மல்கியா 2ஆம் அதிகாரம் விளக்கம்

0


மல்கியா 2ஆம் அதிகாரம் விளக்கம்

கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு இரண்டு பிரதான பிரமாணங்களைக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் தம்முடைய  தெய்வீக ஞானத்தினால் இந்த நியமிங்களை திட்டமிட்டு, தம்முடைய ஜனத்திற்கு கொடுத்திருக்கிறார். கர்த்தருடைய ஜனம் இந்தப் பிரமாணங்களுக்கு கீழ்ப்படியவேண்டும். இந்த நியமங்களை கடைப்பிடிக்காமல்,         அதை அசுத்தப்படுத்தக்கூடாது. இந்தப் பிரமாணங்களுக்கு கீழ்ப்படியாமல், இதை மீறுகிறவர்கள்மீது தேவனுடைய கோபமும் நியாயத்தீர்ப்பும் வரும். 

முதலாவது பிரமாணம் பரிசுத்த ஆசாரியத்துவம். ஆசாரிய ஊழியம்  கனமுள்ளது. ஆசாரியர்களோ கர்த்தருடைய பரிசுத்தமானதை தீட்டுப்படுத்தினார்கள். கர்த்தர் ஆசாரியர்களுடைய பாவங்களை  அவர்களுக்கு உணர்த்தி, அவர்களைக் கடிந்துகொள்கிறார் (மல் 2:1-9). 

இரண்டாவது பிரமாணம் பரிசுத்த விவாகம். இந்த உலகத்தில் விவாகம் மனுஷர் மத்தியிலே கனமுள்ளது. ஆனால் ஆசாரியரும்,  யூதர்களும் அந்நிய ஜாதி ஸ்திரீகளை விவாகம் செய்து, பரிசுத்த விவாகப்பிரமாணத்தை அசுத்தப்படுத்துகிறார்கள் (மல் 2:11,12). 

கர்த்தருடைய ஜனத்தார் தங்களுடைய மனைவிமார்களை அன்பாய் நடத்தாமல்,  அவர்களுக்கு தீங்கு செய்கிறார்கள் (மல் 2:13). புருஷர் தங்கள் மனைவிகளை தள்ளி வைத்துவிடுகிறார்கள் (மல் 2:16).   புருஷர் தங்கள் மனைவிகளுக்கு துரோகம்பண்ணுகிறார்கள் (மல் 2:10,14,15).

பரிசுத்த ஆசாரியத்துவம்  மல் 2:1-9

மல் 2:1. இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது.

மல் 2:2. நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல் 2:3. இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.

மல் 2:4. லேவியோடே பண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல் 2:5. அவனோடே பண்ணின என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்துக்குப் பயந்தும் இருந்தான். 

மல் 2:6. சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான். 

மல் 2:7. ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்

மல் 2:8. நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப் போட்டீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.



மல் 2:9. நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.

கர்த்தர் ஏற்கெனவே தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களுக்கு  எச்சரிப்பின் வார்த்தைகளைச் சொன்னார். கர்த்தர் மறுபடியுமாக, ""இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது'' (மல் 2:1) என்று சொல்லுகிறார். 

கர்த்தருக்கு பலிசெலுத்துவதற்காக ஜனங்கள் எதைக் கொண்டு வருகிறார்களோ, அதையே தாங்கள் பலிசெலுத்துவதாக  ஆசாரியர்கள் சொல்லுவார்கள். ஜனங்கள் ஊனமானதையும் நசல் பிடித்ததையும் பலியிடக்கொண்டு வந்ததினால், தாங்கள் அதை கர்த்தருக்கு பலியிட்டதாக ஆசாரியர்கள் சாக்குபோக்கு சொல்லுவார்கள்.

தமது நாமத்தை ஆசாரியர்கள் அசட்டைபண்ணுகிறார்கள் (மல் 1:6)  என்றும், ஆசாரியர்கள் தம்மை அசுத்தப்படுத்துகிறார்கள் (மல் 1:7)  என்றும் கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் ஆசாரியர்களோ, ""உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம்'' என்றும், ""உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம்'' என்றும் கர்த்தரிடத்தில் கேட்கிறார்கள்.

ஆசாரியர்கள் ஜனங்களுக்கு  கர்த்தருடைய பிரமாணத்தைப் போதிக்கவேண்டும். அவர்கள் கர்த்தருக்கு எப்படிப்பட்ட பலிகளையும், காணிக்கைகளையும் கொண்டு வரவேண்டுமென்று ஆசாரியர்கள்   ஜனங்களுக்கு உபதேசம்பண்ணவேண்டும். 

ஜனங்களுக்கு சரியான உபதேசமும்,  சரியான போதனையும் கொடுக்கப்பட்டிருந்தால்,  அவர்கள் ஊனமானதையும், நசல் பிடித்ததையும் பலியிடக் கொண்டு வரமாட்டார்கள்.  அவர்கள் ஊனமானதைக் கொண்டு வருவதற்கு, ஆசாரியர்களின் உபதேசக் குறைவே காரணம்.  ஆசாரியர்கள் ஜனங்கள்மீது குற்றம் சொன்னாலும், கர்த்தர் ஆசாரியர்மீதே குற்றம் சொல்லுகிறார்.  

""இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது'' (மல் 2:1) என்று  கர்த்தர் சொல்லுகிறார். ஆசாரியர்கள் கர்த்தருடைய கட்டளையை செவிகொடுத்து கேட்கவில்லை.  அவர்கள் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையை செலுத்தும்படி, அவருடைய பிரமாணத்தை சிந்திக்கவில்லை.  ஆகையினால் கர்த்தர் ஆசாரியர்களுக்கு சாபத்தை அனுப்புகிறார். அவர்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குகிறார். 

""ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன்'' (மல் 2:2) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ""இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்'' (மல் 2:3) என்றும் கர்த்தர் சொல்லுகிறார். 

லேவிகோத்திரத்தார் கர்த்தருக்கு பரிசுத்தமானவர்கள்.  அவர்கள் தேவாலயத்திலே கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யவேண்டியவர்கள்.  கர்த்தர் லேவியோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறார். கர்த்தருடைய உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு,  கர்த்தர் இந்தக் கட்டளையை அவர்களிடத்திற்கு அனுப்பியிருக்கிறார் (மல் 2:4). 

லேவியின் புத்திரர் கர்த்தருடைய பிரமாணத்தைப்பற்றியும், அவருடைய கட்டளைகளைப்பற்றியும் நன்றாய் அறிந்திருக்கவேண்டும்.  இது லேவியின் குடும்பத்தாருக்கு கிடைத்திருக்கிற மேன்மை. கர்த்தர் லேவியோடு பண்ணின அவருடைய உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாகயிருந்தது  (மல் 2:5). 

கர்த்தருடைய உடன்படிக்கை ஜீவனையும் சமாதானத்தையும் கொடுக்கிறது. இந்த உடன்படிக்கை யூதருடைய மார்க்க உபதேசங்களுக்கு ஆதாரமாயிருக்கிறது. கர்த்தருடைய உடன்படிக்கையின் மூலமாய்  மனுஷருடைய ஆத்துமாவுக்கு ஜீவனும் சமாதானமும் கிடைக்கிறது. 

கர்த்தர் தம்முடைய ஆசாரியத்துவ உடன்படிக்கையை லேவி கோத்திரத்தாரோடு பண்ணியிருக்கிறார். கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையை லேவி கோத்திரத்தாரோடு விசேஷமாக பண்ணியிருந்தாலும்,  இந்த உடன்படிக்கை எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவானது. ஏனென்றால், லேவி கோத்திரத்தார் ஆசாரியர்களாயிருப்பதுபோல, எல்லா விசுவாசிகளும் ஆவிக்குரிய ஆசாரியர்களாயிருக்கிறார்கள். 

கர்த்தர் லேவி கோத்திரத்தாரோடு  ஆசாரியத்துவ உடன்படிக்கை பண்ணியிருக்கிறார். அவர் எல்லா விசுவாசிகளோடும்  கிருபையின் உடன்படிக்கையை பண்ணியிருக்கிறார். கர்த்தருடைய கிருபையின் உடன்படிக்கை மூலமாக, எல்லா விசுவாசிகளுக்கும் நித்திய சமாதானமும், நித்திய ஜீவனும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக விசுவாசிகள் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் சந்தோஷம்  உண்டாயிருக்கிறது. 

கர்த்தர் தமக்கு ஆசாரிய ஊழியம் செய்யுமாறு லேவி கோத்திரத்தைத் தெரிவு செய்தார். இஸ்ரவேலின் மற்ற கோத்திரத்தாரிலிருந்து, கர்த்தர் லேவிகோத்திரத்தாரைப் பிரித்தெடுத்தார்.  லேவிகோத்திரத்தார் கர்த்தருக்கு விசேஷித்தவர்கள். கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையின் மூலமாய், லேவிகோத்திரத்தாருக்கு ஜீவனையும் சமாதானத்தையும் வாக்குப்பண்ணியிருக்கிறார்.  

கர்த்தர் லேவிகோத்திரத்தாருக்கு வாக்குப்பண்ணின ஜீவனையும் சமாதானத்தையும், ஆரோனுக்கும், பினெகாசுக்கும்  வாக்குப்பண்ணியிருக்கிறார். லேவி கோத்திரத்தார் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஜீவனையும் சமாதானத்தையும், இஸ்ரவேல் வம்சத்தார்  அனைவருக்கும் ஆசீர்வாதமாய்க் கொடுக்கவேண்டும். கர்த்தருடைய ஆசாரியர்கள், இஸ்ரவேல் வம்சத்தாரை ஆசீர்வதிப்பதற்காகவே, கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்கள்.     லேவிகோத்திரத்தார் கொடுக்கவேண்டும் என்பதற்காக பெற்றிருக்கிறார்கள்.  

கர்த்தர்  லேவிகோத்திரத்தாரோடு பண்ணின உடன்படிக்கையினால், அவர்களுக்கு  ஜீவனும் சமாதானமும் உண்டாயிற்று. அவர்கள் கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டும்.  இது கர்த்தர் லேவிகோத்திரத்தாருக்கு கொடுத்திருக்கிற கட்டளை. அவர்களும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, கர்த்தருடைய நாமத்திற்கு பயந்திருந்தார்கள் (மல் 2:5).

லேவிகோத்திரத்தார் கர்த்தரிடத்தில் தங்கள் பக்திவைராக்கியத்தைக் காண்பித்தார்கள். இஸ்ரவேல் புத்திரர்  வனாந்தரத்தில் பிரயாணம் பண்ணினபோது, அவர்கள் தங்களுக்கு ஒரு பொன்கன்றுக்குட்டியை தெய்வமாக செய்தார்கள்.  லேவிகோத்திரத்தார் கன்றுக்குட்டியை ஆராதிக்காமல், கர்த்தருடைய நாமத்திற்கு பயந்திருந்தார்கள். கர்த்தரிடத்தில் பக்தியாயிருந்தார்கள். 

""பாளயத்தின் வாச-ல் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்''  (யாத் 32:26). 

கர்த்தர் லேவிகோத்திரத்தாரை ஆசீர்வதித்தார். அவர்களுக்கு ஜீவனையும் சமாதானத்தையும் கட்டளையிட்டார். கர்த்தர் லேவியோடே பண்ணின அவருடைய  உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாயிருந்தது. லேவிகோத்திரத்தாருக்கு ஜீவனும் சமாதானமும் நிலைத்திருக்கவேண்டுமென்றால், அவர்கள் கர்த்தருக்கு பயப்படும்        பயத்தோடே இருக்கவேண்டும். கர்த்தர் லேவிகோத்திரத்தை ஆசீர்வதிக்கும்போது, இந்த நிபந்தனையையும் கொடுக்கிறார்.




லேவிகோத்திரத்தார் சேனைகளுடைய கர்த்தருக்கு  தூதர்களைப்போல இருக்கிறார்கள். அவர்கள் சமாதானத்தின் உடன்படிக்கையையும்,  நித்திய ஜீவனின் உடன்படிக்கையையும் ஜனங்களுக்கு அறிவிக்கிறார்கள். லேவிகோத்திரத்தார் இந்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தர்களல்ல. அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை ஜனங்களுக்கு அறிவிக்கிற தூதுவர்கள். இஸ்ரவேலின் தேவனுக்கும்,  தேவனுடைய இஸ்ரவேலுக்கும் இடையே, கர்த்தருடைய உடன்படிக்கை நிலைத்திருக்க வேண்டும். இதற்காக, லேவியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அறிவிக்கிறார்கள்.

கர்த்தர் தம்முடைய ஆசாரியர்களின் ஊழியத்தைப்பற்றி  இங்கு விரிவாகச் சொல்லுகிறார். ""சத்தியவேதம் ஆசாரியரின் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான். ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்''  (மல் 2:6,7) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆசாரியர்கள்  ஜனங்களுக்கு கர்த்தருடைய வாயாகயிருக்கிறார்கள். ஆசாரியருடைய வாயிலே  கர்த்தருடைய சத்தியவேதம் இருக்கிறது. அவர்களுடைய உதடுகளில் கர்த்தரைப்பற்றிய அறிவும்,  அவருடைய பிரமாணத்தைப்பற்றிய ஞானமும் இருக்கவேண்டும். அவர்கள் ஜனங்களுக்கு கர்த்தரைப்பற்றிய சத்தியத்தை மறைக்காமல் போதிக்கவேண்டும்.  

ஆசாரியர்கள் கர்த்தரைப்பற்றிய ஞானத்தை தங்களுக்கு மாத்திரம் என்று சுயமாக வைத்துக்கொள்ளக்கூடாது.  கர்த்தரைப்பற்றிய சத்தியங்களை ஜனங்களுக்கு உபதேசிக்கவேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், ஆசாரியர்கள்  கர்த்தருடைய பிரமாணங்களை, ஜனங்களுக்குப் போதிக்கவேண்டும். ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும். 

ஜனங்கள் ஆசாரியனுடைய வாயிலே வேதத்தைத் தேடுவார்கள். ஜனங்கள்  ஆசாரியர்களை கர்த்தருடைய தூதர்களாகப் பாவித்து, அவர்களிடத்தில் ஆவிக்குரிய ஆலோசனைகளைக் கேட்பார்கள்.  ஆசாரியர்களுடைய உதடுகளில் அநியாயம் காணப்படக்கூடாது. அவர்களுடைய வாயில் சத்தியவேதம் இருக்கவேண்டும். ஆசாரியர்கள்  கர்த்தரோடே சமாதானமும் யதார்த்தமுமாய் சஞ்சரிக்கவேண்டும். அநேகரை அக்கிரமத்தினின்று திருப்புவது ஆசாரியருடைய ஊழியம்.

இப்போது ஆசாரிய ஊழியம் செய்கிறவர்களைவிட,  பூர்வகாலங்களில் ஆசாரிய ஊழியம் செய்தவர்கள்        கர்த்தரிடத்தில் பக்திவைராக்கியமாயிருந்தார்கள். இப்போதுள்ள ஆசாரியர்களிடத்தில் பக்திவைராக்கியம் குறைந்துபோயிற்று.  பூர்வகாலத்து ஆசாரியர்கள் கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தினார்கள். இப்போதுள்ள ஆசாரியர்களோ, கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறார்கள்.  கர்த்தரை அசுத்தப்படுத்துகிறார்கள்.  

பூர்வகாலத்து ஆசாரியர்களுடைய நற்குணங்களை கர்த்தர் இங்கு சாட்சியாய் அறிவிக்கிறார். அவர்களிடத்தில் வேதஅறிவு  தெளிவாயிருந்தது. ""சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்'' (மல் 2:6)  என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சத்தியமே வேதம். சத்தியம் அதிகாரமுள்ளது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  சத்தியத்தினால் ஆளுகை செய்கிறார். ஆசாரியர்கள் கர்த்தரோடே சமாதானமாயும்,  யதார்த்தமாயும் சஞ்சரித்தார்கள். 

""ஆகையால் இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்-யிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (1சாமு 2:30).

கர்த்தர் ஆசாரியர்களை ஆசீர்வதித்தார். அவர்களுடைய ஊழியங்களையும் ஆசீர்வதித்தார். அவர்கள் அநேகரை  அக்கிரமத்தினின்று திருப்பினார்கள். அநேகர் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப ஆசாரியர்கள் ஆலோசனை சொன்னார்கள்.  ஜனங்களை இரட்சிப்பின் பாதையிலே வழிநடத்தினார்கள். அநேக ஆத்துமாக்களை மரணத்திற்கு தப்புவிக்க உதவிசெய்தார்கள்.

ஆசாரியருடைய ஊழியத்தின் மூலமாய்  ஆவிக்குரிய சகாயம் பெற்றவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது பரலோகத்திலே கர்த்தரைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஆசாரியர்கள் தங்களை ஆவிக்குரிய பாதையிலே வழிநடத்தியது அவர்களுக்கு நன்றாய்த் தெரியும். ஆசாரியர்கள் நீதிமான்களாயும், நற்குணசாலிகளாயும் இருக்கும்போது,  ஜனங்களும் நீதிமான்களாயும் நற்குணசாலிகளாயும் இருப்பார்கள்.

ஆசாரியர்கள் கர்த்தருக்கு விசேஷித்த ஊழியத்தை செய்கிறார்கள். கர்த்தர் அவர்களிடத்திலிருந்து  விசேஷித்த குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார். ""ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்'' (மல் 2:7)  என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இப்போதுள்ள ஆசாரியர்களோ  கர்த்தருடைய உடன்படிக்கையை மீறுகிறார்கள்.  அவர்கள் கர்த்தரோடே சமாதானமாயும், யதார்த்தமாயும் சஞ்சரிக்கவில்லை. மல்கியா தீர்க்கதரிசன ஊழியம் செய்கிற இந்தக் காலத்தில், யூதமார்க்கத்திலே ஏராளமான முறைகேடுகள் பிரவேசித்துவிட்டது. ஆசாரியர்களிடத்திலும் பரிசுத்தமில்லை. ஜனங்களிடத்திலும் பரிசுத்தமில்லை.   எல்லோரும் பாவம் செய்து ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள். 

யூதர்கள் அந்நிய ஸ்திரீகளை விவாகம்பண்ணக்கூடாது.  ஆனால் யூதர்கள் அந்நிய ஸ்திரீகளை விவாகம் செய்கிறார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்குள்ளே அந்நிய ஜாதியார் பிரவேசிக்கிறார்கள்.   இஸ்ரவேல் வம்சத்தார் ஓய்வுநாளை பரிசுத்தம்பண்ணவேண்டும். ஆனால் அவர்களோ கர்த்தருடைய ஓய்வுநாளை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறார்கள்.   இவை எல்லாவற்றிற்கும் ஆசாரியருடைய அசுத்தமும், முறைகேடுமே காரணம். 

கர்த்தர் ஆசாரியர்மீது குற்றம் சொல்லுகிறார். ""நீங்களோ வழியைவிட்டு  விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள்'' (மல் 2:8) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆசாரியர்களும் கர்த்தருடைய வழியை விட்டு விலகுகிறார்கள். ஜனங்கள்  கர்த்தருடைய வழியை விட்டு விலகி நடக்கும்போது, ஆசாரியர்கள் அவர்களை கர்த்தருடைய வழியில் நடப்பதற்கு  போதிக்கவில்லை. ஆசாரியர்கள் மூலமாய் ஜனங்களுக்கு ஆவிக்குரிய உபதேசங்களும், ஆவிக்குரிய போதனைகளும், ஆவிக்குரிய உதவிகளும் கிடைக்கவில்லை. 

ஆசாரியர்கள் கர்த்தருடைய வழிகளை  கைக்கொள்ளாமல், வேதத்தைக் குறித்து பட்சபாதம் பண்ணுகிறார்கள் (மல் 2:9). ஆசாரிய ஊழியத்தை தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.  ஆசாரிய ஊழியம் என்பது கர்த்தரை மகிமைப்படுத்தும் ஊழியம். ஆனால் ஆசாரியர்களோ தங்களுடைய சுயஆதாயத்திற்காகவும், தங்களுடைய குடும்பத்தின் போஜனத்திற்காகவும்,  தங்களுக்கு ஏராளமான ஐசுவரியங்களை சேர்ப்பதற்காகவும், ஆசாரிய ஊழியம் செய்கிறார்கள். இதற்காகவே தங்களுக்கு ஆசாரிய ஊழியம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறார்கள்.  

ஆசாரியர்கள் ஆசாரிய ஊழியத்தை உண்மையாய்ச் செய்யவில்லை.  தங்களுடைய ஊழியத்தின் மூலமாக ஆசாரியர்கள் கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தவில்லை.  ஆசாரியர்களுடைய ஊழியத்தினால் மனுஷருடைய ஆத்துமாக்களுக்கு நன்மை உண்டாகவில்லை. 

ஆசாரியர்கள் வேதத்தைக் குறித்து பட்சபாதம் பண்ணுகிறார்கள்.  அவர்கள் சத்தியத்தை உபதேசம்பண்ணும்போது, பட்சபாதமில்லாமல் உபதேசம்பண்ணவேண்டும். ஆசாரியர்களோ, தங்களுக்கு வேண்டியவர்களையும்,  தங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களையும் ஆசீர்வதிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டாதவர்களை சபித்துவிடுகிறார்கள். கர்த்தர் தங்களிடத்தில் பொறுப்பாய் ஒப்படைத்திருக்கிற ஊழியத்தை   ஆசாரியர்கள் தீட்டுப்படுத்துகிறார்கள்.





ஆசாரியர்கள்  ஜனங்களை அக்கிரமத்தினின்று திருப்பவேண்டும்.  மனுஷருடைய ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய பிரயோஜனம் உண்டாகுமாறு ஊழியம் செய்யவேண்டும்.  ஆனால் ஆசாரியர்களோ மனுஷருடைய ஆத்துமாக்களுக்கு தீங்கு செய்கிறார்கள். நியாயப்பிரமாணத்தினால்   அநேகரை இடற வைத்துவிடுகிறார்கள். அநேகர் இடறி விழுவதற்கு ஆசாரியர்களே காரணமாயிருக்கிறார்கள். 

கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை ஆசாரியர்களுக்குப் போதிக்கிறார். ஆனால் ஆசாரியர்கள் கர்த்தருடைய உபதேசத்தைக் கேட்க மறுக்கிறார்கள்.  கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையை செலுத்தும்படி, அவர்கள் வேதத்தை சிந்தியாமலிருக்கிறார்கள் (மல் 2:2).

இதனால் கர்த்தருடைய கோபம் ஆசாரியர்கள்மேல் வருகிறது. ""நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்'' (மல் 2:9) என்று கர்த்தர் ஆசாரியருக்கு விரோதமாக தம்முடைய  சாபமான வார்த்தைகளைச் சொல்லுகிறார்.

ஆசாரியர்கள் கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறார்கள்.  கர்த்தரை அசுத்தப்படுத்துகிறார்கள். அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை மீறுகிறார்கள்.  தங்களுடைய ஆசாரிய ஊழியத்தை அவர்கள் பரிசுத்தமாய் செய்யவில்லை. ஆசாரியர்கள் கர்த்தருடைய வேதத்தைக் குறித்து பட்சபாதம்பண்ணுகிறார்கள். இதனால் கர்த்தருடைய கோபமும், அவருடைய நியாயத்தீர்ப்பும் ஆசாரியர்கள்மேல் வருகிறது. 

""நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன்'' (மல் 2:2) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆசாரியருக்கு தங்களுடைய ஊழியத்தில்   திருப்தியோ, ஆறுதலோ உண்டாகவில்லை. கர்த்தர் அவர்களுடைய பயிரைக் கெடுத்துவிடுகிறார்.   கர்த்தருடைய ஆசீர்வாதம் ஆசாரியர்களுக்கு கிடைக்கவில்லை. ""உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்'' (மல் 2:3) என்று  கர்த்தர் ஆசாரியருக்கு விரோதமாகச் சொல்லுகிறார். 

ஆசாரியர்கள் கர்த்தருடைய வேதத்தைக் குறித்து  பட்சபாதம்பண்ணுகிறார்கள். ஆனபடியினால் கர்த்தர் அவர்களை எல்லா ஜனத்திற்கு முன்பாகவும் அற்பரும்  நீசருமாக்குகிறார் (மல் 2:9). ஆசாரியர்கள் கர்த்தருடைய வழியைவிட்டு விலகும்போது, கர்த்தரும் அவர்களைவிட்டு விலகிப்போகிறார். அவர்கள் லேவியின் உடன்படிக்கைக்கு விரோதமாக கிரியை செய்கிறார்கள்.  உண்மையில்லாத ஊழியக்காரர்கள் கர்த்தருடைய பார்வையிலும் ஜனங்களுடைய பார்வையிலும் அருவருப்பானவர்களாயிருக்கிறார்கள்.

கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்கள்மீது,  கர்த்தருடைய கோபமும், அவருடைய நியாயத்தீர்ப்பும் வருகிறது. ""நீங்கள்      கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்'' (மல் 2:2) என்று கர்த்தர் சொல்லுகிறார்.  

கர்த்தர் ஒரு நிபந்தனையோடு,  தம்முடைய சாபவார்த்தைகளைச் சொல்லுகிறார்.  ஆசாரியர்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு,  அவருடைய நாமத்திற்கு மகிமையை செலுத்தினால், கர்த்தர் அவர்களை சபிக்கமாட்டார். அவர்களை ஆசீர்வதிப்பார். அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை கேட்காமல், கர்த்தருக்கு மகிமையை செலுத்தாமலிருந்தால்,  கர்த்தர் அவர்களை சபிப்பார்.  

ஆசாரியர்கள் முறைகேடாக ஆசாரிய ஊழியம் செய்து தங்களுக்கு திரளான ஐசுவரியத்தை  சேமித்து வைத்திருக்கிறார்கள். இவை தங்களுக்கு ஆசீர்வாதம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். கர்த்தரோ  அவர்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்கிப்போடுவார். அவர்களிடத்தில் திரளான ஐசுவரியம் இருந்தாலும், அது அவர்களுக்கும்,  அவர்களுடைய சந்ததிக்கும் கொள்ளைநோயைப்போல இருக்கும். பூமியின் கனிகளும், தானியங்களும் அவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்காது. அவர்களுக்கு ஆறுதலோ, சமாதானமோ, திருப்தியோ உண்டாகாது. 

""இதோ நான்  உங்களுடைய பயிரையும் கெடுப்பேன்'' (மல் 2:3) என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் விதைக்கிற தானியம் முளைக்காது.  அவர்கள் பிரசங்கம்பண்ணுகிற உபதேசங்களினால், ஜனங்களுக்கு ஆவிக்குரிய நன்மை உண்டாகாது. அவர்கள் கர்த்தருக்கு வீணாய்க் காணிக்கை செலுத்துகிறார்கள்.  கர்த்தர் அவர்களுடைய காணிக்கைகளை அங்கீகரிக்கமாட்டார். அவர்கள் செலுத்தும் பலிகளும் காணிக்கைகளும் கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும். 

இஸ்ரவேல் புத்திரர் பின்வாங்கிப்போனதற்கு ஆசாரியர்களே பொறுப்பேற்க வேண்டும். ஆகையினால் கர்த்தர் அவர்களுக்கு விசேஷித்த கட்டளைகளைக் கொடுக்கிறார். அதன் அடிப்படையில் அவர்களுடைய வருங்கால ஆசீர்வாதங்கள் அமைந்திருக்கும்.            (மல் 2:1-2).

நிறைவேறிய முன்னறிவிப்புகள்

    1. நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்புவேன்.  (மல் 2:2).

    2. உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்.

    3. நான் உங்களுடைய பயிரைக் கெடுப்பேன்.  (மல் 2:3).

    4. உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்.

    5. அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.

    6. இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் (மல் 2:4) 

இந்தத் தீர்க்கதரிசனத்தைக் கர்த்தர் அறிவிக்கிறார். ஆசாரியர்கள் இந்தக் கட்டளைகளைக் கேட்காமலும், அவருடைய நாமத்திற்கு மகிமையைச் செலுத்தாமலும் இருந்தால் கர்த்தர் அவர்களுக்குச் சாபத்தை அனுப்புவார். அவர்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவார். இது ஒரு நிபந்தனையுள்ள தீர்க்கதரிசனம். ஆசாரியர்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் இந்தச் சாபங்களெல்லாம் அவர்கள்மீதும், அவர்களால் அசுசிப்படுத்தப்பட்ட ஜனங்கள்மீதும் வரும்.  (லூக்கா 21:20-24).

  ஜனங்கள் கர்த்தருடைய பிரமாணத்தை ஆசாரியரின் வாயிலிருந்து பெற்றுக் கொண்டு, தங்களுடைய பிள்ளைகளுக்கும் அதைக் கற்பிக்க வேண்டும்.  (உபா 17:9-11).

மல்கியா புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் தூதர்கள்

1. மல்கியா  (மல் 1:1)

2. மெய்யான ஆசாரியன்  (மல் 2:7)

3. யோவான் ஸ்நானன்  (மல் 3:1)

4. மேசியா  (மல் 3:1-3)

5. எலியா  (மல் 4:4-5)

ஆசாரியரின் பாவங்கள்

    1. வழியைவிட்டு விலகினார்கள்.

    2. அநேகரை வேதத்தைக்குறித்து இடறப் பண்ணினார்கள்.

    3. லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப் போட்டார்கள்.

    4. தேவனுடைய வழிகளைக் கைக்கொள்ள வில்லை.  (மல் 2:9).

    5. வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினார்கள்.  (மல் 2:9).

  நியாயப் பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதில் ஆசாரியர்கள் பட்சபாதம் காண்பிக்கிறார்கள். ஆகையினால் அவர்களுக்கு விசேஷித்த நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுகிறது (மல் 2:9).

பரிசுத்த விவாகம்  மல் 2:10-17

மல் 2:10. நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன் தன் சகோதரனுக்குத் துரோகம்பண்ணுவானேன்? 

மல் 2:11. யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவே-லும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்.

மல் 2:12. இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும், உத்தரவுகொடுக்கிறவனாயினும், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார்.

மல் 2:13. நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.

மல் 2:14. ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே. 

மல் 2:15. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

மல் 2:16. தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

மல் 2:17. உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

மனுஷருடைய இருதயத்தில் துன்மார்க்கம் நிரம்பியிருக்கும்போது,  அவர்களுடைய கிரியைகளும் துன்மார்க்கமாயிருக்கும். நாம் என்ன விதையை விதைக்கிறோமோ,   அதன் கனியையே அறுவடை செய்வோம். துன்மார்க்க சிந்தனையுள்ளவர்கள், துன்மார்க்கமான காரியங்களை செய்வார்கள். மனுஷன் கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணும்போது,  அவன் தன் சகோதரனுக்கு விரோதமாகவும் துரோகம்பண்ணுவான். கர்த்தரிடத்தில் பக்தியில்லாதவர்கள் மனுஷரிடத்தில் அன்பாயிருக்கமாட்டார்கள்.

""துன்மார்க்கன், தன் தன் சகோதரனுக்கு துரோகம்பண்ணுகிறான்''       என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தரை வஞ்சிக்கிறவன், தன்னுடைய சகோதரனுக்கு உண்மையுள்ளவனாயிருக்கமாட்டான்.  இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். 

""யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவே-லும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்''  (மல் 2:11) என்று கர்த்தர் சொல்லுகிறார். 

யூதாவின் மனுஷர் இரண்டுவிதமான பாவங்களை செய்கிறார்கள். அவைகளில்  ஒன்று, அவர்கள் அந்நிய ஜாதியாரின் குமாரத்திகளை விவாகம்பண்ணுகிறார்கள். அவைகளில் மற்றொன்று, தன்னுடைய  ஜாதியில் விவாகம்பண்ணிய மனைவிகளுக்கு துரோகம்பண்ணுகிறார்கள். இவ்விரண்டு பாவங்களினாலும், யூதாவின் மனுஷர் பரிசுத்தமான உடன்படிக்கையை மீறுகிறார்கள்.  

யூதாவின் ஜனங்கள் அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணுகிறார்கள்.  நியாயப்பிரமாணத்தில் இப்படிப்பட்ட விவாகம் தடைபண்ணப்பட்டிருக்கிறது. 

""அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை        உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக'' (உபா 7:3). 

கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு  நன்மை செய்கிறார். அவர்கள் புறஜாதியாரோடு கலந்துவிடாமல், அவர்களைப் பாதுகாக்கிறார்.  புறஜாதியாரின் விக்கிரகாராதனைகளும், பாவபழக்க வழக்கங்களும் தம்முடைய ஜனத்தார் மத்தியிலே பிரவேசித்து விடக்கூடாது என்பதற்காக, கர்த்தர் அவர்களுக்கு பரிசுத்தமான விவாக பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார்.

கர்த்தர் யூதாமனுஷருடைய முற்பிதாக்களோடு  உடன்படிக்கை பண்ணினார். கர்த்தருடைய உடன்படிக்கையின் பிரகாரம் யூதாதேசம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் தம்முடைய பிரமாணத்தினால் யூதாவின் மனுஷரை ஆளுகை செய்கிறார்.

""நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ?'' (மல் 2:10) என்று கர்த்தர் கேட்கிறார். மெய்யாகவே  யூதாவின் மனுஷர் எல்லோருக்கும் ஒரே பிதாவே இருக்கிறார். பிதாவாகிய தேவனே அவர்கள் எல்லோரையும் சிருஷ்டித்தவர். யூதர்கள் எல்லோருமே ஒரே பிதாவின் சந்ததிகளாயிருக்கிறார்கள். 

கர்த்தர் இங்கு யூதாதேசத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். யூதாவின் மனுஷருக்கு  ஆபிரகாம் அல்லது யாக்கோபு என்பவரே ஒரே பிதாவாயிருக்கிறார். ஆபிரகாம் எங்களுக்கு  தகப்பனாயிருக்கிறார் என்று யூதர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே,  இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரையும் சிருஷ்டித்தவர். கர்த்தரே அவர்களை ஒரு தேசமாக ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்தார். 

யூதாதேசத்திலே யூதர்கள் மாத்திரமே இருக்கிறார்கள்.  இவர்கள் இஸ்ரவேலின் காணியாட்சிக்கு சொந்தமானவர்கள். யூதாதேசத்திலே புறஜாதியார் யாருமில்லை. கர்த்தர் யூதாதேசத்திற்கு விசேஷித்த  கிருபைகளையும், பாதுகாப்புக்களையும், பராமரிப்புக்களையும் கொடுத்திருக்கிறார். யூதாவின் மனுஷர் கர்த்தருக்கு விசேஷமானவர்கள். யூதாதேசத்தாருக்கும்,  மற்ற தேசத்தாருக்கும் வித்தியாசமுண்டு.

இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு பரிசுத்தமானவர்கள்.  அவர்கள் தங்கள் பரிசுத்ததைக் காத்துக்கொள்ளவேண்டும். இஸ்ரவேல் வம்சத்தாருடைய வார்த்தையிலும்,  கிரியையிலும் பரிசுத்தம் இருக்கவேண்டும். அவர்களுடைய சுபாவங்களில் உண்மையும் கண்ணியமும் காணப்படவேண்டும். அவர்கள் கர்த்தருக்கு சொந்தமானவர்கள். யூதாவின் மனுஷர் கர்த்தருக்கு பிரதிஷ்டைபண்ணப்பட்டவர்கள்.

இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றிலும் ஏராளமான அந்நிய தேசத்தார்      இருக்கிறார்கள். கர்த்தரோ இஸ்ரவேல் தேசத்தாரை விசேஷமாய் ஆசீர்வதிக்கிறார். அவர்கள்மீது கண்ணோக்கமாயிருக்கிறார்.  ""இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவும் முதற்பலனுமாயிருந்தது'' (எரே 2:3). 

ஆனால் யூதாஜனங்களோ கர்த்தருக்கு துரோகம்பண்ணுகிறார்கள். இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியங்கள் செய்யப்படுகிறது. கர்த்தர் பரிசுத்தத்தை சிநேகிக்கிறார். ஆனால்  யூதாவின் ஜனங்களோ தங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள். அவர்கள் அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மேன்மையை தரையிலே தள்ளிவிடுகிறார்கள்.

யூதாவின் மனுஷர் அந்நிய தேசத்து குமாரத்திகளை விவாகம்பண்ணியிருந்தால்,  அவர்களுக்கு அதிக சேதமும், நாசமும், மோசமும், ஆபத்தும் வந்திருக்காது. ஆனால் அவர்களோ  அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணியிருக்கிறார்கள். கர்த்தர் இதன் நிமித்தமாக  யூதாவின் மனுஷரை சங்கரிப்பார். கர்த்தர் அவர்களை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்கு சங்கரித்துப்போடுவார் (மல் 2:12).

அந்நிய தேவதையின் குமாரத்திகளை  விவாகம்பண்ணுகிறவர்கள் கர்த்தருடைய பரிசுத்த தேசத்தைவிட்டு, தங்களைத் தாங்களே     சங்கரித்துக்கொள்கிறார்கள். கர்த்தர் இப்படிப்பட்ட பாவிகளையும் சங்கரிப்பார். அவர்களுடைய உடமைகளையும் சங்கரிப்பார்.  கர்த்தர் இனிமேல் அவர்களை தமக்கு சொந்தமான ஜனமாக நினைக்கமாட்டார். அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணினவர்கள்,  கர்த்தருக்கு சொந்தமான ஜனங்களாகயிருக்கமாட்டார்கள். 

அந்நிய தேவதையின் குமாரத்திகளை  விவாகம்பண்ணுகிறவர்கள் யாராகயிருந்தாலும், கர்த்தர் அவர்களைத் தண்டிப்பார்.           ""இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும், உத்தரவுகொடுக்கிறவனாயினும், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார்'' (மல் 2:12). 

எஸ்றாவின் காலத்தில் ஆசாரியர்களில் அநேகர் அந்நிய ஸ்திரீகளை விவாகம்பண்ணியிருந்தார்கள். அவர்களும் கர்த்தருடைய தண்டனைக்கு தப்பிக்கமாட்டார்கள். 

""ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்:  யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எ-யேசர், யாரீப், கெத-யா என்பவர்கள்'' (எஸ்றா 10:18). 

ஆசாரிய புத்திரரில், மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களை,    தம்முடைய ஆலயத்திலிராதபடிக்கு கர்த்தர் சங்கரிப்பார். யூதாவின் மனுஷரில், அந்நிய தேவதையின் குமாரத்திகளை  விவாகம்பண்ணினவர்களை, யாக்கோபின் கூடாரங்களிலிராதபடிக்கு கர்த்தர் சங்கரிப்பார். 

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு பரிசுத்த விவாக உடன்படிக்கையை கொடுத்திருக்கிறார்.  இஸ்ரவேல் வம்சத்தாரின் பொதுவான நன்மைக்காகவும், அவர்களுடைய சமாதானத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும்  கர்த்தர் அவர்களுக்கு விவாக உடன்படிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால் யூதாவின் மனுஷரோ, கர்த்தர் தங்களுக்கு கொடுத்த பரிசுத்த விவாக உடன்படிக்கையை மீறுகிறார்கள். பரிசுத்தமான விவாகத்தை பரிசுத்தகுலைச்சலாக்குகிறார்கள். 

யூதர்கள் அந்நிய தேவதையின் குமாரத்திகளை  விவாகம்பண்ணுவதற்காக, தங்கள் தேசத்திலிருந்து விவாகம்பண்ணின  தங்கள் மனைவிகளைத் தள்ளிவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு  செய்யவேண்டிய கடமைகளை செய்ய மறுக்கிறார்கள். யூதர்களுடைய மனைவிகளுக்கு வேதனைகளும், வருத்தங்களும் உண்டாயிற்று.  

யூதர்களால் தள்ளிவிடப்பட்ட  மனைவிமார்கள், தங்களுடைய வேதனைகளை, தங்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் முறையிடுகிறார்கள்.   அவர்களால் தங்கள் பிரச்சனைகளை வேறு யாரிடத்திலும் சொல்ல முடியவில்லை. கர்த்தரிடத்தில் தங்கள்  பிரச்சனைகளைச் சொல்லி அழுகிறார்கள். இதனால் கர்த்தருடைய பலிபீடம், மனைவிமார்களுடைய, கண்ணீரினாலும்,  அழுகையினாலும், பெருமூச்சினாலும் நிரம்பியிருக்கிறது (மல் 2:13). 

நாம் ஆராதிக்கிற கர்த்தர் நல்லவர்.   அவர் நம்மீது கிருபையும், இரக்கமும் அன்பும் கொண்டவர். அவர் நம்முடைய    ஆறுதலின் தேவன். தம்முடைய பலிபீடம் கண்ணீரினாலோ, அழுகையினாலோ, பெருமூச்சுக்களினாலோ நிரப்பப்படுவதை  கர்த்தர் விரும்பவில்லை. தம்முடைய பலிபீடத்தைச் சுற்றிலும் துதியின் கீதங்களும், ஆராதனையின் கீதங்களும், சந்தோஷத்தின் ஆரவாரமும் நிரம்பியிருக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். 

யூதாவின் மனுஷர் தங்களுடைய மனைவிமார்களுக்கு துரோகம்பண்ணுகிறார்கள். இதனால் கர்த்தருடைய பலிபீடத்தில்   அழுகையும் கண்ணீரும் நிரம்பியிருக்கிறது. விவாகத்தில் இணைக்கப்பட்டிருக்கிறவர்கள் ஒருவருக்கொருவர் அன்பாயும் சந்தோஷமாயும் இருக்கவேண்டும். அவர்களுடைய அன்பும் சந்தோஷமும்  பரிசுத்தமானதாயிருக்கவேண்டும். அப்போது அவர்களுடைய ஜெபங்களும் தடைபடாமல் நடைபெறும். 

""அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்கிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்'' (1பேது 3:7). 

யூதாவின் மனுஷர் தங்கள் மனைவிமார்களுக்கு துரோகம்பண்ணுகிறார்கள்.  ஆகையால் கர்த்தர் அவர்கள் செலுத்தும் காணிக்கையை மதிக்கமாட்டார். அவர்கள் தங்கள் கைகளில் கொண்டு வரும் காணிக்கையை, கர்த்தர் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.  கர்த்தர் அவர்களுக்கும், அவர்களுடைய இளவயதின் மனைவிமார்களுக்கும் சாட்சியாயிருக்கிறார்.

கர்த்தர் யூதாவின் மனுஷரைப் பார்த்து,  ""உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே'' (மல் 2:14) என்று கேட்கிறார்.   யூதர்கள் தங்களுடைய விவாக உடன்படிக்கையை கனம்பண்ணவில்லை. அவர்கள் தங்கள் சொந்த மனைவிமார்மீது அன்புகூராமல், தங்கள் வைப்பாட்டிகள்மீது அன்புகூருகிறார்கள். தங்கள்  மனைவிமார்களுக்கு கொடுக்கவேண்டிய அன்பையும், கனத்தையும், ஆதரவையும் அந்நிய தேவதையின் குமாரத்திகளுக்கு கொடுக்கிறார்கள். தங்களுடைய உடன்படிக்கையின் மனைவிமார்களுக்கு துரோகம்பண்ணுகிறார்கள்.

யூதாவின் மனுஷர் தங்கள் மனைவிமார்களுக்கு தள்ளுதற்சீட்டைக் கொடுத்து,  அவர்களை தள்ளிவிடுகிறார்கள். ""தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்''என்று இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; ""அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான்''  (மல் 2:16) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

யூதாவின் மனுஷர் தங்களுடைய  மனைவிமார்களுக்கு துரோகம்பண்ணுகிறார்கள். ஆனாலும் மற்றவர்களுடைய            பார்வையில், அவர்கள் தங்கள் மனைவிமார்கள்மீது பிரியமாயிருப்பதுபோல மாய்மாலம்பண்ணுகிறார்கள். கர்த்தர்  அவர்களுக்கும் அவர்களுடைய இளவயதின் மனைவிமார்களுக்கும் சாட்சியாயிருக்கிறார் (மல் 2:14). அவர்களுடைய பரிசுத்தமான  விவாக உடன்படிக்கைக்கு கர்த்தரே அவர்களுக்கு சாட்சியாயிருக்கிறார்.

யூதாவின் மனுஷர் தங்கள் மனைவிமார்களுக்கு துரோகம்பண்ணுகிறார்கள். மனைவி  தன்னுடைய புருஷனுக்கு, அவனுடைய எலும்புக்கு எலும்பாகவும், அவனுடைய தசைக்கு தசையாகவும் இருக்கிறாள்.  இந்த உலகத்தில் புருஷனுக்கு எத்தனை சொந்த பந்தங்கள் இருந்தாலும், அவனுடைய மனைவியே, அவனுக்கு நெருங்கிய சொந்தமானவள். புருஷன் தன் மனைவியைப்பற்றிக்கொண்டு,  மற்ற அந்நிய ஸ்திரீகளை விட்டு விலகியிருக்கவேண்டும். 

மனைவி தன் புருஷனுக்கு இளவயதின்  மனைவியாயிருக்கிறாள். புருஷனுக்கும் மனைவிக்கும், அவர்களுடைய இளவயதில்,  அன்பும் பாசமும் பலமுள்ளதாயிருக்கும். அவர்களுக்கு முதிர்வயதானாலும், இளவயதின் அன்பு அவர்களைவிட்டு குறைந்துபோய்விடக்கூடாது. அவர்கள் தங்கள் ஜீவியகாலம் முழுவதும் அன்பினால் கட்டப்பட்டிருக்கவேண்டும். 


umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*