ரூத் 2ஆம் அதிகாரம் விளக்கம்
ரூத் 2ஆம் அதிகாரம் விளக்கம்
ரூத் பெத்லெகேமிலே தன் மாமியாரோடு கூடயிருக்கிறாள். ரூத் தன்னுடைய வீட்டிலே சோம்பேறியாக சும்மாயிருக்கவில்லை. வயல்வெளிக்குப்போய் கதிர்களைப் பொறுக்குகிறாள். கர்த்தருடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரம், ரூத் கதிர்களைப் பொறுக்குகிற வயல்வெளி போவாஸ் என்பவருடையதாயிருக்கிறது (ரூத் 2:1-3). போவாஸ் ரூத்திற்கு அநேக சலுகைகளைக் காண்பிக்கிறார் (ரூத் 2:4-17). ரூத் தன்னுடைய மாமியாரிடத்திற்கு திரும்பி வருகிறாள் (ரூத் 2:18-23).
ரூத் ரூத் 2:1-3
ரூத் 2:1. நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எ-மெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.
ரூத் 2:2. மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
ரூத் 2:3. அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எ-மெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.
நகோமி பெத்லெகேமிலே, குடியேறுகிறாள். அவளுடைய பழைய சிநேகிதிகளெல்லாம் அந்த ஊரிலே இருக்கிறார்கள். நகோமிக்கு உறவுக்காரர் அநேகர் அந்த ஊரிலிருக்கிறார்கள். அவர்களில் போவாஸ் என்பவர் மிகவும் விசேஷமானவர். போவாஸ் மிகுந்த ஆஸ்திக்காரர். இவர் நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின் முறையில் ஒரு இனத்தான். ""போவாஸ் மிகுந்த ஆஸ்திக்காரன்'' என்னும் வாக்கியம், கல்தேயருடைய மூலபாஷை வேதாகமத்தில், ""போவாஸ் நியாயப்பிரமாணத்தில் தேர்ந்தவர்'' என்று பொருள்படுமாறு எழுதப்பட்டிருக்கிறது.
போவாஸ் என்னும் பேருக்கு ""அவரில் வல்லமையுள்ளது'' என்று பொருள். போவாஸ் என்னும் பெயரே கம்பீரமாயிருக்கிறது. இவர் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தக் குடும்பத்தார் இப்போது சமுதாயத்திலே தாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலே ஆஸ்திக்காரர் அநேகர் இல்லை.
ரூத், தன் மாமியாராகிய நகோமியோடுகூட பெத்லெகேமிலே இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் ஏழைகளாயிருக்கிறார்கள். நகோமியோடு சேர்ந்து ரூத்தும் குடும்பத்தின் கஷ்டங்களை அனுபவிக்கிறாள். ரூத் இப்போதுதான் புதிதாக யூதாமார்க்கத்தில் இணைந்திருக்கிறாள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்க ஆரம்பித்திருக்கிறாள். புதிய விசுவாசிகளுக்கு பல சோதனைகள் வரும். அவற்றில் வறுமையும் ஒன்று. ரூத்துக்கும் வறுமையிருக்கிறது.
நகோமியோ வயதான ஸ்திரீ. நகோமிக்கு வயல்வெளியில் போய் வேலை செய்யுமளவுக்கு சரீர பெலமில்லை. நகோமிக்கும் ரூத்துக்கும் வயல் வெளிகளில் கதிர்களை பொறுக்குவதைத் தவிர வேறு வேலை எதுவும் தெரியாது. இந்த வேலையை யார் வேண்டுமானாலும், எளிதாகக் கற்றுக்கொண்டு செய்யலாம். ரூத் இந்த வேலையை செய்ய ஆயத்தமாயிருக்கிறாள்.
ரூத், பெத்லெகேம் ஊரிலே, வறுமையினால் கஷ்டப்பட்டாலும், தான் புறப்பட்டு வந்த மோவாப் தேசத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. ரூத்தின் மனதில் அப்படிப்பட்ட நினைவுகள் இருக்குமென்றால், அவள் பெத்லெகேமிலே தங்கியிருக்கமாட்டாள். மோவாப் தேசத்திற்கு திரும்பிப்போய்விடுவாள்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே ரூத்திற்கும் தேவனாயிருக்கிறார். அவர் கிருபையும் இரக்கமுமுள்ளவர். கர்த்தருடைய பெரிதான கிருபைகள் ரூத்திற்கு உடனே கிடைக்கவில்லை. ஆனாலும் ரூத் கர்த்தரை நம்புகிறாள். தன்னுடைய வறுமையிலும் கர்த்தரை மறுதலிக்கவில்லை. அவளுடைய விசுவாசம் உறுதியாயிருக்கிறது. கர்த்தர் ரூத்தைக் கொன்றுபோட்டாலும், ரூத் கர்த்தரை மறுதலிக்கமாட்டாள். கர்த்தரையே நம்புவாள். அந்த அளவுக்கு ரூத் கர்த்தர்மீது நம்பிக்கை வைத்திருக்கிறாள்.
மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: ""நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப்பொறுக்கிக் கொண்டுவருகிறேன்'' என்று சொல்லுகிறாள். அதற்கு நகோமி, ரூத்திடம், ""என் மகளே, போ'' (ரூத் 2:2) என்று சொல்லுகிறாள். மருமகள் வேலைக்குப்போக மாமியார் அனுமதி கொடுக்கிறாள்.
ரூத் 2:2-ஆவது வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற ""அவர்'' என்னும் வார்த்தை போவாசையும் குறிக்கலாம் அல்லது கதிர்களைப் பொறுக்கிக் கொள்வதற்கு அனுமதி கொடுக்கும் யாரையும் குறிக்கலாம். ஆயினும் ரூத்திற்கு போவாசின் கண்களில் தயவு கிடைக்கிறது (ரூத் 1:3-23).
ரூத் மனத்தாழ்மைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறாள். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாக, ரூத்தின் வீட்டிலே வறுமையிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரூத் தன்னைத்தானே தாழ்த்துகிறாள். கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிற வேலை, பிறருடைய வீட்டில் பிச்சையெடுப்பதைப்போன்ற அவமானமான வேலை என்று ரூத் நினைக்கவில்லை. ரூத் எந்த வேலையையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறாள். அவள் கதிர்களைப் பொறுக்க வெட்கப்படவில்லை.
வயல்வெளிகளின் ஓரங்களில் இருக்கும் தானியங்கள் ஏழைகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அறுக்கப்படாமல் மீந்திருக்கும் கதிர்களும் ஏழைகளுக்கே உரியது. ஏழைகளை ஆதரிக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற பழக்கம் இஸ்ரவேலில் காணப்படுகிறது. கர்த்தருடைய பிரமாணத்திலும் இதுபற்றிக் கூறப்பட்டிருக்கிறது (லேவி 19:9-10; லேவி 23:22; உபா 24:19, யோபு 24:10)
ரூத் தன் மாமியாரிடம், தன்னைப்பற்றியோ, மோவாபிலுள்ள தன்னுடைய தாய் வீட்டைப்பற்றியோ பெருமையாய்ப் பேசவில்லை. தனக்கு இதுபோன்ற வேலை செய்து பழக்கமில்லை என்று ரூத் ஆணவமாய்ப் பேசவுமில்லை. கதிர்களைப் பொறுக்கி அதை சாப்பிடவேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று, ரூத் தன் மாமியாரிடம் அலட்சியமாய்ப் பேசவுமில்லை.
ரூத்திற்கு இதற்கு முன்பு கதிர்களைப் பொறுக்கி பழக்கமில்லை. மோவாப் தேசத்திலே, அவளுடைய தாய் வீட்டாரும், ரூத்திற்கு இந்த வேலையைக் கொடுத்து, அவளை இந்த வேலையில் பழக்கவில்லை. ஆனாலும் ரூத் இந்த வேலையைக் கற்றுக்கொள்கிறாள். இது மிகவும் சாதாரணமான வேலையாகயிருந்தாலும், இந்த வேலையைச் செய்ய ரூத் தன்னைத் தாழ்த்துகிறாள். ரூத் கதிர்களைப் பொறுக்க வெட்கப்படவில்லை.
ரூத் உற்சாகமாய் வேலை செய்கிறவளுக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறாள். ரூத் நகோமியிடம், ""நான் வயல்வெளிக்குப்போய் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன்'' என்று உற்சாகமாய்ச் சொல்லுகிறாள். கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருமே ஏதாவது ஒரு வேலையை செய்யவேண்டும். ஒருவரும் சோம்பேறியாக சும்மாயிருக்கக்கூடாது. கண்ணியமான எந்த வேலையையும் செய்ய நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். அவமானமான வேலை, ஈனமான வேலை என்று ஒருவேலையும் இல்லை. எல்லா வேலையும் நல்ல வேலைதான். கர்த்தர் நமக்குக் கொடுக்கும் வேலைகளை, நாம் உண்மையாய்ச் செய்யவேண்டும்.
ரூத், தன் மாமியாளுக்கு நல்ல மரியாதை கொடுக்கிறாள். ரூத்தின் சுபாவம் பெரியவர்களை மதிக்கிறவர்களுக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. ஸ்திரீகள் பொதுவாக தங்கள் தாயாரை நேசிப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மாமியாரை நேசிக்கமாட்டார்கள். ரூத்தின் சுபாவமோ மிகவும் விசேஷமானது. அவள் தன் மாமியார்மீது அன்பாயிருக்கிறாள். தன் மாமியார்மீது அன்பாயிருப்பதும், அவளைப் பராமரிப்பதும் தன்னுடைய கடமை என்று ரூத் நினைக்கிறாள்.
ரூத் தேவனுடைய தெய்வீக சித்தத்தையும், அவருடைய தெய்வீக பராமரிப்பையும் நம்புகிறாள். அவள் வயல் வெளியிலே கதிர் பொறுக்கப்போகும்போது, ""யாருடைய கண்களில் எனக்கு தயை கிடைக்குமோ அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன்'' என்று சொல்லுகிறாள். ரூத்திற்கு எந்த வயல்வெளிக்குப்போகவேண்டுமென்று தெரியாது. அவளுக்கு பெத்லெகேமிலே அறிமுகமானவர் ஒருவருமில்லை. யாரிடத்தில் விசாரிக்கவேண்டும் என்றும், வயல்வெளிக்கு எந்த வழியாய்ப் போகவேண்டும் என்றும் ரூத்திற்குத் தெரியாது. ஆனாலும் கர்த்தர் தன்னைக் கைவிடமாட்டார் என்றும், அவர் தன்னை தமது கிருபையினால் வழிநடத்துவார் என்றும் ரூத் நம்புகிறாள்.
கர்த்தர் தமது கிருபையினால் ரூத்திற்கு தயை கிடைக்கப்பண்ணுகிறார். அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்குகிறாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எ-மெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருக்கிறது (ரூத் 2:3). கர்த்தருடைய வழிநடத்துதல் ரூத்திற்கு நன்மைக்கேதுவாக அமைகிறது.
ரூத் போவாசின் வயல்வெளியில் கதிர்களைப் பொறுக்குகிறாள். அது போவாசுடையது என்பதுகூட ரூத்திற்கு தெரியாது. ரூத் தனியாகவே அந்த வயல்வெளிக்குப்போகிறாள். அவளோடுகூட யாரும் துணைக்குப்போகவில்லை. அவளை யாரும் அந்த வயல்வெளிக்கு வழிநடத்தி உதவிசெய்யவுமில்லை. ஆனாலும் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாக, அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம், போவாசுடையதாயிருக்கிறது. போவாசும் எலிமெலேக்கின் உறவினராயிருக்கிறார்.
இது ரூத்தின் ஜீவியத்தில் நடைபெற்ற சாதாரண சம்பவம் தான். ஆனாலும் கர்த்தருடைய தெய்வீக பராமரிப்பு ரூத்தை வழிநடத்துகிறது. ரூத்தின் வாழ்க்கையில் நடைபெற்றதுபோலவே, நம்முடைய வாழ்க்கையிலும் அநேக சம்பவங்கள் நடைபெறுகிறது. ஒரு சிறிய சம்பவம்கூட, நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். இது எல்லாம் தேவனுடைய சித்தம் என்பதையும், அவருடைய தெய்வீக வழிநடத்துதல் என்பதையும் நாம் உணரவேண்டும்.
போவாஸ் ரூத் 2:4-16
ரூத் 2:4. அப்பொழுது போவாஸ் பெத்லெகேமி-ருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
ரூத் 2:5. பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
ரூத் 2:6. அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்தி-ருந்து நகோமியோடே கூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.
ரூத் 2:7. அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளி-ருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்.
ரூத் 2:8. அப்பொழுது போவாஸ் ரூத்தைப் பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வய-ல் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு.
ரூத் 2:9. அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.
ரூத் 2:10. அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது என்றாள்.
ரூத் 2:11. அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
ரூத் 2:12. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
ரூத் 2:13. அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்- உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.
ரூத் 2:14. பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக் கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திர்ப்தியடைந்து, மீந்ததை வைத்துக் கொண்டாள்.
ரூத் 2:15. அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம்.
ரூத் 2:16. அவள் பொறுக்கிக்கொள்ளும் படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
போவாசின் வயல்வெளியிலே அவருடைய வேலைக்காரர்கள் வாற்கோதுமை விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். அறுக்கிறவர்கள்மேல் ஒரு வேலைக்காரன் கண்காணியாக வைக்கப்பட்டிருக்கிறான். அறுவடைக்காலம் விறுவிறுப்பான காலம். வயல்வெளிகள் அதிகமாயிருக்கும்போது அறுப்பு அறுக்கிறவர்கள் ஏராளமானோர் வேலை செய்வார்கள். போவாஸ் நல்ல எஜமானுக்கு அடையாளமாயிருக்கிறார்.
""போவாஸ்'' ஒரு ஐசுவரியவான். யூதா கோத்திரத்தான். இயேசு கிறிஸ்துவின் வம்சவழியில் இவனுடைய பெயரும் இடம் பெற்றிருக்கிறது.ரூத்தின் சரித்திரத்தில் இவனைப் பற்றி 19 இடங்களில் கூறப்பட்டிருக்கிறது.
தன்னுடைய நிலத்தில் நடைபெறும் அறுவடை வேலைகளை மேற்பார்வை பார்ப்பதற்கு கண்காணிகள் இருந்தாலும், போவாஸ் தானே நேரடியாக தன்னுடைய வயல் நிலங்களுக்கு வருகிறார். அங்கே நடைபெறுகிற அறுவடை வேலைகளை கவனித்துப் பார்க்கிறார். அறுவடை வேலை இவ்வாறு நடைபெறுகிறது என்பதையும், அறுக்கிறவர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதையும் கவனித்துப் பார்ப்பதற்காக போவாஸ் அங்கே வருகிறார்.
தங்கள் எஜமானைப் பார்க்கும்போது வேலையாட்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். எஜமான் தங்கள்மீது கரிசனையோடிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும்போது, வேலைக்காரர்கள் உற்சாகமாய் வேலை செய்வார்கள். தாங்கள் சாதாரணமாய் செய்யும் வேலையைவிட அதிகமாய் செய்து முடிப்பார்கள்.
போவாஸ் பெத்லெகேமி-ருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: ""கர்த்தர் உங்களோடே இருப்பாராக'' என்று சொல்லுகிறார். அதற்கு அவர்கள்: ""கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக'' (ரூத் 2:4) என்று சொல்லுகிறார்கள்.
இஸ்ரவேலில் உள்ள தெய்வ பயமுள்ள மனுஷரும், அவர்களுடைய வேலைக்காரரும் இவ்வாறு ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வார்கள். தன்னுடைய வேலைக்காரரோடே கர்த்தருடைய பிரசன்னமும், பாதுகாப்பும் இருக்க வேண்டும் என்று எஜமான் வாழ்த்துவார். தங்களுடைய எஜமான்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று வேலைக்காரர்கள் வாழ்த்துவார்கள். எஜமானுக்கு அதிக விளைச்சலைக் கொடுக்க வேண்டுமென்றும், தன்னுடைய ஐசுவரியத்தைத் தேவநாம மகிமைக்காகப் பயன்படுத்தும் ஞானத்தைத் தங்கள் எஜமானுக்குக் கர்த்தர் கொடுக்க வேண்டுமென்றும் வேலைக்காரர்கள் கர்த்தரிடத்தில் ஜெபிப்பார்கள். எஜமான்களும், வேலைக்காரரும் ஒருவருக்கொருவர் அன்பாயிருந்து, மனப்பூர்வமாய் வாழ்த்திக் கொள்வதினால் அவர்களுக்குள் சந்தோஷமும், சமாதானமும் நிலவிற்று. (சங் 129:6-8).
போவாஸ் தன்னுடைய வயல்நிலத்திலே அறுப்பு அறுக்கிறவர்களை கர்த்தருடைய நாமத்தினாலே வாழ்த்துகிறார். அவர்களும் போவாசை கர்த்தருடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கர்த்தருடைய நாமத்தினாலே வாழ்த்துதல்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய மரியாதைகளை காண்பித்துக்கொள்கிறார்கள்.
எஜமானுக்கும், அவருடைய வேலையாட்களுக்கும் நல்ல ஐக்கியமும், கருத்து ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் மனப்பக்குவமும் இருக்கும்போது, எல்லா வேலைகளும் சீராக நடைபெறும். இதுபோலவே நம்முடைய குடும்பத்திலும் ஐக்கியமும் ஒற்றுமையும் இருக்கும்போது, குடும்பத்தின் காரியங்கள் அனைத்தும் சமாதானமாயும், சந்தோஷமாயும் இருக்கும். போவாசும், அவருடைய வேலைக்காரர்களும் ஒருவரையொருவர் வாழ்த்தும்போது, அவர்கள் ஒருவருக்காக ஒருவர் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார்கள்.
நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாமும், ஆவிக்குரிய சகோதரர்கள் ஒருவரையொருவர் வாழ்த்தவேண்டும். நம்முடைய சிநேகிதர்களை கர்த்தருடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கவேண்டும். நாம் பிறர்மீது அன்பாயிருக்கிறோம் என்பதையும், அவர்களுடைய நன்மைகளை நாம் நாடி விசாரிக்கிறோம் என்பதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணமாக, நம்முடைய சிநேகிதர்களையும், உற்றார் உறவினர்களையும், ஆவிக்குரிய சகவிசுவாசிகளையும் கர்த்தருடைய நாமத்தினாலே வாழ்த்தவேண்டும்.
நம்முடைய வாயின் வார்த்தைகளினால் நாம் மற்றவர்களை வாழ்த்தும்போது, நம்முடைய இருதயங்கள் கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். கர்த்தருடைய கிருபையும், இரக்கமும், தயவும், அநுக்கிரகமும் அவர்களுக்கு கிடைக்கவேண்டுமென்று, நாம் கர்த்தருடைய சமுகத்திலே கருத்தாய் ஜெபிக்கவேண்டும். நாம் மற்றவர்களை வாழ்த்துவது ஒரு சடங்காச்சாரம்போல இருக்கக்கூடாது. நம்முடைய வாழ்த்துதல் நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும்.
போவாஸ் தன்னுடைய வயல்வெளியிலே அறுப்பு அறுக்கிறவர்களையும், அவர்களுக்கு பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறவர்களையும் கவனித்துப் பார்க்கிறார். அவருடைய நிலத்திலே எப்போதும் இருக்கிறவர்களைத் தவிர, இப்போது ரூத் அங்கே புதிதாக வந்திருக்கிறாள். அவள் அறுப்பு அறுக்கிறவர்களின் பின்னே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறாள்.
போவாஸ் இதற்கு முன்பு ரூத்தைப் பார்த்ததில்லை. போவாஸ் அவள் யார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறார். போவாஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: ""இந்தப் பெண்பிள்ளை யாருடையவள்'' (ரூத் 2:5) என்று கேட்கிறார்.
""அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரன்'' என்பவன் வேலைக்காரர்களுக்குக் கண்காணி. அதாவது உக்கிராணக்காரன். (லூக்கா 16:1-12)
தன் நிலத்திலே, கதிர்களைப் பொறுக்குகிற ரூத்திற்கு போவாஸ் நன்மை செய்ய விரும்புகிறார். அதன் நிமித்தமாகவே போவாஸ் ""இந்தப் பெண்பிள்ளை யாருடையவள்'' என்று கேட்கிறார். போவாஸ் ரூத்தைப்பற்றி அறிந்துகொண்டபின்பு, அவளுக்கு ஒரு சில சலுகைகளையும் செய்கிறார். அவற்றின் விவரம் வருமாறு :
1. போவாஸ் ரூத்தைப் பார்த்து, ""ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம்'' (ரூத் 2:9) என்று சொல்லுகிறார்.
2. போவாஸ் தன் வேலைக்காரரைப் பார்த்து, ""அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள்'' (ரூத் 2:15,16) என்று கட்டளையிடுகிறார்.
போவாஸ் ரூத்தின்மீது மிகவும் அன்பாயிருக்கிறார். அவளுக்கு அதிகமான சலுகைகளைக் காண்பித்து நன்மை செய்கிறார். போவாஸ் ரூத்தைப்பற்றி நல்ல செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறார். அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்டவன், போவாசுக்கு ரூத்தைக் குறித்து நற்சாட்சி கொடுத்திருக்கிறான்.
கண்காணியானவன் போவாசிடம், ""இவள் மோவாப் தேசத்தி-ருந்து நகோமியோடே கூட வந்த மோவாபிய பெண்பிள்ளை. அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளி-ருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று'' (ரூத் 2:6,7) என்று சொல்லுகிறான்.
கண்காணியும், கதிர் அறுக்கிறவர்களும் ரூத்தைப் பற்றி ஏற்கெனவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவள் கண்காணியிடம் ""அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளி-ருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன்'' என்று ஏற்கெனவே அனுமதி பெற்றிருக்கிறார்கள். (ரூத் 2:7). போவாசும், ரூத்தும் சந்தித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக இது நகோமி செய்த திட்டமாக இருக்கலாம். இதன் மூலமாக உறவின்முறை மீட்பின் பிரமாணம் இங்கு அமுலாக்கப்படும். போவாஸ் ரூத்தைப் பற்றியும், அவள் நகோமியிடமும், அவளுடைய ஜனத்தாரிடமும், கர்த்தரிடமும் அன்பாயிருக்கிறதைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறான். (ரூத் 2:11).
அறுக்கிறவர்கள் மதிய உணவு வேளைக்குப்பின்பு, சிறிது நேரம் ஓய்வெடுப்பார்கள். ரூத்தும் அவர்களோடு ஓய்வெடுத்திருக்கலாம்.
கண்காணியினுடைய வார்த்தைகள் எல்லாமே மெய்யானது. ரூத் வறுமையிலிருந்தாலும், அவள் நற்குணமுள்ள ஸ்திரீயாயிருக்கிறாள். ரூத் போவாசின் கரிசனைக்கும், உதவிக்கும் பாத்திரமானவள் என்று கண்காணியானவன் ரூத்திற்காக பரிந்து பேசுகிறான்.
ரூத் மோவாபிய பெண்பிள்ளை. அவள் அந்நிய தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு வந்திருக்கிறாள். கர்த்தருடைய பிரமாணத்தின் பிரகாரம் போவாஸ் அவளுக்கு கருணை காண்பிக்கவேண்டும்.
""நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வய-ன் ஓரத்தி-ருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்'' (லேவி 19:9,10).
ரூத் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடு கூடவந்திருக்கிறாள். நகோமி எலிமெலேக்கின் மனைவி. எலிமெலேக்கு போவாசின் உறவு முறையைச் சேர்ந்தவர். ""நெருங்கிய உறவு முறை'' பிரமாணத்தின்படி போவாஸ் ரூத்திற்கு உதவிசெய்யவேண்டும்.
ரூத் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை தன்னுடைய தேவனாக ஏற்றுக்கொண்டிருக்கிறாள். அவள் மோவாப் தேசத்தை விட்டுவிட்டு, கானான் தேசத்திற்கு வந்திருக்கிறாள். ரூத் மோவாபின் தேவர்களை விட்டுவிட்டு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நம்பி கானான் தேசத்திற்கு வந்திருக்கிறாள்.
ரூத் சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் அவளிடம் ஏமாற்றுத்தனமில்லை. அவள் தன் வேலையில் கண்ணியமும் உண்மையுமுள்ளவளாயிருக்கிறாள். ரூத் போவாசுடைய வயல்வெளியிலே, கதிர்களைப் பொறுக்கிக்கொள்வதற்கு முன்பாக, கண்காணியின் அனுமதியைப் பெற்ற பின்பே, அவள் கதிர்களைப் பொறுக்கிக்கொள்கிறார்கள்.
ரூத் சுறுசுறுப்பாய் வேலை செய்கிறாள். அவள் காலமே துவக்கி இதுவரைக்கும், வயல்வெளியிலே அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதை பொறுக்கிக்கொண்டிருக்கிறாள். மதியவேளையிலே சூரிய உஷ்ணம் அதிகமாயிருக்கும். ஆனால் ரூத்தோ வெயிலைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்கிறாள். நேரம் கிடைக்கும்போது சற்று ஓய்வெடுத்துக்கொள்கிறாள்.
ரூத்தின் குணாதிசயங்களைப் பற்றிக்கேட்டபோது போவாசின் இருதயத்திலே அவள்மீது அன்பும், பிரியமும், பாசமும் உண்டாயிற்று. அப்பொழுது போவாஸ் ரூத்தைப் பார்த்து: ""மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வய-ல் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு'' (ரூத் 2:8) என்று அன்பாய்ச் சொல்லுகிறார்.
போவாஸ் மிகுந்த ஆஸ்திக்காரன். அவருக்கு வயல்வெளி ஏராளமாயிருக்கிறது. ரூத் வேறு யாருடைய வயல்வெளிக்கும்போய் கதிர்களைப் பொறுக்கவேண்டிய அவசியமில்லை. போவாசின் வயல்வெளியிலே எப்போதும் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருக்கும். ரூத் தன்னுடைய நிலத்திலேயே கதிர்களைப் பொறுக்கலாம் என்று போவாஸ் அவளுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுகிறார். ரூத்திற்கு சில சலுகைகளைக் காண்பிக்குமாறு தன்னுடைய வேலைக்காரருக்கும் கட்டளை கொடுக்கிறார்.
""ரூத்தை யாரும் தொடக்கூடாது'' என்று போவாஸ் தன் வேலைக்காரருக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். ""தொடக்கூடாது'' என்றால், ரூத்தை வயல்வெளியைவிட்டுத் துரத்திவிடக்கூடாது, கதிர்களைப் பொறுக்குவதற்கு அவளுக்கு தடைபண்ணக்கூடாது என்பது பொருளாகும்.
இஸ்ரவேலின் வாலிபரும், மற்ற தேசத்து வாலிபர்களைப்போலவே இருந்திருக்க வேண்டும். அந்நிய தேசத்து ஸ்திரீயான ரூத்திற்கு அவர்கள் மூலமாக ஏதாவது பிரச்சனை வரலாம் என்று போவாஸ் எதிர்பார்த்து இவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும்.
ரூத் மோவாப் தேசத்திலிருந்து வந்திருக்கிறாள். அவளுடைய பாஷையும், வஸ்திரங்களும், பழக்க வழக்கங்களும் கானான் தேசத்தாரைப்போல இல்லாமல் வித்தியாசமாயிருக்கிறது. ரூத் கானான் தேசத்திலிருக்கும்போது பயந்துவிடக்கூடாது. போவாசின் வேலைக்காரரைப் பார்த்து பதறிப்போய்விடக்கூடாது. ஆகையினால் தன்னுடைய வேலைக்காரர் ரூத்தின்மீது கரிசனையோடு நடந்துகொள்ளவேண்டுமென்று அவர்களுக்கு கட்டளைகொடுக்கிறார்.
போவாஸ் ஒரு நல்ல எஜமான். தன்னுடைய வயல்வெளியிலே வேலை செய்கிறவர்களுக்கு அவர் சில வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார். அறுக்கிறவர்கள் அறுவடை செய்யும்போது அவர்களுக்கு தாகமெடுக்கும். போவாஸ் தன் வேலைக்காரருக்கென்று குடிக்கும் தண்ணீரை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். இந்தத் தண்ணீரை பொதுவாக அவருடைய வயல்வெளியிலே அறுப்பு அறுக்கிறவர்கள் மாத்திரம் குடிப்பார்கள். அறுக்கிறவர்களுக்கு பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதை பொறுக்கிக்கொள்கிறவர்கள், போவாசின் வேலைக்காரர் மொண்டு கொண்டு வருகிற தண்ணீரைக் குடிக்கமாட்டார்கள். போவாசோ ரூத்தின்மீது அன்பாயிருந்து, தன் வேலைக்காரர் மொண்டு கொண்டு வருகிறதிலே அவள் குடிக்கலாம் என்று அனுமதி கொடுக்கிறார்.
பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் ரூத்தைப் பார்த்து: ""நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக் கொள்'' (ரூத் 2:14) என்று சொல்லுகிறார். அப்படியே •ரூத் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்காருகிறாள்; போவாஸ் அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுக்கிறார்; ரூத் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக் கொள்கிறாள்.
போவாஸ் ரூத்தின் குணாதிசயங்களைக் கேள்விப்பட்டு அவளைப் புகழ்ந்து பேசுகிறார். போவாஸ் ரூத்திடம் ""உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது'' (ரூத் 2:11) என்று சொல்லுகிறார்.
ரூத்தைப் பற்றிய எல்லா விவரமும் போவாசிற்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. ஆகையினால் போவாஸ் ரூத்திற்கு ""இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக'' என்று கூறி, அவளை ஆசீர்வதிக்கிறார் (ரூத் 2:12). கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வருவது என்பதற்கு கர்த்தரை நம்பி வருதல் என்று பொருள். இந்த வாக்கியம் ரூத் கர்த்தரோடு மெய்யான ஐக்கியத்தில் இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
ரூத் தன்னுடைய தகப்பனையும், தாயையும், ஜென்ம தேசத்தையும் விட்டு கானான் தேசத்திற்கு வந்திருக்கிறாள். அது மாத்திரமல்ல, அவள் தன்னுடைய தேசத்தின் தேவர்களையும் விட்டு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நம்பி கானான் தேசத்திற்கு வந்திருக்கிறாள். ரூத் கர்த்தரை நம்பி வந்திருப்பதற்காக, போவாஸ் அவளை ஆசீர்வதிக்கிறார். ""உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக'' (ரூத் 2:12) என்று போவாஸ் ரூத்தை ஆசீர்வதிக்கிறார்.
நாம் கர்த்தரை நம்பி வரும்போது, நாம் இழந்துபோனதை கர்த்தர் நமக்கு திரும்பவும் கொடுப்பார். கர்த்தராலே நமக்கு நிறைவான பலன் கிடைக்கும். புறஜாதியார் கர்த்தரை ஏற்றுக்கொள்ளும்போது, யூதர்கள் அவர்களை, ""இஸ்ரவேலின் கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்தவர்கள்'' என்று சொல்லுவது வழக்கம்.
ரூத் சாப்பிட்டு முடிந்த பின்பு, மறுபடியும் கதிர்களைப் பொறுக்கிக்கொள்ள எழும்புகிறாள். அப்பொழுது போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: ""அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள்'' (ரூத் 2:15,16) என்று கட்டளையிடுகிறார்.
இது ரூத்திற்குக் காண்பிக்கப்படும் விசேஷித்த சிலாக்கியம். அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக் கொள்வதற்குப் பொதுவாக யாருக்கும் அனுமதி கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் வயல் ஓரங்களில் கீழே சிந்தியிருப்பதை மட்டுமே பொறுக்க வேண்டும். இங்கு போவாஸ் ரூத்திற்கு விசேஷித்த சலுகையைக் காண்பிக்கிறார். அவளை யாரும் அதட்டக் கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறார். (ரூத் 2:15-16)
ரூத் நன்றியுள்ள இருதயத்தோடு, போவாஸ் தனக்குக் காண்பிக்கும் சலுகைகளை ஏற்றுக்கொள்கிறாள். போவாசுக்கு நன்றி சொல்லும் வண்ணமாக ரூத் தரையிலே முகங்குப்புற விழுந்து அவரை வணங்குகிறாள். ""நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது'' (ரூத் 2:10) என்று சொல்லி ரூத் போவாசுக்கு தன் நன்றியை தெரிவிக்கிறாள்.
இஸ்ரவேல் தேசத்தில் வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு முன்பாகவும், அதிகாரத்தில் குறைவுள்ளவர்கள் மேலான அதிகாரிகளுக்கு முன்பாகவும் இவ்வாறு மரியாதை பண்ணுவது வழக்கம்.
போவாசின் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தான் எந்த விதத்திலும் பாத்திரமுள்ளவளல்ல என்று சொல்லி ரூத் தன்னைத் தாழ்த்துகிறாள். ""நான் அந்நிய தேசத்தாள்'' (ரூத் 2:10) என்றும், ""நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயில்லை'' (ரூத் 2:13) என்றும் சொல்லி, ரூத் போவாசுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறாள்.
போவாஸ் • ரூத்தோடு பட்சமாய்ப் பேசுகிறார். போவாஸ் ரூத்தின் இருதயத்தில் பதியும்படியாகப் பேசுகிறார். இதே வார்த்தை நியா 19:3 ஆவது வசனத்தில் லேவியன் தன் மறுமனையாட்டியோடு பேசியதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போவாஸ் ரூத்தை தன்னோடும், அறுப்பறுக்கிறவர்களோடும் போஜனம் பண்ணுமாறு அழைத்தார். தன் சொந்தக் கையினால் அவளுக்கு வறுத்தக் கோதுமையைக் கொடுத்தார். இவையெல்லாம் போவாஸ் ரூத்திடம் பட்சமாய் இருந்ததற்குச் சான்றுகளாகும். (ரூத் 2:14)
ரூத்திற்கு போவாசின் கண்களில் தயவு கிடைத்திருக்கிறது. ரூத் போவாசின் வயல்வெளியிலே மனஆறுதலோடும், சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் கதிர்களைப்பொறுக்குகிறாள். மதியவேளையிலே சிறிது நேரம் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வயலிலே கதிர் பொறுக்குகிறாள்.
நகோமி ரூத் 2:17-23
ரூத் 2:17. அப்படியே அவள் சாயங்காலமட்டும் வய-லே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.
ரூத் 2:18. அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.
ரூத் 2:19. அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய். எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள்: இன்னாரிடத்திலே வேலை செய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்.
ரூத் 2:20. அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின்முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.
ரூத் 2:21. பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.
ரூத் 2:22. அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வய-லே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது என்றாள்.
ரூத் 2:23. அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்.
ரூத் போவாசின் வயல்வெளியிலே காலமே துவக்கி, சாயங்காலம் வரையிலும் கதிர் பொறுக்குகிறாள். பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமையாயிருக்கிறது. ரூத் அதிகமாய்ப் பிரயாசப்பட்டாள். கர்த்தர் அவளுடைய கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.
ரூத் தன்னுடைய வேலை நேரத்தில் சிறிதுநேரத்தைக்கூட வீணாக்கவில்லை. சாயங்கால மட்டும் வயலிலே கதிர் பொறுக்குகிறாள். தான் பொறுக்கின கதிர்களையும் ரூத் வீணாக்கவில்லை. தான் பொறுக்கினதை அவளே தட்டுகிறாள். வாற்கோதுமையை வீட்டிற்கு கொண்டுபோவது எளிது. ஆகையினால் ரூத் தான் பொறுக்கின கதிர்களை வயலிலே தட்டி அடிக்கிறாள். வீட்டிலே வாற்கோதுமையை போஜனம் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.
தானியக்கதிர்களிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுக்கும் பழங்கால முறை. கதிர்கள்மீது கம்பால் அடித்தோ, அல்லது கதிர்களைக் கல்லின்மீது அடித்தோ தானியத்தைப் பிரித்தெடுப்பது அக்காலத்து வழக்கம்.
ரூத் காலை வேளையிலிருந்து, சாயங்காலமட்டும்,வயலிலே, ஒவ்வொரு கதிராக பொறுக்குகிறாள். தான் பொறுக்கினது எல்லாவற்றையும் தட்டி அடிக்கிறாள். முடிவிலே தன்னுடைய வாற்கோதுமையை அளக்கும்போது, அது ஒரு மரக்கால் அளவாயிருக்கிறது.
ரூத் வாற்கோதுமையை எடுத்துக்கொண்டு, பெத்லெகேம் ஊருக்குள் வருகிறாள்; ரூத் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்க்கிறாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து ரூத் தன் மாமியாருக்கு கொடுக்கிறாள். ரூத் தன் மாமியாருக்கு மதிப்பும் மரியாதையும் காண்பிக்கிறாள். வயலிலே தான் பொறுக்கினதையெல்லாம் ரூத் தன் மாமிக்கு காண்பிக்கிறாள். ரூத் வயலிலே சும்மாயில்லை என்பது, அந்த வாற்கோதுமையைப் பார்த்தபோது நகோமிக்கு தெரிகிறது.
மதிய உணவுவேளையின்போது போவாஸ் ரூத்திற்கு போஜனம் கொடுத்தார். அதில் ஒரு பகுதியை ரூத் நகோமிக்காக எடுத்து வைத்து அதை அவளிடம் வந்து கொடுக்கிறாள். நகோமியின்மீது ரூத் மிகுந்த கரிசனையோடு இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது.
ரூத் தன்னுடைய அன்றாட வேலையின் அளவை தன் மாமியாரிடம் கணக்கு ஒப்புவிக்கிறாள். கர்த்தருடைய கிருபையும் அநுக்கிரகமும் ரூத்திற்கு கிடைத்திருக்கிறது. நகோமி ரூத்திடம் ""இன்று எங்கே கதிர்பொறுக்கினாய். எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக'' என்று சொல்லுகிறாள்; அப்பொழுது ரூத், இன்னாரிடத்திலே வேலை செய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: ""நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ்'' (ரூத் 2:19) என்று சொல்லுகிறாள்.
ரூத் போவாசைப்பற்றிச் சொன்னபோது நகோமிக்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. நகோமி கர்த்தருடைய நாமத்தினாலே போவாசை ஆசீர்வதிக்கிறாள். ""உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக'' (ரூத் 2:20) என்று நகோமி போவாசை ஆசீர்வதிக்கிறாள்.
நகோமிக்கு இஸ்ரவேல் புத்திரரின் பழக்கவழக்கங்கள் நன்றாகத் தெரியும். போவாஸ் செய்த எல்லாக் காரியங்களும் அவர் ரூத்தின்மீது அன்பாயிருக்கிறார் என்பதற்கு அடையாளம். ரூத்திற்கும் போவாசுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. போவாஸ் ரூத்தை உறவின்முறை மீட்பு பிரமாணத்தின் பிரகாரம் மீட்டுக்கொள்ள வேண்டுமென்று நகோமி விரும்புகிறாள்.
ரூத்திற்கு போவாசைப்பற்றி இதற்கு முன்புƒதெரியாது. நகோமிக்கு போவாசை நன்றாய்த் தெரியும். போவாசுக்கும் தங்களுக்கும் இடையே இருக்கும் நெருங்கின உறவு முறையை நகோமி ரூத்திற்கு சொல்லுகிறாள். ""அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான்'' (ரூத் 2:20) என்று நகோமி ரூத்திடம் போவாசைப்பற்றிச் சொல்லுகிறாள்.
போவாஸ் தங்களுக்கு நெருங்கின உறவின் முறையிலிருப்பதினால், அவர் மூலமாய் ரூத்திற்கு அதிகமான சலுகை கிடைக்கும் என்று நகோமி நினைக்கிறாள். போவாஸ் ரூத்திடம் ""என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு'' (ரூத் 2:21) என்று சொன்னார். போவாஸ் தன்னிடத்தில் சொன்னதை, ரூத் தன்னுடைய மாமியாரிடத்தில் சொல்லுகிறாள். ரூத்தின் வார்த்தையையும், போவாசின் அன்பையும், கரிசனையையும் பற்றிக் கேட்டபோது, நகோமிக்கு மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று.
அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: ""என் மகளே, வேறொரு வய-லே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது'' (ரூத் 2:22) என்று சொல்லுகிறாள்.
மற்றவர்கள் வயலில் போகாமல் போவாசின் வயலுக்குப்போய் கதிர் பொறுக்குமாறு நகோமி தன் மருமகளுக்குக் கூறுகிறாள். இந்த அறுப்புக்காலம் முழுவதிலும் ரூத் வேறு யாருடைய வயலுக்கும் போய், கதிர் பொறுக்கவில்லை. (ரூத் 2:21-22).
போவாஸ் நகோமிக்கு நெருங்கிய உறவின் முறையிலிருக்கிறார். ஆகையினால் நகோமி போவாசைப்பற்றிக் கேள்விப்பட்ட உடனே, அவரை கர்த்தருடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறார். ""கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக'' (ரூத் 2:20) என்று சொல்லுகிறாள்.
போவாஸ் ஏற்கெனவே நகோமியின் கணவனுக்கும், அவர்களுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் நன்மை செய்திருக்கிறார். நகோமி போவாசைப்பற்றிச் சொல்லும்போது, ""போவாஸ் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவன்'' (ரூத் 2:20) என்று சொல்லுகிறாள்.
நகோமி போவாசைப்பற்றிச் சொல்லும்போது, ரூத்தையும் தன்னுடைய குடும்பத்தில் ஒருத்தியாய்ப் பாவித்து பேசுகிறாள். ""அந்த மனுஷன் நமக்கு நெருங்கிய உறவின் முறையான்'' என்றும், ""அவன் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவன்'' என்றும் நகோமி சொல்லுகிறாள். இந்த வாக்கியத்தை நகோமி ரூத்திடம் சொல்லும்போது, ""நமக்கு'' என்றும், ""நம்மை'' என்றும் சொல்லி, ரூத்தையும் தன்னோடுகூட சேர்த்துக்கொள்கிறாள்.
கர்த்தருடைய தெய்வீக பராமரிப்பும், அவருடைய வழிநடத்துதலும் அற்புதமாயிருக்கிறது. கர்த்தர் தமக்கு சித்தமான வேளையிலே, ரூத்தையும், போவாசையும், நகோமியையும் ஒன்றாய்க் கூட்டிச்சேர்க்கிறார். கர்த்தர் ரூத்தைக் குறித்து ஒரு திட்டம் வைத்திருக்கிறார். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாகவே போவாஸ் ரூத்தின்மீது அன்பாகயிருக்கிறார். கர்த்தர் நகோமிக்கும் நல்ல ஞாபகசக்தியைக் கொடுக்கிறார். அவள் போவாசைப்பற்றி யோசித்துப் பார்த்து, அவர் தங்களுக்கு நெருங்கின உறவின் முறையான் என்பதையும், தங்களை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவன் என்பதையும் நகோமி நினைவுகூருகிறாள். போவாசின் பெயரைக் கேட்ட உடனேயே, அவரைப்பற்றிய எல்லா காரியங்களும் நகோமியின் நினைவுக்கு வந்துவிடுகிறது.
ரூத்திற்கும் போவாசுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற ஐக்கியத்தையும் நட்பையும் பார்த்து நகோமி சந்தோஷப்படுகிறாள். அந்த ஐக்கியமும் நட்பும் வலுவடையவேண்டுமென்று விரும்புகிறாள். ரூத் வயல்வெளியிலே கதிர்களைப் பொறுக்கும்போது, அவளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கவேண்டுமென்று நகோமி நினைக்கிறாள். இவையெல்லாவற்றையும் செயல்படுத்தும் வண்ணமாக, நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: ""என் மகளே, வேறொரு வய-லே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது'' (ரூத் 2:22) என்று சொல்லுகிறாள்.
கர்த்தர் நம்மை அதிகமாய் ஆசீர்வதிக்கும்போது, நமக்கு இன்னும் அதிகமான ஆசீர்வாதம் வேண்டும் என்று ஆசைப்பட்டு வேறு எங்கும் சுற்றி அலையக்கூடாது. கர்த்தர் நமக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுத்திருக்கும்போது, நாம் இன்னும் அதிகமான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தேடி உலகத்திற்குப் பின்னே போய்விடக்கூடாது.
ரூத் தன் மாமியாருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறாள். அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும், ரூத் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கியிருக்கிறாள் (ரூத் 2:23).
கோதுமை அறுப்பு பெந்தெகொஸ்தே பண்டிகையின் போது நடைபெறும் சம்பவம். அறுப்புக்காலங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் ரூத்தின் சரித்திரத்தை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அறுப்புக்காலங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். முக்கியமான நிகழ்ச்சிகளெல்லாம் அறுப்புக் காலங்களிலேயே நடைபெறுகிறது. இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் வருஷத்திற்கு மூன்றுமுறை பண்டிகை ஆசரிக்கக் கூடிவரவேண்டும். இது இஸ்ரவேலின் மூன்று அறுப்புக்காலங்களில் நடைபெறுகிறது. (யாத் 23:16; யாத் 34:21-22):
1. பஸ்கா பண்டிகை - வாற்கோதுமை அறுப்புக்காலம். (ரூத் 1:22; ரூத் 2:17,23; லேவி 23:4-15).
2. பெந்தெகொஸ்தே பண்டிகை - கோதுமை அறுப்புக்காலம் (யாத் 34:22; லேவி 23:15-22).
3. கூடாரங்களின் பண்டிகை - பழங்களின் பறிப்புக்காலம் எக்காளங்களின் பண்டிகையும், பாவநிவாரண நாளும் கூடாரங்களின் பண்டிகைக்கு முந்தி வரும். ஆகையினால் இந்தப் பண்டிகைக்கு வரும் இஸ்ரவேல் புத்திரர் மூன்று பண்டிகைகளிலும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். (லேவி 23:23-44).
வாற்கோதுமை அறுப்புக்காலத்திற்கும், கோதுமை அறுப்புக்காலத்திற்கும் இடையில் மற்ற தானியங்களெல்லாம் அறுவடை செய்யப்படும். இந்தக் காலத்தில் பொதுவாக மழை பெய்யும். கோதுமை அறுப்புக் காலத்திலிருந்து பழங்களின் பறிப்புக்காலம் வரையிலும் பொதுவாக மழை பெய்யாது. (2சாமு 21:10; எரே 5:24). அறுவடை காலத்தில் அறுவடை செய்கிறவர்கள் குளிர்ச்சியான காலத்தை எதிர்பார்த்திருப்பார்கள். (நீதி 25:13).
கானான் தேசத்திலே முதலாவதாக வாற்கோதுமை அறுப்புக்காலமும், அதைத் தொடர்ந்து கோதுமை அறுப்புக்காலமும் வரும். ரூத் போவாசின் நிலத்திலே இரண்டு அறுப்புக்காலங்களிலுமிருந்து கதிர்களைப் பொறுக்குகிறாள்.
""சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்'' (நீதி 6:6-8).