆனால் ஆசாரியர்களோ கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறார்கள். அவர்கள் கர்த்தரை அசுத்தப்படுத்துகிறார்கள்.  ஆசாரியர்கள் கர்த்தருக்கு பலியிட கண் ஊனமானதையும், கால் ஊனமானதையும், நசல் பிடித்ததையும் கொண்டு வந்தாலும்,  கர்த்தருடைய நாமம் மகத்துவமாகவே இருக்கும். ஆசாரியர்கள் கர்த்தருக்கு பீறுண்டதைக் கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்தினாலும், அதினால் கர்த்தருடைய மகிமையும் மகத்துவமும்  பீறுண்டுபோவதில்லை. கர்த்தருடைய நாமம் எப்போதுமே மகிமையுள்ளதாகவும், மகத்துவமுள்ளதாகவும் இருக்கும். 

ஆசாரியர்கள் பீறுண்டதை  கர்த்தருக்கு காணிக்கையாகச் செலுத்தும்போது,  கர்த்தருடைய சாபம் அவர்கள்மீது வரும். ""தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு ப-யிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்'' (மல் 1:14) என்று கர்த்தர் சொல்லுகிறார்.  

ஆசாரியர்கள் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை அசட்டைபண்ணி,  கர்த்தருடைய பலிபீடத்திலே அசுத்தமானதை பலிசெலுத்தி, கர்த்தருடைய நாமத்தை  அசட்டைபண்ணி, அசுத்தப்படுத்துகிறார்கள். ஆசாரியர்கள் அசட்டைபண்ணின பலிசெலுத்தும் பிரமாணத்திற்கு பதிலாக,  கர்த்தர் ஆவிக்குரிய ஆராதனை பிரமாணத்தைக் கொடுக்கிறார். 

பழைய பிரமாணத்தில் ஆசாரியர்களின்படி, கர்த்தருடைய பலிபீடத்திலே  ஆடுகளை பாவநிவாரண பலியாகச் செலுத்தவேண்டும். கர்த்தருடைய புதிய ஆராதனை பிரமாணத்தின்படி, எல்லா இடங்களிலும்,  கர்த்தருடைய நாமத்திற்கு, தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும் (மல் 1:11).

தூபம் என்பது ஜெபத்திற்கு  அடையாளம். ஆடுகள், மாடுகள் ஆகியவற்றின் இரத்தமும்,  கொழுப்பும் கர்த்தருக்கு தகனபலியாக செலுத்தப்படுவதற்கு பதிலாக,  கர்த்தருக்கு துதிகளும், ஸ்தோத்திர பலிகளும் செலுத்தப்படுகிறது. 

""என் விண்ணப்பம் உமக்கு  முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்ப-யாகவும் இருக்கக்கடவது'' (சங் 141:2). 

""வேறொரு தூதனும் வந்து,  தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப்  ப-பீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல்சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது'' (வெளி 8:3). 

பழைய பிரமாணத்தின்படி,யூதர்கள் மத்தியில் மாத்திரமே, கர்த்தருக்கு பலிகள் செலுத்தப்பட்டது. கர்த்தருடைய புதிய ஆராதனை பிரமாணத்தின்படி, எல்லா இடங்களிலும் கர்த்தருடைய நாமத்திற்கு தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும். இந்த உலகத்தின் எல்லா பாகங்களிலும் கர்த்தரை ஆராதிக்கும்  ஆராதனைகள் நடைபெறும். சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும், எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள் கர்த்தரை ஆராதிப்பார்கள்.  

யூதர்கள் மாத்திரம் என்று அல்லாமல்,  எல்லா ஜாதியாரும் கர்த்தருடைய நாமத்திற்கு தூபத்தையும் சுத்தமான காணிக்கையையும்  செலுத்துவார்கள். கர்த்தருடைய நாமம் யூதர்களுக்குள்ளும், புறஜாதிகளுக்குள்ளும் மகத்துவமாயிருக்கும். 

கர்த்தருடைய  கிரியைகள் அற்புதமானது.  கர்த்தர் மகிமையும் மகத்துவமுமுள்ளவர்.  அவருடைய கிரியைகளும் மகத்துவமுள்ளது. கர்த்தருடைய நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்.  கர்த்தருடைய அற்புதமான கிரியைகளை குறித்து எல்லா தேசத்தாரும், எல்லா ஜாதியாரும் சாட்சியாகச் சொல்லுவார்கள்.  ஒவ்வொரு பாஷைக்காரரும், தங்கள் தங்கள் பாஷையிலே, கர்த்தருடைய மகிமையையும், மகத்துவத்தையும் புகழ்ந்து பேசுவார்கள்.  

இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்களும்,  கர்த்தருடைய காணியாட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள்.  இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் தம்முடைய சபையிலே சேர்த்துக்கொள்வார்.  அவர்கள் இதுவரையிலும் அந்நியராகவும், பரதேசிகளாகவும் இருந்தாலும், அவர்கள் இனிமேல்  கர்த்தருடைய பரிசுத்தவான்களோடு ஐக்கியமாயிருப்பார்கள். அவர்களும் கர்த்தருடைய வீட்டாராயிருப்பார்கள். கர்த்தருடைய கிருபாசனத்திலே யூதர்கள் கிட்டிச்சேருவதுபோல, இரட்சிக்கப்பட்ட எல்லா விசுவாசிகளும், கர்த்தருடைய கிருபாசனத்தண்டையிலே  தைரியமாய்க் கிட்டிச்சேருகிற சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்வார்கள். 

கர்த்தருடைய நாமத்தைத் தூஷிக்கிறவர்கள், அவருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறவர்கள், அவருடைய நாமத்தை அசுத்தப்படுத்துகிறவர்கள் ஆகிய எல்லோரையும் கர்த்தர் சபிப்பார்.  அவர்களைத் தண்டிப்பார்.  

தன் மந்தையில் கடாயிருக்கையில், கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தனை,  ஆசாரியர்கள் ஒருவேளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படிப்பட்ட கபடஸ்தனை கர்த்தர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். கர்த்தர் அவர்களை சபிப்பார்.  

தங்களுக்கு கர்த்தரைவிட அதிக ஞானமும் விவேகமும் உண்டு என்று  ஆசாரியர்கள் நினைக்கலாம். ஆனாலும் கர்த்தர் மாத்திரமே சர்வஞானமுள்ளவர். அவர் மாத்திரமே சர்வவல்லமையும், சர்வஅதிகாரமும், சர்வஆளுகையுமுள்ளவர்.  ""நான் மகத்துவமான ராஜா'' (மல் 1:14) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

கர்த்தரை வஞ்சிக்க நினைக்கிறவர்கள்,   தங்களைத்தாங்களே வஞ்சித்துக்கொள்வார்கள்.  மாய்மாலக்காரரும், வஞ்சனைக்காரரும் தங்களுக்கு கேடுண்டாகவே, கர்த்தரை வஞ்சிக்கிறார்கள், கர்த்தருக்கு முன்பாக மாய்மாலம் பண்ணுகிறார்கள். இவர்கள்  சபிக்கப்பட்டவர்கள். மாய்மாலம் பண்ணுகிற ஆசாரியர்கள் கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கர்த்தரிடத்திலிருந்து சாபமே வரும்.

விக்கிரகாராதனைக்காரர்கள் தங்களுடைய விக்கிரகங்களை அதிகமாய்க் கனம்பண்ணுகிறார்கள். அவைகள் விக்கிரகம் என்றும், அவற்றிற்கு ஜீவனில்லை என்றும்   தெரிந்திருக்கிறபோதிலும், அவர்கள் தங்கள் விக்கிரகங்களை அதிகமாய்க் கனம்பண்ணி, அவற்றை ஆராதிக்கிறார்கள். ƒ

புறஜாதியார் தங்கள் விக்கிரகங்களுக்கு கொடுக்கிற மரியாதையை, யூதர்கள் தங்கள் கர்த்தருக்கு கொடுக்கவில்லை. கர்த்தர்  மெய்யான தேவன். அவர் உண்மையுள்ளவர். ஜீவனுள்ளவர். ஆனால் யூதர்களோ தங்கள் ஜீவனுள்ள தேவனை எப்படி ஆராதிக்கவேண்டுமோ அப்படி ஆராதிப்பதில்லை.  கர்த்தரை எப்படி கனம்பண்ணவேண்டுமோ அப்படி கனம்பண்ணுவதில்லை.  

 ஆசாரியர்கள் மாய்மாலம்பண்ணுகிறார்கள். கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறார்கள். அவருடைய நாமத்தை அசுத்தப்படுத்துகிறார்கள்.

மல்கியா புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் பாவங்கள்

    1. தேவனைக் கனம்பண்ணாமல் இருப்பது.  (மல் 1:6)

    2. தேவனிடத்தில் பயபக்தியின்மை

    3. தேவனுடைய நாமத்தை அசட்டை பண்ணுதல்.

    4. கர்த்தருடைய பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைப்பது.  (மல் 1:7)

    5. தேவனுடைய பந்தியைப் பற்றி எண்ணமற்றிருப்பது. (மல் 1:7,12)

God bless you 


umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*