Learn a truth from the fig tree அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள்
மத்தேயு 24 : 32..36
அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.
அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது
விளக்கம்
இயேசு தனது இரண்டாம் வருகையைப் பற்றி இந்த உவமையை கூறுகிறார். இயேசுவின் இரண்டாம் வருகை எப்படி நடக்கும் என்பதையும், அப்போது என்னென்ன நிகழும் என்பதையும் பற்றி மிக விளக்கமாக மத்தேயு 24ம் அதிகாரம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
போலித் தீர்க்கத்தரிசிகள் எழுவார்கள், நானே மெசியா என சொல்லி உங்களை தடம் மாறச் செய்யும் தலைவர்கள் வருவார்கள், அரசுகள் அரசுகளோடு போரிடும், பஞ்சமும் நிலநடுக்கமும் உண்டாகும், மக்கள் நம்பிக்கை இழப்பர், மனித நேயம் மறையும், அன்பு மக்களிடமிருந்து அகலும் என்றெல்லாம் வருகையின் அறிகுறிகளை இயேசு விளக்கினார்.
இரண்டாம் வருகை நிகழும் போது இறைமகன் இயேசு மேகங்கள் மீது வருவார், கதிரவன் இருளும், நிலா ஒளிதராது, விண்மீன்கள் வானிலிருந்து விழும், கிழக்கு முதல் மேற்கு வரை மின்னல் போல் வருகை நிகழும், இறைமகன் வந்து தனது தூதரை அனுப்பி தேர்ந்து கொள்ளப்பட்டவரை கூட்டிச் சேர்ப்பார் என வருகை எப்படி நிகழும் என்பதை இயேசு கூறினார்.
அதன்பின் இந்த அத்திமர உவமையை இயேசு சொன்னார்.
உலகின் முடிவு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். உலக நிகழ்வுகள் பல நமக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கின்றன. இயேசு கதவினருகே வந்து விட்டார் என சொல்லும் போது சிரிக்கும் மக்கள் தான் அதிகம். ஆனால் ஒளி ஒருநாள் வெளிப்படும்போது, இருள் ஒளிந்து கொள்ள முடியாது.
இந்த உவமை சில சிந்தனைகளை நமக்குள் விதைக்கிறது.
அத்திமரம் துளிர் விடும் நிகழ்வை ஒரு அடையாளமாய் இயேசு சொல்கிறார். பருவங்களை தாவரங்களின் இலை மாற்றங்கள் காட்டி விடுவது போல, இறைவனின் இரண்டாம் வருகையை பல மாற்றங்கள் காட்டி விடும் என்பதை இயேசு சொல்கிறார். மாற்றங்கள் நம்மை பயமுறுத்துவதற்கானவை அல்ல, அடுத்து நிகழப்போவதை எதிர்நோக்குவதற்காகவே.
இயேசுவின் முதல் வருகையின் மீது எந்த அளவுக்கு நாம் விசுவாசம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு இரண்டாம் வருகையை நாம் விசுவசிப்போம் என்பது ஒரு எளிய ஒப்பீடு. இறைமகன் இயேசு நமக்காகப் பிறந்தார், வாழ்ந்து காட்டினார், மீட்பின் வழிகளைப் போதித்தார். அவரில் விசுவாசம் கொள்ளும் போது நாம் இறப்பினும் வாழ்வோம் எனும் நம்பிக்கை இயேசுவின் முதல் வருகையின் மீதான நம்பிக்கை. அது இருந்தால் இரண்டாம் வருகையின் மீது நம்பிக்கை தானாகவே உருவாகிவிடும்.
இயேசுவின் முதல் வருகையை நம்புபவர்கள் அவருடைய போதனைகளை நம்புவார்கள் அதன்படி வாழ்வார்கள், இயேசுவின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்வார்கள் அதன்படி வாழ்வார்கள். இயேசுவே மீட்பர் என உணர்ந்து கொள்வார்கள் அவரில் சரணடைவார்கள். அத்தகைய வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இரண்டாம் வருகை எப்போது நடந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையதாகவே அமையும்.
இரண்டாம் வருகையின் நேரம் எப்போது என்பது யாருக்குமே தெரியாது. இறைமகன் இயேசுவுக்கே அது தெரிவிக்கப்படவில்லை என்பது அந்த நாள் சட்டென வரும் என்பதை விளக்குகிறது. நினையாத நேரத்தில் வருகின்ற திருடனைப் போலவோ, எதிர்பாரா நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிய தூரதேசம் சென்ற தலைவனைப் போலவோ, தாமதமாய் வரும் மணவாளனைப் போலவோ அந்த நாள் இருக்கும் என இயேசு பல உவமைகளின் வாயிலாக நமக்கு விளக்குகிறார். எனவே எப்போதும் தயாராய் இருக்க வேண்டியது அவசியம்.
எப்போது வருவார் என்பது தான் நமக்குத் தெரியாதே தவிர, எப்படி வருவார் என்பதை விவிலியம் தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்குகிறது. இயேசு மிகத் தெளிவாகச் சொன்ன விஷயங்களை நாம் நம்பாமல் போனால், அது இயேசுவின் மீது நமக்கு விசுவாசம் இல்லை என்பதன் வெளிப்பாடே. “ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்” என்கிறார் இயேசு. முதலில் நம்பி, பின்னர் வருகை தாமதமாகும்போது விலகிச் செல்பவர்கள் மீட்பை விட்டு விலகிவிடுவார்கள்.
நான் தயாராய் இருக்கும்போது இரண்டாம் வருகை நடக்க வேண்டும் ! என்பது தவறு.
இரண்டாம் வருகையின் போது நான் தயாராய் இருப்பேன் என்பது சரி. இப்போதே, இந்த கணமே நாம் இறைவனுடைய வருகையை மனதில் கொண்டு நமது வாழ்க்கையை நீதிக்கு நேராக அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இரண்டாம் வருகை அச்சத்துடன் பார்க்க வேண்டிய விஷயம் அல்ல, அது ஆனந்தத்துடன் எதிர்நோக்க வேண்டிய விஷயம். ஒரு விருந்துக்கு செல்லும்போது இருக்கின்ற பரவசம் இருக்க வேண்டும். ஒரு பரிசு வாங்கப் போகும்போது சிறுவனுக்கு இருக்கின்ற குதூகலம் இருக்கவேண்டும். அப்படி இருக்க வேண்டுமெனில் நாம் இரண்டாம் வருகைக்குத் தயாராய் இருக்கவேண்டும்.
கடைசியில் பார்த்துக் கொள்ளலாம். இவ்வுலக வாழ்க்கையை ஆண்டு அனுபவித்துவிட்டு கடைசியில் இறைவனை நாடலாம் என பலர் நினைப்பதுண்டு. முடிவு என்பது இறைவன் கையில். அது சொல்லிக் கொண்டு வருவதில்லை. அவர் அழைக்கும் கணமே தெரியாதிருக்கும்போது, கடைசிக் காலத்தில் மாறுவேன் என நினைத்துக் கொள்வது நம்மை நாமே வஞ்சிப்பதற்கு சமம். கடைசி என்பது இந்தக் கணம் எனும் நினைப்பு இருப்பதே ஆரோக்கியமான ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படை.
இறைவார்த்தை எப்போதுமே அழியாது. வானமும், பூமியும் அழியலாம். ஆனால் இறைவார்த்தைகள் அழியாது. எத்தனையோ தலைமுறைகள் கடந்தபின்னும் இறைவார்த்தை நிலைக்கிறது. அது மக்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த இறைவார்த்தை நம்மை மாற்றத்துக்காக தயாராக்கும் வார்த்தை. இரண்டாம் வருகைக்குத் தயாராக ஒரே வழி, இறைவார்த்தையை இறுக்கமாய்ப் பற்றிக் கொள்வது மட்டுமே. “உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என எச்சரிக்கை விடுக்கிறார் இயேசு. இறைவார்த்தைகளை மட்டுமே பற்றிக் கொண்டால் நம்மை யாரும் நெறிதவறச் செய்ய முடியாது என்பதை உணர்வோம்.
நோவாவிடம் இறைவன் பேழை செய்யச் சொன்னார்.
மழை என்றால் என்ன என்பதை பூமி அப்போது அறிந்திருக்கவில்லை. நோவா கடற்கரையில் பேழையைச் செய்யவில்லை, வெட்ட வெளியில் செய்தார். உலகமே நகைத்திருக்கும். நோவாவோ இறைவனின் வார்த்தையை நம்பினார். இறைவார்த்தை நிகழும் என விசுவாசித்தார். நோவாவின் பேழை நோவாவைக் காக்கவில்லை, அவர் கடவுள் மீது வைத்த நம்பிக்கை அவரைக் காத்தது. பேழையின் கதவை மூடி நோவாவை கடவுள் பத்திரமாய் பாதுகாத்தார். கடவுளின் வார்த்தையை அப்படியே கடைபிடித்தார் நோவா, எனவே பெருமழை அவரை தொடவில்லை. கடவுளின் வார்த்தைக்கு நாமும் முழுமையாய்க் கீழ்ப்படிந்தால் இரண்டாம் வருகை நம்மை அழிக்காது, மீட்டு புது உலகுக்கு இட்டுச் செல்லும்.