ரூத் 1ஆம் அதிகாரம் விளக்கம்
நகோமியின் பாடுகளும், வேதனைகளும் இந்த அதிகாரத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. யூதாதேசத்திலே பஞ்சமுண்டாயிற்று. நகோமியும், அவளுடைய குடும்பத்தாரும் தங்கள் ஊரைவிட்டு மோவாப் தேசத்திலே போய் சஞ்சரிக்கிறார்கள் (ரூத் 1:1,2). மோவாப் தேசத்திலே நகோமியின் புருஷனும், அவர்களுடைய இரண்டு குமாரர்களும் மரித்துப்போகிறார்கள். நகோமி விதவையாயிருக்கிறாள் (ரூத் 1:3-5).
நகோமி ஒரு கரிசனையுள்ள நல்ல மாமியாராயிருக்கிறாள். தன்னுடைய இரண்டு மருமக்கள்மாரையும் அன்பாய்க் கவனித்துக்கொள்கிறாள் (ரூத் 1:6-18). நகோமி தன்னுடைய மருமகளாகிய ரூத்தோடு, மோவாப் தேசத்திலிருந்து, பெத்லகேம் ஊருக்கு திரும்பி வருகிறாள் (ரூத் 1:19-22).
எலிமெலேக்கு ரூத் 1:1-5
ரூத் 1:1. நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.
ரூத் 1:2. அந்த மனுஷனுடைய பேர் எ-மெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கி-யோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
ரூத் 1:3. நகோமியின் புருஷனாகிய எ-மெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும்மாத்திரம் இருந்தார்கள்.
ரூத் 1:4. இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள்.
ரூத் 1:5. பின்பு மக்லோன் கி-யோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன்புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.
ரூத் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலத்தைப்பற்றிய விவரம் வருமாறு :
நியாயாதிபதிகளின் ஆரம்ப நாட்களில் ரூத் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரூத் 4:21-22 ஆகிய வசனங்களில் போவாசைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இவன் சல்மோனின் குமாரன். சல்மோன் எரிகோவிலிருந்த ராகாப் என்னும் வேசியை விவாகம் செய்திருந்தான். (மத் 1:5). எரிகோவை இஸ்ரவேல் புத்திரர் ஜெயித்தபின்பு, சல்மோன் ராகாபை விவாகம் பண்ணியிருந்திருக்க வேண்டும். யோசுவாவின் காலத்திலிருந்து சவுலின் காலம் வரையிலுமுள்ள இடைப்பட்ட வருஷங்கள் சுமார் 520 வருஷங்களாகும். இந்தக் காலத்தின் ஆரம்பத்தில் சல்மோனின் விவாகம் சுமார் 50 அல்லது 75 ஆவது வருஷத்தில் நடைபெற்றிருக்க வேண்டும்.
போவாசின் ஜீவியக்காலம் இந்தக் காலத்தின் ஆரம்பத்தில் சுமார் நூறாவது வருஷத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். இந்நாட்களில் ஒத்னியேல் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்தான். (நியா 3:9-11) இக்காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் மோவாபியரிடம் 18 வருஷங்களுக்கு அடிமைகளாக இருந்தார்கள். அல்லது இக்காலம் ஏகூத்தின் நாட்களில் நடைபெற்றிருக்க வேண்டும். (நியா 3:15-20).
இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் இந்த வரலாற்றுக்காலத்தில் இடம் பெற்றிருக்கும் எல்லா புருஷர்களின் பெயர்களும் குறிப்பிடப் படவில்லை. சல்மோனின் காலத்திலிருந்து தாவீதின் பிறப்பு வரையிலும் நான்கு பேர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான்கு பேர்கள் மட்டும் இத்தனை வருஷங்களாக உயிரோடிருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. சல்மோன், போவாஸ், ஓபேத், ஈசாய், ஆகிய ஒவ்வொருவரும் சராசரியாக 125 வருஷங்கள் வாழ்ந்திருப்பதற்கும் வாய்ப்பில்லை. ஆகையினால் இதற்கு இடைப்பட்ட காலங்களில் இயேசுவின் வம்சவரலாற்றில் வேறுசிலரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வேதபண்டிதர்களும் இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அந்த வரலாற்றில் அனைவருடைய பெயரும் இடம் பெறவில்லை என்று கருத்துக் கூறுகிறார்கள் (ரூத் 4:20-22; மத் 1:4-6, 88,11; லூக்கா 3:31-32).
ரூத்தின் சரித்திர சம்பவம் எந்தக் காலத்தில் நடைபெற்றது என்று, இந்த அதிகாரத்தின் ஆரம்ப வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கிறது. ""நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களிலே'' (ரூத் 1:1) இந்த சரித்திர சம்பவங்கள் நடைபெற்றன.
வேதாகமத்தில் ஐந்து இடங்களில் இதுபோன்று ""நாட்களில்'' என்னும் வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியம் இதற்கு முன்பு ஏற்பட்ட உபத்திரவத்தையும், அதைத் தொடர்ந்து வரும் மீட்பையும், சந்தோஷமான முடிவையும் குறிக்கும். (ரூத் 1:1; ஆதி 14:1; எஸ் 1:1; ஏசா 7:1; எரே 1:3).
இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சம்பவங்கள், நியாயாதிபதிகளுடைய காலத்தின் ஆரம்பத்திலேயே நடைபெற்றிருக்கவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். போவாஸ் ரூத்தை விவாகம் செய்தார். ராகாப் ரூத்தைப் பெற்றாள். யோசுவாவின் காலத்திலே, ராகாப் வேவுகாரரை தன்னுடைய வீட்டிலே ஏற்றுக்கொண்டவள்.
இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சரித்திர சம்பவங்கள் ஏகூத்தின் நாட்களில் நடைபெற்றிருக்கவேண்டும் என்றும் அல்லது தெபொராளின் நாட்களில் நடைபெற்றிருக்கவேண்டும் என்றும் வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள்.
ரூத்தின் சரித்திர சம்பவம் கிதியோனின் நாட்களிலும் நடைபெற்றிருப்பதற்கு வாய்ப்புள்ளது. இக்காலத்தில் மீதியானியர் இஸ்ரவேல் தேசத்தாரை கொள்ளையிட்டார்கள். இதன் நிமித்தமாக தேசத்திலே பஞ்சமுண்டாயிற்று.
""இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து; அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவே-லே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதேபோவார்கள்'' (நியா 6:3,4).
கானான் தேசத்திலே பஞ்சமுண்டாயிற்று. கானான் தேசம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிற தேசம். அது பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான தேசம். ஆனாலும் இஸ்ரவேல் புத்திரருடைய பாவங்களினிமித்தமாக, கானான் தேசத்திலே பஞ்சமுண்டாயிற்று. இது தேவனுடைய நியாயத்தீர்ப்பினால், கானான் தேசத்தின்மீது வந்த சாபமாயிருக்கிறது.
""உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவேன். உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது'' (லேவி 26:19,20).
இஸ்ரவேல் தேசம் சமாதானத்தில் இளைப்பாறுகிறது. ஆனால் அந்த தேசத்தில் செழிப்பு இல்லை. பெத்லெகேமில்கூட பஞ்சமுண்டாயிற்று. பெத்லெகேம் என்னும் பெயருக்கு ""அப்பத்தின் வீடு'' என்று பொருள். தேசத்தில் பஞ்சமுண்டானதினால், அப்பத்தின் வீட்டிலேகூட அப்பமில்லாமல் போயிற்று.
செழிப்பான கானான் தேசம் வனாந்தர பூமியாயிற்று. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமல் நிர்விசாரமாய் ஜீவிக்கிறார்கள். அவர்களிடத்தில் செழிம்பும், ஆகாரத்திரட்சியும் இருக்கும்போது அவர்கள் கர்த்தரை மறந்துவிடுகிறார்கள். கர்த்தரோ இஸ்ரவேல் புத்திரரை திருத்துவதற்காக, அவர்கள் மத்தியிலே அப்பத்தாழ்ச்சியை அனுமதிக்கிறார்.
யூதாதேசம் முழுவதிலும் பஞ்சமுண்டாயிற்று. யூதாதேசத்தார் எல்லோருமே பஞ்சத்தின் வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவிக்கிறார்கள். அவர்களில் ஒரு குறிப்பிட்ட நபரைப்பற்றி இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய பெயர் எலிமெலேக்கு. எலிமெலேக்கு என்னும் பெயருக்கு ""என்னுடைய தேவன் ஒரு ராஜா'' என்று பொருள். இவர் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச் சேர்ந்தவர்.
எலிமெலேக்குடைய மனைவியின் பெயர் நகோமி. நகோமி என்னும் பெயருக்கு ""சந்தோஷமானவள்'' என்று பொருள். இவர்களுக்கு இரண்டு குமாரர் இருக்கிறார்கள். ஒருவன் பேர் மக்லோன். மற்றொருவன் பேர் கிலியோன். இவர்கள் இருவரும் வியாதிப்பட்டவர்களாகவும், சரீரத்திலே பலமில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். மக்லோன் என்னும் பேருக்கு ""வியாதி'' என்று பொருள். கிலியோன் என்னும் பேருக்கு ""வேதனை'' அல்லது ""பலவீனம்'' என்று பொருள்.
எலிமெலேக்கும், அவருடைய குடும்பத்தாரும் தேசத்திலே உண்டான பஞ்சத்திலிருந்து தப்பிப்பதற்காக மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே சஞ்சரிக்கிறார்கள் (ரூத் 1:1,2). இஸ்ரவேல் தேசத்திலே அப்பத்தாழ்ச்சி உண்டாயிருக்கிறபோது, மோவாப் தேசத்திலே செழிப்பு உண்டாயிருக்கிறது.
பெத்லெகேமின் பழங்காலப் பெயர் எப்பிராத்து. இங்கு ராகேல் அடக்கம் பண்ணப்பட்டாள். (ஆதி 35:19; ஆதி 48:7) இங்கு தாவீது வசித்து வந்தார் (1சாமு 17:12).
எலிமெலேக்கு தன் குடும்பத்தாரோடுகூட மோவாப் தேசத்திற்குப் போகிறார். இஸ்ரவேலிலே பஞ்சம் இருக்கும் வரையிலும், மோவாப் தேசத்திலே சிறிதுகாலம் பரதேசியாய் சஞ்சரிக்கவேண்டுமென்று தீர்மானித்து, எலிமெலேக்கு மோவாப்புக்குப்போகிறார்.
எலிமெலேக்கைப்போலவே, இஸ்ரவேலரின் முற்பிதாவாகிய ஆபிரகாம் எகிப்து தேசத்திற்குப் போனார். ஈசாக்கு பெலிஸ்தரின் தேசத்திற்குப் போனார்.
எலிமெலேக்கு மோவாப் தேசத்திற்கு தான் மாத்திரம் தனியாகப் போகவில்லை. இஸ்ரவேல் தேசத்திலே ஏற்பட்டிருக்கும் பஞ்சத்திலிருந்து தான் மாத்திரம் தப்பித்தால் போதும் என்று, எலிமெலேக்கு சுயநலமாக நினைக்கவில்லை. அவர் தன்னுடைய மனைவியையும், இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு மோவாப் தேசத்திலே போய் சஞ்சரிக்கிறார். எலிமெலேக்கிடம் குடும்ப பாசம் இருக்கிறது.
இஸ்ரவேல் தேசத்திலே பஞ்சமுண்டானபோது, எலிமெலேக்கு மோவாப் தேசத்திற்கு தன் குடும்பத்தோடு போனது சரியானதா அல்லது தவறானதா என்று வேதபண்டிதர்கள் விவாதம் பண்ணுகிறார்கள். எலிமெலேக்கு மோவாப் தேசத்திற்குப் போனது ஞானமான செயல் அல்ல என்றும், அது கர்த்தருடைய பார்வையிலே நீதியானது அல்ல என்றும் வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு கானான் தேசத்தை சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறார். இஸ்ரவேல் புத்திரரும் தங்களுடைய வாக்குத்தத்த தேசத்திலே குடியேறியிருக்கிறார்கள். அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் இனிமேல் அந்நிய தேசத்தாருடைய எல்லைக்குள் குடிபெயரக்கூடாது. கானான் தேசமே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தர தேசம். மற்ற தேசங்களெல்லாம் அவர்களுக்கு அந்நிய தேசங்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு அந்நிய தேசங்களிலே பங்குமில்லை, பாத்தியமுமில்லை.
பெத்லெகேம் ஊரிலே, எலிமெலேக்கைப்போல ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களும் இவரைப்போலவே பஞ்சத்தின் வேதனைகளையும், பாடுகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் போதுமென்கிற மனதோடிருக்கிறார்கள். பெத்லெகேமிலே தங்களுக்கு ஓரளவு அப்பம் மாத்திரமே கிடைத்தாலும், அதிலே அவர்கள் திருப்தியோடிருக்கிறார்கள்.
ஆனால் எலிமெலேக்கோ, பெத்லெகேமிலே கிடைக்கிற கொஞ்ச அளவு அப்பத்திலே திருப்தியாயில்லை. கானான் தேசத்திலே இப்போது பஞ்சம் இருந்தாலும், மறுபடியும் தேசத்திலே செழிம்பு வரும் என்று எலிமெலேக்கு விசுவாசிக்கவில்லை. நன்மையான காலங்களை அவர் விசுவாசத்தோடும், பொறுமையோடும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே, இஸ்ரவேல் புத்திரருக்கு கானான் தேசத்தை சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் தங்களுக்கு கொடுத்த தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் திருப்தியோடிருக்க வேண்டும். கானான் தேசத்திலே வசதியில்லை, அப்பம் இல்லை என்று குறை சொல்லி, அந்நிய தேசத்திற்குப்போவது, தங்கள் தேவனாகிய கர்த்தரை கனவீனம்பண்ணும் செயலாகும்.
எலிமெலேக்கு மோவாப் தேசத்திற்குப் போவதைப்பார்த்து, பெத்லெகேமிலுள்ள அவருடைய சகோதரரின் கைகளெல்லாம் தளர்ந்துவிடும். அவர்களும் பெத்லெகேமிலே தங்கியிருக்காமல், மோவாப் தேசத்திற்குப் போகவேண்டுமென்று தீர்மானம்பண்ணுவார்கள். இதன் மூலமாக எலிமெலேக்கு, மற்ற சகோதரருக்கு, தப்பிதமான முன் உதாரணமாயிருப்பார்.
எலிமெலேக்கு கர்த்தரை முற்றிலுமாய் நம்பவில்லை. அவருடைய விசுவாசத்தில் உறுதியில்லை. கர்த்தர் தன்னை ஸ்தாபித்திருக்கிற ஸ்தலத்திலே அவர் உறுதியாய் நிலைத்திருக்க ஆயத்தமாயில்லை. எலிமெலேக்கோ கர்த்தருடைய சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தன்னுடைய சுயசித்தத்திற்கும், சுயவிருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, தன் முழுக்குடும்பத்தாரோடு, பெத்லெகேமை விட்டுவிட்டு, மோவாப் தேசத்திற்குப் போய் அங்கே சஞ்சரிக்கிறார்.
கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்திலே நாம் நிலைத்திருக்கவேண்டும். ஊழியத்திலே கஷ்டங்களும், பிரச்சனைகளும் வரும்போது, அதை சகித்துக்கொள்ளாமல், தாங்கிக்கொள்ளாமல், ஊழியத்தைவிட்டே போய்விடக்கூடாது.
கானான் தேசம் பரந்த விரிவான தேசம். பெத்லெகேமிலே அப்பம் கிடைக்கவில்லையென்றால், கானான் தேசத்திலுள்ள வேறு எந்த ஊரில் அப்பம் கிடைக்கிறது என்று தேடிப்பார்க்கவேண்டும். பெத்லெகேமில் அப்பம் இல்லை என்றவுடன், அப்பத்தைத் தேடி புறஜாதி தேசமாகிய மோவாப் தேசத்திற்குப் போய்விடக்கூடாது.
பெத்லெகேமிலே தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் அப்பத்தாழ்ச்சி ஏற்பட்டபோது, இஸ்ரவேலின் வேறு எந்தக் கோத்திரத்தில் அப்பம் தாராளமாய்க் கிடைக்கிறது என்று எலிமெலேக்கு விசாரித்து பார்த்ததாக தெரியவில்லை. ஒருவேளை அவர் தேடிப்பார்த்திருந்தால், கானான் தேசத்திலேயே, அப்பத்தைக் கண்டுபிடித்திருப்பார்.
யூதாதேசம் யோர்தானுக்கு இப்புறத்திலே உள்ளது. யோர்தானுக்கு அப்புறத்திலே கீலேயாத் தேசம் இருக்கிறது. அங்கே இஸ்ரவேலின் இரண்டரைக் கோத்திரத்தார் வாசம்பண்ணுகிறார்கள். கீலேயாத் தேசம் மோவாப் தேசத்தின் எல்லையிலுள்ளது. எலிமெலேக்கு மோவாப் தேசத்திற்குப் போகாமல், வழியிலே இருக்கிற கீலேயாத் தேசத்திலே, இஸ்ரவேல் சகோதரரோடு தங்கியிருக்கலாம். யோர்தான் நதி கீலேயாத்தை செழிப்பாக்குகிறது. யூதாவிலே பஞ்சம் தீரும் வரையிலும், எலிமெலேக்கு தன் குடும்பத்தாரோடு, கீலேயாத்திலுள்ள இஸ்ரவேல் புத்திரரோடு தங்கியிருந்திருக்க வேண்டும்.
எலிமெலேக்குக்கு கர்த்தர்மீது உண்மையான பக்தி வைராக்கியமும், இஸ்ரவேல் புத்திரர்மீது உண்மையான அன்பும் பாசமும் இருந்திருக்குமென்றால், அவர் தன் தேசத்தைவிட்டு மோவாப் தேசத்திற்கு போயிருக்கமாட்டார். இஸ்ரவேல் புத்திரரோடே சஞ்சரியாமல், மோவாபியருக்கு மத்தியிலே சஞ்சரிக்க தீர்மானித்திருக்கமாட்டார்.
ஆனால் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய எலிமெலேக்கும் அவருடைய குடும்பத்தாரும் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிடுகிறார்கள். அங்கே நகோமியின் புருஷனாகிய எ-மெலேக்கு இறந்துபோகிறார்; அதன் பின்பும் அவர்கள் யூதாதேசத்திற்கு திரும்பி வராமல், எலிமெலேக்கின் மனைவியாகிய நகோமியும் அவளுடைய இரண்டு குமாரரும் மோவாப் தேசத்திலே இருந்துவிடுகிறார்கள்.
நகோமியின் குமாரர்கள் மோவாபியரில் பெண் கொள்கிறார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணுகிறார்கள்.
மோவாபியரோடு பெண்கொள்ளக்கூடாது என்று விசேஷித்த பிரமாணம் எதுவுமில்லை. ஆனாலும் இஸ்ரவேலரின் விவாகத்தைப் பற்றிய பொதுவான பிரமாணம் இதைத் தடைபண்ணுகிறது. (உபா 7:3) இஸ்ரவேல் புத்திரர் கானானியரோடு சம்பந்தம் பண்ணக் கூடாது. (உபா 23:3).
""ஒர்பாள்'' என்னும் பெயருக்கு ""சிறுமான்'' என்று பொருள். (ரூத் 1:4,14). ""ரூத்'' என்னும் பெயருக்கு ""சிநேகம்'' என்று பொருள். (மத் 1:5)
இஸ்ரவேல் புத்திரர் புறஜாதி ஸ்திரீகளை விவாகம்பண்ணக்கூடாது. ஆனால் நகோமியின் குமாரர்களோ கர்த்தருடைய கட்டளையை மீறி மோவாபியரில் பெண்கொள்கிறார்கள். ஒர்பாளும் ரூத்தும், நகோமியின் குமாரர்களை விவாகம் செய்வதற்கு முன்பாக, யூதமார்க்கத்தை ஏற்றுக்கெண்டார்களா என்பது தெரியவில்லை. பிற்காலத்தில் ஒர்பாள் தன் ஜனங்களிடத்திற்கும் தன் தேவர்களிடத்திற்கும் திரும்பிப் போய்விடுகிறார் (ரூத் 1:15).
யூதர்களுடைய பாரம்பரிய வரலாற்றின் பிரகாரம், மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு ரூத் குமாரத்தியாகப் பிறந்தாள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கு வேதஆதாரமோ, சரித்திர ஆதாரமோ இல்லை.
மோவாப் தேசத்திலே எலிமெலேக்கும், அவருடைய இரண்டு குமாரரும் செத்துப்போகிறார்கள். இதனால் நகோமியின் நிலமை மிகவும் பரிதாபமாயிருக்கிறது. தன்னுடைய குமாரருக்கு விவாகம் செய்து வைத்த கொஞ்ச காலத்திலேயே அவர்கள் இருவரும் செத்துப்போகிறார்கள். அவர்கள் அந்நிய ஸ்திரீகளை விவாகம்பண்ணியதினால், அவர்களுடைய ஆயுசுகாலம் குறைந்துபோயிருக்கலாம்.
நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு முதலாவதாக இறந்து போகிறார். அப்போது நகோமியும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் அவளுடைய வீட்டிலே இருக்கிறார்கள். தன்னுடைய இரண்டு குமாரர்களும், குடும்பக்காரியங்களை பார்த்துக் கொள்வார்கள் என்று நகோமி நினைக்கிறாள். தாய் தன் பிள்ளைகளை நம்புகிறாள். ஆனால் நகோமியின் இரண்டு குமாரர்களும் சீக்கிரத்திலே செத்துப்போகிறார்கள்.
நகோமியின் புருஷனும், அவளுடைய இரண்டு குமாரர்களும் பத்து வருஷக்காலத்திற்குள் இறந்து போனார்கள். யூதருடைய வரலாறு இவர்களுடைய மரணத்தைப் பற்றி விளக்குகிறது. இவர்கள் அந்நிய ஸ்திரீகளை விவாகம் பண்ணியதினால் சொற்ப வயதில் மரித்துப் போனார்கள் என்று யூதருடைய பாரம்பரிய வரலாறு கூறுகிறது. மோவாபியரோடு சேர்ந்து, விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருந்தால், கர்த்தருடைய கோபம் இவர்களுக்கு எதிராக எழும்பியிருக்கும். (ரூத் 1:4-5). கர்த்தருடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்த மனுஷருக்கு நீண்ட ஆயுசு ஆசீர்வாதமாகக் கூறப்பட்டிருக்கிறது. பிரமாணத்திற்குக் கீழ்ப்படியவில்லையென்றால் மனுஷருடைய ஆயுசு நாட்கள் குறைந்துபோகும். (லேவி 26; உபா 28).
""சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்'' (ஏசா 47:9).
""அவள் பெற்ற புத்திரரெல்லாரிலும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த குமாரரெல்லாரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை. இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல் செய்வேன்?'' (ஏசா 51:18,19).
நகோமி தன்னுடைய புருஷனையும், தன்னுடைய இரண்டு குமாரரையும் இழந்து திக்கற்றவளாயிருக்கிறாள். திக்கற்ற பிள்ளைகளுக்கு கர்த்தரே துணை.
நகோமி ரூத் 1:6-13
ரூத் 1:6. கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்தி-ருந்து திரும்பிவரும்படி எழுந்து,
ரூத் 1:7. தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப்புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழிநடக்கையில்,
ரூத் 1:8. நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.
ரூத் 1:9. கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்-, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
ரூத் 1:10. உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள்.
ரூத் 1:11. அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?
ரூத் 1:12. என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும்,
ரூத் 1:13. அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.
நகோமி மோவாப் தேசத்திலே இருந்தாலும், அவள் இஸ்ரவேல் தேசத்தின்மீது அன்பாயிருக்கிறாள். இஸ்ரவேல் தேசத்தில் நடைபெறும் சம்பவங்களை நகோமி அவ்வப்போது கேட்டு விசாரித்துக்கொள்கிறாள். மோவாப் தேசத்திலே நிரந்தரமாக தங்கிவிடவேண்டும் என்பது நகோமியின் விருப்பமல்ல. யூதாதேசத்திலே இப்போது பஞ்சமுண்டாயிருக்கிறது. அங்கே மறுபடியும் அப்பம் கிடைக்கும்போது, தான் யூதாதேசத்திற்கு திரும்பிப்போய்விட வேண்டுமென்று, நகோமி பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறாள்.
இக்காலத்தில் நகோமி யூதாதேசத்தைப்பற்றி ஒரு நல்ல செய்தியைக் கேள்விப்படுகிறாள். கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று நகோமி மோவாப் தேசத்திலே கேள்விப்படுகிறாள். இந்தச் செய்தி நகோமிக்கு மிகுந்த ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. அவள் திரும்பவும் யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குப் போகவேண்டுமென்று தீர்மானம்பண்ணுகிறாள்.
யூதருடைய பாரம்பரிய வரலாற்று ஒரு தேவதூதன் இந்தச் செய்தியை அவளுக்குக் கூறியதாகக் கூறுகிறது. இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் உண்டானதால் இவர்கள் மோவாப் தேசத்திற்குப் போனார்கள். (ரூத் 1:1) கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளியதினால், இவர்கள் திரும்பவும் வாக்குத்தத்த தேசத்திற்குத் திரும்பி வருகிறார்கள்.
கானான் தேசத்தைப்போல பரிசுத்த தேசம் வேறு எதுவுமில்லை. கானான் தேசத்திலே கர்த்தருடைய வாசஸ்தலம் இருக்கிறது. நகோமி மோவாப் தேசத்திலே இருந்தாலும், கானான் தேசமே கர்த்தர் தனக்கு கொடுத்த தேசம் என்று விசுவாசிக்கிறாள். கானான் தேசத்திலே பஞ்சமுண்டானபோது, நகோமியும் அவளுடைய குடும்பத்தாரும் மோவாப் தேசத்திற்கு வந்தார்கள்.
இப்போது கர்த்தர் தம்முடைய ஜனங்களை மறுபடியும் சந்திக்கிறார். அவர்களுக்கு தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் காண்பிக்கிறார். கர்த்தர் கானான் தேசத்திலுள்ள தம்முடைய ஜனங்களுக்கு ஆகாரம் அருளுகிறார்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை, கிருபையினால் சந்திக்கும்போது, கர்த்தருடைய பிள்ளைகள்மீது ஆசீர்வாதமான மழை பெய்யும். அவர்களுக்கு அப்பத்தாழ்ச்சி இருக்காது. கர்த்தருடைய பிள்ளைகள் பசியும் பட்டினியுமில்லாமல், திருப்தியாய்ப் புசித்து, ஆரோக்கியமாய் ஜீவிப்பதற்கு தேவையான சகல ஆசீர்வாதங்களையும் கர்த்தர் கொடுப்பார். நம்முடைய ஆத்துமா ஜீவனோடிருப்பதற்கு கர்த்தர் கிருபை கொடுப்பார்.
கானான் தேசத்திலே முதலாவது பஞ்சமுண்டாயிற்று. அதன் பின்பு கர்த்தர் தம்முடைய ஜனங்களை சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளுகிறார். இஸ்ரவேல் புத்திரருக்கு பஞ்சம் என்றால் என்ன என்று தெரியும். அப்பத்தாழ்ச்சி என்றால் என்ன என்பது அவர்களுக்கு நன்றாய்ப் புரியும். அவர்கள் அப்பமில்லாமல், வேறு எந்த ஆகாரமுமில்லாமல் பசியும் பட்டினியுமாயிருந்தவர்கள். கர்த்தர் இப்போது அவர்களுடைய ஜீவியத்திலே ஆகாரத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்.
பஞ்சத்தில் கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் ஆகாரத்தின் மேன்மை புரியும். கர்த்தர் தங்களுக்கு மறுபடியும் ஆகாரம் கொடுப்பதை இஸ்ரவேல் புத்திரர் நன்றியுள்ள இருதயத்தோடு ஏற்றுக்கொள்கிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு ஆகாரம் அருளுவது, அவர்களுடைய பார்வையில் மிகப்பெரிய அற்புதமாயிருக்கிறது.
பெத்லெகேம் ஊரிலே ஆகாரம் தாராளமாய்க் கிடைக்கிறது என்னும் செய்தியை நகோமியும் கேள்விப்படுகிறாள். அவள் மோவாப் தேசத்திலே இருந்தாலும், இப்போது அவளுடைய ஜீவியம் கசப்பாயிருக்கிறது. அவளுடைய புருஷன் அபிமெலேக்கு செத்துப்போனான். நகோமி விதவையாயிருக்கிறாள். நகோமியின் இரண்டு குமாரர்களும் செத்துப்போனார்கள். அவளுடைய இரண்டு மருமக்கள்மார்களும் விதவையாயிருக்கிறார்கள். நகோமியின் குடும்பத்திலே சந்தோஷமோ ஆறுதலோ இல்லை. சகலமும் கசப்பாயும் வெறுப்பாயும் இருக்கிறது.
தன்னுடைய குடும்பத்தில் ஒவ்வொருவராக செத்துப்போனபோது, நகோமி அப்போதே, பெத்லெகேமுக்கு திரும்பிப்போய்விடவேண்டும் என்று தீர்மானிந்திருந்திருப்பாள். ஆனாலும் பெத்லெகேமில் காணப்பட்ட பஞ்சம், நகோமியின் பிரயாணத்தை தடைசெய்திருக்கவேண்டும். இப்போதோ பெத்லெகேமிலே பஞ்சமில்லை. அங்கே ஆகாரம் தாராளமாய்க் கிடைக்கிறது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நகோமி, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து பெத்லெகேம் ஊருக்கு புறப்பட்டுப்போகிறாள்.
நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சில சூழ்நிலைகள் நிமித்தமாக, நாம் மோசமான இடங்களில் வாசம்பண்ணவேண்டியது வரலாம். ஆனாலும் நம்முடைய வாழ்க்கையில் அந்த சூழ்நிலைகள் மாறும்போது, நாம் மோசமான இடத்தில் தொடர்ந்து வாசம்பண்ணவேண்டும் என்று நினைக்கக்கூடாது. நாம் மோசமான இடங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. கர்த்தர் நம்முடைய சூழ்நிலையை மாற்றும்போது, மோசமான இடங்களைவிட்டு விலகி, கர்த்தருக்கு சித்தமான நல்ல இடங்களில் வந்து வாசம்பண்ணவேண்டும்.
ஒரு சில சூழ்நிலைகளினிமித்தமாக, நாம் கர்த்தரைவிட்டும், கர்த்தருடைய பிரமாணங்களை விட்டும் விலகி ஜீவிக்கவேண்டியது வரலாம். கர்த்தர் நம்முடைய சூழ்நிலையை மாற்றும்போது, நாம் மறுபடியும் கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கவேண்டும்.
அதுபோலவே ஒரு சில சூழ்நிலைகளினிமித்தமாக, நாம் துன்மார்க்கரோடு சேர்ந்து வாசம்பண்ணவேண்டியது வரலாம். கர்த்தர் நம்முடைய சூழ்நிலையை மாற்றும்போது, துன்மார்க்கரை விட்டு விலகி வந்துவிடவேண்டும். கர்த்தர் நமக்கு ஆசீர்வாதமான சூழ்நிலைகளையும், சாதகமான சூழ்நிலைகளையும் கொடுக்கும்போது, நாம் கர்த்தருக்கு சித்தமில்லாத இடங்களில் வாசம்பண்ணுவதும், கர்த்தருக்குப் பிரியமில்லாத ஜனங்களோடு ஐக்கியமாயிருப்பதும் பாவம்.
மோவாப் தேசம் நகோமிக்கு இப்போது வருத்தத்தின் தேசமாயிருக்கிறது. இனிமேல் அவளால் மோவாப் தேசத்தில் சந்தோஷமாய் ஜீவனம் பண்ணுவதற்கு வாய்ப்பில்லை. ஆகையினால் கானான் தேசத்திற்கு திரும்பிப்போய்விடலாம் என்று நகோமி தீர்மானம்பண்ணுகிறாள். இந்தப் பூமியிலே நாம் கசப்பானவர்களாகவும், விரும்பப்படாதவர்களாகவும் இருந்தாலும், பரலோகம் நம்மை சகித்து ஏற்றுக்கொள்கிறது. பரலோமே நம்முடைய நித்திய வாசஸ்தலம். நாம் அங்கே போகும் வரையிலும், இந்தப் பூமியிலே பரதேசிகளாய் சஞ்சரிக்கிறோம்.
நகோமி தன் இரண்டு மருமக்களோடும்கூட, மோவாப் தேசத்திலே தான் இருந்த ஸ்தலத்தைவிட்டு, பெத்லெகேம் ஊருக்கு புறப்பட்டுப்போகிறாள். நகோமியின் மருமக்கள் இருவரும் தங்கள் மாமியார்மீது பிரியமாயிருக்கிறார்கள். நகோமி மோவாப் தேசத்திலிருந்து, பெத்லெகேமுக்கு திரும்பிப்போகும்போது, அவளுடைய மருமக்கள் இரண்டுபேரும் அவளோடுகூட, யூதாதேசத்தை நோக்கிப் போகிறார்கள்.
இரண்டு மருமக்களும் மாமியாரோடு யூதா தேசத்திற்குப் போனார்கள். ஆனால் மோவாப் தேசத்திற்குத் திரும்பிப் போகலாம் என்னும் வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, ஒரு மருமகள் மோவாப் தேசத்திற்குத் திரும்பிப் போய்விடுகிறாள். (ரூத் 1:7-22).
நகோமி ஒரு இஸ்ரவேல் ஸ்திரீ. அவளுடைய மருமக்கள் இரண்டுபேரும் மோவாப் தேசத்து ஸ்திரீகள். நகோமி தன் அன்பினாலும், பாசத்தினாலும், தன்னுடைய இரண்டு மருமக்கள்மாருடைய அன்பையும் பாசத்தையும் சம்பாதித்திருக்கிறாள். மருமக்கள்மார் புறஜாதி ஸ்திரீகளாயிருந்தாலும், அவர்கள் இருவருமே நகோமியின்மீது அன்பாயிருக்கிறார்கள்.
நகோமியும் அவளுடைய இரண்டு மருமக்களும் மோவாப் தேசத்திலே ஒரே வீட்டிலே குடியிருக்கிறார்கள். அவர்கள் கூட்டுக்குடும்பமாகயிருந்து, தங்களுடைய அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறார்கள். நகோமியின் குமாரர்கள் மரித்துப்போனாலும், அவளுடைய மருமக்கள் இருவரும் நகோமியின்மீது வைத்திருக்கிற அன்பு மரித்துப்போகவில்லை. அவர்களுடைய அன்பு ஜீவனுள்ளதாயிருக்கிறது.
நகோமியின் மருமக்கள் இருவருமே மோவாபிய தேவர்களை ஆராதிக்கிறவர்கள் (ரூத் 1:15). நகோமியோ மோவாப் தேசத்திலிருந்தாலும், அவள் இன்னும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரையே ஆராதிக்கிறாள். ஆனாலும் மாமியாரும் மருமக்களும் அன்பாயும், நேசமாயும், பாசமாயும் இருப்பதற்கு அவர்களுடைய மார்க்க பேதங்கள் தடையாயில்லை. நகோமி, தன்னுடைய மாமியார் ஸ்தானத்திலிருந்து, தன்னுடைய மருமக்கள் இருவரையும் நேசிக்கிறாள். அவளுடைய மருமக்கள் இரண்டு பேருமே, தங்கள் மாமியாரை நேசிக்கிறார்கள்.
பொதுவாக குடும்பத்திலே, மாமியாளுக்கும் மருமகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கும். ""எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்'' (மத் 10:35) என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் சொல்லுகிறார். இப்படிப்பட்ட இந்தப் பிரபஞ்சத்தில், மாமியாராகிய நகோமியும், அவளுடைய இரண்டு மருமக்களும் அன்பினால் ஒருவருக்கொருவர் கட்டப்பட்டு, இணக்கமாயும், நேசமாயும், பாசமாயும் குடும்ப ஐக்கியத்திலிருக்கிறார்கள்.
நகோமியும் அவளுடைய இரண்டு மருமக்களும் மோவாப் தேசத்தைவிட்டு, யூதாதேசத்திற்கு திரும்பிப்போக வழிநடக்கிறார்கள். அவர்கள் கொஞ்சதூரம் போனபின்பு, நகோமியின் மனதில் ஒரு மாற்றமுண்டாகிறது. தன்னுடைய மருமக்கள் இரண்டு பேரும் தன்னோடுகூட யூதாதேசத்திற்கு வராமல், மோவாப் தேசத்திலேயே தங்கிவிட்டால், அதுவே அவர்களுக்கு நன்மையாகயிருக்கும் என்று நினைக்கிறாள்.
நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: ""நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்'' (ரூத் 1:8) என்று சொல்லுகிறாள். மாமியரைவிட, தாயார் தங்கள் பிள்ளைகளை நன்றாய்க் கவனிப்பார்கள். தன்னுடைய மருமக்கள் இரண்டு பேரும், தங்கள் தாயாருடைய வீட்டிலிருந்தால், அவர்களுக்கு நல்ல பராமரிப்பும், ஆறுதலும் கிடைக்கும் என்று நகோமி நினைக்கிறாள்.
நகோமி தன் இரண்டு மருமக்களையும், அவர்களுடைய தாய் வீட்டிற்கு திரும்பிப்போங்கள் என்று சொல்லிவிட்டு, அவர்கள் இருவரையும் கர்த்தருடைய நாமத்தினால் ஆசீர்வதிக்கிறாள். அவர்களை ஜெபத்தோடு அனுப்புகிறாள். ""மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக. கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக'' (ரூத் 1:8,9) என்று நகோமி தன் மருமக்களுக்காக கர்த்தரிடத்தில் ஜெபித்து, அவர்களை ஆசீர்வதிக்கிறாள். மாமியாரின் ஆசீர்வாதம் விசேஷமானது. மருமக்கள்மார் தங்கள் மாமியாரின் ஆசீர்வாதங்களை அசட்டைபண்ணக்கூடாது.
நகோமி தன்னுடைய ஜெபத்திலும், ஆசீர்வாதத்திலும் கர்த்தருடைய நாமத்தை இரண்டு தரம் பயன்படுத்துகிறாள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே மெய்யான தேவன். நகோமி தன் மருமக்கள் இருவரையும் கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுக்கிறாள். நன்மையான எல்லா ஈவுகளும் கர்த்தரிடமிருந்தே புறப்பட்டு வருகிறது. கர்த்தர் தாமே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாகவும், ஊற்றின் கண்ணாகவும் இருக்கிறார். நகோமின் மருமக்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்றால், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும்.
தன்னுடைய மருமக்கள் இரண்டுபேரும் மறுபடியும் திருமணம் செய்துகொண்டு, சந்தோஷமாயிருக்கவேண்டுமென்று நகோமி விரும்புகிறாள். ""கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக'' (ரூத் 1:9) என்று சொல்லி, நகோமி தன் மருமக்கள் இருவரையும் ஆசீர்வதிக்கிறாள்.
நகோமி, தன்னுடைய மருமக்களுக்கு ஆசீர்வாதமான வார்த்தைகளைச் சொல்லி, அவர்களை முத்தமிடுகிறாள். நகோமியினிடத்தில் அன்பாய் முத்தமிடுவதைத் தவிர, வேறு ஐசுவரியம் எதுவுமில்லை. அவளிடத்தில் பொன்னும் வெள்ளியுமில்லை. அன்பும் பாசமும் இருக்கிறது. தன்னுடைய அன்புக்கும் பாசத்திற்கும் அடையாளமாக, நகோமி தன்னுடைய மருமக்களை முத்தமிடுகிறாள். நகோமி முத்தமிடுவது, அவர்களுடைய ஐக்கியத்திற்கும், சிநேகத்திற்கும், பரிசுத்தமான உறவுக்கும் அடையாளமாயும், முத்திரையாயும் இருக்கிறது.
நகோமி தங்களை முத்தமிட்டவுடன், அவளுடைய மருமக்கள் இரண்டு பேரும் சத்தமிட்டு அழுகிறார்கள். அவர்களுக்கு தங்கள் மாமியாரை விட்டுப் பிரியமனமில்லை. அவர்களுக்கு இடையே இருக்கிற ஐக்கியமும் உறவும் உறுதியாயிருக்கிறது. மருமக்கள் இருவரும் நகோமியிடம், ""உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடனேகூட வருவோம்'' (ரூத் 1:10) என்று சொல்லுகிறார்கள்.
இந்த இஸ்ரவேல் ஸ்திரீக்கும், மோவாபிய ஸ்திரீகளுக்கும், நெருக்கமான அன்பு இருந்திருக்க வேண்டும். ஆகையினால் அவர்கள் பிரியும் சூழ்நிலை வந்தபோது, சத்தமிட்டு அழுகிறார்கள்.
இரண்டு மருமக்களையும் மோவாபிய தேசத்திற்குத் திரும்பிப்போய் அங்கு மோவாபியரின் முறைமையின் பிரகாரம் ஜீவிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. (ரூத் 1:8) ஆனால் அவர்கள் இருவரும் நகோமியோடு கூடப்போவதாக முதலில் தீர்மானம் பண்ணுகிறார்கள். ஆனால் நகோமியோ அங்கு அவர்களுக்கு புருஷரைச் சம்பாதிப்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று கூறி, அவர்கள் இருவரையும் மோவாப் தேசத்தில் இருக்குமாறு கூறுகிறாள். (ரூத் 1:11-13).
அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுகிறார்கள். ஒர்பாள் மோவாபிய தேசத்திற்குத் திரும்பிப்போகிறாள். ரூத் நகோமியைப் பற்றிக் கொள்கிறாள். (ரூத் 1:14). நகோமி மறுபடியும் ரூத்தைப் பார்த்து அவளையும், அவள் ஜனத்தாரிடத்திற்கும், அவள் தேவர்களிடத்திற்கும் திரும்பிப் போகுமாறு கூறுகிறாள். (ரூத் 1:15)
ஆனால் ரூத்தோ நகோமியின் ஜனம் தன்னுடைய ஜனம் என்றும், நகோமியின் தேவன் தன்னுடைய தேவன் என்றும் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து கூறுகிறாள். (ரூத் 1:16-17). ரூத்தின் இந்தத் தீர்மானத்திற்காக அவள் அதிகமாக ஆசீர்வதிக்கப்படுகிறாள். மேசியாவின் வம்சவரலாற்றில் ரூத்தின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. (ரூத் 1:18-4:22; மத் 1:1-6)
பொதுவாக, மருமக்கள் தங்கள் மாமியாரிடத்தில் இதுபோல அன்பாயிருப்பதைப் பார்க்க முடியாது. ஆனால் இங்கோ கர்த்தருடைய கிருபையினால், அவர்களை அன்பு ஆளுகை செய்கிறது. அந்த அன்பே அவர்களை ஆட்கொள்கிறது. மருமக்கள் இருவரும் தங்கள் மாமியார்மீதும் அன்பாயிருக்கிறார்கள். இஸ்ரவேல் தேசத்து ஜனங்கள்மீதும் அன்பாயிருக்கிறார்கள்.
நகோமியின் இரண்டு மருமக்களில் ஒருத்தியாகிய ஒப்ரா, சிறிது நேரத்திற்கு பின்பு, தன்னுடைய தாய் வீட்டிற்கு திரும்பிப்போக சம்மதிக்கிறாள். அவள்கூட இப்போது, தன் மாமியாரோடு, அவளுடைய ஜனத்தண்டைக்குப் போகவேண்டுமென்று விரும்புகிறாள்.
நகோமி தன் மருமக்களின் வருங்கால வாழ்க்கையைக் குறித்து மிகுந்த கரிசனையோடிருக்கிறாள். நகோமியின் இரண்டு குமாரர்களும் செத்துப்போனார்கள். அவளுடைய மருமக்கள் இருவரும் விதவைகளாயிருக்கிறார்கள். தன்னால், தன்னுடைய மருமக்களுக்கு, நல்ல குடும்ப வாழ்க்கையை மறுபடியும் அமைத்து தர முடியாது என்னும் உண்மையை, நகோமி தன்னுடைய மருமக்களுக்கு சொல்லுகிறாள்.
""என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?'' (ரூத் 1:11) என்று நகோமி தன்னுடைய மருமக்களிடம் சொல்லுகிறாள்.
நகோமி தன்னுடைய மருமக்களிடம் உண்மையைப் பேசுகிறாள். தன்னுடைய உண்மையான நிலமையை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறாள். நகோமிக்கு கானான் தேசத்திலே பிள்ளைகள் யாருமில்லை. நகோமியை விவாகம்பண்ணுவதற்கு, அங்கே அவளுடைய நெருங்கிய உறவின் முறையிலும் ஒருவருமில்லை. அப்படியே நகோமிக்கு திருமணமானாலும், அவள் வயது சென்ற முதியவளாகயிருப்பதினால், அவளுக்கு இனிமேல், அவளுடைய கர்ப்பத்திலே பிள்ளைகள் உண்டாவதற்கு வாய்ப்பில்லை.
நகோமி தன்னுடைய இரண்டு மருமக்களிடமும் தன்னுடைய நிலமையை இன்னும் அதிகமாக சொல்லுகிறாள். ""என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது'' (ரூத் 1:12,13) என்று சொல்லுகிறாள்.
நகோமியின் ஜீவியத்தில் உபத்திரவங்கள் உண்டாயிற்று. அவள் தன் புருஷனை இழந்தாள். தன் இரண்டு குமாரர்களையும் இழந்தாள். இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது என்று நகோமி துக்கத்தோடு இருக்கிறாள். வாழ்வில் நடைபெறும் எல்லா துயர சம்பவங்களுக்கும் கர்த்தர் காரணமானவர் அல்ல. பஞ்சம், யுத்தம், கொள்ளைநோய் ஆகியவை ஒரு தனிப்பட்ட நபருடைய சாபத்தினால் வருவதல்ல.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் கலகம் பண்ணியபோது, கர்த்தர் அவர்களுக்கு வாதைகளைக் கொடுத்தார். அவர்கள் கர்த்தருடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்திருந்தால், இந்தச் சாபங்கள் எதுவும் அவர்களுக்கு வந்திருக்காது. (லேவி 26; உபா 28).
கர்த்தரைவிட்டு பின்வாங்கிப்போன இஸ்ரவேல் தேசத்தாரைக் கர்த்தர் தண்டிக்கச் சித்தம் கொண்டார். அப்போது திரளான துன்மார்க்கரோடு நல்லவர்களும், அந்தத் துயரங்களில் பங்குபெற்றார்கள்.
நீதிமானுக்கும் துன்பம் வரும். தங்களுக்கு துன்பம் வரும்போது கர்த்தர் தங்களைத் தண்டிக்கிறாரோ என்று நீதிமான் சந்தேகப்படுகிறான். நீதிமானுக்கு வரும் துன்பத்திற்குக் கர்த்தர் காரணமல்ல. திரளான துன்மார்க்கருக்குத் துன்பம் வரும்போது அது நீதிமான் மேலும் நிழலாய்ப் படிகிறது.
நகோமி தன்னுடைய பரிதாபமான நிலமையை நினைத்து அழுது புலம்புகிறாள். தங்களுடைய மாமியார் சொல்லுவதைக்கேட்டு, மருமக்கள் இருவரும் சத்தமிட்டு அதிகமாய் அழுகிறார்கள். அவர்கள் மூன்றுபேரும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்கிறார்கள். அவர்களுடைய அன்பிலே மாய்மாலமில்லை. அவர்கள் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க ஆயத்தமாயிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய பொதுவான வேதனைகளை நினைத்து மனங்கசந்து அழுகிறார்கள்.
நகோமி தன்னுடைய மருமக்கள் இருவரையும் மோவாப் தேசத்திலிருந்து, இஸ்ரவேல் தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போயிருந்தால், அவர்களை விக்கிரகாராதனைக்கு விலக்கி இரட்சித்திருக்கலாம் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். மருமக்கள் இரண்டு பேரும் இஸ்ரவேல் தேசத்திற்கு வந்துவிட்டால், அவர்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மீது நம்பிக்கை வைத்து, அவரையே ஆராதிப்பார்கள்.
தன்னுடைய மருமக்கள் இரண்டுபேரும் கர்த்தரை ஆராதிக்கவேண்டும் என்பதற்காக, அவர்களை தன்னோடுகூட இஸ்ரவேல் தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போகும் விருப்பம் நகோமியின் மனதிலும் இருக்கிறது. ஆனாலும் நகோமி ஆவிக்குரிய காரியங்களை நிதானமாயும், ஞானமாயும் சிந்திக்கிறாள்.
தன்னுடைய மருமக்கள் இரண்டு பேரும் தன்னோடுகூட இஸ்ரவேல் தேசத்திற்கு வரவேண்டுமென்றால், அவர்கள் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் அங்கே வரக்கூடாது. அவர்களாகவே வரவேண்டும். அங்கு வருவதினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் தாங்கிக்கொள்ள அவர்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும்.
இக்காலத்தில் சிலர் தங்களுடைய உற்றார் உறவினரின் தூண்டுதலுக்காக, சபைக்கு வருகிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய சிநேகிதரோடு சேர்ந்து, அவர்களைப் பிரியப்படுத்தவேண்டும் என்பதற்காக சபைக்கு வருகிறார்கள். வேறு சிலர் விசுவாசிகளை திருமணம் செய்து கொள்வதினிமித்தமாக சபைக்கு வருகிறார்கள். இவர்களெல்லோரும் சூழ்நிலை கட்டாயப்படுத்தியதினாலும், தங்களுடைய உற்றார் உறவினரும் சிநேகிதரும் கட்டாயப்படுத்தினதினாலும் சபைக்கு வந்தவர்கள்.
இவர்கள் கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தில் நிலைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் சுயாதீனமாக தீர்மானம்பண்ணி, தங்களுடைய ஜீவியத்தை கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அவரைப் பின்பற்றவேண்டும். தன்னுடைய மருமக்கள் இருவரும், தன்னுடைய கட்டாயத்தின்பேரில் கர்த்தரை ஆராதிப்பதை நகோமி விரும்பவில்லை. அவர்கள் கர்த்தரை ஆராதிக்கவேண்டுமென்றால், அவர்கள் தாங்களாகவே சுயாதீனமாக தீர்மானம்பண்ணவேண்டுமென்று நகோமி எதிர்பார்க்கிறாள்.
நாம் ஒருவரிடத்தில், இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றவேண்டும் என்று சொல்லும்போது, அவருக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லக்கூடாது. உண்மை நிலவரத்தை மறைக்காமல் சொல்லவேண்டும். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதினால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதையும் அவருக்கு சொல்லவேண்டும்.
தம்மைப் பின்பற்ற விரும்புகிறவர்களுக்கு, இயேசுகிறிஸ்து சொன்ன பிரதியுத்தரம், நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.
""அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்'' (மத் 8:19,20).
தன்னுடைய மருமக்கள் தன்னோடுகூட இஸ்ரவேல் தேசத்திற்கு வரவேண்டுமென்றால், அவர்கள் இருவரும் முதலாவதாக உட்கார்ந்து செல்லும் செலவைக் கணக்குப் பார்க்கவேண்டும் என்று நகோமி எதிர்பார்க்கிறாள். இப்போது ஏதோ ஒரு ஆசையிலும், அன்பிலும், பாசத்திலும் தன் மாமியாரைப் பின்பற்றி இஸ்ரவேல் தேசத்திற்கு வந்துவிட்டு, அதன் பின்பு இஸ்ரவேல் தேசத்திலே அவர்களுக்கு பிரச்சனைகள் வரும்போது, இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் தங்களுடைய மாமியாராகிய நகோமியே காரணம் என்று அவர்கள் குற்றம் சொல்லக்கூடாது.
நகோமி தன்னுடைய மருமக்களுக்காக யோசிக்கிறாள். அவர்களுடைய நன்மையை நாடுகிறாள். நம்முடைய இருதயத்தில் பல்வேறு விதமான ஆசைகள் எழும்பலாம். எல்லாவற்றையும் நாம் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. நம்முடைய ஆசைகளை தீவிரமாக யோசித்துப் பார்க்கவேண்டும். நம்முடைய இருதயத்தில் ஒரு எண்ணம் தோன்றிய உடனேயே, அதை நிறைவேற்றவேண்டுமென்று அவசரப்படக்கூடாது. பிஞ்சில் பழுப்பது பிஞ்சிலேயே அழுகிப்போகும்.
ஒர்பாள் ரூத் 1:14
ரூத் 1:14. அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக் கொண்டாள்.
நகோமி தன்னைப்பற்றிச் சொல்லுவதைக்கேட்டு அவளுடைய மருமக்கள் இருவரும் சத்தமிட்டு அதிகமாய் அழுகிறார்கள். ஒர்பாளின் இருதயத்தில், தன் மாமியாரோடு இஸ்ரவேல் தேசத்திற்குப் போகவேண்டும் என்னும் உறுதியான விருப்பமில்லை. ஒர்பாள் தன் மாமியார் சொன்னதை யோசித்துப் பார்க்கிறாள்.
இரண்டு மருமக்களும் சத்தமிட்டு அதிகமாய் அழுகிறார்கள். அவர்கள் தங்கள் மாமியார் நகோமியின்மீது வைத்திருக்கிற அன்புக்கும் பாசத்திற்கும், அவர்களுடைய அழுகை அடையாளமாயிருக்கிறது. ஆனாலும் இரண்டு மருமக்களும் வெவ்வேறு விதமாக சிந்திக்கிறார்கள். மோவாப் தேசத்திலிருந்து, கானான் தேசத்திற்குப் போனால் அங்கு என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கவேண்டும் என்பதை ஒர்பாள் சிந்தித்துப் பார்க்கிறாள். தன் மாமியாரோடு கானான் தேசத்திற்குப் போவதற்கு பதிலாக, தன்னுடைய தாய்வீட்டிற்குப் போகலாம் என்று தீர்மானித்து, தன் மாமியை முத்தமிட்டு, அவளைவிட்டுப் பிரிந்துபோகிறாள்.
ரூத்தோ வேறுவிதமாய் சிந்திக்கிறாள். தன்னுடைய மனதை திடப்படுத்துகிறாள். தன் மாமியாரோடு கானான் தேசத்திற்குப் போகவேண்டும் என்னும் தன்னுடைய தீர்மானத்தை உறுதிபண்ணுகிறாள்.
ஒர்பாள் தன் மாமியாரோடு சண்டை போட்டு பிரிந்துபோகவில்லை. அவள் தன் மாமியை முத்தமிட்டு தன் தாய் வீட்டிற்குப்போகிறாள். ஒர்பாளின் முத்தத்தில் பாசம் இருக்கிறது. தன்னுடைய மாமியாரிடமிருந்து விடை பெற்றுக்கொள்வதற்கு அடையாளமாக, ஒர்பாள் அவளை முத்தமிடுகிறாள்.
ஒர்பாள் நகோமியை நேசித்தாலும், அவளோடுகூட கானான் தேசத்திற்குப்போக ஆயத்தமாயில்லை. ஒர்பாளின் அன்பு அஸ்திபாரமில்லாமலிருக்கிறது. ஆகையினால் கானான் தேசத்தில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை யோசித்துப் பார்த்தபோது, ஒர்பாள் தன் மாமியார்மீது வைத்த அன்பு பலவீனமாயிற்று.
இக்காலத்தில் அநேகர், ஒர்பாள் தன் மாமியார்மீது வைத்த அன்பைப்போல, இயேசுகிறிஸ்துவின்மீது அன்பு வைக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றவேண்டுமென்றால், நம்மை நாமே வெறுத்து, நம்முடைய சிலுவையை சுமந்துகொண்டு, அவருக்கு பின்பாகப் போகவேண்டும். ஆனால் இயேசுகிறிஸ்துவிடம் வருகிறவர்களில் அநேகர் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவிக்க ஆயத்தமாயில்லை. கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு, அவரைப் பின்பற்றிப்போக அநேகர் விரும்பவில்லை.
அவர்களும் இயேசுவை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இயேசுவை எவ்வளவு நேசிக்கவேண்டுமோ அவ்வளவு நேசிக்கவில்லை. அவர்கள் இயேசுவை நேசிப்பதைவிட, மற்ற காரியங்களை அதிகமாய் நேசிக்கிறார்கள். ஒரு வாலிபன் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்ற வந்தான். ஆனால் அவன் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு, அவரைப் பின்பற்ற மனதில்லாமல், வருத்தத்தோடு திரும்பிப்போய்விட்டான்.
""அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டு என்று கேட்டான்'' (மத் 19:16). ""அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வா-பன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்'' (மத் 19:21,22).
ரூத்தோ தன் மாமியார் நகோமியை விடாமல் பற்றிக்கொள்கிறாள். தனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், அவற்றைத் தாங்கிக்கொண்டு, தன் மாமியாரோடு கானான் தேசத்திற்குப்போகவேண்டுமென்று தீர்மானமாயிருக்கிறாள். ரூத்திற்கு தன் தாய் வீட்டை விட, தன் மாமியாரும், கானான் தேசமுமே முக்கியமானதாயிருக்கிறது.
ரூத் ரூத் 1:15-18
ரூத் 1:15. அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.
ரூத் 1:16. அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
ரூத் 1:17. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத் 1:18. அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக் குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டு, தன்னுடைய தாய் வீட்டிற்கு திரும்பிப்போய்விடுகிறாள். அவளைப்போலவே ரூத்தும் தன் தாய் வீட்டிற்கு திரும்பிப்போய்விடவேண்டுமென்று நகோமி அவளிடம் மறுபடியும் சொல்லுகிறாள்.
நகோமி ரூத்தைப் பார்த்து, ""இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ'' (ரூத் 1:15) என்று சொல்லுகிறாள்.
ரூத் தன்னுடைய தாய் வீட்டிற்கு திரும்பிப்போகவேண்டுமென்றால், இப்போதே திரும்பிப்போகவேண்டும். கானான் தேசத்திற்கு அவள் வந்துவிட்டால், அங்கிருந்து மறுபடியும் மோவாப் தேசத்திற்கு திரும்பிப் போவது கடினம். ஆகையினால் ""நீ திரும்பிப்போ'' என்று நகோமி ரூத்திற்கு சொல்லுகிறாள்.
ரூத்தின் விசுவாசம் சோதிக்கப்படுகிறது. ரூத் தன்னுடைய தீர்மானத்தில் உறுதியாயிருக்கவேண்டும். ரூத்தின் மனஉறுதியும் சோதிக்கப்படுகிறது. ரூத் நகோமியை பின்பற்றி, கானான் தேசத்திற்குப்போகவேண்டுமென்று இப்போது மனஉறுதியாய் தீர்மானம்பண்ணினால், அவள் இனிமேல் எப்போதும் கானான் தேசத்திலே தன் மாமியாரோடு கூடயிருக்கலாம். இல்லையென்றால், ரூத் தன் தாய் வீட்டிற்கு தாராளமாக திரும்பிப்போய்விடலாம்.
ஒர்பாள் தன் தாய் வீட்டிற்கு திரும்பிப்போனபோது, அவளுடைய சொந்த ஜனங்களிடத்திற்கும், அவளுடைய தேவர்களிடத்திற்கும் திரும்பிப்போனாள். ஆனால் ரூத்தோ தன்னுடைய ஜனங்களிடத்திற்கும், மோவாப் தேசத்து தேவர்களிடத்திற்கும் திரும்பிப்போக விரும்பவில்லை. ரூத் தன்னுடைய மனஉறுதியை, தன் மாமிக்கு அறிவிக்கிறாள்.
ரூத் தன் மாமியிடம், ""நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்'' (ரூத் 1:16,17) என்று சொல்லி, தன்னுடைய மனஉறுதியை தெளிவுபடுத்துகிறாள்.
ரூத் சொல்லுகிற பிரதிஷ்டை வாக்கியத்தின் விவரம் வருமாறு :
1. உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்.
2. நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்.
3. நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்.
4. உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்.
5. உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
6. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன். (ரூத் 1:17).
7. மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்.
ரூத் மிகவும் தைரியமாகவும் ஞானமாகவும் பேசுகிறாள். ரூத்தால் நகோமிக்கு இதைவிட தெளிவாக ஒன்றும் சொல்லமுடியாது. ரூத்தின் பேச்சில் வித்தியாசமிருக்கிறது. அவள் அனுபவம் மிகுந்தவளைப்போலவும், ஞானமும் புத்தியும் நிறைந்தவளைப்போலவும் பேசுகிறாள். ரூத்தின் சகோதரியாகிய ஒர்பாள், நகோமியை விட்டு போய்விட்டாள். ரூத்தோ கர்த்தருடைய கிருபையினால் நகோமியோடு கூடயிருக்கிறாள்.
ரூத் தன் ஜீவியத்தில் நல்ல பங்கை தெரிந்தெடுத்திருக்கிறாள். அவள் தன்னுடைய தீர்மானத்தில் உறுதியாய் நிலைத்திருக்கவேண்டும். ரூத் திடமனதோடும், மனஉறுதியாயும் இருக்கவேண்டும். இவையெல்லாவற்றிற்கும் தேவனுடைய கிருபையும், இரக்கமும், உதவியும், ஒத்தாசையும் தேவை.
நகோமி ரூத்திடம், ""நீயும் திரும்பிப்போ'' என்று சொல்லுகிறாள். ஆனால் ரூத்தோ, நகோமி தன்னிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளை மறுபடியும் சொல்லக்கூடாது என்று தீர்மானமாய்ச் சொல்லுகிறாள். ""நான் உம்மைப் பின்பற்றாமல், உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து என்னோடே பேசவேண்டாம்'' என்று ரூத் தன் மாமியாளின் பேச்சிற்கு தடைபண்ணுகிறாள்.
ரூத் நகோமியைப்பற்றிக்கொள்வதில் திடமனதாயிருக்கிறாள். ரூத்தின் தீர்மானம் உறுதியாயிருக்கிறது. நகோமியைவிட்டுப் பிரிய ரூத்திற்கு மனமில்லை. ஒருவர் கர்த்தரோடு பரலோக காரியங்களைக் குறித்துப் பேசும்போது, மிகவும் உறுதியாகவும், தெளிவாகவும் பேசுவதுபோல, ரூத் இங்கே பேசுகிறாள்.
ரூத் நகோமியிடம் ""நீர் போகுமிடத்திற்கு நானும் வருவேன்'' என்று சொல்லுகிறாள். நகோமி கானான் தேசத்திற்குப் போகிறாள். ரூத் இதற்கு முன்பு கானான் தேசத்தைப் பார்த்ததே இல்லை. மோவாப் தேசத்திலிருந்து யூதாதேசம் வெகுதூரத்திலுள்ளது. ஆனாலும் ரூத் நகோமியோடு பிரயாணம்பண்ணும்போது, ரூத்திற்கு ஒரு பிரச்சனையுமில்லை. தூரம் அதிகமாயிருந்தாலும், நகோமி தன்னோடு கூடயிருப்பதினால், கானான் தேசம் ரூத்திற்கு சமீபத்திலிருப்பதுபோல தெரிகிறது. கானான் தேசத்திற்குப் போகிற பாதைகள் கரடுமுரடாகவும், மேடுபள்ளமாகவும், வனாந்தரம் போலவும் இருந்தாலும், நகோமி தன்னோடு கூடயிருப்பதினால், இந்த பாதையில் சந்தோஷமாய்ப் பிரயாணம்பண்ணலாம் என்று ரூத் நினைக்கிறாள்.
கானான் தேசத்திலே எங்கே தங்கவேண்டுமென்று ரூத்திற்கு தெரியாது. ரூத் நகோமியிடம், ""நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்'' என்று சொல்லுகிறாள். தங்குமிடம் சாதாரண குடிசையாகயிருந்தாலும், ரூத் அங்கேயும் தங்குவதற்கு ஆயத்தமுள்ளவளாயிருக்கிறாள். யாக்கோபு பிரயாணம்பண்ணியபோது, அவர் படுத்து உறங்குவதற்கு படுக்கை கிடைக்கவில்லை. ஒரு கல்லை தலையணையாக வைத்து, வெட்ட வெளியிலே படுத்து உறங்கினார். அப்படிப்பட்ட அனுபவம் தனக்கு வந்தாலும், ரூத் அதையும் அனுபவிக்க ஆயத்தமாயிருக்கிறாள்.
ரூத் மோவாப் தேசத்தை சேர்ந்தவள். மோவாப் தேசத்திலே ஏராளமான விக்கிரக தெய்வங்கள் இருக்கிறது. ரூத் இதுவரையிலும் மோவாபியரின் தேவர்களை ஆராதித்து வந்தவள். இப்போதோ ரூத் நகோமியோடுகூட, கானான் தேசத்திற்குப்போக மனஉறுதியோடிருக்கிறாள்.
ரூத் நகோமியிடம், ""உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம், உம்முடைய தேவன் என்னுடைய தேவன்'' என்று சொல்லுகிறாள். இனிமேல் மோவாபியர்கள் ரூத்தின் ஜனமல்ல. இஸ்ரவேல் புத்திரரே ரூத்தின் ஜனம். இனிமேல் மோவாபியரின் தேவர்கள் ரூத்தின் தெய்வமல்ல. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே ரூத்தின் தேவன்.
•ரூத் தன் மாமியாரோடு கானான் தேசத்திற்கு வருவதைப்பற்றிச் சொல்லும்போது, ""நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்'' என்று சொல்லுகிறாள். இந்த வாக்கியங்களின் மூலமாக ரூத்தின் மனஉறுதி தெளிவாக வெளிப்படுகிறது. நகோமியின் எலும்புகள் எங்கே அடக்கம்பண்ணப்படுகிறதோ, அங்கே தன்னுடைய எலும்புகளும் அடக்கம்பண்ணப்படும் என்று ரூத் உறுதி சொல்லுகிறாள். தான் மரித்த பின்பு, தன்னுடைய சரீரத்தை மோவாப் தேசத்திற்கு கொண்டு வந்து, அங்கே அடக்கம்பண்ணவேண்டுமென்று ரூத் விரும்பவில்லை.