4. ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி

0


இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்




4. ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி


4. ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி

அந்தகாரம்

ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று           (மத் 27:45).

இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது மிகவும் அற்புதமாக பூமியின்மீது சூரியகிரகணம் உண்டாயிற்று. 

மூன்றுமணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து பிறந்தபோது பூமியில் வெளிச்சம் உண்டாயிற்று (மத் 2:2). அவருடைய நட்சத்திரத்தை சாஸ்திரிகள் கண்டார்கள். ஆனால் இப்போதோ  இயேசுகிறிஸ்து மரிக்கும்போது பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

 இயேசு இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறவர். வெளிச்சம் அகன்றுபோகும்போது அங்கு இருள் வரும். 

இந்த அந்தகாரம் அங்கு கூடியிருக்கிறவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.  

இயேசுகிறிஸ்துவை தூஷித்தவர்களும் நிந்தித்தவர்களும் அதிர்ச்சியடைகிறார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது அவரை பார்த்து தூஷண வார்த்தைகளை பேசியவர்கள், அந்தகாரத்தைக் கண்டு வாயடைத்துப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய இருதயம் மாற்றமடையவில்லை.  ஆயினும் அமைதியாக இருக்கிறார்கள்.

 அந்தகாரத்தின் காரணம் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். 

இந்த அந்தகாரம் மூன்றுமணி நேரம் நீடிக்கிறது. அதன்பின்பு அந்தகாரம் நீங்கி மறுபடியும் வெளிச்சம் உண்டாயிற்று. 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்த இஸ்ரவேலரை விடுவிப்பதற்கு பார்வோன்  மனதற்றவனாக இருந்தான். 

அவனுடைய தேசத்தில் பல வாதைகள் உண்டாயிற்று. அந்த சூழ்நிலைகளிலும் அவன் தன் இருதயத்தை திரும்ப திரும்ப கடினப்படுத்தினான். அதுபோலவே இங்கு இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது,  அங்கு கூடியிருக்கும் ஜனங்களும் தங்கள் இருதயங்களை கடினப்படுத்துகிறார்கள்.

 மூன்று மணி நேரமாக அந்தகாரம் உண்டானபோது பயந்து நடுங்கியவர்கள், மறுபடியும் வெளிச்சம் உண்டானவுடன் தங்கள் இருதயத்தை கடினப்படுத்தி ""இயேசு எலியாவை கூப்பிடுகிறார்'' என்று பரியாசம்பண்ணுகிறார்கள்.  






தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவே  மூன்றுமணிநேரம் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து அந்தகாரத்தின் வல்லமையோடு போராடிக்கொண்டிருக்கிறார். 

 அவர்களுடைய சொந்த பூமியில் இயேசு யுத்தம்பண்ணுகிறார். இந்த அந்தகாரத்தில் அவர்கள் தங்களால் முடிந்தவரையிலும் இயேசுவை தூஷிக்கலாம். அந்தகாரத்தின் பிள்ளைகள் தங்கள் இஷ்டம்போல இயேசுவுக்கு விரோதமாக இந்த அந்தகாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். 

ஆனால் தேவனுக்கோ சூரியனையும் அந்தகாரப்படுத்தும் வல்லமையுள்ளது. 

இந்த அந்தகாரம் கரிய மேகத்திற்கு ஒப்புமையாக இருக்கிறது. இந்த கரிய     மேகத்தின் அடியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மனுஷ ஆத்துமா ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கிறது.

 இயேசுவுக்கு இப்போது பரலோகத்தின் ஆறுதல் தேவைப்படுகிறது. தேவன் நீதிமான்கள் மீதும் துன்மார்க்கர்மீதும் தம்முடைய சூரியனை உதிக்கப்பண்ணுகிறார். 

 இந்த சூரியனின் வெளிச்சம்கூட, இயேசுவைவிட்டு அகன்று போகிறது.  இயேசு நமக்காக பாவமானதினால், அவருக்கு வெளிச்சம் மறைக்கப்படுகிறது. 






இயேசுகிறிஸ்து நமக்காக பாவமானபோது, இந்த பூமி அவருக்கு ஒரு துளி குளிர்ந்த தண்ணீரைக்கூட தரவில்லை. வானம் அவருக்கு  சூரிய வெளிச்சத்தைத் தரவில்லை. 

அந்தகார இருளிலிருந்து நம்மை மீட்பதற்காக இயேசுகிறிஸ்து தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாடுகளை அனுபவிக்கிறார். வெளிச்சமே இல்லாத அந்தகார இருளில் நடக்கிறார். மூன்று மணி நேரமாக பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. 

இந்த மூன்று மணி நேரத்தில் இயேசுகிறிஸ்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.  அந்தகாரம் உண்டான சமயத்தில் இயேசு தமது சொந்த ஆத்துமாவிற்கு அமைதியாக ஓய்வு கொடுக்கிறார். 

தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த நாளிலிருந்து, இதுபோல மூன்றுமணி நேரமாக பூமியின்மீது ஒருபோதும் அந்தகாரம் உண்டாகவில்லை. மனுக்குலத்தின் மீட்பின் வேளை சமீபமாக வரும்போது, தேவன் நியமித்திருக்கும் பெரிய காரியங்களெல்லாம் ஒவ்வொன்றாக நடைபெறுகின்றன. 

ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி

ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம் (மத் 27:46). 

அதுவரையிலும் அந்தகாரமாக இருந்த பூமியின்மீது ஒன்பதாம் மணி நேரத்தில் மறுபடியும் வெளிச்சம் உண்டாயிற்று. அந்த சமயத்தில் இயேசு ""ஏலீ ஏலீ லாமா சபக்தானி'' என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிடுகிறார். 

இது  சீரிய பாஷையின் வார்த்தையாகும். ரோமப்பேரரசின் போர்ச்சேவகர்கள் சீரிய பாஷையை பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏலீ என்றால் என்ன அர்த்தம் என்று புரியாது. 

ஏலீ என்னும் வார்த்தை எலியாவை குறிக்கும் என்று நினைக்கிறார்கள். ஏலீ என்னும் வார்த்தைக்கு ""தேவன்'' என்று பொருள். 

இயேசு கூறிய இந்த வாக்கியம் சங் 22:1#ஆவது வசனத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த வாக்கியத்தை சங்கீதத்திலிருந்து எடுத்து மேற்கோளாக இங்கு கூறுகிறார்.

 நமது பலவீனங்களில் தேவன் தாமே நமக்கு உதவிபுரிகிறார். உமது கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து பிதாவிடம் கூறுகிறார். 

 இவையெல்லாம் நாமும் ஜெபத்தில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளாகும். ஏனெனில் தேவன் தாமே நமது பலவீனங்களில் நமக்கு உதவிபுரிகிறார்.  





இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளை மிகுந்த சத்தமிட்டு கூப்பிடுகிறார். அவருடைய  வேதனையின் உச்சக்கட்டதை இது காண்பிக்கிறது. 

இயேசுகிறிஸ்து தம்மிடத்தில் மீதமுள்ள சரீர பலத்தையெல்லாம் ஒன்றுசேர்த்து   இவ்வாறு சத்தமிட்டு கூப்பிடுகிறார். இயேசுகிறிஸ்துவின் ஆவி பிதாவை நோக்கி மிகுந்த வாஞ்சையோடு கதறுகிறது. 

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர் என்று பிதாவிடம் கேட்கிறார். இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து  இப்படிப்பட்ட விநோதமான குற்றச்சாட்டு புறப்பட்டு வருகிறது. 

பிதாவாகிய தேவன் இயேசுவின்மீது எப்போதுமே பிரியமாக இருக்கிறார். இப்போதும் பிதா குமாரனை நேசிக்கிறார். ஆடுகளுக்காக இயேசுகிறிஸ்து தமது ஜீவனையே ஒப்புக்கொடுக்கிறார்.

 ஆகையினால் பிதாவாகிய தேவன் தம்மை நேசிக்கிறார் என்பது இயேசுவுக்கு நன்றாக தெரியும். ஆயினும் தம்முடைய பாடுகளின் மத்தியில், இயேசு பிதாவை நோக்கி             ""ஏன் என்னை கைவிட்டீர்'' என்று கேட்கிறார். 

இயேசுகிறிஸ்து இப்படிப்பட்ட வார்த்தைகளை கூறவேண்டுமென்றால், அவருடைய பாடுகள் நிச்சமாகவே அவரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். இந்த வார்த்தைகள் பூமியை அதிரச்செய்திருக்கும். கற்பாறைகளை பிளக்கச் செய்திருக்கும்.

இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, சிறிது நேரம் பிதாவாகிய தேவன் அவரை கைவிட்டுவிடுகிறார். 

இயேசுவுக்கு தமது முகத்தை மறைத்துக்கொள்கிறார். இயேசுகிறிஸ்து தமது வார்த்தைகளை காரணமில்லாமல் கூறவில்லை.  குமாரன்மீது பிதா காண்பிக்கும் அன்பு குறைந்து போகவில்லை. 

அதுபோலவே பிதாவின் மீது குமாரர் காண்பிக்கும் அன்பும் சிறிதும் குறைந்துபோகவில்லை. ஆயினும் பிதாவாகிய தேவன் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை கைவிட்டு விடுகிறார். 






குமாரனுடைய சத்துருக்களின் கரங்களில் பிதாவானவர் அவரை ஒப்புக்கொடுக்கிறார். அவர்களுடைய கரங்களிலிருந்து குமாரனை மீட்பதற்கு உதவிபுரிய பிதாவானவர் வரவில்லை.  வானத்திலிருந்து பிதாவானவர் தேவதூதர்கள் யாரையும் அனுப்பி குமாரனை மீட்கவில்லை.

 இயேசுகிறிஸ்துவின் சிநேகிதர்கள் யாரும் இயசுவுக்கு ஆறுதல் கூறவரவில்லை.

இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா முதன்முதலாக கலங்கியபோது அவரை ஆறுதல்படுத்தும் சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று (யோவா 12:27,28). கெத்செமனே தோட்டத்தில் இயேசுகிறிஸ்து வியாகுலமடைந்து துக்கமடைந்தபோது தூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள்.

 ஆனால் இப்போது இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது அவருக்கு உதவிபுரிய யாரும் வரவில்லை. பிதாவானவர்  யாரையும் அனுப்பவில்லை. பிதா தமது முகத்தை குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு மறைத்துக்கொள்கிறார். 

கிறிஸ்து நமக்காக பாவமானார். அவர் நமக்காக சாபமானார். ஆகையினால் பிதாவானவர் குமாரன்மீது அன்பாக இருந்தாலும், குமாரன் நமக்காக பாவமானதினாலும், சாபமானதினாலும், தமது முகத்தை அவருக்கு மறைத்துக்கொள்கிறார். 

இயேசுகிறிஸ்து அனுபவித்த பாடுகளில் பிதாவானவர் அவரை கைவிட்டுவிட்டதே மிகப்பெரிய பாடாகும். 

இது குமாரனுக்கு   தாங்கிக்கொள்ள முடியாத மிகப்பெரிய வேதனையாகவும், மிகப்பெரிய பாடாகவும் இருக்கிறது. பிதாவானவர் குமாரனிடமிருந்து தமது சமுகத்தை விலக்கி சற்று தூரத்தில் போனபோது, குமாரனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 பிதாவின்  பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல், குமாரன் ""ஏன் என்னை கைவிட்டீர்'' என்று சத்தமிட்டு கூப்பிடுகிறார். பிதாவின் பிரிவு இயேசுகிறிஸ்துவுக்கு பிச்சும் கசப்புமாக இருக்கிறது. 

பிதாவானவர் குமாரனை கைவிட்டாலும், குமாரன் பிதாவை ""என் தேவனே'' என்றுதான் அழைக்கிறார். 

தம்மை பிதாவானவர் கைவிட்டாலும், அவர் தம்முடைய தேவன்தான் என்பதில் இயேசுகிறிஸ்து வைராக்கியமாக இருக்கிறார். இயேசு பாடுகளின் மத்தியில் பரிதபித்துக்கொண்டிருந்தாலும், பிதாவானவர்  இன்னும் தம்முடைய தேவன்தான் என்னும் எண்ணமே அவரை பலப்படுத்திற்று. தேவனை பற்றிய எண்ணமே அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. 

பிதாவானவர் தம்முடைய தேவனாக இருப்பதினால், தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாடுகளையும் வேதனைகளையும் இயேசுகிறிஸ்து பொறுமையோடு சகித்துக்கொள்கிறார். 

எலியா

 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எ-யாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்             (மத் 27:47). 

இயேசுகிறிஸ்து தமது பிதாவிடம் ஜெபிப்பதுகூட, அவருடைய சத்துருக்களுக்கு  பரியாசமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்து பிதாவை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அங்கே நின்றவர்களில் சிலர் ""இவன் எலியாவை கூப்பிடுகிறான்'' என்று பரியாசம்பண்ணுகிறார்கள். 

இவ்வாறு கூறியவர்கள் ரோமப்போர்ச்சேவர்கள் என்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் கூறுகிறார்கள். 

ஏனெனில் அவர்களுக்கு ஏலீக்கும், எலியாவுக்கும் வித்தியாசம் தெரியாது.  தங்களுடைய அறியாமையினால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை புரிந்துகொள்ளாமல் தவறாக பேசுகிறார்கள். 


God bless you 


Umn ministry Chennai 



Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*