கல்லறையின் வாசல்

0




கல்லறையின் வாசல் 


ஓய்வுநாளான பின்பு

ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,  (மாற்கு 16:1,2)

இயேசுகிறிஸ்துவின் சரீரம் ஓய்வுநாளின்போது கல்லறையில் இருக்கிறது. யூதருக்கு ஓய்வுநாள் பிரமாணம் நியமிக்கப்பட்ட  காலத்திலிருந்து, இப்பொழுது வரையிலும் அவர்கள் ஏராளமான ஓய்வுநாட்களை ஆசரித்து வந்திருக்கிறார்கள். அந்த ஓய்வுநாள்களிலெல்லாம் இந்த ஓய்வுநாளானது மிகவும் விசேஷமானது. இந்த விசேஷித்த ஓய்வுநாளில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவுக்கு இந்த ஓய்வுநாள் ஓய்வெடுக்கும் ஓய்வுநாளாகும். இந்த ஓய்வுநாளில் இயேசு கல்லறையில் அமைதியாக இருக்கிறார். ஆனால் இயேசுகிறிஸ்துவின் சீஷருக்கோ இந்த ஓய்வுநாள் துக்கம் நிறைந்த ஓய்வுநாளாக இருக்கிறது. அவர்கள் கண்ணீரிலும்,பயத்திலும், நடுக்கத்திலும் நிறைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஓய்வுநாள் இப்போது முடிவு பெற்று விடுகிறது. வாரத்தின் முதலாம் நாள் ஆரம்பமாயிற்று. இந்த நாள் புதிய உலகத்திற்கு ஆரம்ப நாளாகும். 

இயேசுகிறிஸ்துவை மிகவும் அதிகமாக நேசித்த ஸ்திரீகள் அவருடைய சரீரம் அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் கல்லறையினிடத்திற்கு வருகிறார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அவர் அதில் தொங்கிக்கொண்டிருந்தபோது, இந்த ஸ்திரீகள் அவரை தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்போதோ இயேசுகிறிஸ்துவின் சரீரத்திற்கு சுகந்த வர்க்கமிடும்படி அவருடைய சரீரம் அடக்கம்பண்ணப்பட்டிருக்கும் கல்லறைக்கு வருகிறார்கள்.

இவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகிற போது, தாங்கள் தங்கியிருந்த ஸ்தலத்தைவிட்டுப் புறப்பட்டு கல்லறைக்கு வருகிறார்கள். இவர்கள் கல்லறைக்கு வரும்போது சூரியன் உதயமாயிற்று.  தங்களோடு சுகந்தவர்க்கங்களை வாங்கி வருகிறார்கள். தங்களுடைய கண்ணீரினால் இயேசுகிறிஸ்துவை அபிஷேகம் பண்ணும் இந்த ஸ்திரீகள், இப்போது சுகந்த வர்க்கங்களையும் வாங்கி வருகிறார்கள். 

நிக்கொதேமு என்பவன் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தில் சுகந்த வர்க்கமிடும்படி வெள்ளைப்போளமும் கரிய போளமும் கலந்து ஏறக்குறைய நூறு ராத்தல் கொண்டு வருகிறான் (யோவா 19:39). இந்த ஸ்திரீகளோ நிக்கொதேமு கொண்டு வந்தது போதாது என்று நினைத்து, இவர்களும் ஒரு சில சுகந்த வர்க்கங்களை கொண்டு வருகிறார்கள். அவரை அபிஷேகம் பண்ணுவதற்காக பரிமள தைலத்தை வாங்கி வருகிறார்கள். 

இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மீது மற்றவர்கள் எவ்வளவு மரியாதை காண்பித்தாலும், நாமும் அவருடைய நாமத்திற்கு  மரியாதை கொடுக்க வேண்டும். மற்றவர்கள் கர்த்தரை அதிகமாக துதிக்கிறார்கள் என்பதற்காக, நாம் அவரை துதிக்க வேண்டியதில்லை என்று நினைத்து ஒதுங்கிவிடக்கூடாது. மற்றவர்கள் அவர்களுடைய காரியங்களை செய்யும்போது, நாம் நம்முடைய காரியங்களை கர்த்தருக்காக செய்யவேண்டும். 

""ஓய்வுநாள்'' என்பது வாரத்தின் ஓய்வுநாள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்பு, நான்காம் நாள். பிரதான ஓய்வுநாளுக்குப் பின்பு, மூன்றாம்நாள். புளிப்பில்லா அப்பப்பண்டிகையின் முதலாம் நாள். (லேவி 23:6-7) இயேசு கிறிஸ்துவை அடக்கம் பண்ணி மூன்று பகலும், மூன்று இரவும் ஆயிற்று. (மத் 12:40) சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரையிலும் நாட்கள் கணக்கிடப்பட்டன.       (லேவி 23:32)

""மரியாள்'' என்பவள் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாய்.  செபெதேயுவின் மனைவி.

""வாரத்தின் முதலாம்நாள்'' என்பது ஞாயிற்றுக்கிழமை. சனிக்கிழமை அல்ல. ஏனெனில் ஓய்வுநாள் ஏற்கெனவே ஆயிற்று. (மத் 28:1) ஓய்வுநாள் முடிந்து, பன்னிரெண்டு மணிநேரங்கள் அல்லது ஒரு இரவு ஆயிற்று.  மூன்று நாட்களுக்குப் பின்பு இயேசு உயிர்த்தெழுந்தார். (மாற்கு 8:31; மத் 12:40)

பெரிய கல் 

 கல்லறையின் வாச--ருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்-க் கொண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்  (மாற்கு 16:3,4).

அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையில் வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லை புரட்டி வைத்திருக்கிறான். அந்தக் கல் மிகவும் பெரியதாயிருக்கிறது. கல்லறையின் வாசலிலிருக்கிற அந்தப் பெரியகல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று இந்த ஸ்திரீகள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொள்கிறார்கள். இவர்கள் கல்லறையினிடத்தில் சேர்ந்து வந்திருக்கிறார்கள். இந்த ஸ்திரீகள் எல்லோரும் சேர்ந்து முயற்சி பண்ணினாலும் அவர்களால் இந்தக் கல்லை புரட்டித் தள்ளமுடியாது. அந்தக்கல் மிகவும் பெரியது. 

கல்லறையில் இவர்களுக்குத் தெரியாத மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் கல்லறையை போர்ச்சேவகர்கள் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசுவின் கல்லறைக்கு அருகாமையில் போகும்போது இந்தச் சேவகர்கள் இந்த ஸ்திரீகளை துரத்தி அனுப்பிவிடுவார்கள். இந்த தடை இருக்கிறது என்று தெரியாமலேயே இந்த ஸ்திரீகள் இயேசுகிறிஸ்துவின் சரீரம் வைக்கப்பட்டிருக்கும் கல்லறைக்கு அருகில் வருகிறார்கள். இயேசுகிறிஸ்துவின்மீது இவர்கள் வைத்திருக்கும் அன்பு இவர்களை கல்லறை வரையிலும் அழைத்து வந்திருக்கிறது. 

இயேசுகிறிஸ்துவும் இவர்கள்மீதுஅன்பாக இருக்கிறார். ஆகையினால் இவர்கள் கல்லறைக்கு வரும் சமயத்தில் காவல் சேவகர்கள் ஒருவரும் அங்கு இல்லை. இவர்களுக்கு காவல் சேவகர் மூலமாக இருந்த தடை அகற்றப்பட்டிருக்கிறது. காவல் சேவகர்கள் இவர்களுக்குத் தெரியாத தடை. கல்லறையின் வாசலில் உள்ள பெரிய கல் இவர்களுக்கு தெரிந்த தடை. இயேசுகிறிஸ்து இவ்விரண்டு தடைகளையுமே நீக்கிப்போடுகிறார். 

இந்த ஸ்திரீகள் கல்லறையின் வாசலுக்கு வந்து அதை ஏறிட்டுப் பார்க்கிறார்கள். கல்லறையின் வாசலில் ƒபுரட்டி வைக்கப்பட்டிருந்த பெரிய கல் தள்ளப்பட்டிருப்பதை இவர்கள் காண்கிறார்கள்.  கர்த்தரை நாம் உண்மையாக தேடும்போது அவருடைய சமுகத்தை கிட்டிச்சேரும் தடைகளெல்லாம் அகற்றப்பட்டிருக்கும். நாம் நினைப்பதற்கும் அதிகமாக கர்த்தர் நமக்கு உதவிபுரிந்து நம்மை தம் பக்கமாக சேர்த்துக்கொள்வார். நம்முடைய ஆவிக்குரிய பாதையில் தடைகளாக இருக்கும் கற்களையெல்லாம் அவர் அகற்றிப்போடுவார்.  

அவர்களுக்குக் கல்லறையைக் காவல் வைத்ததும், முத்திரையிட்டதும் தெரியாதது போன்று இருக்கிறது. ஏனெனில் முத்திரையிட்ட கல்லறையைப் புரட்டித்தள்ளுவது சட்டப்படி குற்றம்.

பயப்படுகிறார்கள் 

 அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு             வா-பனைக் கண்டு பயந்தார்கள் (மாற்கு 16:5).

ஸ்திரீகள் கல்லறைக்குள் பிரவேசிக்கிறார்கள். கல்லறைக்குள் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை அவர்கள் காணவில்லை. இயேசுவின் சரீரத்தைக் காண்பதற்குப் பதிலாக அங்கு அவர்கள் ஒரு வாலிபனைக் காண்கிறார்கள். இவன் ஒரு தேவதூதன். இவன் வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான்.

இயேசுகிறிஸ்து தமது மரணத்தின் மூலமாக நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு  மீட்பின் கிரயத்தை செலுத்துகிறார். அவர் தமது உயிர்த்தெழுதலின் மூலமாக நம்முடைய கட்டுக்களிலிருந்து நம்மை விடுதலைபண்ணுகிறார். இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்து, கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பியது அவர் தேவனுடைய குமாரன் என்பதை உறுதிபண்ணிற்று.

கல்லறைக்குள் பிரவேசித்த ஸ்திரீகள், கல்லறையின் வலதுபக்கத்தில் ஒரு வாலிபன் உட்கார்ந்திருப்பதைக் காண்கிறார்கள். தேவதூதர்கள் முதிர்வயது அடைவதில்லை. இந்தத் தூதன் வெள்ளையங்கி தரித்தவனாய் உட்கார்ந்திருக்கிறான். இவனுடைய கால்வரையிலும் இவன் தரித்திருக்கும் அங்கி நீளமாக இருக்கிறது. இந்தத் தூதனைக் கண்டபோது ஸ்திரீகள் மிகவும் உற்சாகமடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ அந்த வாலிபனைப் பார்த்து பயப்படுகிறார்கள். நாமும் இந்த ஸ்திரீகளைப்போல ஆறுதல் பெறவேண்டிய வேளைகளில் பயப்படுகிறோம். நமக்கு ஆறுதலைக் கொடுக்கும் காரியங்கள் நம்மை அச்சுறுத்தும் காரியங்கள்போல தெரிகிறது. நம்முடைய தவறுகளும் நம்முடைய மீறுதல்களும்  நம்மை அச்சுறுத்துகின்றன.  

சிலுவையில் அறையப்பட்ட இயேசு

அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்              (மாற்கு 16:6). 

தன்னைப்பார்த்து ஸ்திரீகள் பயப்படுவதை  தேவதூதனும் பார்க்கிறான். அவர்களிடம் பயப்படாதிருங்கள் என்று கூறி, அவர்களுடைய பயத்தை நீக்குகிறான். இந்த ஸ்திரீகள் இயேசுகிறிஸ்துவை மெய்யாகவே நேசிக்கிறார்கள். இவர்கள் சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆகையினால் இவர்கள் பயப்படக்கூடாது. ஆறுதலைப் பெறவேண்டும். தேவதூதன் இயேசுவைப் பற்றி குறிப்பிடும்போது  அவர் சிலுவையில் அறையப்பட்டவர் என்று கூறுகிறான். 

இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சம்பவம் முடிந்துபோயிற்று. இந்த ஸ்திரீகள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை நினைத்து வருத்தப்படக்கூடாது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு இப்போது உயிர்த்தெழுந்திருக்கிறார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி இவர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருக்கவேண்டும். இந்தச் செய்தியை விசுவாசித்து, தங்களுடைய மனவருத்தத்தையெல்லாம் அகற்றிப்போட வேண்டும். இயேசுகிறிஸ்து மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் இப்போதோ மகிமையடைந்தவராக உயிர்த்தெழுந்திருக்கிறார். 

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து தமது மகிமையில் பிரவேசித்திருக்கிறார். அவர் மகிமைக்குள் பிரவேசித்தாலும் தாம் அனுபவித்த பாடுகளை மூடி மறைப்பதில்லை. தாம் சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை யாரும் பேசக்கூடாது என்றும் தடைபண்ணுவதுமில்லை.  

கல்லறைக்கு வந்திருக்கும் ஸ்திரீகள் இயேசுகிறிஸ்துவின் சரீரத்தில் சுகந்த வர்க்கமிடும்படி வந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் மரித்துப்போன சரீரம் கல்லறையில் இல்லை. அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். மரித்துப்போன சரீரத்திற்கு இந்த ஸ்திரீகள் இனிமேல் சுகந்த வர்க்கமிடவேண்டிய அவசியம் எதுவுமில்லை. இயேசுகிறிஸ்து ஜீவனுள்ளவராக இருக்கிறபடியினால் இந்த ஸ்திரீகள் சந்தோஷப்படவேண்டும். பயப்படக்கூடாது. 

இயேசுகிறிஸ்து கல்லறையில் இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார். அவர் கல்லறையில் மரித்துப்போனவராக படுத்திருக்கவில்லை. மறுபடியும் உயிரோடு எழும்பிப்போய்விட்டார்.  இயேசுகிறிஸ்துவின் மரித்துப்போன சரீரத்தை அவருடைய சிநேகிதர்களோ அல்லது அவருடைய சத்துருக்களோ களவாடிச் சென்றுவிடவில்லை. அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார். 

சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும்

நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான் (மாற்கு 16:7). 

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை கர்த்தருடைய தூதனானவன் கல்லறைக்குள் பிரவேசித்த ஸ்திரீகளுக்கு அறிவிக்கிறான். அவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்னும் நற்செய்தியை சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்ச் சொல்லுமாறு கூறுகிறான். சீஷர்களெல்லோரும் அப்போஸ்தலர்கள். இந்த ஸ்திரீகளோ இப்போது அப்போஸ்தலர்களுக்கு அப்போஸ்தலர்களாக ஊழியம் செய்யப்போகிறார்கள். இந்த ஸ்திரீகள்  இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள அன்பினால், இவர்கள் சிலுவை வரையிலும் வந்தார்கள், அதன்பின்பு கல்லறை வரையிலும் வந்தார்கள், இப்போது கல்லறைக்குள்ளே வந்திருக்கிறார்கள். இவர்களே முதலாவது வந்தவர்கள். ஆகையினால் இவர்கள் முதலாவதாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். 

இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவர்கூட துணிந்து அவருடைய கல்லறைக்கு அருகில் வரவில்லை. இந்த ஸ்திரீகள் மாத்திரமே கல்லறைக்கு வந்திருக்கிறார்கள். கல்லறையின் வாசலில் புரட்டி வைக்கப்பட்டிருக்கும் கல்லை புரட்டித் தள்ளும் பெலன் இந்த ஸ்திரீகளிடத்தில் இல்லை. இவர்கள் ஒருசிலராக இருந்தாலும், பெலனற்றவர்களாக இருந்தாலும், இயேசுவின்மீதுள்ள அன்பினால் கல்லறைக்குள் பிரவேசித்திருக்கிறார்கள். இவர்களுடைய அன்பிற்காக கர்த்தர் இவர்களை கனப்படுத்துகிறார். தம்முடைய சீஷர்களுக்கே நற்செய்தியை அறிவிக்கும் சிலாக்கியத்தை இந்த ஸ்திரீகளுக்குத் தருகிறார். 

இந்த ஸ்திரீகள் சீஷரிடத்திற்குப் போய் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று அறிவிக்கவேண்டும். இயேசுவின் சீஷர்கள்   மிகுந்த துக்கத்திலிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் தமது ஜீவனை விட்டதினால் இவர்களுடைய துக்கம் மிகுதியாயிற்று. அவருடைய சரீரம் கல்லறையில்  அடக்கம்பண்ணப்பட்டதினால், இவர்களுடைய சந்தோஷமும் நம்பிக்கையும் அதே கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டுவிட்டது. இவர்களிடத்தில் எந்தவிதமான நம்பிக்கையுமில்லை. உற்சாகத்தின் ஆவியுமில்லை. நம்பிக்கையற்றவர்களாக, சோகத்தில் மூழ்கியிருக்கும் சீஷர்களிடத்தில் இந்த ஸ்திரீகள் விரைந்து சென்று இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார்   என்னும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும். 

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்னும் நற்செய்தி சீஷர்களுக்கு மறுபடியும் ஜீவனைக்கொடுக்கும், உற்சாகத்தைக்கொடுக்கும், தெம்பையும் பெலனையும் கொடுக்கும். தம்முடைய சீஷர்கள் எளியவர்களாக இருப்பதினால் இயேசுகிறிஸ்து அவர்களைக்குறித்து ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை. தாம் உயிர்த்தெழுந்த நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்து அவர்களுடைய பயத்தைப் போக்கி, அவர்களை  உற்சாகப்படுத்த வேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாக இருக்கும்போது, தம்முடைய ரகசியங்களை அவர் நமக்கும் வெளிப்படுத்துவார். 

இந்த ஸ்திரீகள் பேதுருவினிடத்திற்கும் போய் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று அறிவிக்கவேண்டும். சீஷர்களிடத்திற்கு போய் அறிவிக்கவேண்டும் என்று சொன்னாலே அவர்களில் பேதுருவும் ஒருவராக இருக்கிறார். ஆனால் இங்கு பேதுருவின் பெயர் தனியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாற்கு இந்த சுவிசேஷத்தை பேதுரு கூறியபடி எழுதியதாக  வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆகையினால் இங்கு பேதுருவின் பெயர் விசேஷமாக கூறப்பட்டிருக்கிறது. வேதபண்டிதர்கள் இந்த சம்பவத்திற்கு சில ஆவிக்குரிய வியாக்கியானங்களைக் கூறுகிறார்கள். அவற்றின் விவரம் வருமாறு : 

1. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்னும் செய்தி பேதுருவுக்கு ஒரு நற்செய்தியாகும். மற்ற எல்லோரையும்விட பேதுரு இந்த நற்செய்தியைக் கேட்டு சந்தோஷமடைந்திருப்பார். ஏனெனில் இயேசுகிறிஸ்துவை மறுதலித்துவிட்ட பாவத்தை நினைத்து பேதுரு மிகுந்த வருத்தத்தோடிருக்கிறார். 

2. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்னும் செய்தி தனக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்படவில்லையென்றால், இயேசுகிறிஸ்து  தன்னை மன்னிக்கவில்லையென்றும், அவர் தன்னை புறக்கணித்துவிட்டாரென்றும் பேதுரு நினைப்பதற்கு வாய்ப்புள்ளது. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தது மற்ற சீஷர்களுக்குத்தான் நற்செய்தி. அந்த நற்செய்தியின் சந்தோஷத்தில் தனக்குப் பங்கு இல்லை என்று பேதுரு குற்றவுணர்வோடு இருந்திருப்பான். ஆகையினால் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி பேதுருவுக்கு விசேஷமாக அறிவிக்கப்படுகிறது. 


Umn ministry 




Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*