“நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்” (சங்கீதம் 64:10).
நீதிமான் என்பவன் தேவனுடைய பிள்ளை. அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றவர்கள். அவர்களுடைய பாவங்களை ஆண்டவர் மன்னித்திருக்கிறார். அவர்கள் தேவனோடு ஒப்புரவானவர்கள். ஆவிக்குரிய நிலையில் பிழைத்திருக்கிறவர்களாய் காணப்படுகிறவர்கள். அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். இந்த உலகப்பிரகாரமான மனிதன் இந்த உலகத்தில் மகிழப் பிரயாசப்படுகிறான். ஆனால் அவனால் முடிவதில்லை. அவன் வெறுமையைச் சந்திக்கிறான். ஆனால் ஒரு ஆவிக்குரிய மனிதனின் மகிழ்ச்சி நிலையானதும் நித்தியமானதும் முழுமையானதுமாய் இருக்கின்றது. ஏனென்றால் அவன் கர்த்தருக்குள் மகிழ்ந்து என்று வேதம் சொல்லுகிறது. அந்த மகிழ்ச்சி ஒருவராலும் எடுக்கப்பட்டுப் போகாதது. மேலும் அவன் தேவனில் மகிழ்ந்து அவரை நம்புவான். ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆசீர்வதிக்கப்பட்ட நிலை என்பது ஒரு மேன்மைக்குரிய காரியம். ஆனால் உலக மனிதனின் வாழ்க்கை என்பது நிர்ப்பந்தமான ஒரு காரியம். மேலும் செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மை பாராட்டுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அவர்கள் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டுவார்கள். ஒரு காலத்தில் என் பாவம் என்னை அழித்துக்கொண்டிருந்தது. என் சந்தோஷத்தை சமாதானத்தை இழந்தவனாக இருந்தேன். ஆனால் கர்த்தர் என்னை மீட்டுக்கொண்டு விடுதலையாக்கி இருக்கின்றார் என்று அவன் கர்த்தரைக் குறித்து அதிகமாய் மேன்மை பாராட்டுவான். என்ன ஒரு ஆச்சரியமான காரியம்! நிலையான இந்த சந்தோஷம் என்பது கர்த்தருக்குள் மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ள முடியும். வேறொன்றினாலும் அல்ல.